நான் யார்

Spread the love


மகி

இயல்பாய் இருப்பதாய்த்தான்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்

அயலிடம் அநீதி
அடைகையிலென்னவோ
விழிகள் பெருத்து நாக்கு நீண்டுவிடுகிறது

உயிர்கள் இம்சை காண்கையில்
உணர்வில் அழுத்தி
சிலுவை தூக்கிச் சுமக்கிறது மனசு

கயிறுகளால் கட்டப்படும்
கணங்களில் என்னைக்
கட்டுப்படுத்த முடியாமல்
அறுத்துக் கொள்ள கத்தி தீட்டுகிறேன்

குயிலிசைக்குள் மூழ்கி
குழல்களுக்குத் துளையிட்டு
காற்றை அவைகளில் செலுத்துகிறேன்

துயிலும் உடலங்கள்
துறந்த ஆன்மாக்களுக்கு
நித்திய வழி செதுக்க நினைக்கிறேன்

பயின்றவை ஒன்று
பழகியவை ஒன்று
இரண்டையும் முறுக்கித்திரி செய்கிறேன்

வயிற்றுப் பசியுணர்ந்தும்
வளங்கள் உறைபடர்ந்தும்
நொடிகளை மணிகளாக்கி காய்கிறேன்

இப்படித்தான் நான்
இதுதான் நானென்று
இலக்கண வரையறை சொல்ல
உலகம் விட்டதில்லை
எப்படி மாறுவேனென்று
எனக்கும் தெரியவில்லை

மகி

Series Navigationதொடுவானம் 198. வளமான வளாகம்