தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.

 

மூவர்ணம் நட்டு
நீருற்றி
66 ஆண்டுகளுக்குப்பின்னும்
தெரிந்தது
அது நம் கண்ணீர் என்று.
போராடிய தலைவர்களின்
தியாகங்கள் எல்லாம்
சந்தையில்
பழைய பேப்பர்கள் போவது போல் கூட‌
போவதில்லை
கிலோவுக்கு என்ன விலை?
அவர்கள் ரத்தமும் சதையும்
இன்று
கருப்புப்பண ஷைலக்குகளின்
தராசு தட்டில்.
சுதந்திரம் என்று மொழி பிரித்தோம்.
அது நம் விழி பறித்தது.
சுதந்திரம் என்று
ஒரு மொழி ஆக்கினோம்.
அதன் சினிமாப்பாட்டுகள் மட்டுமே
இனித்தன.
நசுங்கிக்கிடந்தவர்களுக்கு
நலங்கள் செய்தோம்.
அது வெறும் சலசலப்புகளின்
சலுகைப்பட்டியல் மட்டுமே ஆனது.
வாக்குகள் கிடைத்தால் போதும்
வீட்டுக்கொரு
இமயமலை இலவசமாய்
வாசலில் கிடக்கும்.
மதங்களே இல்லாத மதம் வேண்டுமென்று
அரசியல் சாசன நரம்போட்டத்தில் கூட‌
திருத்தங்கள் அச்சடித்தோம்
இன்னும் டெல்லி மைதானத்தில்
ராவணப்பொம்மைகள்
எரிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
சினிமாக்கள் டிவிக்கள் செல்ஃபோன்கள் தான்
நாம்”தேடிச்சோறு நிதம் தின்று”
“பல சின்னஞ்சிறு கதைகள் பேசும்”
சுதந்திர மைதானம்.
சுதந்திரமாய் சுதந்திரத்தை தொலைத்த‌
மைதானமும் அதுவே.
ஆகஸ்டுகள் வந்தன!
ஆகஸ்டுகள் போயின!
“ஜன”வரிகளுக்குள் தான்
இன்னும் அர்த்தமே வரவில்லை.
காலண்டர்களில்
விடுமுறை தினங்கள் மட்டுமே
பெரிய எழுத்தில் இருந்தன.
இளையயுகமோ
கணினிகளுக்கு தீனியானது.
முகம் தெரியாத முக நூல்களில்
முகம் இழந்தது.
எங்கோ ஒரு எத்தியோப்பியாவில்
தாயின் கன்னிக்குடம்
உடைந்து விழும்போதே
பிஞ்சு எலும்புக்கூடுகளாகத்தான்
விழுகின்றன.
உலக வறுமையின் கோர தாண்டவத்தை விட‌
உள்ளூர்க்கதாநாயகிகளின்
குட்டைப்பாவாடைகள் தாண்டவம் தான்
இவர்களுக்கு
குளிர்ச்சியான சிந்தனைகள்.
வெள்ளையாய் வந்த நடிகையை
“வெள்ளாவியில வச்சு வெளுத்தாங்களா?”
என்று பாடல் எழுதி
கிறங்கிப்போன இந்த இளசுகளின்
மீது விழுந்த
இந்த “வெள்ளையாதிக்கத்திலிருந்து”
என்றைக்கு விடியல் வரும்?
சாதிவெறியின் வெட்டறிவாளோ
காதலின் மயிலிறகுகளுடன்
மல்லுக்கு நிற்கிறது.
மயில் இறகுகளோ
ரத்தம் ருசி பார்க்கத் துடிக்கிறது.
எதற்கு இந்த சுதந்திரம்?
ஏன் இந்த சுதந்திரம்?
தர்ப்பூசணிப் பழத்தை கூறு போடுவது போல்
மாநிலங்களை கீற்று போட்டு
விற்கும் தேர்தல் சீஸனில்
பாரத புத்திரர்களின் குறுகிய மனமே
குமைச்சல் மூட்டுகிறது.
இனி ஒவ்வொரு வாக்குப்பெட்டியும் கூட‌
ஒரு மாநிலம் தான்.
விலங்குகள் கூட ஆகலாம்
ஆட்சேபணையில்லை.
விலங்குகளை பூட்டிக்கொள்ளலாமா?
சுதந்திரத்தின் முலாம் பூசிய‌
இந்த விலங்குகளை விளங்கிக்கொள்ளும் வரை
இந்த காகித தோரணங்கள்
ஆடிக்கொண்டிருக்கட்டும்.
=================================================ருத்ரா
Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று