நிலத்தடி நெருடல்கள்

புதை குழி புகுந்த பின்னரும்
உயிர்த்தலின் பாவனைகள்
நெஞ்சு தேக்கி வைத்திருந்த
தாத்தாவின் ஆவலாதிகளை
யார் தீர்ப்பார்கள் எனும்
தீர்மானத்துள் மூழ்கித் தவிக்கும்
வேர்களிடம் தொடங்குகிறது
அவரின் முதல் குற்றச்சுமை

அனுபவித்த உலகின் பொக்கைவாய்
பொய் பூசிய வெற்றிலை பாக்கு
மென்று துப்பியிருந்ததென்று
உவகையின் கைக்கோல்
இடரும் களமாகத்தான்
உலவிக் கொண்டிருக்கும்
ஊமை நிழல்கள் என்று
வயோதிகக் கனவுகள்
வன்மை உபாதைகள் சுமக்கச் செய்தனவென்று
பார்வையின் மாயை புரைவிழுந்து
நவீனங்களின் காட்சி மங்கலாய்
புராதானத்திரையில் மெழுகியிருந்ததென்று

ஒன்று, இரண்டு ..
ஒன்பது..பதினொன்று
வயோதிகம் வீசிய குற்றங்கள் பரிசீலிக்க
நிலத்தடி புதைந்து
பரிபூரண பிரயாசத்தில் உலகம் கண்டிராது
சுருள் சுருளாய் நீளும் வேர்களிடம்
தனதான சலிப்புகள் தவிர்த்து
தகுதி வேறொன்றில்லை
சொற்களைச் சுமப்பதற்கோ
காதொலிகள் உமிழ்வதற்கோ.


கொ.மா.கோ.இளங்கோ

Series Navigationபழமொழிப் பதிகம்இயலாமை