தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.

BABUJI
அவர்கள் இறைத்திருப்பொருத்தம் பெற்றவர்கள்.
அவர்கள் நடந்தார்கள். வரலாறு தன் பாதையை வகுத்துக்கொண்டது. அப்படியிருந்தும் வரலாற்றின் பக்கங்களில் அவர்களின் முகங்கள் அதிகம் தென்பட்டதில்லை. ஏனெனில், அவர்கள் இறைப் பொருத்தத்திற்காகவே வாழ்ந்திருந்தார்கள்.
அப்படிப்பட்ட தியாகச்சீலர்களான நபித்தோழர்களைப் பற்றி அமெரிக்காவாழ் கணினி தொழில்நுட்ப வல்லுநர் நூருத்தீன் “தோழர்கள்” என்னும் தொடரை சத்தியமார்க்கம்.காம் என்னும் இணைய இதழில் எழுதிவருகிறார். அத்தொடரின் முதல் பாகம் “தோழர்கள்” என்னும் பெயரிலேயே அச்சில் வெளிவந்துள்ளது.
சத்தியமார்க்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11 செப்டம்பர் 2011 அன்று சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.
பன்னூலாசிரியரும், பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் முன்னாள் தமிழாசிரியருமான அதிரை அஹ்மது இந்நிகழ்வுக்குத் தலைமைத் தாங்கினார். சத்தியமார்க்கம் இணைய இதழின் ஆசிரியர் ஜமீல் அவர்கள் முன்னிலை வகித்த இவ்விழாவில், மனித உரிமைப் போராளியும், பன்னூலாசிரியருமான பேரா. அ.மார்க்ஸ்., முன்னாள் பெரியார்தாசனான முனைவர். பேரா.அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
செல்வி.ஷைமா தன் இனிய குரலில் இறைமறை ஓதி விழாவைத் தொடங்கி வைக்க, இணைய அறிஞர் முஹம்மது ரஃபீக் வரவேற்புரை ஆற்றினார். “பேறு பெற்ற பெண்மணிகள்” நூலாசிரியர் அதிரை அஹ்மது அவர்களின் தலைமை உரையில் இத்தகைய நூல்கள் வெளியிடப்படவேண்டுவதன் காலத்தேவை உரைக்கப்பட்டது.
நூலை அறிமுகம் செய்து சத்தியமார்க்கம் இணைய இதழாசிரியர் சகோ. ஜமீல் பேசும்போது, “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் ஏகத்துவ முழக்கமானது இருட்டின் அடர்குகையில் ஒரு வெளிச்ச மாற்றத்தை உண்டாக்கிய சூரியக்கதிரைப் போன்று அமைந்த அற்புதம் விளக்கப்பட்டது.
அதன்பின், நூற்பிரதிகள் வெளியிடப்பட்டன.
பேரா.அ.மார்க்ஸின் உரை, ஆழமானதாக, கருத்துச்செறிவுடனும் விவரணங்களுடனும் அமைந்திருந்தது. இயக்கமாகப் பரிணமித்த இஸ்லாம் தன் குறிக்கோள்களில் அடைந்த வெற்றி பற்றிய ஓர் ஆய்வுரையாகவும், எளிமையானவர்களையே முன்னிலைப்படுத்திய இஸ்லாம் குறித்த மதிப்புரையாகவும், உலக இன்பத்தினைப் பொருட்படுத்தாமல், மறு உலக வெற்றி என்னும் குறிக்கோளினை முன்னிறுத்தி மிக எளிமையாக நபித்தோழர்கள் வாழ்ந்திருந்தும், பின்வந்த சமுதாயத்தவர் பொருளாசையில் புதையுண்டு போனது பற்றிய நேர்ப்பார்வையாகவும் அ. மார்க்ஸ் அவர்களின் ஆழிய உரை அமைந்திருந்தது.
அதிரை.அஹ்மது அவர்களின் கணீர்குரலில் கவிஞர் சபீர் எழுதிய “தோழர்கள்” கவிதை வாசிக்கப்பட்டு வரவேற்பு பெற்றது.
அதன்பின்னர் சிறப்புரை ஆற்றிய முனைவர். பேரா. அப்துல்லாஹ், நிகழ்வின் சூழல் தமக்கு பாடசாலை வகுப்பறையைப் போன்று தென்படுவதாகக் கூறினார். “இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று கூறிடுவதற்கு முன்பும் பின்பும், பல சந்தர்ப்பங்களில் இஸ்லாம் பற்றி தந்தை பெரியாரின் சிலாகிப்பைப் பட்டியலிட்ட பேராசிரியர், குலத் தாழ்ச்சி உயர்ச்சி பாராத, மானுடப் படைப்பில், அடுக்குநிலை வேறுபாடு காட்டாத ஏகக்கடவுளை ஏற்பதற்கு பெரியாரும் ஆயத்தமாகவே இருந்தார் என்பதைச் சுட்டினார் பேராசிரியர்.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் பேச்சு, நூலாசிரியரின் பாட்டனார் பெரியவர் தாவூத்ஷா, தகப்பனார் என்.பி.அப்துல்ஜப்பார் ஆகியோரைப் பற்றிய நினைவலைகளையும் கொண்டிருந்தது வழமைபோல் பல உளவியல் நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த பேரா.அப்துல்லாஹ்வின் பேச்சில் ஏகத்துவக் கலிமாவை “தோழர்கள்” உணர்ந்ததைப் போன்றே முழு முஸ்லிம் சமுதாயமும் உணரவேண்டுமென்ற அவா இருந்தது.
சிறப்புப் பேச்சாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் நூருத்தீன் தன்னெழுத்தில் முதிர்ச்சியைத் தூண்டியவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். “தோழர்கள்” நூல் பற்றிய சில விவரங்களை; பகுதிகளை உணர்ச்சிப்பெருக்குடன் அவர் விவரித்தபோது, பார்வையாளர்களின் விழிகளிலும் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது.
கவிஞர் இப்னுஹம்துன் (பஃக்ருத்தீன்) இந்நிகழ்வின் தொகுப்பாளராக செயலாற்றினார்.
இணைய எழுத்தாளர் அதிரை. ஜமாலுத்தீனின் நன்றியுரைக்குப் பின்னர் விழா நிறைவுற்றது.

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)பிரபஞ்ச ரகசியம்