நம்பிக்கை ஒளி! (9)

This entry is part 15 of 31 in the series 2 டிசம்பர் 2012

 

சகோதரன் என்ற சக்தி வாயந்த உறவு இருந்தும் இல்லாமல் மனம் வெறுப்படைந்த நிலையில், ஒரேயடியாக மறந்துபோன நினைவுகள் அனைத்தும் மெல்ல மெல்ல தலை தூக்கி தூக்கத்தையும், படிப்பையும் கெடுத்தது. இத்தனை நாள் இல்லாத அந்த பாசம் இன்று மட்டும் எப்படி
புதிதாக வரும் என்ற கோபமே மேலிட்டது.

 

“மாலு, மாலு என்னாச்சு.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லையா?” நெற்றியில் கை வைத்துப் பார்த்த, உடன் தங்கியிருக்கும் அறைத்தோழி ஆர்த்தி உடல் நெருப்பாய்க் காய்வதை உணர்ந்து, “நல்ல காய்ச்சல் இருக்கும் போல இருக்கு மாலு. வாங்க
டாக்டர்கிட்ட போய் வரலாம். நானும் வேண்டுமானால் இன்று ஆபீசிற்கு லீவ் போட்டுவிடுகிறேன்” என்றாள்.“அதெல்லாம் வேண்டாம் ஆர்த்தி, ’மெட்டாசின்’ மாத்திரை இருக்கு போட்டுகிட்டு தூங்கி எழுந்தா சரியாகிடும். நீங்க அனாவசியமா லீவ் எல்லாம் போட வேண்டாம். கிளம்புங்க ஆர்த்தி, … இவ்வளவு அக்கறையா சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ்”

 

ஆர்த்திக்கு மாலுவை அப்படியே விட்டுச் செல்வது வருத்தமாக இருந்தாலும் அவள் தைரியமாக இருப்பதால் மாலை வந்து தேவையானால் மருத்துவரிடம் கூட்டிச் செல்லலாம் என்று முடிவு செய்து, அவளுக்குத் தேவையான பிரட்டும், பாலும் வாங்கி வந்து கொடுத்தாள். மாலு கொஞ்ச நேரம் கழித்து பல் துலக்கிவிட்டு வந்து சாப்பிடுவதாகக் கூறியதால் பாலை  பிளாஸ்கில் ஊற்றி அருகில் ஒரு பாட்டில் தண்ணீரும் வைத்துவிட்டுக் கிளம்பினாள். துவண்டு கிடந்தவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. வேறு வழியில்லாமல் கிளம்பினாள்.

 

எவ்வளவு நேரம் அப்படியே மயங்கிக் கிடந்தோம் என்று தெரியாமலே, கண் விழித்த போது உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போன்று அப்படி ஒரு வலி. காயச்சல் குறைந்தது போல் இருந்தது. வயிறு மெல்ல சத்தம் செய்து காலியாக இருப்பதை உணர்த்தியது. பிளாஸ்கைத் திறந்து பாலை டம்ளரில் ஊற்றியவள் அது தயிராகிப் போனதைப் பார்த்தவுடன், அந்த மணமும் குடலைப் பிரட்ட அப்படியே மூடி வைத்துவிட்டு இரண்டு துண்டு ரொட்டியை மென்று முழுங்கி, தண்ணீரைக் குடித்தாள். ஏனோ சின்னம்மாவைப் போய் பார்த்து வ்ரவேண்டும் என்று தோன்றியது. தீபாவ்ளியின் போது சென்று இரண்டாவது நாளே திரும்பி விட்டாள். ரிஷியைப் பற்றி பேச எதுவுமில்லாதலால் ஒன்றும்
சொல்லவும் இல்லை. ரிஷியின் அன்பான முகம் கண்முன் வந்து தொந்திரவு செய்தது. ”சே, என்ன மனுசன் இவன், ஏதாவது சண்டை
போட்டிருந்தாலோ, ஒருமுறையாவது கடிந்தோ அல்லது மரியாதைக் குறைவாகவோ, தன்மானம் பாதிக்கும்படியோ பேசியிருந்தாலாவது அதையே நினைத்து, நினைத்து அவன் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டு எளிதாக மறந்து விடலாம் என்றால் பாவி அதற்கும்
வாய்ப்பில்லாமல், பாசத்தையும், நேசத்தையும் மட்டுமே காட்டிக் கொல்கிறானே” என்று மனதோடு பேசிக் கொண்டிருந்தாள். உடல் முடியாத இந்த நேரத்தில் அவன் அருகாமை அவ்சியமாகப்பட்டது அவளுக்கு. ஆனாலும் முத்து சார் போட்ட முட்டுக்கட்டை நினைவிற்கு வர கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது. முதல் நாள் பட்ட அவமானமும், வேதனையும் தன்மீதே வெறுப்பாக இருந்தது. எல்லாம் நன்மைக்கே என்று நினைக்க முடியவில்லை.

 

முத்து சார்.. முத்து சாரா…. முத்து அண்ணனா… மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். ஏனோ அண்ணன் என்ற வார்த்தை ஒட்டாமல் போனது. நேற்று நடந்தது அனைத்தும் அவளை வேதனையின் உச்சத்தில் கொண்டு சென்று வெப்பத்தை உமிழந்ததுதான் காய்ச்சல் என்ற பெயரில் படுத்தியது. முத்துவின் முகத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. உடன் பிறந்த சகோதரன் அவன்தான் என்று தெரிந்த மறுநொடி ஒரு நல்ல மனிதனாக மனதில் வரிந்து வைத்திருந்த முத்துவின் பிம்பம் கரை படிந்தது போன்று இருந்தது.. இத்தனை ஆண்டுகள் எங்கிருக்கிறான், என்ன ஆனான் என்றுகூட நினைத்துப் பார்க்கவில்லை. உடன் பிறந்த சகோதரிகள் இருவரும் என்ன ஆனார்கள், தாய், தகப்பன் இல்லாத நிலையில் வீட்டிற்கு மூத்த மகனாக இருந்து இருவருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் தான் வாழ்ந்தால் போதும் என்று சுகமாக, சுயநலமாக இருந்தவனுக்கு இன்று மட்டும் ஏன் அப்படி ஒரு பாசம் வந்தது? ஒரு வேளை வேஷம் என்றால் அதற்கான தேவைதான் என்ன என்று யோசித்து மனம் வெதும்பியதுதான் கண்ட பலன். எல்லாமாகச் சேர்ந்து உடலை வருத்தும் காய்ச்சலாகிவிட்டது.

 

மாலை வந்து பார்த்த ஆர்த்தி வாடிய மலராய்க் கிடந்த மாலுவை டாக்டரிடம் போகலாம் என்று கட்டாயப்படுத்தியும் அவள் மெட்டாசின் சாப்பிட்டதே போதும். இன்னும் கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் எனறு கூறிவிட்டாள். இரண்டு நாட்கள் முழுதுமாக ஓய்வெடுத்தும் இன்னும் களைப்பு தீரவில்லை. மூன்றாவது நாள் மெல்ல வகுப்புக்குப் போகலாம் என்று கிளம்பினாள். இரண்டு நாட்களில் ரிஷி குறைந்தது 6 முறைகளாவது போனில் பேசினான். அனாவசியமாக ஆண்கள் உள்ளே வர அனுமதியில்லாதலால் அவன் தவித்துக் கொண்டிருந்தான். ‘காதல்’ என்ற பேய் பிடித்துவிட்டால் பாவம் அவர்களுக்கு சொந்தம், பந்தம் எதிர்காலம் என்ற எதுவுமே நினைவிற்கு வருவதில்லை. தாங்கள் வாழ வேண்டும் என்ற வெறி மட்டுமே பிரதானமாகிவிடுகிறது. ஆசையும், மோகமும் குறைந்த பிறகு மெல்ல செய்த தவறோ, அடுத்தவரின் வேதனையோ புரிய ஆரம்பித்தும் அவைகள் பலனற்றுப் போகிறது. இரண்டு நாட்களாக மாலுவைப் பார்க்காதது, இரண்டு யுகமாகத் தெரிந்தது அவனுக்கு. அவனுக்காகவே இன்று வகுப்பிற்கு போக வேண்டும், இல்லாவிட்டால் ஹாஸ்டலில் வந்து தர்மசங்கடப்படுத்தி விடுவான் என்று பயந்து கிளம்ப முயற்சித்தாள். வெண்ணீரில் குளித்துவிட்டு வந்தவள் கிளம்பத் தயாரானபோது திரும்பவும் குளிர் ஜிவ்வென்று பிடிக்க, கண்களைக் கட்டியது. வேறு வழியில்லாமல் திரும்பவும் ஒரு மெட்டாசின் மாத்திரையைப் போட்டுக்கொண்டு இழுத்துப் போர்த்தி படுத்துத் தூங்கிவிட்டாள்.

 

கதவு படபடவென தட்டப்படும் ஓசை கேட்டு மெல்ல கண் விழித்து எழுந்தவள், முதலில் மணியைப் பார்த்தாள். 3.30 தானே ஆகிறது. யாராக இருக்கும்? ஆர்த்தியும் 6.30 மணிக்கு மேல்தான் வருவாள் என்று யோசித்துக் கொண்டே எழுந்தாள். காய்ச்சல் விட்டுப் போயிருப்பது தெரிந்து நிம்மதியாக இருந்தது. போய் கதவைத் திறந்தவள் அங்கு முத்து சார் நின்றிருப்பதைப் பார்த்ததால் ஆச்சரியமாக இருந்தது. இதுதான் முதல் முறை அவர் தான் தங்கியிருக்கும் விடுதியைத் தேடி வருவது. இரண்டு நாட்கள் முன்பு நடந்த அந்த சம்பவத்திற்கு முன்பாக இருந்திருந்தால் இந்நேரம் ராஜ உபச்சாரம் செய்திருப்பாள் முத்துவிற்கு. ஆனால் இப்போதோ, இவர் ஏன் இங்கே வர வேண்டும் என்ற ஐயத்துடன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள்.

 

“என்னமமா மாலு, உள்ளே கூப்பிட மாட்டாயா அண்ணனை” என்று கேட்டபோது அவன் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது. ‘இத்தனைக் காலம் எங்கே தொலைந்து போனாய்?’ என்ற தினுசில் அவள் பார்வை இருப்பது புரிந்தது. இருதலைக் கொள்ளி எறும்பாக இவ்வளவு நாள் தவித்த தவிப்பிலிருந்து விடுதலை பெற மனம் ஏங்கியது. அவளுடைய பாராமுகம் அந்த வேதனையை அதிகமாக்கியது.

 

“வாங்க….. சார்…. இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க….?”

 

“ஏன் வந்தீங்கன்னு கேக்கறியாம்மா… ? இன்னும் சார்னுதான் கூப்பிடுவியா? அண்ணான்னு ஒரு முறை நீ ஆசையா கூப்பிட மாட்டியான்னு

எவ்வளவு நாளா ஏங்கிட்டிருக்கேன்னு தெரியுமா மாலு?”

 

“சார்… சாரி.. இது மாதிரி டயலாக்கெல்லாம் வேண்டாமே ப்ளீஸ். பழையபடி ஆசிரியர், மாணவி உறவே போதுமே சார்… அதுதான் பிரச்சனை இல்லை.”

 

“மாலு உன் கோபத்திலும் நியாயம் இருக்கும்மா… கூடப் பிறந்தவர்களை கவனிக்க முடியாத பாவி இல்லையா. ஒரு அண்ணனா இதுவரை எந்த கடமையும் உங்களுக்கு நான் செய்யலையே.. பிறகு எப்படி பாசம் வரும்…?”

 

“அதெல்லாம் இப்ப எதுக்கு சார். பழைய கதையைப் பத்தி பேச வேண்டாமே.. எல்லாம் முடிந்து போன விசயம். விடுங்க..”

 

“எதுவும் முடியலைம்மா.. அப்படி சொல்லாதே. உனக்கு செய்ய வேண்டிய கடமை எதுவுமே செய்யலையே.. இனிமே உன் வாழ்க்கையை இந்த அண்ணன் பார்த்துக்கறேன். எனக்கு அந்த ஒரு வாய்ப்பாவது கொடும்மா.. இல்லேன்னா குற்ற உணர்ச்சியிலேயே செத்துடுவேன். “

 

“எதுக்கு குற்ற உணர்ச்சி? கூடப் பிறந்தவள் நாதியில்லாமல், குடும்பத்தோடு தற்கொலை செய்து செத்துப் போனாளே அதுக்கா குற்ற உணர்ச்சி? இல்லை அனாதையா தனி மரமா நின்ன வயசுப் பொண்ணு, கூடப்பிறந்தவளை கண்டுக்காம இருந்தோமேன்னு குற்ற உணர்ச்சியா?

இதுல எதுவா இருந்தாலும் இப்ப அதுக்கு டூ லேட்.. தேவையில்லை அது. நீங்க உங்க மனைவி குழந்தையோட பணக்கார வீட்டு மாப்பிள்ளையா மகிழ்ச்சியா இருந்தா அதுவே போதும். எனக்கும் மகிழ்ச்சிதான்” என்றாள் அமைதியாக.

 

“என்னை வார்த்தையால் கொல்லாதே மாலு.. நானே ஒவ்வொரு நாளும் வெந்து செத்துக்கிட்டு இருக்கிற விசயத்தை திரும்பவும் கிளராதே..

முந்தாநாள் உன் அண்ணி சொல்ல வந்த எதையுமே கேட்கிற நிலையில நீ இல்லை.. அவளுக்கு தெரியும் நடந்தது எல்லாம்.. உங்களைத் தேடி

நான் அலைந்ததும்..”

 

ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த மாலதிக்கு இவன் உண்மையைத்தான் சொல்கிறானா என்ற சந்தேகத்தை அவன் பார்வையில் இருந்த கபடமின்மை போக்கியது. அம்மாவைத் தொடர்ந்து அப்பாவும் கொஞ்ச நாட்களிலேயே இறந்து போன பின்பு சித்தப்பா செய்த காரியங்களில் முக்கியமானது சகோதரனையும், சகோதரிகளையும் பிரித்து வைத்தது. அதற்கான காரணம் இன்றுவரை தெரியாமலே இருக்கிறது. சித்தப்பா இன்று பக்கவாதம் வந்து, வாய்ப்பேச்சும் இல்லாமல் இருப்பதாகக் கேள்விப்பட்டதுதான்.

 

முத்துவை திருப்பராய்த்துறையில் உள்ள அனாதை இல்லத்திலும், சகோதரிகளை கஸ்தூரிபா ஆசிரமத்திலும் சேர்த்துவிட்டு கவலை இல்லாமல் இருந்தார். இருவரிடமும் மற்றவர் எங்கிருக்கிறார் என்பதை சொல்லாமல் மறைத்ததோடு, முத்தழகன் திருப்பராய்த்துறையிலிருப்பது பற்றி எந்த உறவினரிடமும் சொல்லாமலே மறைத்து வைத்திருந்தார். இரண்டொருவர் கேட்டபோதும் ‘எல்லாம் பத்திரமாக நன்றாகத்தான் இருக்கிறான்’ என்று சொல்லி மழுப்பிவிட்டிருக்கிறார். ஐந்தாம் வகுப்பு வரை அங்கேயே படித்தவன், வருடம் ஒரு முறை சித்தப்பாவை சந்தித்த போதெல்லாம் சகோதரிகளைப் பற்றி கேட்டும் ”அடுத்த முறை கூட்டி வந்து காட்டுகிறேன், நீ ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வர வழியைப்பாருன்னு சொல்லிவிடுவார். ஐந்தாவது முடித்த பொழுது ஆசிரமத்திற்கு வந்த ஒரு பெரியமனிதர் முத்தழகின் அறிவையும், படிமானத்தையும் பார்த்து மகிழ்ந்து, தனக்கு வாரிசு இல்லாதலால், பல அனாதை குழந்தைகளை தத்து எடுத்து

படிக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும், முத்தழகையும் கூட்டிச்சென்று நல்ல முறையில் படிக்க வைக்க விருப்புவதாகவும் கூறி அனுமதி வாங்கி தன்னுடன் தில்லிக்கு அழைத்துச் சென்றார். அப்போதிலிருந்து முத்தழகின் வாழ்க்கை முறையே மாறித்தான் போனது. படிப்பு, படிப்பு என்று வேறு எந்த சிந்தையும் இல்லாமல், சித்தப்பாவின் தொடர்பும் அறவே விட்டுப்போன நிலையில் சொந்த ஊரின் நினைவே கனவில் தோன்றும் நிழற்படமாக மாறிவிட்டிருந்தது. படித்து முடித்து வேலை கிடைத்து, திரும்ப தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக தன் சொந்த ஊருக்கு வந்ததுதான். அப்போதுதான் உடன் பிறந்தவள் குடும்பத்துடன் துர்மரணத்தைத் தழுவியதும், இளைய சகோதரி மாலதி சோகத்தில் உறைந்து போய் சின்னம்மா வீட்டில் பாதுகாப்பாக இருப்பதும் தெரியவர அவளையாவது சந்திக்க்லாம என்று சென்ற போதுதான் அவள் தம்மீது எத்துனை வெறுப்பாக இருக்கிறாள் என்பதை கண்கூடாகத் தெரிந்து கொண்டான்.  திரும்பி வந்தவன், பின்பு அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தில்லைராசன் ஐயா மூலமாக செய்து வந்திருக்கிறான், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமலே தன்மானம் மிக்கவளாக வளர்ந்து நிற்கும் தன் தங்கை எங்கே தான் செய்யும் உதவி பற்றி அறிந்து மறுத்துவிடப் போகிறாளோ என்ற அச்சத்தில் மிக ஜாக்கிரதையாக இருந்தான். ஒரு விதத்தில் அவள் தன் சொந்த காலிலேயே நிற்க வேண்டும் என்றே தானும் விரும்பியதால் அவளுக்குத் தேவையான உதவிகளை மட்டும் அவ்வப்போது செய்துகொண்டு தன் பார்வை வளையத்திற்குள் வைத்திருந்தவன். இன்று அவளுடைய ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்பு வரை உடனிருந்து கொண்டு இருக்கிறான் கணவனின் ஒரே உறவான மாலதியை தங்களுடனேயே கொண்டுவந்து வைத்துக்கொள்ளலாம் என்றும் சுப்ரஜா சொல்லியும், அதற்கான தருணம் வரட்டும் என்று காத்திருந்தானாம்…..

 

இவையனைத்தையும் கேட்டு வாயடைத்து, மகிழ்ச்சியா, கோபமா, என்று ஏதும் புரியாமல் உணர்வற்றதோர் நிலையில் முத்தழகையே உற்று நோக்கியவாறு நின்று கொண்டிருந்தாள் மாலு!.

 

தொடரும்

Series Navigationவிருப்பும் வெறுப்பும்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் பவளசங்கரி ,

    நம்பிக்கை ஒளி தொடர் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் தொடர்ந்து படிக்கிறேன்.
    உறவுகளின் மேன்மையும் , வலிமையையும், அதன் அவசியமும் நன்கு வரிசை படுத்துகிறீர்கள். தொய்வில்லாத நடை….ஒளி வீசுகிறது.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    தங்களின் வாசிப்பிற்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும் நன்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்க பானம் உங்கள் வார்த்தைகள்! மிக்க நன்றி.

    அன்புடன்
    பவளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *