நெசவாளன் எப்போதும் அம்மணத்தோடா..

This entry is part 18 of 23 in the series 30 நவம்பர் 2014

 

கல்யாணப்புடவையில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவது திவாகா பட்டு என்ற 44 லட்ச ரூபாய் சேலைதான். பணக்காரர்கள் முகூர்த்தத்தில் அந்த பட்டுச்சேலையை அதிகம் விரும்புகிறார்கள். அதை விற்கும் கடையின் லேபிள் இருக்கும். அதை நெய்தவன், உருவாக்கியவன் பெயர் எங்குமிருக்காது. நெசவாளன் கூலியாளாக எங்கோ நின்று விடுகிறான். அவ்வளவு அற்புதமாக நெய்பவன் கலைஞனாக தன் இருப்பைக் காட்டிக் கொள்ள முடிவதில்லை. அதை வடிவமைக்கும், டிசைன் செய்பவனுக்கு கூட பெரும் மரியாதை இருக்கும். ஆனால் நெய்பவனுக்கு கூலிக்காரன் அந்தஸ்துதான். நெசவாளனுக்கு எந்த அடையாளமும் இல்லை.முன்பெல்லாம் கல்யாணம் என்று வருகிற போது ஒரு பட்டுச் சேலை எடுப்பார்கள். இப்போது 20 தேவைப்படுகிறது. அதிலெல்லாம் விறகப்படும் கடையின் முகவரிதான் இருக்கும். நெய்தவன் முகவரியற்றே இருக்கிறான்.கைத்தறி என்று பெயர் போட்டு விசைத்தறியில் நெய்த சேலைகள் அமர்க்களமாய் விற்கப்படுகின்றன.தமிழகத்தில் 2 லட்சம் குடும்பங்கள் 4 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். தனியாரை நம்பி இருப்பதால் பெரிதாய் சமூக பாதுகாப்பு இல்லை. அன்னாடம் காய்ச்சி போல தினக்கூலி போலாகிவிட்டான்.

ஒரு சேலைக்கு நெசவாளி பெறும் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் லாபம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இடைத்தரகர்கள், விற்பவர்கள் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் விற்ற்கலாம். கிலோ கணக்கில் விற்கிற இன்றைய யுகத்தில் கிலோ 6,000 ரூபாய் முதல் 1,60,000 ரூபாய் வரைக்கும் சேலை விற்கிறது.விசைத்தறியில் 300 ரூபாய்க்கு விற்கும் சேலை கைத்தறியில் 1000 ரூபாயாகிறது.விசைத்தறியில் கூலி வேலை செய்கிறவனுக்கு 1 லட்சம் ரூபாய் கூட அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது. கைத்தறி டிசைன்கள் விசைத்தறியில் போடப்பட்டு அம்ர்க்களமாக உற்பத்தி நடக்கிறது. கைத்தறி சேலைகளை தோளில் போட்டு விற்ற அண்ணா, க்லைஞர்கள் இன்று இல்லை.

விலைவாசி உயரும் வேகத்தில் நெசவாளிக்கு கூலி உயர்வு இல்லை. அவன் போராடுவதில்லை. 30 வருடம் முன் 150 ரூபாய்க்கு விற்ற பட்டு இப்போது 4500 ரூபாய். அப்போது 250 ரூபாய்க்கு விற்ற சேலையில் 50 ரூபாய் லாபம் என்று நியாயம் இருந்தது. . இப்போது 4500 பட்டுக்கு, 1500 கூலிக்கு என்று 6000 ரூ அடக்கவிலையாகிறது. விற்பது எத்தனை ரூபாய்க்கு என்பதை வியாபாரி மட்டும் அறிவான்.. ஒவ்வொரு ஊருக்கும் கூலி வித்தியாசமுண்டு. தஞ்சையில் 700ரூ வாங்கும் நெசவாளி சிறுமுகையில், கோவையில் நெய்தால் ரூ 1000 வாங்குவான். முதலாளிகளின் கருணையை பொறுத்து கூலி நிர்ணயிக்கப்படுகிற தொழில் நெசவு மட்டுமே.பட்டு விலை ஏறுகிறது. ஜரிகை விலை ஏறுகிறது. கூலி மட்டும் நெசவாளிக்கு ஏறுவதில்லை.போராட அவன் ஒன்று சேர்வதில்லை. ஜாதி ரீதியாக சங்கம் வைக்கிற நெசவாளி தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபடுவதில்லை. அவர்களை தொழிற்சங்க ரீதியாக ஒருங்கிணைப்பதில் பொதுவுடமை வாதிகளுக்கும் தோல்விதான். இது பற்றிய அறியாமையில் நெசவாளி உழல்கிறான்.கூலியில் முதலாளி ஏமாற்றுகிறான். விசைத்தறியில் கைத்தறி ரகங்கள் போட்டு ஏமாற்றுகிறார்கள். 10,000 விசைத்தறிகளில் கைத்தறி ரகம் ஓடினால் 1 தறியை அரசாங்க அதிகாரி பிடிப்பான். எல்லாம் கண் துடைப்பு. கைத்தறியை வசதி படைத்தவர்களே அணிகிறார்கள் அனுதாபத்தோடு. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளிகளின் கூட்ட்த்தில் நெசவாளியும் கலந்தே நிற்கிறான்.

பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் முடைவோர், பட்டு, கோரா, பம்பர் நெய்பவர்கள் எல்லோரும் நெசவாளர்களே. ஆனால் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் நெய்பவர்கள் வறுமையின் கோட்டின் கீழ்தான் இருக்கிறார்கள். பட்டு, பம்பர்கோரா கைத்தறியில் நெய்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களாக இருப்பது ஆறுதல் தருகிறது. 1 கோடி பேர் படித்தஇளைஞ்ர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கைத்தொழிலை சொந்தத் தொழிலாக கொண்ட குடுமப்ங்களில் இந்த அவலம் இல்லை. அது நெசவோ, மர வேலையோ…. எம்பிஏ படித்தவன் 5,000 ரூக்கு அலைய வேண்டி உள்ளது. நெசவாளர் வீட்டுப்பையன் சுலபமாய் அதை விட 4 மடங்கு சம்பாதித்து விடுவான். ஆனால் நெசவாளி அவனது மகனை நெசவாளி ஆக்க விரும்புவதில்லை. நெசவுத்தொழில் சரியான ஆட்கள் இல்லாமல், புதிய தலைமுறையினரின் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. நெசவாளி சம்பாதித்து குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் அக்குகிறார்ன். ஆனால் நெசவாளன் குடும்பத்துக்கு பெண் தர விருப்பமிருக்காது பலருக்கு. படித்தவன் கணிசமான வருமானம் இருந்தாலும் நெய்வதில்லை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் தொழில் நடக்கும். தனியாள் வேலையாக அது இல்லை..

 

5 விசைத்தறிகளுடன் ஆரமபிக்கும் ஒருவன் பத்து வருடத்தில் 50 தறிகளைக் கொண்டிருப்பான். 5 தறிக்கு நூல் கொடுப்பவன் 10 வருடத்தில்   100 தறிக்கு நூல் கொடுத்து முதலாளி ஆகி விடுவான்.ஒற்றைத்தறியுடன் நெய்பவன் அப்படியேத்தான் இருப்பான். தரகர்கள் கொழுக்க தறியில் உட்கார்ந்திருப்பவன் தனியாளகவே இருந்து வருகிறான். நெசவாளி கலைஞன்தான். ஆனால் அந்த அடையாளத்தை சமூகம் அவனுக்குத் தருவதில்லை. இப்போது மெமரி கார்டு போட்டு ஜமுக்காளத்தில் பல டிசைன்களில்   நெய்கிறான் நெசவாளி.அவனின் வாழ்க்கை தறிக்குழிக்குள்ளான ” மெமரி” தான் எப்போதும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவன் தொழில் செய்யலாம். ஆனால் தனியார் முதலாளிகளின் ஆக்கிரமிப்பு அவர்களை கூட்டுறவுச் சங்கங்களிடம் அணுக விடுவதில்லை. தனியார் தரும் கூலிதான் நிரந்தரமாக்கப்பட்டதாகும். தனியாரை நம்பியே, அவனிடம் கூலி வேலை செய்தே நெசவாளி யுகங்களைக் கடத்தி விட்டான். திருப்பூரின் ஒவ்வொரு பகுதிக்கும் முதலாளிகள் அடிக்கடி வந்து நெசவுச் சாமான்கள் கொடுத்துப் போகிறார்கள். திருப்பூரில் பெரிய முதாலாளிகள் உருவாகவில்லை. உருவானவர்கள் இல்லாமல் போய் விட்டார்கள். கோவைப்பகுதியிலிருந்து ஜவுளிக்கடைகள் ஆண்டுதோறும் 400 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். நெசவாளன் என்ற கலைஞனுக்கு விளம்பரத்தில் கோமனாண்டி, அம்மணக்காரன் என்ற பெயர்கள்தான் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.,

 

 

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602    / 9486101003 / subrabharathi@gmail.com

 

 

 

 

 

Series Navigationதினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் தொல்காப்பியரின் – மாத்திரை
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *