நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!

This entry is part 31 of 38 in the series 10 ஜூலை 2011
“எங்கும் ஒலிக்கிறது காற்று” என்னும் நோக்குடன் வெளிவந்திருக்கிறது கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் 2011 கலை இலக்கிய மலர்.’ஒரு மக்களினத்தின் இருப்பு என்பது முதன் முதலாக அதன் பூர்வீகமான நிலம் சார்ந்தது. நிலத்தின் மீதிருந்தே  மக்களினமும் மொழியும் கூட கட்டமைவாகின்றன.  நிலத்தைத் தேடும் நெஞ்சுகளின் வலியை எப்படி விளக்கிட முடியும்? ஆனால் அத்தேடலின் மூர்த்தண்யத்தை  நாம் அடையாளப்படுத்த முடியும்.  அதன் வீச்சை கோடி காட்ட முடியும். ‘எங்கும், ஒலிக்கிறது காற்று.  எனது நிலம். எனது நிலம்’ என்ற கவிதை வரிகள் இந்த இரண்டினையும் தவறாமல் செய்திருப்பதாக நாம் நிச்சயமாக நம்புகின்றோம்’ என்று குறிப்பிடும் இதழின் தலையங்கம் ‘அதன் காரணமாகவே தொகுப்புத் தலைப்பாக ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ என்னும் வரியினைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
இதழின் நோக்கத்திற்கேற்ப பெரும்பாலானா மலரின் ஆக்கங்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் தம் சொந்த மண்ணை இழந்து, அல்லது பிரிந்து, பல்வேறு அடக்குமுறைக்களுக்குள்ளாகித் துயருறும், துயருற்ற மக்களைப் பற்றிப் பேசுகின்றன. வட அமெரிக்காவின் பூர்வ குடிகளான, அம்மண்ணுக்குச் சொந்தக்காரர்களான பூர்வீக இந்தியர்களின் துயரங்களை மிகவும் அழுத்தமாக விபரிக்கிறது மணி வேலுப்பிள்ளையின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘செங்குடித் தலைமகன் சியாட்டில் ஆற்றிய உரை’ என்னும் கட்டுரை.  வட அமெரிக்காவின் பூர்வ இனக்குடியான ‘சுகுவாமிஷின்’ தலைவரான சியாட்டில் வெள்ளையினத்தவருடனான போர்களில் தமது மக்கள் மாண்டு மடிவதைத் தடுப்பதற்காக, மிகவும் சோகத்துடன் வெள்ளையினத்தவர் வைத்த ‘பொயின்ற் எலியற்’ என்னும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்றார். அவ்வொப்பந்தத்தின்படி அவர்களது பூர்வீக நிலத்தை விட்டு நீங்கி, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பிரதேசமொன்றிற்கு இடம்பெயர வேண்டியேற்படுகின்றது. அவர்கள் நீங்கிய அவர்களது பூர்வீக நிலமே அமெரிக்காவின் ‘சியாட்டில்’ மாநகரமாகும். இம்மாநகரத்திலேயே சியாட்டிலின் இந்த ஒப்பந்தத்தையொட்டிய புகழ்பெற்ற உரை 1854இல் நிகழ்த்தப்பட்டது. இந்த உரை அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான பிராங்ளின் பியர்ஸுக்கும் கடிதமாக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த உரையின் மொழிபெயர்ப்பினையே மணி வேலுப்பிள்ளை கூர் மலருக்குக் கட்டுரையாகப் படைத்துள்ளார்.
இந்த சியாட்டிலின் உரை பலவேறு உணர்வுகளின் கலவையாக விளங்குகின்றது. காலங்காலமாக , தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த மண்ணை விட்டுப் பிரியும் துயரம் மிகவும் கொடுமையானது. அதுவும் பலவந்தத்தின் காரணமாகப் பிரிதலென்பது மிக மிகக் கொடுமையானது. அமெரிக்காவின் பூர்வீக இந்தியர்களின் துயரகரமான இந்த வரலாற்றைத் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் தங்களது அன்றைய , இன்றைய நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள். பூர்வீக இந்தியர்களின் துயரங்களை, அவர்களுக்கு மேல் ஏவி விடப்பட்ட அடக்குமுறைகளை அதே விதமானதொரு சூழலுக்குள் வாழும் இன்றைய ஈழத்தமிழர்கள் இதயபூர்வமாகப் புரிந்து கொள்வார்கள். மேற்படி சியாட்டிலின் உரையின் சில பகுதிகளை இப்போது பார்ப்போம்: “எம்மவர்கள் இறந்தாலும் இந்த அழகிய நிலத்தை மறக்கப் போவதில்லை.  ஏனெனில், இது செங்குடிமக்களின் தாய்நிலம். நாங்கள் இந்த நிலத்தின் அங்கம். இந்த நிலம் எங்கள் அங்கம்.  நறுமண மலர்கள் எங்கள் சகோதரிகள்.  மானும், குதிரையும்,  மாபெரும் கழும் எங்கள் சகோதரர்கள். பாறைச் சிகரங்கள், பசும் புல்வெளிகள், மட்டக் குதிரையின் உடற்சூடு, மனிதர் …. எல்லாத் தரப்புகளும் ஒரே குடும்பத்தின் அங்கங்கள். …….  இது எங்கள் புனித நிலம். ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல. இது எங்கள் மூதாதையரின் குருதி.  நாங்கள் இந்த நிலத்தை விற்றால் , இது புனிதமான  நிலம் என்பதை நீங்கள்  நினைவில் வைத்திருக்க வேண்டும்.  இது புனிதமான நிலமென்பதையும்,  ஏரிகளின்  தெளிந்த நீரில் புலப்படும் சாயை ஒவ்வொன்றும்  எங்கள் மக்கள்  தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் நினைவுகளையும் இயம்புவன  என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும்.”
இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்கள். அவர்களது வாழ்க்கை, அவர்கள் படைத்த, படைக்கும் கலை, இலக்கியங்களெல்லாம் அதனைத்தான் எமக்கு எடுத்தியம்புகின்றன. மேற்படி உரையின் மேலுள்ள வரிகள் பல்வேறு உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன. தாய்நிலத்தின் மீதான பற்றை,  அதனை இழக்கும் துயரினை, அதனை வாங்கப்போகும் வெள்ளையர்களிடம் அதனை நன்கு கவனிக்கும்படி வேண்டிக்கொள்ளும் இழப்பும், பரிவும் கலந்த சோகத்தினையெல்லாம் அவை பிரதிபலிக்கின்றன. பாலூட்டி, தாலாட்டி வளர்த்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளானதும், பல்வேறுசமூக, பொருளியற் காரணங்களுக்காக, அந்தப் பெண்ணுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத ஒருவனுக்குத் திருமணத்தைப் பல்வேறு நிர்ப்பந்ததங்கள் காரணமாகச் செய்து , வழியனுப்பும்போது, மாப்பிள்ளையைப் பார்த்து “எங்கள் உயிரை உங்களுடன் அனுப்புகின்றோம். கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று வழியனுப்பும் பெற்றவர்களையும் மேற்படி உரை எனக்கு நினைவுபடுத்தியது.
“தங்கள் தந்தையர் தோற்கடிக்கப்பட்டு, அடிபணிய வைக்கப்பட்டுள்ளதை எங்கள் பிள்ளைகள் கண்டுள்ளார்கள்.  எங்கள் போராளிகள் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றார்கள். தோல்வியை அடுத்து சோம்பித் திரிந்து, இனிக்க உணவுண்டு, வெறிக்க மதுவுண்டு, உடலைக் கெடுத்து, பொழுதைக் கழித்து வருகின்றார்கள்” என்னும் சியாட்டிலின் உரையின் வரிகள் அண்மைக்காலத்து முள்ளிவாய்க்கால் யுத்த நினைவுகளை ஞாபகப்படுத்துகின்றன.
சியாட்டிலின் முழு உரையினையும் விரிவாகவே ஆராயமுடியும். ஆயினும் இக்கட்டுரையின் நோக்கம் அதுவல்லவென்பதால் ஏனைய படைப்புகளின் பக்கம் கவனத்தைச் சிறிது திருப்புவோம். இருந்தாலும் மேற்படி மலரின் முக்கியமான கட்டுரையாக, படைப்பாக மேற்படி சியாட்டிலின் உரையினைக் கொள்ள முடியும்.
ரதனின் அடோம் இகோயன் (Atom Ecoyan) எகிப்திய , ஆமீனிய கனேடியரான அடோம் இகோயன் என்னுமொரு தரமான திரைப்பட, குறும்பட, ஆவணப்பட மற்றும் தொலைக்காட்சிப்பட  தயாரிப்பாளரான, இயக்குநரான,  திரைப்பட வசனகர்த்தாவான,   அத்துடன் கலை, திரைக்கதை, வேற்று மொழித்திரைப்படத்திற்கான விளக்கக் குறிப்புகள் பற்றியெல்லாம் நூல்கள், கட்டுரைகள் எழுதிய எழுத்தாளருமான ஒருவரைப் பற்றிய அறிமுகத்தினை அவரது திரைப்படங்களினூடு விபரிக்கின்றது. அவ்விதம் விபரிக்கும்போது ஆர்மீனிய மக்களைப் பற்றிய, அவர்கள் மீதான துருக்கியர்களின் அடக்குமுறைகளை வெளிக்காட்டும் அவரது திரைப்படங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது , அம்மக்களுடன் ஈழத்தமிழர்களின் நிலைமையினையும் நினைவு கூர்கின்றார்.
மேற்படி கட்டுரையில் ஆரம்பத்தில் ‘அடோம் இகோயன்  ஒரு முழுமையான படைப்பாளி அல்ல. வர்த்தக சினிமாவின் கண்களுக்கு இவர் இவ்வாறே தெரிகின்றார்.  தன்னை அவர் அவ்வாறு கூறிக்கொள்வதில்லை.  அடோம் இகோயன்  ஒரு கலைத்துவமிக்க சுய விமர்சகர்’ என்று குறிப்பிடுகின்றார்.  இவ்விதமாக அடோம் இகோயனைப் பற்றி கட்டுரையின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்வது அவரைப் பற்றிய பிழையானதொரு பிம்பத்தினை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் அபாயமுண்டு. ஏனெனில் அவரது விமர்சனங்களுக்காகவன்றி அவரது பின்நவீனத்துவபாணியிலான,  விமர்சகர்களின் வரவேற்பினைப்பெற்ற திரைப்படங்களின் தயாரிப்புகளுக்காக, அவற்றின் வசனங்களுக்காக (பெரும்பாலான படங்களுக்கு), குறும்பட மற்றும் ஆவணப்படங்களுக்காக, அவற்றின் திறமையான இயக்கத்துக்காகவே அவர் பெரிதும் நினைவு கூரப்படுகின்றார். அவற்றுக்காகவே அவர் பல்வேறு திரைப்படத்துறைக்கான விருதுகளை வாங்கியிருக்கின்றார். அத்துடன் சமகாலச் சுயாதீனத் திரைப்படத் தயாரிப்புகளில் முக்கியமான ஒருவராகவே அவர் பெரிதும் இனங்காணப்படுகின்றார்.  இந்நிலையில் அவரது முக்கியமான பங்களிப்புகளை ஒதுக்கிவிட்டு, அவரது விமர்சனப் பங்களிப்பை முதன்மைப்படுத்திக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே கட்டுரையாளர் குறிப்பிடுவது  அவரைப்பற்றிய பிழையானதொரு பிம்பத்தினை ஏற்படுத்திவிடுமென்று கருதுவது இதனால்தான்.  இருந்தாலும் இந்தக் கட்டுரை அடோம் இகோயனை அறிமுகம் செய்வதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.
கட்டுரையின் முடிவில் ரதன் பின்வருமாறு கூறுவார்: “இவரை ஒரு பின்நவீனத்துவப் படைப்பாளி என சில விமர்சகர்கள் கூறுவதுண்டு. ஆனால்…”  என்கின்றார். அந்த ‘ஆனால்… ‘ என்பதன் மூலம் அவருக்கு மேற்படி விமர்சகர்களின் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாததென்றதொரு தொனியே தென்படுகின்றது. இதற்கு ரதன் மேற்படி கட்டுரையின் பிறிதோரிடத்தில் ‘இவரது படங்களின் தனித்தன்மைகள்’ என்னும் பகுதியில் கூறுவது நல்லதொரு பதிலாக அமைகின்றது. அதிலவர் பின்வருமாறு கூறுவார்: “…ஒவ்வொரு பாத்திரமும் நேரடியான பாத்திரங்களாக இல்லாமல், குழப்பம் நிறைந்து பன்முகத் தன்மையுடன் பார்வையாளர்களை வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு செல்பவைகளாக இருக்கும்.” .  அத்துடன் நவீன தொழில் நுட்பத்தின் பாதிப்பு, நிறுவனமயப்பட்ட அரசு, சமூக நிறுவனங்களில் உள்ளோர் சாதாரண மனிதர்களின் வாழ்வில் செலுத்தும் ஆதிக்கம், செல்வாக்கு இவையெல்லாம் அடோம் இகோயனின் படங்களில்  வெளிப்படும் பண்புகளாக இன்னுமோரிடத்தில் ரதன் குறிப்பிடுவார். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்ப்பதே பொருத்தமானது. மேற்படி நவீன தொழில்நுட்பம், அரச, சமூக நிறுவனங்களின் ஆதிக்கம், செல்வாக்கு இவை காரணமாகத்தான் இவரது படங்களில் வரும் பாத்திரங்கள் ஏனையவர்களுடனான உறவுகளில் முறிவுண்டு (fractured)  பன்முகத்தன்மையுடன் காணப்படுகின்றார்கள்.  மேலும் இவரது படங்களின் முக்கியமான பண்புகளிலொன்று: நிகழ்வுகள் நேர்கோட்டில் செல்லாமல் பார்வையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட உணர்சிகரமான எதிர்வினையினை வெளிக்கொணர்வதற்காக ஒழுங்கற்று , தொடர்ச்சி மாறி அமைத்திருப்பதாகும். இவ்விதமாக அமைந்திருக்கும் இவரது திரைப்படங்கள் பின்நவீனத்துவ தனிமையினைப் பிரதிபலிப்பன என்று விமர்சகர்கள் கருதுவதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை.
இம்மலரில் காணப்படும் இன்னுமொரு குறிப்பிடத்தக்க கட்டுரை அ.முத்துலிங்கத்தின் ‘ட்யூலிப் பூ’ என்னும் கட்டுரையாகும்.  அ.முத்துலிங்கத்தின் எழுத்து நடை சுவையானது. சம்பவங்களைக் கோர்வையாக அடுக்கிச் செல்வது இவரது கதை சொல்லலில் காணப்படுமொரு குறிப்பிடத்தக்கதொரு பண்பாகும்.  [ இவரது ‘புதுப் பெண்சாதி’ எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளிலொன்று. அழகும், அறிவும் மிக்க புதுப் பெண்சாதி பாத்திரம் அவர் படைத்த பாத்திரங்களில் மறக்க முடியாதொரு பாத்திரம். கணவனின்  கிராமத்திற்குக் கணவனுடன் பிரவேசித்த புதுப் பெண்சாதியின் முடிவு சோகமானது. காலம் கூட எவ்வளவு விரைவாக அவளை மறந்து விடுகிறது.]  அ.மு. அவர்கள் மலரிலுள்ள ட்யூலிப் பூ கட்டுரையில் ஒவ்வொன்றுமே சமயம் வரும்போதுதான் முழு வீச்சுடன் வெளிப்படும் டியூலிப் பூக்களைப் போல என்னும் கருத்தை மையமாக வைத்து உதாரணங்களை அடுக்கியிருப்பார். அதற்காக அவர் ‘மோபி டிக்’, நாவலை, சிலப்பதிகாரத்தை, அசோகமித்திரனின் எழுத்தினையெல்லாம் குறிப்பிட்டுத் தனது வாதத்தினை முன் வைத்திருப்பார்.  ‘மோபிடிக்’ நாவலைப் பற்றிக் குறிப்பிடும் போது 700 பக்கங்கள் கொண்ட நாவலில் முதல் 500 பக்கங்களுக்கு ‘மோபிடிக்’ தோன்றுவதேயில்லை என்பார். அது போல் சிலப்பதிகாரத்திலும் கண்ணகி பாத்திரமும் மூன்றில் இருபகுதிகள் முடிந்தபின்னர்தான் உயிர் பெறுவதாகக்குறிப்பிடுவார். உண்மையில் மோபிடிக் நாவலை எடுத்துக் கொண்டால் அதன் தலைப்பு முதல் நாவல் முழுவதுமே மோபிடிக் என்னும் மகா வெண் திமிங்கிலத்தை மையமாக வைத்தே கதை நகர்கின்றது. மோபிடிக் நேரடியாக வருவதென்பது கூட அவ்வளவு முக்கியமில்லை. அதனால் காயப்பட்டுப் பாதிக்கப்பட்ட காப்டனின் மோபிடிக்கை நோக்கிய தேடலும் அதன் முடிவுமே கதையின் மையம். கடற்பயணச் சாகசங்களில் விருப்பு மிகவும் கொண்ட இஸ்மாயில் என்னுமொரு ஆசிரியனொருவனினூடாகக் கூறப்படும் கதையின் முடிவில் எந்த வெண் திமிங்கிலத்தைக் கொல்வதற்காகத் தேடிக்கொண்டிருந்தானோ அந்தத் திமிங்கிலத்துடனாக மோதலிலேயே அந்தக் காப்டனின் கதையும் முடிகிறது.  ‘மோபிடிக்’ , ‘இராபின்சன் குருசோ’ ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ இந்த நாவல்கள் எல்லாமே ஒரு வகையில் மானுடத்தின் இருப்புப் பற்றிய குறியீட்டு நாவல்களாகவே படுகின்றன. ‘கடலும், கிழவனும்’ நாவலில் வரும் சந்தியாகோ கிழவனின் மாபெருங்கனவின் முடிவாக எஞ்சுவதென்ன? பிரபஞ்சக் கடலின் மத்தியில் மிதக்கும் சின்னஞ்சிறு கிரகத்தீவொன்றில் இருப்பின் தப்பிப்பிழைத்தலுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மானுடத்தின் போராட்டத்தையே இராபின்சன் குருசோ பிரதிபலிப்பதாகக் கருதலாம். வெண் திமிங்கிலமான மோபிடிக்கும் இது போன்றதொரு பாத்திரம்தான். பிறந்தது முதல் இருப்பின் நிலைப்பிற்காக பிறவிக் கடலில் மானுடர் போராடிக் கொண்டிருக்கின்றனர். முடிவில் மரணமென்னும் பெரும் திமிங்கிலத்தின் முன்னால் தோற்று விடுகின்றார்.  சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி பாத்திரமும் மோபிடிக் போன்றதுதான். காப்பியத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கண்ணகியை மையமாக வைத்தே கதை நகர்கின்றது. ‘மாசறு பொன்னே’யில் தொடங்கும் கோவலன் , கண்ணகிக்கிடையிலான மணவாழ்க்கையிலிருந்து கணவனின் நியாயமற்ற கொலைக்காக நீதி கேட்டு மதுரையினை எரியூட்டிப் பத்தினித் தெய்வமாக உயர்வதுவரை ( ஏன் கோவலன் மாதவியுடன் கூடிக் காலத்தைக் கழிக்கும்போது கூட , தனித்து வாடும் ) கண்ணகியைத்தான் நினைத்துக் கொள்கின்றோம். ஒரு விதத்தில் அசோகமித்திரனின் ‘விடுதலைக்கு இன்னும் சில நாட்கள்’ கட்டுரை 50 வருடங்கள் கழித்து உருவானதை அ.மு. டியூலிப் பூக்களின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளலாம். அதை முழு வீச்சுடன் எழுதுவதற்குரிய நேரம் அவருக்கு இப்பொழுதுதான் வந்திருக்கிறது.
மேற்படி மலரில் வ.ந.கிரிதரனின் ‘புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர்தல், புலம்பெயர் தமிழர்’ பற்றிய கட்டுரை, தமிழ்நதியின் ‘டொராண்டோ பல்கலைக்கழக்த்தில் நடைபெற்ற கவிதா நாடக நிகழ்வு பற்றிய அவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டுரை, என்.கே. மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் ‘முகவரி’ என்னும் பங்களாதேஷ் எழுத்தாளரான ஷீட் கைதரின் பாகிஸ்தான் படையினருடனான பங்களாதேஷ் போராளிகளின் நடவடிக்கைகளை, விளைவுகளை விபரிக்கும் சிறுகதை, அமெரிக்க இந்தியப் பெண் எழுத்தாளரான ‘இக்டோமியின் போர்வை’ என்னும் மொழிபெயர்ப்புச் சிறுகதை (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டது), திருமாவளவனின் கவிதைகள், தேவகாந்தனின் ‘யுத்தம்’ சிறுகதை , டானியல் ஜீவாவின் சிறுகதையென பல படைப்புகள் காணப்படுகின்றன.  லதா ராமகிருஷ்ணனின்  ‘இக்டோமியின் போர்வை’  சிறுகதையில் ஓரிடத்தில் ‘இந்தியப் படை வீரர்கள்’ என்று வருகிறது. உண்மையில் பூர்வீக இந்தியப் படை வீரர்களைத்தான் அவர் குறிப்பிடுகின்றார் என்பது எல்லாருக்கும் விளங்கிவிடும் என்பதற்கில்லை.  வெங்கட்ரமணனின் ‘ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போர் வீரர்கள்’ என்னும் கட்டுரை நலதொரு கட்டுரை. இயந்திர மனிதர்களை சமர்களில் பாவிக்கப்படுவதை விபரிக்கும் கட்டுரை, எவ்விதம் இன்றைய சமர்கள் சமர்கள் உருவாக்கும் அழிவுகளை உணராதவண்ணம் சமர்கள்  புரிபவர்களை எந்தவிதக் குற்றவுணர்ச்சிகளுமின்றிச் சமர்களைப் புரிய வைத்துவிடுகின்றதென்பதை விபரிகின்றது. இவர் தனது கட்டுரையில் சமர்களுக்குப் பாவிக்கப்படும் இயந்திரன்களையே சமரன்கள் என்கின்றார். அது சரியானதொரு சொற்பதமாக எனக்குப் படவில்லை. இயந்திர மனிதர்களை இயந்திரன்களென்பது சரியானது ( இயந்திரன்களென்று எதற்காக ஆண்பாலைப் பாவிக்கின்றீர்களென்று பெண்ணியவாதிகள் எதிர்க்கேள்விகள் கேட்டால் அவற்றிலுள்ள நியாயத்தினை மறுப்பதற்கில்லை. அதற்காக பொதுவாக இயந்திரர்களென்று மானுடர் என்று அழைப்பதைப் போல் சமாளித்துக்கொள்வதே சரியானதாகப்படுகிறது.) சமரன்களை சமர்கள் புரியும் ஆண்களென்றும் அர்த்தப்படுத்தலாம். சமர்கள் புரியும் இயந்திரன்களாக அர்த்தப்படுத்தப்பட முடியாது.  சமரியந்திரர்களென்று (சமரியந்திரன்களென்று) வேண்டுமானால் கூறலாம்.
மேலும் மலரில் இளம் படைப்பாளிகளான இளங்கோ, மெலிஞ்சி முத்தன், அருண்மொழிவர்மன், மயூ ஆகியோரின் படைப்புகளும் காணப்படுவது வரவேற்கத்தக்கதொரு அம்சம். இன்னுமொரு முக்கியமானதொரு அம்சம் கறுப்பியுடனான நேர்காணல். அவருக்கேயுரிய துணிச்சலுடன் பதிலிறுத்திருக்கின்றார்.
கனடாத் தமிழ் நாடக உலகைப் பற்றிய குறிப்பொன்றினையும் மலரில் பிரசுரித்திருக்கின்றார்கள். குறிப்புக்குப் பதிலாக விரிவானதொரு கட்டுரையினை மேற்படி விடயம் பற்றி, மேற்படி துறையினைச் சார்ந்தவர்களிடமிருந்து பெற்றுப் பிரசுரித்திருந்தால் இன்னும் பயன்மிக்கதாகவிருந்திருக்கும்.
மொத்தத்தில் நல்லதொரு முயற்சி. தொடரட்டும், வரவேற்கின்றோம்.
Series Navigationசோ.சுப்புராஜ் கவிதைகள்அழையா விருந்தாளிகள்
author

வ.ந.கிரிதரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *