தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி

Madras-Christian-College1

        தாம்பரம்.
        சென்னை  கிறிஸ்துவக் கல்லூரி உலகப் புகழ் வாய்ந்தது!  இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்துவக்  கல்லூரி.
         1837 ஆம் ஆண்டில் தாம்பரத்தில் 375 ஏக்கர் கொண்ட சேலையூர் காட்டில் இதை உருவாக்கினர் ஸ்காட்லாந்து திருச்சபையினர். டாக்டர் வில்லியம் மில்லர் என்பவர் இதன் துவக்க காலத்தில் அரும் பணியாற்றினார்.
          ஆசியாவின் மிகப் பழமையானது சென்னை கிறிஸ்துவக் கல்லூரி.
          மத வித்தியாசமின்றி அனைத்து பிரிவினருக்கும் இங்கே உயர் கல்வி வழங்கப்பட்டது. இங்கு கல்வி கற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்தியாவின் ஜனாதிபதியானார் எனபது குறிப்பிடத்தக்கது.
         இங்கு பயின்ற பலர் உலகின் பல பகுதிகளில் சிறந்து விளங்கியுள்ளனர். இங்கு பயில இடம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அதுபோன்று பயிற்சி கட்டணமும் அதிகமே.
          அன்று காலையிலேயே என்னை கிறிஸ்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார் அண்ணன்.அவரும் இங்குதான் புகுமுக வகுப்பில் பயின்றவர்.. அதன் பின்பு சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில பயின்று பி. ஏ . பட்டதாரியானார்.
          தாம்பரம்  புகைவண்டி நிலையத்தின் எதிர்புறம் கல்லூரியின் நுழைவாயில் அங்கு பாதுகாவலர்களின் அனுமதியுடன் வளாகத்தினுள் செல்லலாம்.
Aerial shot
         உள்ளே நுழைந்ததும் சொர்க்கலோகத்தில் புகுந்த உணர்வு உண்டானது!
          இயற்கையின் சூழல் சற்றும் அழியாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. நெடிய உயர்ந்த மரங்களும், செடி கொடிகளும் பசுமையாக காட்சி தந்தன.
          பூ மரங்களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கின. நடைபாதையிலும் பூக்கள் கம்பளம் போல் விரிந்து கிடந்தன.
          ஆங்காங்கே செம்மண் வீதிகள், போக வேண்டிய இடங்களுக்கு வழி காட்டின.
          பறவை இனங்கள்கூட இனிய கீதங்கள் பாடி எங்களை வரவேற்றன.
          இத்தகைய இன்பச் சூழலில் புதிய தெம்புடனும் உற்சாகத்துடனும் நாங்கள் கல்லூரியின் அலுவலகத்தை அடைந்தோம்.
         பால் மாமா எங்களுக்காகக் காத்திருந்தார். சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளேன் என்பதை அறிந்துகொண்ட அலுவலகத்தினர் தனிக்  கவனம் செலுத்தினர்.
          புகுமுக வகுப்பில் இரண்டு பிரிவுகள் உள்ளன.
         கலைப் பிரிவில் ( Arts Stream ) சேர்ந்தால் இளங்கலை முடித்து  பி. ஏ . பட்டமும், முதுகலை முடித்து எம். ஏ பட்டமும்  பெறலாம்.
        அறிவியல் பிரிவில் ( Science Stream ) சேர்ந்தால் இளங்கலை முடித்து பி. எஸ்சி.  பட்டமும் முதுகலை முடித்து எம். எஸ்சி. பட்டமும் பெறலாம்.அத்துடன் மருத்துவம், தொழில் நுட்பம் பயிலவும் அறிவியல் பிரிவில்தான் சேர வேண்டும்.
          நான் மருத்துவம் பயில வந்துள்ளதால் அறிவியல் பிரிவில் விண்ணப்பம் செய்து.அதற்கான தொகையையும் செலுத்தினேன். ( நான் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டபோது அப்பா என்னிடம் பல ஆயிரம் இந்திய ரூபாய்கள் தந்தார். )
madras christian college2
         அந்தப் பிரிவில் ஆங்கிலம், இயற்பியல் ( Physics ), வேதியியல் ( Chemistry ), தாவரவியல் ( Botany ), விலங்கியல் ( Zoology ) மற்றும் இரு பாடங்கள் கட்டாயம் படித்தாக வேண்டும். நான் முன்னேறிய ஆங்கிலம்  ( Advanced English ) பாடத்தை தேர்ந்தெடுத்தேன். அது என்னுடைய ஆங்கில புலமைக்கு  நல்லதென்று எண்ணினேன்.
         இறுதியாக மொழியியலில் கட்டாயமாக தாய் மொழி தமிழ் அல்லது பிரெஞ்சு மொழி படித்தாக வேண்டும். பெரும்பாலான சிங்கப்பூர் மலேசியா மாணவர்கள்  தமிழ் தெரியாத காரணத்தால் பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுப்பார்கள்.
          எனக்கு தமிழ் படிக்க அலாதி ஆர்வம். ஆனால் ஒரேயொரு தயக்கம்.அங்குள்ள தமிழ் மாணவர்கள் அனைவருமே பள்ளி இறுதி வரை முழுக்க முழுக்க தமிழிலேயே பயின்றவர்கள. நான் ஆங்கிலப் பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுத்தவன். என்னுடைய சிங்கப்பூர் தமிழ் அவர்களின் தமிழகத் தமிழுடன் ஈடாகுமா என்பதே அந்த அச்சம்!
         கொஞ்ச நேரம் நன்றாக யோசித்தேன். என்னுடைய தமிழ் ஆற்றல் மீது எனக்கு நம்பிக்கை உண்டானது.  தமிழ் நாட்டுத் தமிழ் மாணவர்களுடன் சேர்ந்து தமிழ் வகுப்பில் பயின்றுதான் பார்ப்போமே என்ற துணிவுடன் முடிவு செய்தேன். அதை அறிந்த அண்ணன்கூட வியந்து நின்றார்.
          ”  இங்குள்ள தமிழை நீ சமாளிப்பாயா? ” சந்தேகத்துடன் அண்ணன் கேட்டார்.
          ” முடியும். ” என்றேன்.
          தமிழ் நாட்டு மாணவர்களின் தமிழின் தரம் தெரியாமலேயே அவ்வாறு முடிவு செய்து விட்டேன். தமிழ்ப் பேராசிரியர்களிடம் தமிழ் பயில வேண்டும், தமிழ் இலக்கியம் கற்க வேண்டும்  என்ற ஆவலே அப்போது மேலிட்டது! மனதுக்குப் பிடித்த தமிழைப் பயில்வதில் சிரமம் இராது என்று  நான் நம்பினேன்.
        பதிவுகள் செய்தபின்பு கல்லூரி வளாகத்தை சுற்றிப் பார்த்தோம். அது காடுகளின் மத்தியில் ஓர் அழகான பூந்தோட்டத்தையே நினைவூட்டியது.
       மாணவர்கள் தங்கிப் படிக்க மூன்று விடுதிகள் இருந்தன புனித தாமஸ் விடுதி, சேலையூர் விடுதி, பிஷப் ஹீபர் விடுதி என அவை அழைக்கப்பட்டன. பெண்களுக்கு விடுதி இல்லை.அவர்கள் வெளியிலிருந்துதான் வரவேண்டும். புகுமுக வகுப்பில் பெண்கள் இல்லை. பட்டப் படிப்பில் மட்டுமே பெண்கள் பயின்றனர்.
          பேராசிரியர்களுக்கு வளாகத்தின் உள்ளேயே பங்களா போன்ற பெரிய வீடுகள் இருந்தன. இதர  ஊழியர்கள் அனைவரும் அத்தை வீடு இருந்த கணபதிபுரம் என்ற பகுதியில் கல்லூரி குடியிருப்பு வீடுகளில் வசித்தனர்.
          புகுமுக வகுப்பில் ஓர் ஆண்டு பயில வேண்டும். அதன் பின்புதான் பட்டப் படிப்பில் சேர முடியும்.
          அத்தை வீடு திரும்பிய நாங்கள் இருவரும் எங்களின் கிராமத்துக்குச் செல்ல தயார் ஆனோம்.
          கல்லூரியின் வளாகம் போன்று தாம்பரம் அழகான பூங்காவாகக் காட்சி தரவில்லை.
          வீதிகளில் எவ்வித ஒழுங்கும் இல்லை. கார்கள், லாரிகள், ஆட்டோக்கள், மோட்டோர் சைக்கிள்கள், சைக்கிள்கள், குதிரை வண்டிகள் மாட்டு வண்டிகள், மனிதர்கள் இழுக்கும் ரிக்க்ஷாக்கள் என பலதரப்பட்ட வாகனங்கள் வீதிகளில் விதிமுறைகளின்றி ஓடிக்கொண்டிருந்தன.
          ஓட்டுனர்கள் ஒருவரையொருவர் முந்திச் செல்ல ” ஹார்ன்களை ” தாராளமாகப் பயன்படுத்தினர். அதனால் வீதிகளில் பெரும் இரைச்சல். ஆனால் அவ்வாறு ” ஹார்ன் ” ஒலிப்பது சாதரணமாகிவிட்டதால் அது பற்றி நடு வீதியில் நடந்து செல்லும் மனிதர்களும் மாடுகளும் சட்டை செய்வதாகத் தெரியவில்லை!
          தார் ரோடுகள் போடப்பட்டிருந்தாலும் அவற்றின் மீது மண்தான் படர்ந்திருந்தது.  உடைந்த பகுதிகளும், குழிகளும் ஏராளமாகக்  காணப்பட்டன. வீதிகளின் இரு புறங்களிலும்  குப்பை மேடுகள் !
          கட்டிடங்கள் அவரவர் விருப்பப்படி ஒரு பொதுவான ஒழுங்கு இல்லாதவகையில் கட்டப்பட்டிருந்தன. சுவர்களில் சினிமா போஸ்டர்களும், அரசியல் கட்சிகளில் அறிக்கைகளும் ஒட்டப்பட்டிருந்தன.சில சுவர்களில் சில அரசியல் தலைவர்களின் படங்கள் கூட வண்ணத்தில் வரையப்பட்டிருந்தன.
          பகல் நேரத்திலேயே வீதியின் சந்துகளில் நின்றபடி ஆண்கள் சிறுநீர் கழித்தனர்! பொது கழிப்பறைகள் கிடையாது.அதுபோன்ற  சந்துகளில் உள்ள சுவர்கள்தான் திறந்த கழிப்பறைகள்! அப்படியே பேருந்து நிலையம் அருகே கழிப்பறை இருந்தாலும் அதனுள் நுழைவது சிரமம். அவ்வளவு அசுத்தமும் துர்நாற்றமும்!
          வீதிகளில் நடந்தால் தூசும், புழுதியும், புகையும் கடும் வெயிலும்! முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்தால் கைக்குட்டை  கரிய நிறமாகிறது. சட்டையும் நனைந்து உடலுடன் ஒட்டிக்கொள்கிறது.
          அந்த முதல் நாள் அன்றே தாம்பரம் வீதிகளில் வலம் வந்தபோது நான் கண்டவை இவை! இனி நான் இங்கேயா இருக்கப் போகிறேன் என்று மலைத்துப் போனேன்!
           சிங்கார சிங்கப்பூர் எங்கே? சீர்கெட்ட சென்னை எங்கே? நான் நிலை குலைந்து போனேன்!
          இனி  வருத்தப்பட்டு என்ன பயன்? வேறு  வழி இல்லை! படித்து பட்டம் பெற வந்துள்ளேன்!
          சிங்கப்பூரில் அப்பாவிடம் பட்ட பாடுகளுக்கு முன்பு இவையெல்லாம் தூசு என்று எண்ணி மனதைத் தேற்றிக்கொண்டேன்.
         ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.