நீர்நிலையை யொத்த…

Spread the love

 

 

என்னை எடுத்துக்கொண்டு

யாராவது எனக்கொரு

அதிர்வுகளற்ற

ஆன்மாவைத் தாருங்களேன்

 

நீர்நிலையின் மேற்புறத்தின்

பரப்பு இழு விசையில்

சிறு

பொத்தல்கூட விழாமல் நடமாடும்

நீர்ப்பூச்சியை யொத்த

நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்

 

சர்வமும் சாந்தியான

சீவிதமே என் நாட்டம்

 

ஒரு

புள்ளியெனக்கூட வேதனை

செய்யாதிருப்பீர்

அது

வட்டமெழுப்பி

சடசடவென விட்டங்கள் கூட்டி

பெரும்

வாட்டமாக விரிந்துபோகிறது

 

வதனத்தில்

சலனங்களற்றுப் போனால்

சவமாகி விடமாட்டேன்

 

உள்ளே

உராய்வுகளின் உஷ்னமற்ற

நீச்சலுக்கும்

செவுள்வழி சுவாசித்துப் பிரித்தெடுக்க

பிராண வாயுவும்

ஆழத்தில்

வண்ணவண்ண நீர்த் தாவரங்களுமென

வளமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

 

கூழாங்கற்களைப் போன்றே

முத்தைச் சுமக்கும்

சிப்பிகளும் சிதறிக்கிடக்கும்

அடி மனத்தில்

ஆர்ப்பரிப்பில்லாத அமைதியை

அனுபவித்துப் பார்க்க வேண்டும் நீங்கள்

 

என்னோடு சேர்ந்தே

தன்னுயரம் நீட்டும்

தாமரை உயர

தண்ணீர் தரும் தயாளன் நான்

 

அதிர்வுகளின்றியே

என்னைக் கடந்து செல்லுங்கள்

ஏனெனில்

எனக்குள்ளும் இயக்கமற்றுக் கிடக்கின்றன

எத்தனையோ சுனாமிகள்.

 

Sabeer AbuShahruk

Series Navigationகுருஷேத்திர குடும்பங்கள் 6கவிதை