நீங்காத நினைவுகள் -23

Spread the love

ஜோதிர்லதா கிரிஜா

nskrishnan“சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” – இந்தப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். அவ்வாறு வாழ்ந்தவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் அமரர் திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். அதுமட்டுமின்றி, பிறரை நிறையவே சிரிக்க வைத்ததோடு சிந்திக்க வைத்தும் வாழ்ந்த மேதை அவர். ஏட்டுக் கல்விக்கும் மேதைத்தனத்துக்கும் தொடர்பு இருந்துதான் தீர வேண்டும் என்பதாய்ப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் விதிக்கு அவர் விலக்கானவர் – பெருந்தலைவர் திரு காமராஜ் அவர்களைப் போல. (என்.எஸ். கிருஷ்ணனின் பிறந்த தேதியும் நவம்பரில்தான் வருகிறது – 29.11.1908)
அவ்வாறு அவர் சிந்திக்க வைத்தவற்றுள் சிலவற்றைத் தற்போது சொல்லாமல் பிறிதொரு நேரத்தில் சொல்ல எண்ணம். அவை சர்ச்சையைக் கிளப்பும் என்பதால் அன்று. பொருத்தமான தலைப்பில் வேறொரு கட்டுரையை எழுதும்போது அவை பற்றிச் சொல்லலாமே, அவ்வாறு சொல்லுவது சரியாக இருக்குமே என்பதால்தான். மற்றப்படி சர்ச்சைகளைப் பற்றிக் கவலை இல்லை. அது சர்ச்சை செய்கிறவர்களின் கவலை! நிற்க.
பல்லாண்டுகளுக்கு முன் கிருஷ்ணபக்தி என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் அமரர் பி.யு. சின்னப்பா அவர்களும், அமரர் டி.ஆர். ராஜகுமாரி அவர்களும் நடித்திருந்தார்கள். என்.எஸ். சிருஷ்ணன் நகைச்சுவைப் பகுதியின் நாயகர். அதில் ஒரு காட்சி. மேடையில் நிற்பது கூடச் சரியாய்த் தெரியாத அளவுக்கு -ஆ அதாவது அவையினர் எம்பி எம்பிப் பார்க்கிற அளவுக்கு – மிகச் சிறிய வயதுப் பெண் ஒருத்தி நாட்டியம் ஆடிக்கொண்டிருப்பாள்.. ஆறு-ஏழு வயதுக்குள்தான் என்று ஞாபகம். அவள் ஆடி முடித்ததும் அவளை ஆட்டுவித்த நட்டுவனாரைப் போட்டுத் தள்ளுவார் என்.எஸ். கிருஷ்ணன். நட்டுவனாருக்கும் சரி, அருகில் இருந்தவர்களுக்கும் சரி ஒன்றும் புரியாது. காரணம் கேட்பவரிடம், என்.எஸ். கே சொல்லுவார்: “ஏன்யா? ஏழு வயசு கூட நிரம்பாத ஒரு சின்னப் பொண்ணுக்கு, ‘கனவில் கண்டேனே, கண்ணன் மேல் காதல் கொண்டேனே!’ அப்படின்னு ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லிக் குடுக்கிறாரே இந்த் ஆளு, நாளைக்கு அது வளந்த பிள்ளையாகுறப்போ உருப்படுமாய்யா?” என்று கேட்டு மேலும் அவரை மொத்துவார். (அவர் கேட்ட கேள்வியின் சொற்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் கேள்வி உள்ளடக்கிய கருத்து இதுதான்.)
இந்தக் கேள்வி தம் குழந்தைகளைப் பரத நாட்டியம் கற்றுத்தரும் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்குத் தோன்றியதுண்டா? பரத நாட்டியப் பாடல்களுள் பெரும்பாலானவை ஏன் சிங்கார ரசத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டு வந்துள்ளன? அதிலும், கற்றுக்கொள்ளும் பெண்ணின் வயது பற்றிய பிரக்ஞையே இன்றி அதற்கு எதை வேண்டுமானாலும் கற்றுக்கொடுப்பதா? இந்தப் பாடல்களையெல்லாம் எழுதியுள்ளவர்கள் ஆண்கள்தானே? அல்லது அவர்களில் பெண்களும் உள்ளார்களா? (நிறைய விஷய ஞானம் உள்ள சகோதரி ஷாலி தெரிவிப்பாரா?)
ஒரு முறை பரதநாட்டியப் பள்ளி நடத்திக் கொண்டிருந்த என் தோழி ஒருவர் என்னிடம் தெலுங்கில் எழுதப்பட்டிருந்த ஒரு பாடலைக் கொடுத்து, “இது குச்சிப்புடி நடனக் கலைஞர் ஒருவர் நடத்தும் பள்ளியில் ஆடப்பட்டு வரும் நடனத்துக்குரிய பாடல். அவர் அமைத்திருந்த ஆடல் மிக நன்றாக இருந்தது. நான் பார்த்தேன். ஆனால் இதன் அர்த்தம் தெரிந்தால் இதை என் வழியில் பரத நாட்டியமாக்கி என் மாணவிகளுக்குச் சொல்லித் தர விரும்புகிறேன். இதைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழி பெயர்க்கக் கூடிய யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார்.
என் அலுவலகத்தில் ஒரு தெலுங்கு அலுவலர் இருந்தார். அவர் பேச்சுத்தமிழ் அறிந்தவர். ஆனால் எழுதத் தெரியாது. எனவே, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலுமா என்று அவரிடம் கேட்டேன். என்னை உட்காரப்பணித்த பின் அவர் அதை மனத்துள் படித்தார். பிறகு முகம் சிவந்து என்னை ஏறிட்டார்.
பின்னர், ‘இது எதற்கு உங்களுக்கு?” என்று கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னேன்.
“இது ரொம்ப ஆபாசமாக உள்ளதே அம்மா! வேண்டாமே?”
“சரி, சார். நான் என் தோழியிடம் கேட்டுச் சொல்லுகிறேன்.” என்று அந்தத் தாளைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன்.
ஆனால், என் தோழி, “பரவாயில்லை. எனக்கு அது அவசியம் வேண்டும். ஆபாசமான அதை நான் எங்கள் பள்ளியில் சொல்லிக்கொடுக்க மாட்டேன். எனினும் அதை நான் தெரிந்துகொண்டாக வேண்டும்…” என்றார்.
அதன் பின் அந்த அலுவலர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தார். ஓர் உறையில் அதைப் போட்டு ஒட்டிக்கொடுத்துவிட்டு, “பத்திரம், அம்மா. எனக்கு டைப் அடிக்கத் தெரியாதாகையால் என் கையெழுத்தில் அது இருக்கிறது. யார் கையிலாவது கிடைத்தால் எனக்கு அசிங்கம். ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு போய் முதலில் உங்கள் ஹேண்ட் பேகில் வைத்து ஜிப்பால் மூடி வையுங்கள்….”என்றார் கண்ணியம் மிகுந்த அந்த அலுவலர்.
நான் அவரது எச்சரிக்கையைத் தோழியிடம் தெரிவித்துவிட்டு அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அப்போது வகுப்பு நடத்திக்கொண்டிருந்ததால் உடனே படிக்கவில்லை. அவரும் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டார். ஆனால், அவர் அந்தப் பாடலுக்கான அபிநயத்தைத் தம் மாணவிகளுக்குக் கற்றுக்கொடுத்தாரா, இன்றேல் அதைப் புறக்கணித்தாரா என்பதை நான் விசாரித்து அறியவில்லை. ஓர் ஆணை முகம் சிவக்க வைக்கிற அளவுக்கான் வக்கிரப்பாடல்களை யெல்லம் எழுதுகிறார்களே என்று அருவருப்பாகவும் வியப்பாகவும் இருந்தது.
கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏனிப்படி ஒரு காமுகனாகவே பல கவிஞர்களும் சித்திரித்து வந்துள்ளனர்? கண்ணன் உண்மையிலேயே அப்படித்தான் இருந்ததாய்ப் புராண நூல்கள் சொல்லுகின்றனவா, இன்றேல் அவை யாவும் சில காமுகர்கள் செய்த இடைச் செருகல்களா? இல்லாவிட்டால், மிகைப்படுத்தப்பட்ட விஷயமா? (இதையும் ஷாலிதான் சொல்லவேண்டும். அவர் நிறையப் படிப்பறிவு கொண்டவர் என்பது தெரிவதால் இக்கேள்வி. சிலர் கண்ணன் அப்படியெல்லாம் காமுகனாக இருந்ததில்லை, அவனை வைத்துச் சிலர் அடித்த கூத்து என்றும் சொல்லக் கேட்டதுண்டு. எனினும் ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள அவா. அதனால்தான் ஷாலினி அவ்ர்களின் உதவியைக் கோருகிறேன்.)
கோபியர் ஓடையில் நீராடும் போது அவர்கள் கரையில் போட்டு வைத்திருந்த ஆடைகளை யெல்லாம் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்து அவர்களைத் தொல்லைப் படுத்தியது அவர்களுக்குப் புத்தி புகட்டத்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆடைகளை யெல்லாம் அவிழ்த்துப் போட்டுவிட்டுப் பெண்கள் ஆற்றில் குளிப்பது அவர்களுக்கு ஆபத்தைத் தேடித்தரும் என்பதால், அவாகள் இனி அப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகவே கண்ணன் அப்படிச் செய்ததாய்க் கூறுவோர் உண்டு. ஆனால், கன்ணனை ஒரு காமுகனாய்ச் சித்திரிக்கும் பாடல்களே மிக அதிகம். கண்ணனைச் சாக்கிட்டுச் சில ஆண்கவிஞர்கள் தங்கள் விரசத்தை எழுத்தில் வடித்தார்களோ? கண்ணன் மீது காமுறுவதைப் பக்தி என்று சிலர் கூறுகிறார்களே! இது அபத்தமன்றோ! தங்கள் காமத்துக்கு ஒரு வடிகாலாய்க் கண்ணனை இவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர, இதில் ப்கதி எங்கிருந்து வந்தது என்பது எமது சிற்றறிவுக்குப் புரியமாட்டேன் என்கிறதே! மிக உயர்ந்த ஆன்மா என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒன்றுடன் நமது ஆன்மா ஒன்றுவதற்குக் காமம் தேவையா? நம்மை நாமே உருவிலியாய்க் கற்பித்துக்கொண்டு இன்னோர் உருவிலியில் ஐக்கியமாவதற்கு அதற்கொப்பான பக்குவப்பட்ட மனநிலைதான் தேவையே தவிர, அங்கே காமத்துக்கு என்ன வேலை?
ஒருமுறை ஒரு பிரபல வார இதழின் ஆசிரியர் தமது கேள்வி-பதில் பகுதியில் ஒரு பெரிய அரசியல் தலைவரின் காமரசம் ததும்பும் எழுத்தைக் கண்டித்து ஏதோ சொல்லியிருந்தார். மாபெரும் எழுத்தாளரான் அந்தத் தலைவர், ‘என்னைக் கண்டிக்கும் அந்தப் பத்திரிகை யாசிரியருக்குக் கண்ணனின் மீது கன்னா பின்னா என்று பக்தியின் பெயரால் கவிதை எழுதிய ஒரு பக்தையைக் கண்டிக்கும் துணிசசல் உண்டா?’ எனும் ரீதியில் பதில் கேள்வி எழுப்பியிருந்தார். அவ்வளவுதான்! அந்த ஆசிரியர் அதற்குப் பதில் சொல்ல வழியின்றிக் கப்சிப் ஆனார்!
பக்தியின் பெயரால் இது போன்று படைக்கப்பட்டுள்ளவற்றை நம்மால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனால். காமத்தின் மூலம் கடவுள் மீது பக்தி செலுத்தலாம்’ என்பது அபத்தக் கருத்து என்னும் சிந்தனையையேனும் மாந்தரிடம் தூண்டலாமல்லவா!
அட, கண்ணனை விடுங்கள். இவர்கள் இது போன்ற கதைகள் இல்லாத முருகனைக்கூட விட்டு வைக்கவில்லையே! வேடுவனாய்க் கானகம் வரும் முருகன் வள்ளியைப் பார்த்துப் பாடுவதாய் எழுதப்பட்டுள்ள தமிழ்ப் பாட்டில்தான் என்ன விரசம்! அதை இங்கே எடுத்தெழுத என் விரல்கள் கூசுகின்றன. இந்தப் பாடலாசிரியர்கள் தங்கள் விரசங்களையும் விகாரங்களையும் வெளிப்படுத்தக் கடவுளர்கள் என்று கொண்டாடப் படுபவர்களையெல்லாம் என் தான் இப்படி வம்புக்கு இழுக்கிறார்களோ!
இந்தத் தலைப்புடன் தொடர்புடைய மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன. கட்டுரை நீளும் என்பதால் இத்துடன் நிறுத்த வேண்டியதிருக்கிறது. எனினும் இப்போது எழுதாமல் பின்னர் ஒரு கட்டுரையில் சொல்ல ஒத்திப்போடும் விஷயங்கள் சார்ந்த சர்ச்சை
களையும் வாசகர்கள் எழுப்பக் கூடும்தான் என்பதும் தெரியும். இருந்தாலும் அவை பற்றிப் பின்னரே எழுத எண்ணம்.
*********

Series Navigation