தொடுவானம் 51. கிராமத்து பைங்கிளி

கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.விடுதிகளில் மாணவர்கள் தங்க முடியாது என்றும் உத்தரவு.எங்களுக்கு போராட்டத்தில் இருந்த ஆர்வம் ஊர் செல்வதில் இல்லை. நாங்கள் விடுதிகளில் தங்கியிருந்தால் ஒன்றுகூடி திட்டமிடுவோம் என்ற காரணத்தினால் விடுதிகளையும் மூடி எங்களை பிரித்து விடும் முயற்சி இது.
நான் பிரயாணப் பெட்டியில் வேண்டிய பொருட்களை அடுக்கிக்கொண்டு சிதம்பரம் செல்ல தயாரானேன். அதற்கு முன் அத்தை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்ல முடிவு செய்தேன்.
அந்த இரண்டு நாட்களும் அத்தை மகள் நேசமணிக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி. ” அத்தான் …அத்தான் ..” என்று என்னை ஆசைதீர அழைத்து மகிழ்ந்தாள்.பம்பரமாக சுழன்று எனக்கு பணிவிடைகள் செய்தாள். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் மனதில் பொதிந்திருந்த அன்பை வெளியில் கொட்டியது. நான் நினைத்தால் தினமும் அத்தை வீடு வரலாம்.அது நடக்கும் தொலைவில்தான் இருந்தது. நான் அப்படிச் செய்யவில்லை.கிடைக்கும் மாலைப் பொழுதில் வெரோனிக்காவுடன் கழித்ததை எண்ணிப் பார்த்தேன்.நான் செய்தது சரியா என்பது தெரியவில்லை.ஆனால் அவளுடன் பழகுவது பிடித்திருந்தது.அது ஏன் என்றும் தெரியவில்லை.இப்போது அத்தை மகள் செய்வதெல்லாம் வேறு விதமான உரிமையான அன்பு என்பதும் தெரிகிறது. அத்தைக்கும் நாங்கள் இருவரும் நெருக்கமாகப் பேசுவதும் பழகுவதும் பிடித்தது.
அத்தை வீட்டில் தங்கியபோது ஒரு நாள் மாலை வெரோனிக்காவை அவளுடைய வீட்டில் சந்தித்து விடை பெற்றேன். அவள் கண்கலங்கியவாறு சோகத்துடன் விடை தந்தாள். சீக்கிரம் கல்லூரிகள் திறக்க தான் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினாள்.கல்லூரிகள் திறந்ததும் கால தாமதமின்றி உடன் திரும்புமாறு வேண்டிக்கொண்டாள்.
அத்தை மகளும் சோகத்துடன்தான் விடை தந்தாள். பெண்கள் மகிழ்ந்திருக்கும்போது மலர்ந்த மலராகின்றனர். சோகம் வந்தாலோ வாடிய மலராகிப்போகின்றனர். இதனால்தான் கவிஞர்கள் பெண்ணை மலருடன் ஒப்பிடுகின்றனர்.
அது மார்கழி மாதம் என்பதால் கிராமத்து வயல்கள் அனைத்திலும் பச்சைப் பசேலென்று நெற்பயிர்கள் காற்றில் அசைந்தாடின!
இந்த முறை நான் கிராமத்தில் தங்கியது பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைத் தந்தது. அவர்களில் முக்கியமானவர் என்னுடைய அண்ணி. அவர் என்னைவிட ஐந்து வயது மூத்தவர். திருச்சியிலும் பள்ளிகள் மூடப்பட்டதால் அண்ணியும் கைக்குழந்தை சில்வியாவும் கிராமத்துக்கு வந்திருந்தனர்.அண்ணன் அவருடன் வரவில்லை.அவருக்கு அப்போதுதான் நாகலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி கிடைத்திருந்தது. நாகலூர் கள்ளக்குரிச்சியிளிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்தது.
அண்ணியை நான் திருச்சியில் பார்த்தபோது அதிகம் பேசும் வாய்ப்பு கிட்டவில்லை.நானும் இரண்டொரு நாட்களில் சென்னை சென்றுவிட்டேன். இப்போதோ கிராமத்தில் நீண்ட நாட்கள் தங்க வந்துள்ளார்.
நான் அண்ணனின் திருமணத்தின்போது சிங்கப்பூரில் இருந்தேன். புகைப்படம் பார்த்துதான் அண்ணியை தெரிந்துகொண்டேன்.திருச்சியில் முதன் முதலாகப் பார்த்தபோது சரளமாகப் பேசுவதற்கு கூச்சம் கொண்டேன். இப்போது அவருடன் பேசுவது புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அண்ணி திருச்சி நகரிலேயே பிறந்து வளர்ந்தவர். கிராமத்து வாழ்க்கை அவருக்கும் புதிதுதான்.
அண்ணன் அண்ணிக்கு திருமணம் இங்குதான் வெகு விமரிசையாக நடந்தேறியது. அது குடும்பத்தில் முதல் திருமணம் என்பதால் தாத்தா தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார். பெரியப்பா மலாயாவிளிருந்தும் அப்பா சிங்கபூரிலிருந்தும் வந்திருந்தனர். சகோதரர்கள் இருவரும் நிறைய பணத்துடன் வந்ததால் ஊரில் அதுவரை நடக்காத அளவில் மிகவும் சிறப்பாக திருமணம் நடந்துள்ளது. வீட்டு எதிரே இருந்த வீதி, வாசல், தோட்டம் நெடுகிலும் பெரிய மூங்கில் மரங்கள் நட்டு, தென்னங்கீற்றுகளால் பந்தல் போட்டுள்ளனர்.தரையில் நீண்ட கோரைப்பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன.. திருமண விருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்துள்ளது.அதில் ஊர் மக்கள் அனைவரும் பங்குகொண்டுள்ளனர்.அந்த மூன்று நாட்களும் மேள தாள நாதஸ்வரக் கச்சேரியும் நடந்துள்ளது.மொத்தத்தில் அது ஊர்த் திருவிழாவாகவே நடந்துள்ளது. இவ்வளவு சிறப்புக்கு உரிய மணப்பெண் தான் அண்ணி!
அவரும் நானும் பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில்தான் அமர்ந்து பேசுவோம்.சில நேரங்களில் இராஜகிளியும் வந்து சேர்ந்துகொள்வார். இருவரும் அதிகமாக சிங்கப்பூர் வாழ்க்கையைப் பற்றி கேட்பார்கள். சென்னை கல்லூரி பற்றியும் கேட்பார்கள்.நான் பங்கெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு கதை போன்று சொல்வேன்.
இராஜகிளி எனக்கு சின்னம்மா முறை. அவர் அம்மாவின் சித்தப்பா மகள்.என் வயதுதான்.ஆனால் ஊர்த் தலைவர் குப்புசாமிக்கு மூன்றாம் தாரமாக மணமுடித்து வைக்கப்பட்டவர். அவருடைய முதல் இரண்டு மனைவிகளும் இறந்துவிட்டனர். அவர்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். திருமணம் ஆனபோதே அவர் அந்தப் பிள்ளைகளுக்கு தயாகிவிட்டார். அவருடைய முழு சம்மதத்துடன்தான் திருமணம் நடந்ததா என்பது தெரிவில்லை. ஆனால் அப்போதெல்லாம் பெண்கள் அப்படிதான் பெற்றோர் காட்டும் மாப்பிள்ளையை ஏற்றுக்கொண்டு குடும்பம் நடத்தினர்.அந்த திருமணத்தில் அம்மாவுக்கும் நிறைய பங்கு உள்ளது. தங்கையை அருகிலேயே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை அம்மாவுக்கு. ஊரில் இராஜகிளிதான் நிறத்தில் சிவப்பு. அழகான வட்ட வடிவிலான முகத்தில் லேசான மஞ்சள் பூசி சிவப்பு நிறத்தில் பெரிய பொட்டு வைத்திருப்பார். அவருக்கு என் மீது அலாதி பிரியம். ” தம்பி…தம்பி …” என்று அன்பொழுகப் பேசுவார்.
இராஜகிளியின் கணவர்தான் ஊர் பஞ்சாயத்து தலைவர். பெயர் குப்புசாமி. அனால் ஊரார் அவரை ” கல் ” என்றுதான் அழைப்பார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் கூறுவார்கள். முதல் காரணம் அவர் வீடுதான் தெருவில் கல் வீடு. அனால் அதைவிட இன்னொரு காரணம், அவர் பஞ்சாயத்து கூட்டங்களில் கல் போன்று ஏதும் பேசாமல் அமர்ந்திருப்பாராம்.கடைசியில்தான் தீர்ப்பு கூறுவாராம். அவர் பழுத்த காங்கிரஸ்வாதி.
ஓய்வு நேரங்களில் சிறுகதைகள் எழுதி சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு தபாலில் சேர்ப்பேன். அண்ணியிடமும் இராஜகிளியிடமும் அந்தக் கதைகள் பற்றி சொல்வேன். அவர்களும் அது பற்றிய கருத்துகள் கூறுவார்கள். அவர்கள் இருவருமே குமுதம் ஆனந்த விகடன் படிக்கும் வழக்கமுடையவர்கள்.
நான் எழுதும் கதைகள் தமிழ் நாட்டு தரத்துக்கு ஏற்ப உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்கும் பிடித்தது. இருவரும் என்னை ஊக்குவிக்க அவ்வாறு கூறியிருக்கலாம். நாட்கள் சென்றபோது இருவரிடையே ஒரு வித்தியாசம் தெரிந்தது. இராஜகிளி என்னை கதைகள் எழுதி குமுதத்திற்கும் ஆனந்த விகடனுக்கும் அனுப்புமாறு கூறினார். அண்ணி கதைகள் எழுதவேண்டாம் என்று கூறினார். நான் அது ஏன் என்று கேட்டபோது, ” கதை எழுதுவோரின் வாழ்க்கையும் கதையாகிவிடும். ” என்று பதில் கூறினார்.
தாத்தாவுக்கு அதிக வயதாகிவிட்டது. தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். கண்பார்வையும் மங்கிவிட்டது. உரக்கப் பேசினாலும் கேட்காது.எந்நேரமும் திண்ணையில்தான் அமர்ந்திருப்பார். நடப்பதற்கு ஒரு நீண்ட மூங்கில் கழி வைத்திருப்பார். அவரின் அருகிலேயே ஒரு கயிற்றுக் கட்டில். அதில்தான் படுத்துக்கொள்வார்.
அம்மா வழக்கம்போல் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். வாசல் கூட்டி, சாணம் தெளித்து, கோலம் போடுவார். பூசணிப் பூக்களை அதன் நடுவில் அழகாக வைத்திருப்பார். பின்பு ஒரு கூடையில் மாட்டுச் சாணத்தை அள்ளி, அவற்றை வைக்கோலுடன் சேர்த்துப் பிசைந்து,வட்ட வட்டமாக இராட்டி தட்டி வெயிலில் காயவைப்பார். கிராமத்தில் அதுவே முக்கிய எரிபொருள்.
கோழிகளை வெளியில் விடும்போது ஒரு இளம் பெட்டைக் கோழியை பிடித்து கூடைக்குள் அடைத்து விடுவார்.
அதற்குள் பொழுது பள பளவென்று விடிந்துவிடும்.கிழக்கே தோன்றும் கதிரவனின் இள ஒளி கிராமத்து கூரை வீடுகளின்மேல் பரவும். வீட்டின் எதிரேயுள்ள வெப்ப மரத்தில் கூடு கட்டி வாழும் குருவிகள் கீச்…கீச்சென்று கத்திக்கொண்டு சிறகடித்துப் பறக்கும். அதுகேட்டு மற்ற பறவைகளும் பரவசத்துடன் உற்சாகத்துடன் ஓசை எழுப்பிக்கொண்டு பறந்து செல்லும்.
பக்கத்து வீட்டு பால்பிள்ளை தோளில் துண்டுடன் வந்து நிற்பான. அவன் வாயில் வேப்பங்குச்சி இருக்கும். கையில் எனக்கு ஒரு குச்சி வைத்திருப்பான்.அதை மென்று பல் துலக்கும்போது கசக்கும். ஆனால் அதில் கிருமி நாசினி உள்ளதால் பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.அதனால்தான் கிராமத்து மக்களுக்கு பல் வலி அதிகம் இருப்பதில்லை.
நாங்கள் இருவரும் வயல்வெளிக்குச் செல்வோம். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வாய்க்காலில் குளிப்போம்.
வீடு திரும்பியதும் சமையல் அறையிலிருந்து கோழிக் குழம்பு மணம் மூக்கைத் துளைக்கும்.பால்பிள்ளை என்னுடன் திண்ணையில் உட்கார்ந்துகொள்வான்.சுடச்சுட தோசையும் சுவையான கோழிக்கறியும் ஆசை தீர உண்போம்.
நான் கல்லூரி மாணவன் என்பதால் கிராமத்தில் எனக்கு நல்ல மரியாதை இருந்தது.அதனால் கிராமத்தில் நடைபெறும் திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்திப் பேச என்னை அழைப்பார்கள். அதுபோன்று இராஜகிளியையும் பேச அழைப்பார்கள். அவர்தான் ஊர் மாதர் சங்க தலைவி. பெண்களுக்கு ஏற்ற வகையில் அவர் நன்றாகப் பேசுவார். எங்களுடைய பெயர்களை திருமண அழைப்பிதழ்களில் சேர்த்திருப்பார்கள். அனேகமாக அனைத்து திருமணங்களும் சீர்திருத்த திருமணங்களே.
இந்த விடுமுறையின்போது ஒரு திருமணம் நடந்தது. அது எதிர்வீட்டு ஏகாம்பரத்துக்கும் பக்கத்துக்கு ஊர் கோகிலத்துக்கும் நடந்தது. ஏகாம்பரம் பள்ளி சென்றதில்லை. வயல் வேளைகளில் ஈடுபட்டிருந்தான். கோகிலம் ஓரளவு படிக்க எழுதத் தெரிந்தவள். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். நான் இதுபோன்ற திருமணங்களில் பேச நன்கு தயார் செய்துகொண்டு செல்வேன். அதிகமாக திருக்குறளில் மேற்கோள் காட்டி பேசுவேன். இந்த திருமணத்துக்கும் அவ்வாறே செய்தேன்.
பட்டு வேட்டி கட்டிக்கொண்டு புது மாப்பிள்ளை போல் மணப்பந்தலுக்குச் சென்றேன். மணமக்கள் மாலைகள் மாற்றிக்கொண்டு கணவன் மனைவி ஆனபின்பு, புதுமணத் தம்பதிகளை வாழ்த்திப் பேச என்னை அழைத்தனர்.
நான் மணமக்களைப் பார்த்துக்கொண்டுதான் வாழ்த்துரை வழங்கினேன். அப்போது மனைவி என்பவள் கொம்பைத் தழுவும் கொடியாக இருக்கவேண்டும் என்று கூறி விளக்கம் தந்தேன்.
பெரும்பாலும் இதுபோன்ற மண விழாவில் மணப்பெண் குனிந்த தலை நிமிராமல் நாணத்துடன் அமர்ந்திருப்பதுண்டு.இந்த மணப்பெண் கோகிலம் கருத்த நிறமுடையவள்தான். ஆனால் கிராமத்து பைங்கிளி போன்ற அழகு. உழைத்து உரம் ஏறிய உடல் அமைப்பு. வட்ட வடிவிலான முகம். குறும்புப் பார்வையுடைய கண்கள். அவை இரண்டு வண்டுகள் போன்று என்னையே மொய்த்தன!
ஆம்! நான் வாழ்த்துரை வழங்கியபோது அவள் நேராக என்னையே வைத்தவிழி வாங்காமல் பார்த்தபடி புன்னகைத்தாள்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationகல்பனா என்கின்ற காமதேனு…!சீஅன் நகரம் – வாங்க.. சாப்பிடலாம் வாங்க