தொடுவானம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

’ஒரேயொரு வார்த்தையை மட்டும் 
துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்;
ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத் 
தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’ 
என்ற நிபந்தனையோடு _
அந்தரவெளியிலிருந்த தீவு ஒன்றிற்கான 
இலவசப் பயணச்சீட்டு் ஒன்று 
அலைபேசிவழியே நீட்டப்பட்டது.

எவரிடமும் கேட்கவில்லை;
எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவுமில்லை.

என்று
யாரிடம் சொன்னாலும் 
உனக்கே தெரியாமல் நீ கேட்டிருப்பாய் 
என்றோ
உறக்கத்தில் நீ அந்தப் போட்டியில் கலந்துகொண்டிருப்பாய் 
என்றோ 
அத்தனை உறுதியாக அவர்கள் சொல்வதில் 
உதறலெடுத்துவிடும் 
சித்தங்கலங்கிவிட்டதோ என்று.

கலங்கிக்குழம்பித்தெளிந்துமினுங்கி சொற்கள்
சூழ்ந்துகொண்டன:

நான்

நீ

காற்று

உயிர்

காபி

குருவி

பாட்டு

நேயம்

மாயம்

மேலும்…..

’உனக்கான நேரம் முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டு
மறுமுனை அழைப்பு துண்டிக்கப்பட்டது.

கைகொள்ளாமல் சொற்களை அள்ளிக்கொண்டபடி
தரையிறங்கிய தனிக்கோளில் ஏறிக்கொண்டு 
அந்தரத்தில் நீருருவில்
தட்டாமாலை சுற்றத்தொடங்கியது
கவிதை.

Series Navigationஅமெரிக்க சீக்கியர்கள்