நாம்

i_love_you_by_xxbeastofbloodxx

 

 

உன்னொத்தவர்களுக்கு

எத்தாலும்

அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:

 

”நாம்”

 

சமத்துவம், சகமனித நேயம் என்பதான

பல போர்வைகளின் அடியில்

இந்த ஒற்றைச் சொல்லை யுனக் கொரு

கூர் ஆயுதமாக

ஆர்வமாய் செதுக்கியபடியே நீ….

 

‘அவர்கள்’ என்று நீ யாரை உன்

சுய ஆதாயத்திற்காகச் சுட்டிக்காட்டுகிறாயோ

இந்த ‘நாம்’ அந்த ‘அவர்களை’

எந்தக் காரணமுமின்றி எதிரிகளாக பாவிக்கப்படப்

பழக்கப்படுத்தப்படுவதே உன் இலக்காய்…..

 

’நான்’ இணைந்த ’நாமா’கப் பேசியவாறே

உன் ‘நானை’ அந்த ‘நாமி’லிருந்து

கறாராய்ப் பிரித்தெடுத்து

உயரமாய், பீடத்தில் ஏற்றிவைத்துவிடப்

படாதபாடுபட்டவண்ணம் நீ…

 

உன் தொண்டைக்குழியிலிருந்து

வெளிவரும்போதெல்லாம்

நேயம் மிக்க அந்த வார்த்தை

வன்மம் நிறைந்ததாகி

வெறுப்பையுமிழத் தொடங்கிவிடுகிறது.

 

அவர்களை மல்லாக்காய்ப் படுக்கவைத்து

மிதித்து மேலேறி நசுக்கி நடைபயின்றவாறே

உலகச் சந்தையை அடைந்து

அவசர அவசரமாய்க் கடைவிரிக்கிறாய்:

 

”நாம்…! நாம்….! நாம்…. ! நாம்….!

 

”ஆறுரூபாயிலிருந்து ஆறுகோடி

டாலர் வரை

விதவிதமான நாம்கள் இதோ

விரைவில் தீர்ந்துபோகும்

வேகவேகமாய் வந்து வாங்குவீர்!”

 

நிச்சயம் வெற்றிகரமானது தான் உன் உத்தி

கத்தைகத்தையாய் பணத்தைத் தந்து

பயங்கரவாதிகளைத் தயாரித்துவரும் காலத்தில்

‘நாம்’ என்ற ஒரே சொல்லில்

பொய், பகை எனப் பலவாய்

எத்தனை பயங்கரங்களை வெகு சுலபமாகத்

தயாரித்து, பரவலாக்கிவிட முடிகிறது உன்னால்!

 

நாளும்

’நீ’ யாகிய ‘நாமை’ ‘நீங்களு’ம் ‘நாங்களு’மாய்

தீயாகக் கொழுந்துவிட்டெரியச் செய்து

அதில்

குளிர்காய்ந்துகொண்டிருக்கிறாய்

 

விடிய விடிய எரிந்து சாம்பலாகும்

மனிதநேயத்தின் எலும்புக்குவியல்மேல்

எப்பொழுதும் போல் ‘நீரோ ஃபிடில்’

வாசித்துக்கொண்டிருக்கும் நீ

 

‘உன் ‘நாமு’க்கிள் தாமும் உண்டு என்று

நம்பியவாறு

ஆமை பாவம் தன் உறுதியான மேலோட்டை

அன்பின் மிகுதியால்

உனக்குப் பரிசாகத் தந்து

ஆட்டோகிராஃப் கேட்கிறது.

இனி அடிபடப்போகும் அதன் சின்னத் தலையின் வலி

கவிதைக்குறியீடாய் கிளம்பும் உன்னிடமிருந்து.

 

 

 

 

0

Series Navigation