நாள்குறிப்பு

 

 

அந்த வீட்டைக் கடந்து

போக முடியவில்லை

மாமரத்தைப் பற்றி

விசாரிக்க யேணும்

படியேறி விடுகிறேன்

மைனாக்களுக்கும்

அணில்களுக்கும்

அடைக்கலம் தந்த

விருட்சம்

வேரோடு விழுந்து

கிடக்கிறது

கொல்லையில் மாமரம்

இருக்குல்ல

அந்த வீடுதான் என்று

வீட்டுக்கு விலாசம்

தந்த மரம்

தச்சன் கைகளுக்கா போவது

ரேஷன் அட்டையில்

பெயரில்லை மற்றபடி

அம்மரம் அந்த வீட்டின்

உறுப்பினர் தான்

பச்சை இலைகள்

ஓரிரு நாளில் சருகாகிவிடும்

காய்ந்த குச்சிகள்

அடுப்பெரிக்க உபயோகப்படும்

மரம் வீட்டின்

உத்தரமாகிவிடும் என்றாலும்

காணத்தான் நேருகிறது

மெரீனாவில்

சுண்டல் மடிக்கப் பயன்படும்

கவிதை தொகுப்புகளையும்

கோயிலில்

விபூதி மடிக்கப் பயன்படும்

கையெழுத்துப் பிரதியையும்.

 

 

 

 

 

 

ப.மதியழகன்

Series Navigationமக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்பீதி