தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்

Cidambaram

 

42. பிறந்த மண்ணில் பரவசம்

பளபளவென்று விடிந்தபோது புகைவண்டி சிதம்பரம் வந்தடைந்தது.
நன்றாகத் தூங்கிவிட்ட அண்ணன் திடீரென்று விழித்துக்கொண்டார்.
” சிதம்பரமா? ” என்றார்.
” ஆம் என்று கூறிய நான் பெட்டியை வெளியே இழுத்து இறங்கத் தயாரானேன்.
அண்ணனும் இறங்கிவிட்டார். நேராக தேநீர்க் கடைக்குச் சென்று சுடச் சுட சுவையான தேநீர் பருகினோம். அங்கு வீசிய காலைக் குளிர் காற்றுக்கு அந்தச் சுடு தேநீர் இதமாக இருந்தது.
பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்துச் சென்ற சிதம்பரம் புகைவண்டி நிலையம் கொஞ்சமும் மாறாமல் புராதனச் சின்னம் போன்று காட்சி தந்தது.
அப்போது எங்களைத் தேடிக்கொண்டு மதியழகன் வந்து விட்டார். வேட்டியும் சட்டையும், தலையில் தலைப்பாகையும் கட்டி தோளில் துண்டு போட்டிருந்தார்.அண்ணனின் பால்ய நண்பர் அவர். என்னையும் குழந்தைப் பருவத்தில் தூக்கி வளர்த்தவர்தான்.
மதியழகனும் அவருடைய தம்பி சண்முகமும் எங்கள் வீட்டில் பண்ணையாட்களாக பல வருடங்கள் வேலை செய்பவர்கள். வயல்களைக் கண்காணிப்பது, ஆடு மாடுகளைப் பராமரிப்பது, அவற்றை மேய்ப்பது , போன்ற அனைத்து வேலைகளையும் பார்ப்பார்கள். இருவரும் திருமணம் ஆகாதவர்கள். சாப்பாடு எங்கள் வீட்டில்தான். எங்களை அழைத்துச் செல்ல மதியழகன் கூண்டு வண்டி ஒட்டி வந்துள்ளார்.
அவரும் தேநீர் அருந்தியபின் பெட்டியைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு நடந்தார். நாங்கள் பின்தொடர்ந்தோம்.
வெளியே வந்ததும் குளிர் காற்று இன்னும் பலமாக ஜிலுஜிலுவென்று வீசியது. தொலைவிலிருந்த நடராஜர் கோவிலின் உயர்ந்த கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக மின்னின. அங்கிருத்து பக்தி கானங்கள் கணீரென்று காற்றில் மிதந்து வந்தன.
வீதியின் ஓரத்தில் எங்களுடைய கூண்டு வண்டி நின்றது. அங்கு படுத்திருந்த இரு காளைகளும் எங்களைக் கண்டதும் எழுந்து நின்றன. அவற்றை நுகத்தடியில் பூட்டியதும் வீடு திரும்ப ஆர்வம் காட்டின.
Cidambaram Streetஅண்ணன் முன் புறமும் நான் பின் புறமும் அமர்ந்து கொண்டோம். பெட்டி நடுவில் இருந்தது.
இருப்புப் பாதையை ஒட்டிய வீதியில் சென்று ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும் சிதம்பரம் டவுனுக்குள் வண்டி புகுந்தது.ஒரு சில கடைகளைத் தவிர மற்றவை இன்னும் திறக்கப்படவில்லை.பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்த அதே கடைத் தெருவுதான்.பெரிதாக ஏதும் மாற்றங்கள் இல்லை. வீதியில் அப்போது அதிக வாகனங்கள் இல்லை.பிரதான கடைத்தெருவின் நேர் வீதியில் சென்றபின் சிதம்பரத்தை விட்டு வெளியேறினோம்.
காட்டுமன்னார்க்கோவில் தார் சாலையில் காளைகள் இரண்டும் ஜல் ஜல்லென்று சலங்கைகள் ஒலிக்க வேகமாக உற்சாகத்துடன் ஓடின. ஊரிலிருந்து சிதம்பரம் செல்லும்போது வேண்டா வெறுப்பாக செல்வதுபோல் நடந்து செல்லும் அதே காளைகள் வீடு திரும்பும்போது மட்டும் ஆர்வத்துடன் ஓடுவது வழக்கம்.அவற்றின் மூக்கணாங் கயிற்றை மதியழகன் பிடித்திருந்தாரேயொழிய அவற்றிற்கு வழி காட்டத் தேவையில்லை. வீடு திரும்பும் வழியை காளைகள் நன்கு அறிந்து வைத்திருந்தன. வீடு திரும்பியதும் தீனி கிடைக்கும் என்ற குஷியில் அவை குதித்து குதித்து ஓடி சவாரியில் ஈடுபட்டன.
எனக்கும் எப்போது ஊரைப் பார்க்கலாம் என்ற ஆவலே மேலோங்கியது.
சாலையின் இரு மருங்கிலும் வாய்க்கால்களில் நீர் நிறைந்து ஓடியது. சாலை நெடுக நெடிதுயர்ந்த புளிய மரங்கள் இருந்ததால், இரண்டு பக்க மரங்களும் ஒன்றிணைந்து வீதியை சுரங்கப் பாதையாக மாற்றின. கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்,வயல்களில் செழிப்புடன் வளர்ந்திருந்த நாற்றுகள் பச்சைப் பசேலென்று பலமாக வீசிய காற்றில் அசைந்தாடின.பல பகுதிகளில் வயல்கள் காலைப் பனி மூட்டத்தால் மூடப்பட்டிருந்தன. அந்த அதிகாலையிலேயே பளிச்சிடும் வெண்மை நிறத்தில் கொக்குகள் வயல்களிலும் வரப்புகளிலும் இரை தேடிக்கொண்டிருந்தன.
கண்களுக்கு விருந்தாக அமைந்த அந்த இயற்கையின் அழகு மனதுக்கு ரம்மியமும் மனோகரமாகவும் இருந்தது. இதே காலை வேளை சிங்கப்பூரில் வேறு விதமாகத் தோன்றும். Bullock Cartஅங்கு அடுக்கு மாடி கட்டிடங்களையும் வாகனங்கள் நிறைந்த தார் வீதிகளையுமே காண முடியும். அவை கண்களுக்கு இத்தகைய குளிர்ச்சியை உண்டு பண்ணியதில்லை.
சுமார் ஒரு மணி நேரம் பயணம் தொடர்ந்தது. வீதி காலியாகவே இருந்தது ஒரேயொரு முறைதான் ஒரு பேருந்து எதிரே வந்தது. அப்போது வண்டியை ஓரமாக நிறுத்தி வழி விட்டார் மதியழகன். தவர்த்தாம்பட்டு வந்ததும் காளைகள் தானாக வலது பக்கத்து மண் சாலையில் நுழைந்தன. இராஜன் வாய்க்கால் பாலம் தாண்டியபின் ஆண்டவர் கோயில் தாமரைக் குளத்தைக் கடந்து சென்றோம் அத்தக் குளத்தங்கரையில் ஊரைப் பார்த்தபடி இரண்டு உயரமான குதிரைகளின் சிலைகள் நின்றன. அந்த ஆண்டவர் கோயில்தான் எங்களின் முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வத்தின் புனித இடம் என்று கூறுவார்கள். அந்தக் கோயில் சுவரில்கூட என்னுடைய முப்பாட்டனின் பெயர் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவார்கள். குளத்தருகில் வளர்ந்து நின்ற பழமை வாய்ந்த அரசமரத்து இலைகள் காற்றில் சலசலக்கும் சத்தம் இரவு நேரங்களில் அச்சத்தை உண்டுபண்ணும்.
கொஞ்ச நேரத்தில் மெய்யாத்தூர் வந்துவிட்டோம். அங்கு அனைத்தும் குடிசை வீடுகள்தான். அரிசி மில், அதன் எதிரே இருந்த விளாம்பழ மரம் அப்படியே இருந்தன.சுப்ரமணியர் கோவிலைத் தாண்டியதும் வலது பக்கமாக வளைந்து காளையான்கோவில் குளத்தங்கரை ஓரமாகச் சென்று பெரிய வாய்க்காலைத் தாண்டியதும் எங்கள் ஊர் தெம்மூர் அடைந்தோம்.
ஊருக்குள் நுழைந்ததும் அற்புதநாதர் ஆலயத்தின் மணியோசை ஒலித்தது. பத்து வருடங்களுக்கு முன் நான் வழிபட்ட கோயி ல் அதுவல்ல. அந்த கோவில் கட்டிடம் அப்படியேதான் இருந்தது. ஆனால் அதன் அருகில் அதைவிட உயரமாக புதிய கோவில் கட்டியிருந்தார்கள். நல்ல உயரத்தில் மணிக்கூண்டு அமைந்திருந்தது. அதன் உச்சியில் சிலுவை அழகூட்டியது.அந்தப் பகுதியிலேயே மிகவும் உயரமான கான்கிரீட் கட்டிடம் அதுதான். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்ததாக இருந்தாலும் ஊர் மக்கள் அதை மாதா கோவில் என்றே அழைத்தனர். இந்து மக்கள் உட்பட அனைவரும் கோயிலைத் தாண்டி செல்லும்போது அங்கு நின்று பயபக்தியுடன் நெஞ்சில் சிலுவை போட்டு வேண்டிக்கொள்வது வழக்கம். ஆலயத்தின் பின்புறம் கல்லறைத் தோட்டத்தில் வரிசை வரிசையாக சிலுவைகளுடன் கல்லறைகள அழகுடன் அமைந்திருந்தன.
ஆலயத்தைத் தாண்டியதும் வலது பக்க தெரு வீதியுனுள் நுழைந்தோம். வண்டியைப் பார்த்ததும் ஊர் மக்கள் எங்களுடைய வீட்டின் எதிரே கூடிவிட்டனர். அப்போதும் இப்போதும் ஒரு வீட்டில் விசேஷம் எனில் ஊர் மக்கள் ஆர்வத்துடன் ஒன்று கூடிவிடுவார்கள். தெரு மக்கள் அனைவருமே ஒரு தாய் மக்களாகவே வாழ்ந்தனர். பத்து வருடங்களுக்கு முன் நான் விட்டுச் சென்ற அதே தெரு, வீடுகள்தான். ஒரு மாற்றமும் இல்லை. எதிர் வீட்டு கல் வீடு தவிர மற்ற அனைத்தும் கூரை வீடுகள்தான். மணல்மேட்டுத் தெருவின் களிமண்ணால் எழுப்பப்பட்ட உறுதியான சுவர்கள்தான் காணப்பட்டன.
அந்தக் கல் வீட்டின் எதிரேதான் எங்கள் வீடு. வீதியின் ஓரத்திலேயே மண் சுவர் எழுப்பப்பட்டு மூன்று அறைகள் கொண்ட பெரிய வீடு. முன்புறம் அகலமான திண்ணையும் விசலமாமான வாசலும், பின்புறம் பெரிய தோட்டமும் அப்படியே இருந்தன. மூங்கில் கன்றுகள் வளர்ந்து உயரமான மரங்களாகிவிட்டன.புளிய மரமும் முருங்கை மரமும் நெடிதுயர்ந்து காணப்பட்டன. பெரிய மாட்டுக் கொட்டகையும் வைக்கோல் போரும் இருந்தன.
” தம்பி! வந்துட்டியா? ” கண்களில் நீர் வழிந்தோடிய நிலையில் என்னைப் பெற்ற தாயார் ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டார்.எட்டு வயதில் என்னை விட்டுச் சென்றவர்! பதினெட்டு வயது இளைஞனைப் பார்க்கிறார்! அம்மாவின் உருவ மாற்றத்தில் அவருடைய வயது தெரிந்தது.
அம்மாவின் அருகில் பாவாடை சட்டை அணிந்த இரண்டு சிறுமிகள் மருண்ட விழியுடன் என்னைப் பார்த்தபடி நின்றனர். இருவரும் ஒரே மாதிரி சடை பின்னி ரிப்பன் அணிந்திருந்தனர்.
+ தங்கச்சிகளைப் பார் தம்பி. ” அவர்கள் இருவரையும் பிடித்து என்னிடம் தந்தார். ” உங்க சின்ன அண்ணன்,” என்று அவர்களிடம் கூறினார்.
மூத்த பெண் கலைமகள்.சிங்கப்பூரில் பிறந்தவள். ஒரு வயதில் அங்கிருந்து அம்மாவுடன் திரும்பியவள். இளையவள் கலைசுந்தரி.இங்கு வந்து பிறந்தவள். அம்மா திரும்பும்போது கற்பமாக இருந்தார். இவர்களையெல்லாம் நினைத்துக்கூட பார்க்காமல் எப்படித்தான் இத்தனை வருடங்கள் இருந்தேனோ என்று நினைத்ததில் என் கண்கள் கலங்கிவிட்டன.இருவரையும் அணைத்துக்கொண்டேன்.
அண்ணன் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.நேராக தோட்டத்தினுள் நுழைந்து விட்டார்.
திண்ணையில் தாத்தாவும் பாட்டியும் உட்கார்ந்திருந்தனர். மிகவும் வயதாகி காணப்பட்டனர். தாத்தா ஒரு நீண்ட மூங்கில் கழியைக் கையில் பிடித்திருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். அவருக்கு .வயது எண்பதைத் தாண்டியிருந்தது. என் கையைப் பிடித்து தடவிப் பார்த்தார். அப்பா பற்றி கேட்டார். பாட்டியும் என்னிடம் நலன் விசாரித்தார்.
நான் மீண்டும் வாசலுக்கு வந்தபோது ஊர் மக்கள் இன்னும் நிறையே பேர்கள் கூடிவிட்டனர். சிறுவனாக சென்றவன் இப்படி பேண்ட், சட்டை ,விலையுயர்ந்த காலணி அணிந்து, வாட்டஞ் சாட்டமாக திரும்பியுள்ளது அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம்.
அந்தக் கூட்டத்தில் அம்மா அருகில் ஓர் இளம் பெண் வித்தியாசமாகக் காணப்பட்டாள். அவள் ஆரஞ்சு மஞ்சள் நிறத்துடன் பளிச்சென்று வேறுபட்டு தோன்றினாள். அவளை யார் என்று கேட்பதுபோல் பார்த்தபோது அவளே பேசினாள் .
” தம்பி. என்னை அடையாளம் தெரியலையா? ” ஆவல் பொங்கும் முகத்துடன் கேட்டாள்
” எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறது… ” பழைய நினைவுகளை ஓடவிட்டேன்.
” ராஜகிளி. ” என்றாள்
” என்னது? ராஜகிளியா ? ” வியப்புடன் அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டேன்.
சிறு வயதில் தெம்மூர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். என்னுடன் சேர்ந்து விளையாடுவாள்.நான் ஆற்றில் தூண்டில் போடும்போது அவள்தான் கொட்டாங்குச்சியில் மண் புழுக்கள் கொண்டுவருவாள்.
ராஜகிளி எனக்கு சின்னம்மா முறை. அம்மாவின் சித்தப்பா மகள். அவளுக்கு என் வயதுதான். அவளை கல் வீட்டு குப்புசாமிக்கு மூன்றாம் தாரமாக மணமுடித்து வைத்துள்ளனர். அவர் ஊர் பஞ்சாயத்து தலைவர். முதல் இரண்டு மனைவிகள் இறந்து போயினர். அவர்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு ராஜகிளி எப்படித்தான் சம்மதித்தாளோ என்று குழம்பிப் போனேன்.
என்னுடைய பால்ய நண்பன் பால்பிள்ளை அப்போதுதான் வயல் வெளியிலிருந்து வந்தான். நன்றாக வளர்ந்திருந்தான்.” அண்ணன் ” என்று ஆசைபொங்க வரவேற்றான்.
உடைகளை மாற்றிக்கொண்டு அவனுடன் வயல் வெளிக்குப் புறப்பட்டேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationகாலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’