நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.

This entry is part 7 of 31 in the series 4 நவம்பர் 2012

    காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக்கோவைகள்தாம் இவை.

பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலைவளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல. அதனால்தான் என்னுடைய கதைகளில் இந்தக் கலை வியவகாரத்தை எதிர் பார்க்க வேண்டாம் என்று
எச்சரிக்க விரும்புகிறேன்.

என்கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக் காஞ்சனை கதையைப் படித்துவிட்டு என்னிடம் வந்து.”உங்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?” என்று கேட்டார். நான்,”பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே” என்றேன். ”நீங்கள் சும்மா விளையாட வேண்டாம். அந்தக் கதைக்கு அர்த்தமென்ன?” என்று கேட்டார். ”சத்தியமாக எனக்குத் தெரியாது” என்றேன். அவருக்கு இது திருப்தி இல்லை என்று தெரிந்து கொண்ட பிற்பாடு அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு, இலக்கியப் பக்குவம் மிகுந்த என் நண்பர் ஒருவரிடம் போனேன். அவர் அட்டகாசமாக வரவேற்றார். ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி கதை எழுதி இருப்பதாகவும் ‘கயிற்றரவு’ என்று சொல்லுவார்களே ஒரு மயக்க நிலை, அதை அழகாக வார்த்திருப்பதாகவும் சொன்னார். இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசிக்கொழுந்து என்று கருதப் படுகிறவர் ஜேம்ஸ் ஜாய்ஸ். அப்படிச் சொன்னால் யாருக்குத்தான் தலை சுற்றி ஆடாது? அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயம் காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டுகொண்டேன்.

நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர் பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சிகள் அபிவாதையே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் ‘கல்லுப் பிள்ளையார்’ மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துத்கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு.

கடைசிக் கதை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆர்வத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக்குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்டதெய்வத்தை நான் மெதுவாகப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால்  கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துகொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்தசாமிப் பிள்ளையுடன், ஊர்சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?

பொதுவாக என்னுடைய கதைகள் உலகுக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணிவைக்கும் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான்
அவர்களை இன்னும் கோபிக்கவைத்து முகம் சிவப்பதைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் கோபிப்பவர்கள் கூட்டம் குறையக் குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.

இவர் இன்ன மாதிரிதான் எழுதுவது வழக்கம், அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கௌரவம் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போட்டு
மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது. மனப்போக்கிலும் பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் வெகு காலம்
ஒதுங்க முயன்ற கலைமகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன் உங்களுக்குப் பரிச்சயம் செய்து வைக்கும் காஞ்சனை. நீங்கள இவைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.

விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகஎ கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.

 

22-12-43                        ”புதுமைப்பித்தன்”

Series Navigationபொய்மைரணம்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *