நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா

1.நீர்மை

இத்தனைப் புதிதாய்

காலத்தின் முன் முழுதாய்

முன்பின் இல்லாத ஒன்றாய்

பெற்றிருக்கிறாய்

காலநிதியின் ஒரு குவளையை

வரும் பகல்களை

எண்ணித்துயருரும் துர்பாக்கியம்

உனதில்லை

நீளாழியாய் அங்கிருந்தும்

இங்கிருந்தும்

நுரை அலைத்துக் கிடப்பது

உன் நதியே

துள்ளித்திரியும்

மகிழ்வில் ததும்பி

ஈரமாக்கி ஓய்கிறாய்

தகித்தே சென்றாலும்

நீர்மை கொண்டு

இளைப்பாறும் என் தனிமை

 

 

2.ஏகாந்தம்

மீண்டும் இரவானதால்

மீண்டும் பெருந்துக்கம்

கரிய வனமிருகம் இரவு

இளைப்பாறும் தருணங்களிலும்

எங்கிருந்தோ ஒலிக்கிறது

எனை விழையும் பெருமூச்சு

இளங்காலை கொண்டுதருவது

மேலும் ஒரு வாய்ப்பினை

நேர்செய்ய வேண்டும்

வாழ மறுக்கப்பட்ட நாட்களை

கொஞ்சம் பொறுத்திரு

இலைகளை நிழல்கள் எதிர்ப்பதில்லை.

 

Series Navigationஇயந்திரப் பொம்மைதனக்குத் தானே