தொடுவானம் 182. தலையில் விழுந்த இடி.

This entry is part 1 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017
 Singapore1(1)
          பதிவுத் திருமணமும் விருந்தும் நடந்து முடிந்தது. எங்களுக்கு சட்டப்படி திருமணம் நடந்துவிட்டது. அவள் பெயர் ஜெயராணி.வீட்டில் அனைவரும் செல்லமாக ” ஆச்சி ” என்று அழைக்கின்றனர். அதற்குக் காரணம் அவளின் அப்பாவின் தாயாரான அன்பாயியை அப்படியே அச்சாக ஓத்திருக்கிறாள் என்பதற்காகத்தான் . அந்த அன்பாயி கிறிஸ்துவராக மாறியபின்பு அவருக்கு ஜெயராணி என்று பெயர் வைத்துள்ளனர். அந்த பெயரைத்தான் அவளுக்கு வைத்து ” ஆச்சி ” என்று அழைக்கின்றனர். நாம் பெயர்கள் சூட்டுவதில் ஏதாவது இதுபோன்ற பின்னணிகள் இருப்பது இயல்பு.
          எனக்குக் கூட பெயர் சூட்டுவதில் ஒரு பின்னணி உள்ளது. நான் தெம்மூர் கிராமத்தில் பிறந்தேன். அப்போது அப்பா சிங்கப்பூரில் இருந்தார். அம்மா சாதாரண கிராமத்துப் பெண்மணிதான். அப்போது அற்புதநாதர் ஆலயத்திற்கு தரங்கம்பாடியிலிருந்து ஜெர்மன் மிஷனரிகள் வருகை தருவார்கள். அவ்வாறு அவர்கள் வருகைதந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் எனக்கு ஆலயத்தில் பெயரை அவர்கள் சூட்டியுள்ளனர். ஜொஹான்சன் என்பது ஜெர்மனியில் பிரசித்தியான பெயர். உண்மையில் யேசுதாஸ் ஜான்சன் என்றுதான் அவர்கள் எனக்கு பெயர் சூட்டியுள்ளனர். யேசுதாஸ் என்பது என்னுடைய கொள்ளுத்தாத்தாவின் பெயர். ஆனால் அந்த பெயர் வழக்கில் இல்லாமல் போனது. ( இதை என்னிடம் என் அத்தை ரூத் குணமணி கூறியுள்ளார். )
          எங்களுக்கு சட்டப்படி பதிவுத் திருமணம் நடந்துவிட்டாலும் எங்களை எப்போதும்போல் பிரித்தே வைத்திருந்தனர். தனியாக பேச விடவில்லை. கழுத்தில் முறைப்படி தாலி காட்டினால்தான் கணவன் மனைவியாகப் பழகலாம் என்றனர். நான் அதுபற்றி கவலை கொள்ளவில்லை. இன்னும் எத்தனை காலமானாலும் அவள்தானே என் மனைவி என்ற நம்பிக்கை எனக்கு.
          என்னை தமிழகம் திரும்பவேண்டாம், சிங்கப்பூரிலேயே வேலை செய்யலாமே என்றனர். சிங்கப்பூரில் வேலை கிடைத்ததும் அங்கேயே நாங்கள் தங்கிக்கொள்ளலாம். அதில் பிரச்னை இருக்காது. நான் சிங்கப்பூரின் குடிமகன்.
          எனக்கும் அப்படியே தோன்றலாயிற்று. நான் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முடிவு செய்தேன். பேருந்து மூலம் சிங்கப்பூர் சென்று நேராக கோவிந்தசாமி இல்லம் சென்றேன். அவனிடம் எங்களுக்கு பதிவுத் திருமணம் நடந்தது பற்றி கூறினேன். அவன் வாழ்த்து கூறினான்.நான் வந்துள்ளதின் நோக்கத்தைச் சொன்னேன். அவன் அதுதான் சரியான முடிவு என்றான். அன்று மாலை பன்னீர் வந்துவிட்டான்.வழக்கம்போல் சீன உணவகத்தில் அமர்ந்து இருவரும் அங்கர் பீர் பருகினோம். சீன உணவு உண்டோம். கோவிந்தசாமி சீன உணவு சாப்பிடவில்லை. அவன் இந்திய இஸ்லாமியர் கடையின் பரோட்டா சாப்பிட்டான்.என்னுடைய பதிவுத் திருமணம் கேட்டு பன்னீர் அகமகிழ்ந்தான் நான் மறுநாள் சிங்கப்பூர் மருத்துவக் கழகம் செல்வது பற்றி  பன்னீரிடம் சொன்னேன். அதை உடன் செய்யச் சொன்னான். நான் திரும்பவும்  தமிழகம் செல்வது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.சிங்கப்பூரிலேயே தங்கி வேலை செய்யலாம் என்றான்.சிங்கப்பூரில் டாக்டர்களுக்கு நல்ல சம்பளம் என்றான்,அதோடு சமுதாயத்திலும் நல்ல அந்தஸ்துடன் இருக்கலாம் என்றான். அது எனக்கு சரியாகப்பட்டது.
           ” நீ கட்டாயம் தமிழ் நாடு திரும்பவேண்டுமா? ” என்று கேட்டான் கோவிந்த்.
          ” நான் ஒரு மாத விடுப்பில் வந்துள்ளேன். நான்மீண்டும் வேலையில் சேரவேண்டும். ” நான் முன்பு சொன்னதையே மீண்டும் சொன்னேன்.
            இருவரும் யோசித்தனர்.கொஞ்ச நேரம் மெளனம்.பின்பு கோவிந்த் கூறினான், ” உனக்குதான் இப்போது திருமணம் ஆகிவிட்டதே.இனி இங்கேயே தங்கிவிடுவதுதானே நல்லது? ” என்று கேட்டான்.
          ” நீ அங்கு வேலைக்குப் போகாவிட்டால் என்ன ஆகிவிடும்? ” பன்னீர் கேட்டான்.
          ” ஒன்றும் ஆகாது. வேலை போய்விடும். லுத்தரன் திருச்சபையின் ஆதரவில் மருத்துவம் படித்துவிட்டு அவர்களின் மருத்துவமனையில் சேவை செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறுவார்கள். ” என்று நான் விளக்கினேன்.
            ” நீ அவர்களிடம் வாங்கிய இரண்டாயிரம் ரூபாயைத் திருப்பி கொடுத்துவிட்டால்? ”  கோவிந்த் குறுக்கிட்டான்.
          ” தந்துவிடலாம். சிங்கப்பூரில் வேலை கிடைத்துவிட்டால் அது ஒன்றும் பெரிய பணம் இல்லை. ஆனால் மனசாட்சி  என்று   ஒன்று உள்ளதே? ” நான் வினவினேன்.
          ” அது உண்மைதான். அனால் உன் எதிர்காலம் என்றும்  ஒன்று  உள்ளதே? ” பன்னீர்தான் அப்படி மடக்கினான்.
          ” அந்த பெண் உன்னோடு தமிழ் நாட்டுக்கு வந்து அங்கு இருக்கமுடியுமா? ” கோவிந்த் கேட்டான்.
          ” நான்தான் முன்பே அது பற்றி கூறிவிட்டேனே. தாராளமாக இருப்பாள் ” என்றேன்.
          ” பாவம் அந்த பெண்ணும் அவளுடைய பெற்றோரும்.அவர்கள் நீ இங்கு இருப்பதையே விரும்புவார்கள்   ” பன்னீர் அவள்மீது இரக்கம் கொண்டான்.
          ” அவள் மட்டுமல்ல பன்னீர். எல்லா பெண்களுக்கும் இதே நிலைதான்.திருமண வயது வரை பிறந்த வீட்டில் செல்லமாக வளர்க்கிறார்கள்.மணமானபின்போ மிகவும் எளிதாக கணவனுடன் சேர்ந்து வாழ வேறு இடம் சென்றுவிடுகின்றனர். அவர்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் அப்போது கவலை கொள்ளவே செய்வார்கள்.ஆனால் அந்தப் பெண்களோ  பெற்றோரைப் பிரிந்து  கணவனுடன் வாழ தயாராகிவிடுகின்றனர். இது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாகவே உள்ளது. இந்தப் பெண்ணும் அப்படித்தான் என்னுடன் தமிழகம் வர நிச்சயமாகச் சம்மதிப்பாள் என்பது எனக்குத் தெரியும். ” நான்  என் கருத்தைக் கூறினேன்.
          ” அருமையான கருத்து இது! இதை நான் எண்ணிப் பார்த்ததில்லை. திருமணம் என்றால் எதோ ஆணுக்கும் பெண்ணுக்கும் மங்களகரமான நாள் என்றுதான் இதுநாள் வரை எண்ணியிருந்தேன். அதன் பின்னணியில் எவ்வளவு வலி உள்ளது என்பதை இப்போதுதான் உணருகிறேன். அதிலும் பெற்றோருக்கு மகளை தங்கள் வீட்டிலிருந்து வேறு ஒருவர் வீட்டிற்கு அனுப்புவது அவ்வளவு எளிதானது இல்லை. அதேபோன்று ஒரு பெண் பெற்றோரை விட்டுப் பிரிந்து போவதும் அவ்வளவு எளிதானது இல்லை. ” இப்படி கோவிந்த் உருகினேன்.
          ” இதுதான் பெண்ணின் வலிமை. ” பன்னீர் தீர்ப்பு கூறினான்.
          ” சரி. நாளை ஹெல்த் மினிஸ்ட்ரிக்கு தனியாகப் போய்விடுவாயா? ” கோவிந்த் கேட்டான்.
          ” டாக்சி மூலம் போகிறேன். அங்குதான் ஹோ ஜாவ் வேலை செய்கிறான். அவனைப் பார்க்கலாம். ”  ஹோ ஜாவ் சீனன். என்னுடன் அலெக்காண்டிரா ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரை என் நெருங்கிய நண்பன். அவனையும் நாளை பார்த்துவிடலாம். என்னைக் கண்டால் அவன் வியந்துபோவான்.
          அன்று பிரபா வரவில்லை. வழக்கம்போல் நாங்கள் மூவரும் உணவு அருந்திவிட்டு திரும்பினோம். பன்னீர் எங்களுடன் தங்கினான்.மூவரும் ஹாலில் வரிசையாக படுத்துக்கொண்டோம். உறக்கம் வரும்வரை வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
          காலையில்  அவர்கள் இருவரும் வெளியேறிவிட்ட்னர்.நான் பத்து  மணியளவில் வாடகை ஊர்தி மூலம் பால்மர் வீதிக்கு சென்றேன். அங்குதான் சிங்கப்பூர் மருத்துவக் கழகம் உள்ளது. உடன் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழையும், முதலாம் வருடத்திலிருந்து இறுதி வகுப்புவரை நான் வாங்கிய மதிப்பெண்கள் கொண்ட சான்றிதழ்களையும்  கொண்டு சென்றேன்.
          நல்ல வேலையாக ஹோ ஜாவ் அந்த அலுவலகத்தில் இருந்தான். .அவனுக்கு அன்றாடம் செயின்ட்  ஜான் தீவுக்கு சென்று வரும் வேலை.  கப்பலில் அங்கு சென்று வருவான். அந்தத் தீவில்தான் தொற்றுத்தடுப்பு முகாம் ( Quarantine ) உள்ளது. கப்பலில் வரும் வெளிநாட்டுப்  பிரயாணிகள் அங்குதான் தங்க வைக்கப்படுவார்கள். அம்மை போன்ற தொற்று நோய்கள்  வெளிநாட்டுப் பயணிகளால் சிங்கப்பூருக்குள் பரவுவதைத்  தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதுவாகும். நான்கூட முதன்முதலில் 1953 ஆம் வருடத்தில் சிறுவனாக சிங்கப்பூருக்கு அம்மாவுடன்  ரஜூலா கப்பலில் வந்தபோது அந்தத் தீவில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அப்போது எங்களுடன் வந்த சில பிரயாணிகளுக்கு அம்மை வார்த்திருந்தது. அப்போது இந்தத் தீவை புறமலை என்றனர்.
          ஜோ ஜாவ் என்னைக் கண்டதும் கட்டித் தழுவிக்கொண்டான். அவன் நல்ல உயரமாக வளர்ந்திருந்தான்.  நாங்கள் பார்த்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும். இருவருமே அடையாளம் கண்டு கொண்டோம்.
          என்னை மருத்துவக் கழகத்தின் பதிவு அதிகாரியிடம் கூட்டிச் சென்றான். அவர் ஒரு சீனர். என்னுடைய சான்றிதழ்களையெல்லாம் கவனமாகப் பார்த்தார். பின்பு என்னைப் பரிதாபமாக நோக்கினார். எனக்கு  ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. எங்கே தவறு நடந்திருக்கும் என்று நான் ஒரு கணம் தடுமாறினேன். நான் அவரைப் பார்த்தேன்.
         ” என்னை மன்னித்துத்கொள்ளுங்கள்.நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். சிங்கப்பூர் அரசு புதிதாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது. அதன்மூலமாக அனைத்து இந்தியப்  பல்கலைக்கழகங்களும் இனிமேல் இங்கு அங்கீகாரத்தை இழந்துவிட்டன.  “என்றார்.
          அது கேட்டு என் மூச்சு ஒருகணம் நின்றது!
          ” சென்னைப் பல்கலைக்கழகம்கூடவா? ” நான் தடுமாற்றத்துடன் கேட்டேன்.
          ” ஆமாம். இனிமேல்இந்தியாவின் எல்லா பட்டங்களும் இங்கே செல்லாது .” அவர் மேலும் சொன்னார்.
          ” மருத்துவப் பட்டம் கூடவா? “
          ” ஆமாம் “
          ” கிறிஸ்துவ  மருத்துவக் கல்லூரி கூடவா”
          ” ஆமாம். அதைத்தான் கடைசியாக நீக்கியுள்ளோம்.”
          ” ஏன்? அது  உலகத் தரம் கொண்டதாயிற்றே? “
          ” அது தெரியும். ஆனால் இது சிங்கப்பூரின் அரசு ஆணை. ” ஆணித்தரமாகக் கூறினார்.
          ” ஏன் இப்படிச்  செய்தார்கள்? “
          ” அது பற்றி எனக்குத் தெரியாது. “
          ” எப்போது இந்த சட்டம் இயற்றப்பட்ட்து? “
          ” மூன்று  மாதங்களுக்கு முன்புதான்.”
          ” நான்தான் எம்.பி.பி.எஸ். தேர்வில்  மூன்று மாதங்களுக்கு முன்பே தேர்ச்சியுற்றுவிட்டேனே? அந்த சட்டம் என்னை எப்படி பாதிக்கும்? ” நான் போராடினேன்
          ” சட்டம் வருவதற்கு முன்பே நீங்கள் தேர்ச்சியுற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் இங்கே இப்போதுதானே பதிய வந்துள்ளீர்கள்? அதனால் உங்கள் எம்.பி.பி.எஸ். பட்டத்தை இங்கே பதிய முடியாத நிலை. “
          ” இந்த நிலையில்  நான் என்ன செய்வது? ” நான் அவரிடமே கேட்டேன்.
          ” இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. புதுச்  சட்டம் வந்தபின்பு நீங்கள்தான் இங்கு முதலாவதாக  வந்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு எப்படி உதவுவது என்பது எனக்குத் தெரியவில்லை. “
          அது கேட்டு எனக்கு கோபம் வந்தது.
          ” நான் இந்தியாவுக்குச்  சென்றது இந்திய மருத்துவப் பட்டம் இங்கு செல்லும் என்பதால். ஆனால் படித்து முடிந்தபின்பு இந்திய சட்டம் செல்லாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அதிலும் நான் சட்டம் இயற்றுமுன்பே தேர்ச்சியுற்றுவிட்டேன். நான் படிக்கும்போதே இதை இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் மூலமாக தெரிவித்து இருக்கலாமே? அதை ஏன் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் நான் முன்பே வந்திருப்பேனே? ” ஆவேசமாகவே கேட்டேன்.
          அவர் தடுமாறினார். அவரால் பதில் சொல்லமுடியவில்லை.
          ” அது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போது என்னால் உங்களை சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் பதிய முடியாது. அதனால் நீங்கள் இங்கே ஒரு மருத்துவராகப் பணியாற்ற முடியாது. ” அவர் உறுதியாகவும் இறுதியாகவும் கூறிவிட்டார்.
          என் கண்கள் கலங்கிவிட்டன. ஹோ ஜாவ்வின் கண்களும்  கலங்கியிருந்தன.
          தலையில் பெரும் இடி விழுந்த நிலையில் நாங்கள் இருவரும் வெளியேறினோம்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகவிதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *