நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

அத்தியாயம் 5

அந்த வீடு நிசப்தமாய் இருந்தது. காரியம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ராகவ் வந்திருந்தான். அவன் அக்காவும் உடன் மாமாவும் வந்திருந்தார்கள். ஊதுவத்தி மணம் இன்னும் அந்த வீட்டை விட்டு சாவு மணம் அகலாதிருந்தது.

ஏங்க யாழினி இங்க இருந்தா அழுதே செத்துடுவா உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடறீங்களா? என்றாள் சகாதேவனின் தாய்

அதெல்லாம் எதுக்கு இங்கயே இருக்கட்டும், ராகவ் அப்பப்ப வந்து பார்த்து எதாச்சும் செலவுக்கு தந்துட்டு போவான். ஜாதகம் பார்த்தோம், ரெண்டு பேருக்கும் ஜாதகம் ஒத்துப் போகலியாம், கல்யாணம் ஆனா ராகவ் செத்துடுவானாம் என்றாள் ராகவின் அக்கா

மெல்ல நிமிர்ந்து ராகவைப் பார்த்தாள் யாழினி. நேராக சென்று அவன் முன் நின்றாள். நீ சொல்லு ராகவ் என்றாள்.

என்ன சொல்றது என்று வேறு பக்கம் பார்த்தான் ராகவ்.

ஜாதகம் சரியில்லையா ?

அப்படித்தான் அக்கா சொல்றாங்க.

அப்ப நீ ஜாதகம் பார்க்க போகலியா ராகவ்.

நான் போனாலும் அவங்க போனாலும் ஒன்னு தான் யாழினி என்றான் அழுத்தமாய்.

அப்ப நமக்குள்ள நடந்ததெல்லாம் ?

என்ன நடந்துச்சு என்று நிமிர்ந்து நேராய் பார்த்தான்.

யாழினி நெஞ்சத் துடிப்பு ஒரு வினாடி நின்றது.

இது நீயும் நானும் தனியா பேசவேண்டிய விடயம் ராகவ்.

ராகவின் அக்கா வெகுண்டாள் இன்னாடி நீயும் அவனும் தனியா பேச வேண்டியது. நீ தான் அவன பெத்து போட்ட நாள்ல இருந்து வளத்துவிட்டியாக்கும் ஆளையும் மூஞ்சியும் பாரு. ராசி கெட்டது அப்பனையும் ஆத்தாளையும் துன்னுட்டு இவன வேற குழியில போடப் பாக்குறியா?

யாழினி அவளிடம் பேச வில்லை.

ராகவ் ப்ளீஸ் கொஞ்சம் யோசிச்சுப் பாரேன் என்று கெஞ்சினாள் யாழினி

யோசிக்கிறதுக்கு எதுவுமில்ல யாழினி, என்னால உன்னை பொண்டாட்டியாவே நினைச்சுப் பார்க்க முடியல, உனக்கொன்னும் இது புதுசில்லயே யாழினி, என் சைட்ல இருந்து கொஞ்சம் யோசிச்சுப்பாரு, என்னைக்கு உன்னைப் பார்த்தனோ அன்னைக்கே என் வாழ்ககை போச்சு என்றான் எங்கோ பார்த்தபடி.

யாழினி இதயம் நின்றே போனது !

அதன் பிறகு அவள் பேச ஒன்றும் இல்லை.

அன்பென்பது எது ? நேசித்தவருக்கு தீங்கு செய்யத் துணியுமா?

இது தானா ஒரு ஆண்மகனின் நேசம் என்பது. வெறும் உடலோடு இணைந்த செய்கையை எத்தனைப் பிரதானமாக்கினான்.

இதே வாய் எத்தனை வசனங்களை பேசியது. உன்னைப் போல் என் வாழ்க்கையில் ஒருத்தியை சந்தித்ததே இல்லை. நீ இல்லாவிட்டால் நான் இல்லை. நான் செத்துடுவேன் யாழினி எப்படி எல்லாம் கெஞ்சினான். சே என்ன மனிதர்கள் இவர்கள். இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்துதான் தீர வேண்டுமா ? நானும் சேர்ந்து போய்விட்டால் என்ன?

எழுந்த எண்ணத்தை தூர எறிந்தாள்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்று அப்பா அழுத்தமான குரலி்ல் கூறினார்.

கேவலம் ஒருவன் ஏமாற்றி அனுபவித்த உடல் சுகத்திற்காக கற்பு போய்விட்டது என்று மனமுடைந்து செத்து மடிய வேண்டுமா?

வாழ்க்கை என்பது திருமணத்தோடு மட்டுமே ஐக்கியப்பட்டதா ? இதில் இருந்து எப்படி வெளி வருவது ? இதை எப்படி ஜீரணித்துக் கடப்பது ?

விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள் யாழினி! விழிகளின் நீர் கோடாய் கன்னத்தில் இறங்கியது. ஏன் ராகவ் நான் என்ன தப்பு செய்தேன், நீ தான் என்னை காதலித்தாய், நான் இல்லாவிட்டால் நீ இல்லை என்று கதை வசனம் பேசினாய், டியர் என்றாய், அதுவும் மனதின் ஆழத்தில் இருந்து வந்தது என்றெல்லாம் அளந்துவிட்டாய். இன்று நீ தான் கண்டவனோ டெல்லாம் என்னை இணைத்துப் பேசுகிறாய்.

சே என்ன ஜென்மமோ என்றேல்லாம் மனதிற்குள்ளாக அரற்றினாள்.

ஆண்கள் மீதிருந்த நல்லெண்ணம் கரைந்து பய உணர்வும் குரோத உணர்வும் ஏற்பட்டது. அப்பா எப்படியோ இந்த உலகத்தில் தப்பிப் பிறந்து விட்டார் என்று எண்ணியபோதே சகாதேவன் வந்து நின்றான்.

சகாதேவன்.
எத்தனை சிநேகமானவன். சிறு வயது முதற்கொண்டு என்னுடன் அதே சகோதரப் பாசத்தோடுதான் இருக்கிறான். முறைப்பெண் என்றாலும் கூட சிறுவயதில் உச்சரித்த தங்கச்சி பாப்பாவை சொல்லாவிட்டாலும் அந்த கண்ணியத்தைக் காக்கிறான்.

[தொடரும்]

Series Navigationபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்திசூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்