நிலவில் இருட்டு

என். துளசி அண்ணாமலை

© Copyright 2013 CorbisCorporation“அண்ணி, இவர்தான் நான் சொன்ன என் உறவினர், திருச்செல்வம்.என் அண்ணா திருமணம் செய்த வகையில் சொந்தம்.”
ரமாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, வீட்டில் உள்ள மற்றவர்களின் இன்முக வரவேற்பும், தேநீர் உபசரிப்பும் தொடர்ந்தது. அண்ணி கலா புன்முறுவலுடன் ரமாவைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்.விழிகள் திருச்செல்வத்தை ஆராய்ந்தன.

‘சாந்தமாகத் தெரிந்தான். நல்ல வசீகரமான முகம்.உயரமான தேகம்.கல்வியாளன், நல்லிதயம் கொண்டவன்.அவன் நல்லவன், தீர்க்கமானவன், ஆரோக்கியமான சிந்தனைகளைக் கொண்டவன் என்று பரந்த நெற்றியும், நீண்ட நாசியும், மாறாத புன்னகையும் கட்டியங்கூறின. சிரிக்கும்போது பளீரென்ற பல்வரிசை வசீகரமாய் இருந்தது. எல்லாருக்குமே அவனைப் பிடித்துப் போய், பல நாட்கள் பார்த்துப் பழகியவன் போல ஒட்டிக்கொண்டான். பல்வேறு விசயங்களைப் பற்றிப் பேசி சகஜமான சூழ்நிலை வந்தபோது, கலா தான் ஆரம்பித்தாள்.

“தம்பி, எங்கள் பெண் ரோஜாவைப்பற்றி…” அவள் முடிக்குமுன்னே அவன் பேசினான்.
“தெரியும் அக்கா.ரமா எல்லா விசயங்களையும் சொன்னாள்.வாழ்க்கை இழந்த ஒரு பெண்ணுக்கு எல்லாவகையிலும் துணையாக இருந்து, தூய வாழ்க்கை வாழவேண்டும், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே என் இலட்சியம்.அதனால் தான் இந்தத் திருமணப் பேச்சுக்கு ஒப்புக் கொண்டேன்.நீங்கள் என்னை முழுமனதாக நம்பலாம்.” என்றான் உறுதியான குரலில்.

அம்மா, அப்பா உட்பபட கேட்டுக் கொண்டிருந்த அனவருக்குமே அவனுடைய நம்பிக்கையான பேச்சு மனதுக்கு ஆறுதல் அளித்தது.ஆனால், சற்றுத் தள்ளி தனியாக அமர்ந்திருந்த ரோஜா மட்டும் நகத்தைக் கடித்துத் துப்பியவாறு அவனை உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளுடைய பார்வையில் சிநேகம் இல்லை.ரமாவும் கலாவும் அதைக் கவனித்தார்களோ இல்லையோ, திருச்செல்வம் அந்தப் பார்வையின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டான்.ஆயினும் தன் மனதில் விளைந்த கேள்வியை வெளிக்காட்டாது அவன் தன் உரையாடலைத் தொடர்ந்தான்.
“எங்கள் குடும்பம் சிறியது.அம்மா, அப்பா, தம்பி மற்றும் நான் மட்டுமே.தம்பி சிங்கப்பூரில் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.அவருக்குத் தன் தங்கையின் மகள் மருமகளாக வரவேண்டும் என்று ஆசை.ஆனால், நானும் என் தம்பியும், அத்தையின் பிள்ளைகளும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக ஓடியாடி வளர்ந்தவர்கள்.எங்களிடையே சகோதரபாச உணர்வைத் தவிர வேறு எண்ணங்கள் கிடையாது.அதேபோல எங்கள் எல்லோருக்குமே சமுதாயத்தின்மீது பற்றும் பாசமும் இருக்கின்றது. ரமாவுக்கும் இது தெரியும்.அதனால்தான் அவள் உங்கள் பெண்ணைப்பற்றிச் சொன்னதும் வந்து பார்க்க நான் ஒப்புக் கொண்டேன். ரோஜாவுக்கு என்னைப் பிடித்திருந்தால், மேற்கொண்டு திருமணத்தைப்பற்றிப் பேச என் பெற்றோர்களை அழைத்து வருவேன்.”

கலா தன் மாமனார், மாமியாரின் முகத்தைப் பார்த்தாள்.அவர்கள் தங்கள் முகங்களில் புன்னகை மலர்களை மலரவிட்டு ‘சம்மதம்’ என்றனர்.திரும்பி ரோஜாவைப் பார்த்தாள்.அவளோ இன்னும் குழப்பமானதொரு பார்வையால் அண்ணியைப் பார்த்தாள்.
கலா சூழ்நிலையின் தன்மையை உணர்ந்து, உரையாடலை வேறு திக்கில் திருப்பினாள்.பொதுவான விசயங்களைப் பற்றிப் பேசினார்கள்.
பின்னர், “தம்பி, உங்களை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரோஜாவிடமும் கலந்து பேசிவிட்டு, ரமாவிடம் சொல்லியனுப்புகிறோம். ஒரு நல்ல நாளில் உங்கள் பெற்றொருடன் வாருங்கள். இப்படிப்பட்ட பெருந்தன்மையான ஒரு பிள்ளையைப் பெற்ற தெய்வங்களை நாங்களும் பார்க்க வேண்டாமா?” என்றாள். அவ்வாறு சொல்லும்போது, அவளுடைய குரல் தழுதழுத்தது. ஏறக்குறைய எல்லாருக்குக்குமே நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
திருச்செல்வத்தை அழைத்துக் கொண்டு ரமா வெளியேறிய மறுகணமே, ரோஜாவின் தாய் ரோஜாவைப் பார்த்து கடுமையாகக் கேட்டார்.
“உனக்கு இந்தப்பையனைப் பிடிக்கவில்லையா? ஏன்?…… எவ்வளவு சிரமப்பட்டு ரமா இந்த வரனைக் கொண்டு வந்திருக்கின்றாள்! அந்த நன்றிக்காகக் கூட நீ கொஞ்சம் புன்னகையோடு அந்தப் பையனைப் பார்த்து பலகாரம் கொடுத்து உபசரித்திருக்கலாமே? முழிக்கிற முழியைப்பார். சரியான கல்லு மனசுக்காரி! குடும்பத்துக்கு எந்தமாதிரியான அவமானத்தைத் தேடிவைச்சிருக்கிறோம் என்று கொஞ்சமும் மனசுல உறைக்கவில்லை. இன்னும் அக்கம் பக்கத்தில், சொந்தக்காரர்கள் யாருக்கும் விசயம் தெரியவில்லை. தெரிஞ்சா உன் முகத்தில் காறித் துப்புவாங்களே என்கிற கவலையே இல்லாமல், ஏதோ மைசூர் இளவரசி மாதிரி உலாவந்து கொண்டு இருக்கிறாள். கலா! பார்த்தாயா, அவள் முகத்தில் எத்தனை எகத்தாளம்? இவள் முகத்தில் விழிக்கவே கூசுதடி. இவளோட வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சும் ஒரு நல்ல மனசுக்காரன் வந்தா, அவனை எங்காவது மதித்து நடக்கவேணும் என்று புத்தியில் படவில்லையே?”

அம்மாவின் பேச்சு எதுவுமே ரோஜாவைப் பாதித்தாகத் தெரியவில்லை. சற்றுமுன் எப்படி அமர்ந்திருந்தாளோ, அதே கோலத்தில் தான் இன்னமும் வீற்றிருந்தாள். ஒரே ஒரு மாற்றம் என்னவெனில், கடித்துத் துப்பிய விரல்களில் இருந்து இலேசான இரத்தக் கசிவு தெரிந்தது. அதைப் பார்த்ததும் தாயின் கோபம் மேலும் அதிகமாயிற்று.
அருகில் அமர்ந்திருந்த கணவரைப் பார்த்து, “இனி இவளிடம் பேசிப் பயனில்லை. எழுந்து வாங்க, காலார வெளியில் நடந்து விட்டு வரலாம். கலா! இவளிடம் பேசி நேரத்தை வீணடிக்காமல் போய் சமையல் வேலைகளைப்பார்.” என்றவர், கணவரைப் பார்த்தார்.
ரோஜா மணமுடிக்காமலேயே தாய்மை அடைந்து விட்ட அவமானம், அவள் தந்தையின் வாயை அடைத்து, ஊமையாக்கிவிட்டது. மகளின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கவும் மனங்கூசியது. ஒரே பெண்குழந்தை என்று அவள்மீது அளவிடமுடியாத பாசத்தைப் பொழிந்தார். அதுவும்கூட அவளுடைய திமிறான குணத்தை வளர்த்திருக்கலாம். மவுனமாக வெளிவாசலை நோக்கி நடந்தார்.மனைவியும் பின்தொடர்ந்தார்.
கலாவுக்கும் தன் நாத்தனாரோடு பேசப் பிடிக்காமல், எழுந்து பின்பக்கம் சென்றாள்.

தனியே விடப்பட்ட ரோஜாவுக்கு சிந்தனையில் எதுவுமே நிலைக்கவில்லை. சற்றுமுன் வந்த திருச்செல்வத்தின் முகம் கூட மனதில் நிற்காமல், தன் காதலனைப்பற்றியே நினைவு ஓடியது. ஏனோ தெரியவில்லை, அவனை வெறுக்க முடியவில்லை. அவனே கதியென்று நம்பி தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்தாள், இன்று அவள் தாய்மை அடைந்திருக்கும் செய்தி அறிந்து எங்கோ காணாமல் போய்விட்டான். அவனுடைய உலாப்பேசி தன் வாயை மூடிக்கொண்டது. அவனுடைய நண்பர்கள் அவனைப் பற்றிய எந்த விபரத்தையும் கூறமறுத்தனர். ஒரு சிலர் அவளைப் பார்த்துவிட்டு விலகிச் சென்றனர். காரணம், ரோஜா யாரையுமே மதித்து நடந்தவள் இல்லை. நல்ல சிவந்த நிறம் கொண்டவள், தான் ஒரு பேரழகி என்ற கர்வம் தலையில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது. அந்த நினைவே அவளை மற்றவர்களிடமிருந்து பிரித்தது. இல்லையில்லை, அவள் தன்னையே உயர்வாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டாள்! அதுவே அவளுக்கு உற்ற தோழிகள் இல்லாமற் போகவும் காரணமாக அமிந்து விட்டது.
ரமா அவளோடு மூன்றாம் படிவம் வரை ஒன்றாகவே பயின்றவள். ரோஜா மேற்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் இரண்டொரு மாதங்கள் வீட்டிலிருந்தாள். பின்னர் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். அதன்பிறகு அவளுடைய குணமே முற்றாக மாறிவிட்டது. கைநிறைய வாங்கிய சம்பளம் அவளைக் கடினமான சிந்தை உள்ளவளாக மாற்றிவிட்டது.
ரமா ஆறாம் படிவத்தை முடித்து, பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து விட்டாள். அவள் மீது ரோஜாவின் குடும்பத்தினருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அதிலும் அண்ணி கலாவுக்கு ரமாவை மிகவும் பிடிக்கும். அதனால் தான் ரோஜாவின் தற்போதைய நிலையைப்பற்றி ரமாவிடம் கூறியிருந்தாள். அதற்கேற்றாற்போல, திருச்செல்வத்தின் அறிமுகமும் கிடைத்ததால், ரமா அவனிடம் விசயத்தைக்கூறி அழைத்து வந்து விட்டாள். ஆனால், யார் என்ன முயற்சி செய்து என்ன பயன்? ரோஜாவின் எண்ணம் வேறாக அல்லவோ இருந்தது!
ரமாவிடம் தனியே பேசவேண்டும் என்று அழைத்திருந்தாள் ரோஜா.
அன்று ரோஜாவின் இல்லத்தில் பெற்றோர்களும் அண்ணனும் வெளியே சென்றிருந்தனர். அண்ணி அடுத்த வீட்டுக்குப் போயிருந்தாள். அதனால் இருவரும் தனித்துப் பேச போதிய தனிமை கிடைத்தது.
தாய்மையின் பூரிப்பு ரோஜாவை மேலும் அழகாக் காட்டியது. அவளையே வைத்தகண் வாங்காது பார்த்தாள்.
‘இவள்தான் எவ்வளவு அழகாக இருக்கின்றாள்! ஆனால், பாவம்! அப்பாவியாக அல்லவோ இருக்கின்றாள். இவளை நம்பவைத்து ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான் ஒருவன். இவளுக்கும் திருச்செல்வத்துக்கும் திருமணம் கைகூடிவிட்டால், பிறக்கப்போகும் குழந்தைக்குத் தந்தையின் தலைப்பெயர் கிடைக்கும். சமுதாயத்தில் குழந்தையின் மரியாதை காக்கப்படும். ‘இறைவா! இந்தத் திருமணம் தடையேதுமில்லாமல் நடக்க அருள் செய்!’
ரமா தனக்குள்ளாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரோஜா அவளுடைய சிந்தனையைக் கலைத்தாள்.
“ரமா, அந்த திருச்செல்வம் எப்படியிருக்கிறார்? என்னைப்பற்றி ஏதேனும் சொன்னாரா?” என வினவினாள்.

அவளுடைய அந்தக் கேள்வி ரமாவுக்குப் பிடித்திருந்தது.‘ஓகோ…அம்மணிக்கு திருச்செல்வத்தைப் பிடித்துவிட்டதோ? சரிதான்’
“திரு நன்றாக இருக்கிறார்.உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம்.வீட்டிலும் சொல்லிவிட்டாராம்.அவர்களுக்கும் சம்மதம்தானாம்.இப்போது உன்னுடைய சம்மதத்திற்காகத்தான் காத்திருக்கிறார்கள்.நான் என்ன சொல்லட்டும்?பெண்பார்க்க வரச் சொல்லட்டுமா?”
ரமா கேலியாகக் கேட்டாலும் அதே சமயத்தில் மனதுக்குள் ‘ம்…சம்மதம் தான் போலும்’ என்று மகிழ்ச்சியடைந்தாள்.ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நிலைக்கவில்லை.

ரோஜாவின் கேள்வி அவளை அதள பாதாளத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது.

“ரமா!என்னை நன்றாகப் பார்.நான் எவ்வளவு அழகாக இருக்கின்றேன்.எவ்வளவு சிவப்பாக இருக்கின்றேன்.எனக்கு இணையாக அவன் வரமுடியுமா? நானும் அவனும் ஜோடியாக வெளியில் நடந்து சென்றால், பார்ப்பவர்கள் என்ன சொல்லுவார்கள்? பௌர்ணமி போல இருக்கும் நான் எங்கே?அமாவாசை இருட்டாக இருக்கும் அவன் எங்கே?இவனுக்கு என் காதலன் எவ்வளவோ மேல் அல்லவா?”
அவள் கேட்ட கேள்வியில் ரமா சிலையாகிப் போனாள்! ‘ இவள் இப்படிப்பட்டவளா? இவளுக்கு என்ன பதில் சொல்வது?இவளையா அப்பாவி என்று நினைத்தேன்?இவளுடைய நிறந்தான் சிவப்பு, பௌர்ணமி எல்லாம்.ஆனால் இதயம் கருப்பு.இருட்டு அமாவாசை.இவளுக்கு ஏற்ற வரன் இவளுடைய காதலன்தான்.ஒருவேளை இவளுடைய குணம் கெட்ட பேச்சினால்தான் இவளைவிட்டு விட்டு ஓடிவிட்டானோ? சே! நானே என் தோழியைப்பற்றித் தவறாக நினைப்பதா?’

ரமா பேசவும் திரணியற்றுப் போனாள்.மேற்கொண்டு எதுவும் பேசத்தோன்றாமல் மௌனமாக எழுந்து வெளியே போனாள்.
வெளியே அண்ணி கலா திகைத்த நிலையில் சிலைபோல நின்றிருந்தாள். ரமாவைப் பார்த்த பின்னும் பேசவும் தோன்றவில்லை.
அவளுடைய விழிகள், ‘ என்ன இவள் இப்படி சொல்லிவிடாள்? இனி என்ன செய்வது?’ என்று வினவின.
‘சில பெண்கள் இப்படித்தானோ?ரோஜாவுக்குத் தன்னுடைய தற்போதைய நிலைமையின் விபரீதம் புரியவில்லையோ?இவளுக்கு இப்போதே ஒரு வழி செய்யாவிட்டால், எதிர்காலத்தில் இந்தக் குடும்பத்தின் கௌரவம் எப்படியெல்லாம் மற்றவர்களை விமரிசிக்கப்படும்? எத்தகைய கேவலத்தையும் அவமானத்தையும் தாங்கவேண்டி வரும்? ஒரு நல்ல இதயம் படைத்தவன், தூய சிந்தனையை நினைப்பவன், பரந்த னோக்கம் உள்ளவன், சீர்திருத்தக் கொள்கையைக் கடைபிடிப்பவன் ரோஜாவின் நிலைமையை நன்கு அறிந்தவன், தானே முன்வந்து அவளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைத் தர முன்வரும்போது, அதைப் புறக்கணித்து, தன்னுடைய புற அழகைப் போற்றி தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு, தன்னைத்தேடிவரும் நன்மையைப் புறந்தள்ளிவிட்டாளே? இது சரியா?நியாயமா?இந்தப்பெண் தன்னுடைய அறிவை எங்கே அடமானம் வைத்தாள்? இவள் கற்ற கல்வி எல்லாம் வீணா? எது சரி, எது தவறு?எது தன்னுடைய எதிர்காலத்துக்குப் பாதுகாப்பைத் தரும்?தன்னுடைய கருவில் வளரும் குழந்தைக்கு எது கௌரவத்தையும் மரியாதையையும் பெற்றுத் தரும் என்ற அறிவு வேண்டாமா?தன்னைக் காதலித்து, ஒரு குழந்தைக்கும் தன்னைக் கைகழுவிவிட்டுப் போன ஒரு பொறுப்பற்றவன் இவளுக்கு உயர்ந்தவனாகப் போய்விட்டானே?இது என்ன நியாயம்?இனி இவள் வாழ்க்கை என்னாகும்?’
கலா தன்னிலை பெற வெகு நேரமாயிற்று. ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு வீட்டுக்குள் வந்தவள், மந்தகாசப் புன்னகையுடன் தனக்குள் சிரித்துக் கொண்டிருக்கும் ரோஜாவைப் பார்த்தும் பேசப்பிடிக்காமல் சமையற்கட்டுக்கு விரைந்தாள்.
ஆனால் ரோஜா?திருச்செல்வம் பற்றிய தன்னுடைய முடிவைக் கேட்டு கலா பேசாமல் வெளியேறியதை எண்ணியெண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.அவளை அப்படிப் பேசவிடாமல் செய்துவிட்ட பெருமையில் மனம் திளைத்தது.
‘இனி திருச்செல்வம் தான் இருக்கும் பக்கமே வரமாட்டான்’ என்று மனம் மகிழ்ந்தது, தான் எப்பேர்ப்பட்ட ஒரு செல்வத்தை இழந்தோம் என்ற உண்மையை உணராமல்!

எழுத்து: என். துளசி அண்ணாமலை
Senawang, N.S.Malaysia

Series Navigationதொடுவானம்-       113.கற்றாருள் கற்றார்திருப்பூர் இலக்கிய விருது 2016