தொடுவானம் 180. இருமணம் கலந்தால் திருமணம்

Spread the love

 

          சனிக்கிழமை காலை நாங்கள் மூவரும் குயீன்ஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு செல்லும் துரித பேருந்து ஏறினோம். அங்கிருந்து ஆயர் ஈத்தாம் சென்றோம். பின்பு செகாமாட் செல்லும் பேருந்தில் ஏறி லாபீசில் இறங்கினோம். பேருந்து ஈஸ்ட் ஆசியா கார்டனில் நின்றதால் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றோம்.
          அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தேன். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்.அந்தப் பெண்ணும் வந்து வணக்கம் சொன்னாள்.
          அந்த வீட்டின் முன்புறம் பெரிய கூடம் உள்ளது. அங்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அங்கு அமர்ந்துகொண்டோம். வீதியில் மறுபக்கம் பள்ளத்தாக்கில் வரிசை வரிசையாக செம்பனை மரங்கள் கண்ணுக்கு எட்டிய தொலைவில் பசுமையுடன் காட்சி தந்தன. அங்கிருந்து தென்றல் சிலுசிலுவென்று வீசியது.
          மதிய உணவை உண்டபின்பு கொஞ்ச நேரம் அறையில் இளைப்பாறினோம். மாலையில் லாபீஸ் டவுனுக்குச் சென்று சுற்றிப்பார்த்தோம். லாபீஸ் சின்ன ஊர்தான். டவுனில் பெரும்பாலும் சீனர்கள் கடைகள் வைத்திருந்தனர். பெரிய அடுக்குமாடிகள் இல்லை. ஐப்பான் ஆட்சிக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கட்டப்பட்ட கடைவீடுகள் காட்சி தந்தன. ஒரு சில தமிழர்கள் மளிகைக் கடையும் ஒரேயொரு உணவகமும் வைத்திருந்தனர். செம்பனைத் தோட்டத்தில் பணிபுரிந்த ஏராளமான தமிழர்களுக்கு ஏற்ற வகையில் இந்த சிறு பட்டணம் செயல்பட்டது. ஒரேயொரு திரைப்பட அரங்கமும் இருந்தது. அதில் தமிழ்த்  திரைப்படங்கள் திரையிடப்பட்டன.லாபீசில் புகைவண்டி நிலையமும் உள்ளது. அதில் தெற்கே சிங்கப்பூருக்கு, வடக்கே கோலாலம்பூருக்கும் செல்லலாம்.
          இருட்டிய பிறகு ஒரு சீனர் உணவகத்தில் பன்னீரும் நானும் அங்கர் பீர் பருகினோம். கோவிந்த் தேநீர் பருகினான். வீட்டில் அக்காள் நிச்சயமாக கோழி வெட்டி சமைத்துவைத்திருப்பார். பீர் பருகிய பசியில் நன்றாக உண்ணலாம். நண்பர்களுடன் அவ்வாறு ஒரு நாளைக் கழித்தது உல்லாசமாக இருந்தது.
          ” பெண் நன்றாகத்தான் உள்ளது. பரவாயில்லை. ” பன்னீர் கூறினான்.
          கோவிந்த் தலையை ஆட்டினானே தவிர ஒன்றும் சொல்லவில்லை.
         ” உனக்கு எப்படித் தெரிகிறது.? ” அவனைப் பார்த்து கேட்டேன்.
          ” நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. உன் படிப்புக்கும் அறிவுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் இந்த பெண்ணால் முடியுமா என்றுதான் யோசிக்கிறேன். ” அவன் தயங்கியபடிதான் இப்படிக் கூறினான்.
          ” இவனுக்குத் இப்போது தேவை வாழ்க்கைத் துணை. அதற்கு இந்த பெண் ஏற்றதாகத் தெரிகிறது. இவன் ஒரு டாக்டராகப் பணிபுரியப் போகிறான். இந்தப் பெண் படித்து பட்டம் பெற்று வேலை செய்யவேண்டும் என்பதற்கில்லை. ” பன்னீர் கோவிந்துக்கு பதில் சொன்னான்.
          ” வேலை செய்யும் பெண் எனக்குத் தேவையில்லை. நல்ல குடும்பப்பெண்ணாக இருந்தாலே போதுமானது. இந்தப் பெண் நல்ல குடும்பப் பெண்ணாக வளர்க்கப்பட்டுள்ளாள். அதோடு என் அப்பாவும் நான் இந்தப் பெண்ணைத்தான் மணந்துகொள்ளவேண்டும் என்கிறார். இவளை மணந்துகொள்வதால் எந்த விதமான குறைபாடும் வராது. ” என்றேன்.
          ” பார்ப்பதற்கு மிகவும் அப்பாவிப் பெண் போல் தெரியுது. நீ உண்மையில் கொடுத்துவைத்தவன்தான். இத்தனைக் காதல்களுக்குப்பின் இப்படி ஓர் அருமையான பெண் உனக்குக் கிடைத்துவிட்டதே! ” பன்னீர் பாராட்டினான்.
          ” அப்போ நீ மணமுடிக்க முடிவு செய்துவிட்டாயா? ” கோவிந்த் குறுக்கிட்டான்.
          ” முடிவு செய்துவிட்டுதானே பெண்ணை நமக்குக் காட்ட அழைத்து வந்துள்ளான் . ‘ பன்னீர் பதில் சொன்னான்.
          ” அவர்களிடம் சம்மதம் தெரிவித்துவிட்டாயா? ” கோவிந்த் கேட்டான்.
          ” இன்னும் இல்லை. அவர்கள் இன்னும் அது பற்றி பேசவில்லை. அவர்கள் கேட்டதும் சம்மதம் தெரிவித்துவிடுவேன். ” நான் நிலைமையைச் சொன்னேன்.
          ” அப்படியென்றால் திருமணம் இங்கேயே நடைபெறுமா? ” கோவிந்த் மீண்டும் கேட்டான்.
          ” இல்லை .பெண்ணைப் பிடித்திருந்தால் உடன் தமிழகத்துக்கு அழைத்து வரச்சொல்லியுள்ளார் அப்பா.திருமணம் எங்கள் கிராமத்தில்தான் நடக்குமாம். அங்குள்ள எங்கள் அற்புதநாதர் ஆலயத்தில்தான் தாத்தா, பெரியப்பா,அப்பா, அண்ணன் ஆகியோருக்கு திருமணம் நடந்ததாம். எனக்கும் அங்குதான் திருமணமாம். அது ஆசீர்வாதமாக அமையுமாம். ” அப்பா சொன்னதைக் கூறினேன்.
          ” சும்மா சொல்லக்கூடாது. உன் அப்பா நினைத்ததை சாதித்துவிட்டார். நீ லதாவை மறக்கணும் என்றார். நீ ஒரு டாக்டராக வேண்டும் என்றார். அதை இந்தியாவில்தான் படிக்கணும் என்றார். இப்போது இந்தப் பெண்ணைதான் நீ மணக்கவேண்டும் என்றும் சொல்கிறார். அவர் நினைத்தது எல்லாமே நடந்துவிட்டது. உண்மையில் அவர் பெரிய சாதனையாளர்தான்.! ” பன்னீர் வியந்து கூறினான்.
          ” அவர் ஒரு மூர்க்கமான சாதனையாளர். நீ மறக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சமாகவா உன்னை அடித்தார்? அவர் அடி பொறுக்கமாட்டாமல் நீ வீட்டை விட்டே ஓடியவனல்லவா? ” கோவிந்த் சொன்னான்.
          ” அது மட்டுமா? போலீஸ் பாதுகாப்புடன்  அப்பாவுடன் வாழந்த ஒரு மகன் உண்டென்றால் அது நீதான். அந்த வகையில் நீயும் ஒரு சாதனையாளன்தான்! ‘ பன்னீர் எனக்கு புகழாரம் சூட்டினான்.
          நாங்கள வாங்கிய இரண்டு அங்கர் பீர் போத்தல்கள் காலியானபின் . இரவு உணவு உண்ண வீடு செல்ல எழுந்தோம்.
          நான் எண்ணியபடியே வீட்டில் கமகமக்கும் கோழிக்கறி தயாராய் இருந்தது. சுவைத்து உண்டோம். பின்பு வராந்தாவில் அமர்ந்து செம்பனைத் தோட்டத்திலிருந்து வீசிய குளிர் தென்றலின் இதமான இயற்கைச் சூழலில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
          ஞாயிறு காலையில் மூன்று தூண்டில்கள் தயார் செய்துகொண்டு செம்பனைக் காட்டுக்குள் நுழைந்தோம். சற்று தொலைவில் சில அத்தாப்பு குடிசைகள் காணப்படடன. அங்கே சிறு குளமும் இருந்தது. அங்கு வந்த சிலர் ” ஓராங் ஆஸ்லி ” ( பூர்வீகக குடிகள் ) போன்று .தோன்றினர். அவர்கள் மலாய் பேசினர் . எங்களுக்கு மண் புழுக்கள் தோண்டித்  தந்தனர். பூர்வ குடி மக்கள்  நாகரிக கலப்படம் இல்லாமல் மனித நேயத்துடன் வாழ்வது தெரிந்தது. நாங்கள் பணம் தந்தும் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். அங்கே  ஏராளமான மீன்கள் உள்ளன என்றனர். வெறும் பொழுதுபோக்குக்காக  அங்கு வந்துள்ளதை நாங்கள் சொல்லாமலேயே அவர்கள் தெரிந்து கொண்டனர்.
          பன்னீரும் கோவிந்தும்  மிகுந்த களிப்புடன் தூண்டில் போட்டனர்.பரபரப்பான சிங்கப்பூர் வாழக்கையில் கிடைக்காத அனுபவம் அல்லவா?  இவ்வாறு காட்டு குளத்தில் தூண்டில்  போடுவது . எனக்கு கிராமத்தில் பால்பிள்ளையுடன் தூண்டில் போட்டதுதான் நினைவுக்கு வந்தது.
          நிறைய  கெண்டைகளும் கெளுத்திகளும் கிடைத்தன. பதினோரு மணிக்கெல்லாம் வீடு திரும்பினோம். மீன்களை அக்காள் பொரிந்து தந்தார். மன நிறைவுடன் அவற்றை மதிய உணவுடன் உண்டு மகிழ்ந்தோம்.
          அன்று மாலை நண்பர்கள் இருவரும் சிங்கப்பூர் திரும்பினர். அது எனக்கு சோகத்தை உண்டுபண்ணியது. இனி கவனத்தை அந்த பெண் மீது திருப்பினேன். அவளுடன் சரளமாகப்  பேசும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. பட்டும் படாமலும்தான் பேசிக்கொண்டோம். அவளுக்கும் என்னுடன் பேச ஆசை நிச்சயம் இருக்கும். நான்தான் அவளை மணந்துகொள்ளப்போகிறேன் என்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. பெற்றோரும் அண்ணன்கள் தம்பிகள் இருந்தபோது அவள் பெரும்பாலும் அறைக்குள் அடைக்கலம் புகுந்தாள். சமையல் நேரத்தின்போது மட்டும் அக்காளுக்கு உதவ சமையல் கட்டுக்கு வருவாள்.துணிகள் துவைத்து தோட்டத்தில் அவற்றை உலரவைக்கும்போதும்  அவளைக் காணலாம்.
         இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.
          திருமணம் பற்றி பேசினோம். பெண்ணைப் பிடித்துள்ளதா என்று அவர்கள் கேட்கவில்லை. அவளுக்கும் சம்மதமா என்றும் கேட்கவில்லை. விரைவில் பதிவுத் திருமணம் செய்ய வேண்டும் என்றனர். நான் சம்மதம் தெரிவித்தேன். ஆனால் கோவிலில் நடக்கும் முறையான திருமணம் தெம்மூர் கிராமத்தில்தான் நடக்கும் என்றேன். அதனால் பதிவுத் திருமணத்துக்குப் பின்பு நாங்கள் இருவரும் தமிழ் நாடு செல்வோம் என்றும் கூறினேன். சிங்கப்பூரில் வேலை செய்யவில்லையா என்று கேட்டனர். நான் இன்னும் சிங்கப்பூர் அரசாங்கத்தை அணுகவில்லை என்றேன். தற்போது தமிழகத்தில் வேலை செய்வதாகவும், ஒரு மாத விடுப்பில் வந்துள்ளதாகவும் கூறினேன். அங்கு திருமணம் ஆனபின்பு பின்னால்  சிங்கப்பூருக்கு வருவதாகச் சொன்னேன். அது கேட்டு அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டதாகத் தெரியவில்லை. செல்லமாக வளர்த்த ஒரே மகளை இந்தியாவுக்கு அனுப்புவதா என்ற கவலை நிச்சயமாக இருந்திருக்கும். அவர்களுக்கும் அப்போது வேறு வழி இல்லை. திருமணத்துக்கு அப்பாவும் அவர்களும் முடிவு செய்துவிட்டனர்.நானும் அதற்காக வந்துள்ளேன். அங்கு திருமணம் முடித்துக்கொண்டு கிராமத்திலேயே இருக்கப்போவதில்லை என்றேன். நான் மீண்டும் கோயம்புத்தூரில் வேலைக்குச் செல்வேன். அங்கு நாங்கள் இருவரும் இருப்போம் என்றேன்.
          கிராமம் என்றதும் அங்கு இருப்பது சிரமம் என்று அவர்கள் எண்ண வாய்ப்பில்லை. பெண்ணின் அப்பா அந்த கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தவர். அவர் என்னுடைய பாட்டியின் உடன்பிறந்த தம்பிதான். அவருடைய இரு அண்ணண் குடும்பத்தினர்  அங்குதான் உள்ளனர்.இன்னும் ஏராளமான உறவினர்கள் உள்ளனர். ஆதலால் பெண்ணுக்கு எந்த குறையும் அங்கு இருக்காது. அனைவரும் போட்டிப்போட்டுக்கொண்டு அன்பைச் செலுத்துவார்கள்.
          நான் என்னதான் சமாதானம் கூறினாலும், மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரே மகளை இந்தியாவில் வாழ அனுப்புவதா என்ற உறுத்தல் அவர்களுக்கு இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
          ” கொஞ்ச நாள் கழித்து சிங்கப்பூர் வந்து வேளையில் சேர்வாயா? ” அக்காள்தான்  அப்படி கேட்டார். நான் ஆம் என்றேன்.
          மறுநாளே நாங்கள் ஜோகூர் பாரு செல்ல முடிவு செய்தொம். அதுதான் ஜோகூர் மாநிலத்தின் தலைநகரம். அங்குதான் திருமண பதிவகம் உள்ளது.
          அங்குதான் ஜான் அண்ணன் உள்ளார். அவர் பெரியப்பாவின் மூத்த மகன். பெரியப்பா தமிழகம் திரும்பியபோது ஜான் அண்ணன் மட்டும் இங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார். அவர் ஜோகூர் குடிநீர் இலாக்காவில் அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.  ஜோகூர் பாருவில்தான் வாடகை வீட்டில் குடியுள்ளார். நாங்கள் அவர் வீட்டுக்குச் சென்றபின்பு திருமண பதிவகத்துக்கு அவருடன் செல்வதாக முடிவு செய்தொம்.
          இருமனம் கலந்தால் திருமணம் என்பார்கள். எங்கள் இருவரின் மனங்களும் கலந்துவிட்டதால்தான் இந்த திருமணம் நிச்சயமாகிறது என்பதை நான் உணரலானேன். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றும் கூறுவார்கள். நிச்சயமாக இந்தப் பெண்ணை கடவுள்தான் எனக்கு நிச்சயம் செய்துள்ளார் என்றும் நம்பினேன்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationலெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்கவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)