பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி

நீல நரி

 

ரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் வாடிப்போன அந்த நரி இரவானவுடனே இரைதேடப் புறப்பட்டுத் திரிந்தபடியே நகரத்திற்குள் நுழைந்தது. அதைக்கண்டவுடன் ஊர் நாய்கள் பயங்கரமாய்க் குரைத்தன; ஓடிவந்து அதன்மேல் விழுந்து கூரிய பற்களால் கடித்துவிட்டன. குலைக்கும் சத்தம் கேட்டுப் பயந்துபோய், உடம்பெல்லாம் காயங்கள் உண்டாகி, திக்குத் திசை பாராமல் நரி தாவியோடியது. ஓடுகிற ஓட்டத்தில், யாரோ ஒரு சாயப் பூச்சு வேலை செய்பவனின் வீட்டில் புகுந்தது. அங்கே நீலச் சாயம் நிரம்பியிருந்த ஒரு தொட்டி இருந்தது. அதில் போய் நரி விழுந்தது. நரியைத் துரத்திக்கொண்டு வந்த நாய்கள் திரும்பிச் சென்றுவிட்டன. நரிக்கு ஆயுள் கொஞ்சம் மீதியிருந்தது போலிருந்தது. நீலச்சாயத் தொட்டியிலிருந்து வெளியே வந்து காட்டுக்குள் ஓடிப்போயிற்று. அதன் உடம்பெல்லாம் ஒரே நீல நிறமாகி விட்டது. பக்கத்திலிருந்த மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துவிட்டன. ”இது என்ன மிருகம்? அபூர்வமான நிறத்தோடு இருக்கிறதே!” என்று கூச்சல் போட்டுக்கொண்டு, பயத்தினால் விழிகள் உருள, மிருகங்கள் எல்லாம் ஓட்டம் பிடித்தன. ஓடிக்கொண்டே, ”என்ன ஆச்சரியம்! இந்த அபூர்வமான மிருகம் எங்கிருந்தோ வந்திருக்கிறது! அதன் பலம் என்ன, நடத்தை எப்படி இருக்கும் என்பது ஒன்றும் தெரியவில்லை. ஆகவே அதைவிட்டு வெகுதூரம் விலகி ஓடுகிறோம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

ஒருவனுடைய குணமும் குலமும், பலமும் ஏது எப்படி என்று தெரிந்துகொள்ளாமல் அவனைப் புத்திசாலிகள் நம்பிச் சேர மாட்டார்கள்

 

என்று கத்திக்கொண்டே ஓடின.

 

அவை ஓடிப்போவதற்குக் காரணம் பீதியும் கவலையும்தான் என்று நரி தெரிந்துகொண்டது. உடனே, ”ஏ காட்டு மிருகங்களே! என்னைக் கண்டு ஏன் பயந்து ஒடுகிறீர்கள்? உங்களுக்கு அரசன் யாருமில்லை என்று அறிந்த இந்திரன் என்னை உங்களுக்கு அரசனாக மகுடாபிஷேகம் செய்திருக்கிறான். என் பெயர் சண்டரவன். ஆகவே, என் புஜபல பராக்கிரமத்தின் ஆதரவிலே நின்று நீங்கள் நிம்மதியோடு வாழலாம்” என்று சொல்லிற்று.

இந்தப் பேச்சைக் கேட்டதும் சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு, முயல், மான், நரி முதலிய எல்லா காட்டு மிருகங்களும் ஒன்றுகூடி அதை வணங்கின. ”அரசே! நாங்கள்என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்” என்றன.

சிங்கத்தை நரி தனது மந்திரியாக்கிக்கொண்டது. தனது படுக்கையறை காவலாளியாகப் புலியை நியமித்தது. தனது வெற்றிலைத் தோட்டத்தின் காவலாளியாகச் சிறுத்தையை நியமித்தது. யானைக்கு வாயில்காப்போன் வேலையும், குரங்குக்கு வெண்குடை ஏந்தி நிற்கும் வேலையும் கொடுத்தது. ஆனால், தன் இனத்தைச் சேர்ந்த நரிகளையெல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டது. இப்படியே ராஜ்யபாரம் நடத்தி நரி சுகமாகக் காலங்கழித்தது. சிங்கம் முதலியவை மிருகங்களைக் கொன்று அதன் முன் கொண்டுவந்து வைத்தன. ராஜதர்மப்படி அந்த உணவை எல்லோருக்கும் நரி பங்கிட்டுத் தந்தது.

 

இப்படிச் கொஞ்ச காலம் கழிந்தது. ஒருநாள் ராஜ சபையில் நரி வீற்றிருந்த சமயத்தில் அருகாமையில் பல நரிகள் கூட்டங்கூடி ஊளையிட்டன. அந்தச் சத்தத்தை நரி கேட்டுவிட்டது. உடனே நரிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. உற்சாகத்தோடு உடலைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து நின்று உச்சஸ்தாயியில் தானும் ஊளையிடத் தொடங்கியது. இதைக் கேட்ட சிங்கம் முதலிய மிருகங்கள் எல்லாம், ”அடடே, இது நரியாயிற்றே!” என்று புரிந்துகொண்டன. ஒரு வினாடி வெட்கித் தலைகுனிந்து நின்றன. பிறகு எல்லாம் சேர்ந்துகொண்டு, இந்த நரி நம்மை ஏமாற்றிவிட்டது. பிடித்துக் கொல்லுங்கள்!” என்று கத்தின. நரி ஓட்டம் பிடிக்கப் பார்த்தது. ஆனால் புலி அதன்மேல் பாய்ந்து கிழித்துக் கொன்றது.

 

ஆகையால்தான் ‘ஆப்த நண்பர்களை விட்டுவிட்டு’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்றது தமனகன்.

 

அதற்குப் பிங்களகன், ”அது சரி, சஞ்சீவகன் ராஜத் துரோகி என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது? அது சண்டை செய்யும் விதம் என்ன?” என்று கேட்டது.

 

”முன்பெல்லாம் தங்கள் அருகில் வரும்போது சஞ்சீவகனின் உடம்பு சோர்ந்து தளர்ந்து இருக்கும்.  இன்றைய தினம் வரும்போது கொம்புகளால் குத்திக்கொல்லக் கருதியவன்போல் தலையைக் குனிந்துகொண்டு நெருங்கும். அதிலிருந்தே துரோக சிந்தனையுடன் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம்” என்றது தமனகன்.

 

இப்படிச் சொல்லிவிட்டு, தமனகன் சஞ்சீவகனிடம் போயிற்று. மனமுடைந்து போனதுபோல் நடித்து, தளர்ந்த நடையில் நடந்தபடியே நெருங்கியது. நரியைக் கண்ட சஞ்சீவகன், ”நண்பனே, சௌக்கியந் தானே?” என்று விசாரித்தது.

 

”அண்டிப் பிழைப்பவர்களுக்குச் சுகம் எங்கே இருக்கப்போகிறது?” என்றது தமனகன். மேலும், ”உனக்குத்தான் தெரியுமே!

 

ராஜசேவை செய்பவன் தனது செல்வம் ராஜாவின் பலத்தைப் பொறுத்திருக்கிறது என்று உணர்கிறான். அவனுக்கு மன நிம்மதியும் கிடையாது. தன் உயிர்மீதும் நம்பிக்கை கிடையாது.  

பிறந்ததும் துன்பம் கூடவே பிறக்கிறது; பிறகு சாகிறவரைக்கும் பின் தொடர்ந்து வருகிறது. ராஜசேவை செய்வதென்றால் துன்பங்களுக்கு முடிவே இல்லை.

 

தரித்திரன், நோயாளி, மூடன், நாடு கடத்தப்பட்டவன், ராஜசேவகன் இந்த ஐந்து பேரும்  உயிரோடிருந்தும் இறந்தவர்கள் மாதிரிதான், என்று வியாசர் கூறுகிறார்.

 

சாப்பாட்டிலும் மனம் செல்லாது; நிம்மதியாகவும் தூங்கமுடியாது; விழித்திருந்தாலும் மனவிழிப்பு இருக்காது. சுயேச்சையாக எதுவும் பேசமுடியாது. இதுதான் ராஜசேவகன் வாழ்க்கையின் லட்சணம்.

 

வேலையாளைப் பார்த்து, ”உன் பிழைப்பு நாய்ப் பிழைப்பு’ என்று சொல்வது தவறு. ஏனென்றால் நாயாவது தன்னிஷ்டம்போல் சுற்றித் திரிகிறது. வேலையாளோ அரசன் இஷ்டத்திற்குத்தான் ஓடித் திரிய முடியும். தரையிலே படுத்து, பிரம்மச்சாரியாக வாழ்ந்து, உடல் மெலிந்து, உணவு சுருக்கி வாழ்கிற சந்நியாசியின் வாழ்க்கைதான் ராஜசேவகனும் வருகிறான் என்றபோதிலும் புண்ணியத்திற்குப் பதிலாக் பாவம்தான் அவனைச் சேருகிறது.

 

ராஜசேவகன் தன்னிஷ்டப்படி நடக்க முடியாது. பிறர் மனத்துக்கு இசைந்தபடிதான் தான் நடக்க வேண்டும். அவன் தனது உடலையே பிறருக்கு விற்கிறான். பிறகு அவனுக்குச் சுகம் எங்கிருந்து கிடைக்கும்?

 

அரசனுக்குப் பணிவிடை செய்வதற்காக ராஜசேவகன் எவ்வளவுக் கெவ்வளவு நெருங்கிப் பழகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனைக் கண்டு பயப்படுகிறான்.

 

வெவ்வேறு பெயர் கொண்டிருந்தாலும், அரசனும் நெருப்பும் ஒன்றுபோலத்தான். நெருங்கி வந்தால் சுட்டெரிக்கும். விலகி நின்றால் இதமாக இருக்கும்.

 

ஒரு தின்பண்டம் மென்மையாகவும், மணம் நிறைந்தும் இருக்கலாம். வாயில் வைத்தவுடன் கரைகிறதாய் மிக நன்றாயிருக்கலாம். என்றாலும் அடிமைத் தொழில் புரிந்து அதைப் பெறுவதில் ஆனந்தம் உண்டா?

 

மொத்தத்தில் பார்க்கப்போனால்,

 

நான் எங்கிருக்கிறேன்? எத்தனை நாள் இருப்பேன்? என் நண்பர்கள் யார்? நான் எதைத் தரலாம்? எதைப் பெறலாம்? நான் யார்? என் திறன் என்ன? என்று தான் ராஜ சேவகன் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது”  

 

என்றது தமனகன்.

 

எதையோ மனதில் வைத்துக்கொண்டு தமனகன் பேசுவதைக் கண்ட சஞ்சீவகன் ”நண்பனே, நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டது.

 

”இதோ பார், நீ என் சிநேகிதன். உன்னிடம் கட்டாயம் உள்ளதைச் சொல்லித் தீரவேண்டும். பிங்களகன் உன்மேல் மிகவும் கோபம் கொண்டிருக்கிறது. ‘சஞ்சீவகனைக்கொன்று எல்லா மிருகங்களுக்கும் விருந்து வைக்கப்போகிறேன்’ என்று இன்றயை தினம் சொல்லியிருக்கிறது. அதைக் கேள்விப்பட்டதும் எனக்கு ஒரே கவலையாய்ப் போயிற்று. இனி நீ செய்கிறதைச் செய்” என்றது தமனகன்.

 

இந்தச் சொற்களைக் கேட்டதும் சஞ்சீவகனுக்குத் தலையில் பேரிடி விழுந்தமாதிரி இருந்தது. பெருங் கவலையில் ஆழ்ந்து விட்டது. தமனகன் பேச்சில் எப்பொழுதும் போலவே உண்மை இருக்கும் போல் பட்டது. யோசிக்க யோசிக்க, மனக்கலவரம் அதிகமாயிற்று. கடைசியில், மனமுடைந்து பேசத் தொடங்கியது: ”சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்!

 

நடத்தை கெட்டவனிடம் தான் பெண் சோரம் போகிறாள்; அயோக்கியர்களுடன்தான் அரசன் ஒட்டிக்கொள்கிறான்; கருமியிடம்தான் பணம் மேலும் மேலும் வந்து சேர்கிறது. மலைமீதும் கடல்மீதும்தான் மழை அதிகமாகப் பெய்கிறது.

 

ஐயோ, இனி நான் என்ன செய்வது? எப்படிப்பட்ட அபாயம் எனக்கு வந்திருக்கிறது!

 

அரசனுக்கு உண்மையாகச் சேவை செய்தேன். அதில் அதிசயம் எதுவும் இல்லை. ஆனால்,

 

சேவைக்குப் பிரதிபலன் பகைமையே என்பதுதான் விந்தையா யிருக்கிறது. காரணத்துடன் யாராவது கோபித்தால் அந்தக் காரணத்தைப் போக்கியவுடன் அவன் மகிழ்ச்சியடைகிறான். காரணமில்லாமல் துவேஷம் பாராட்டுகிறவனை எப்படித் திருப்திப்படுத்த முடியும்?

 

காரணமில்லாமலேயே துவேஷிக்கிறவனையும், சாதுரியமுள்ள துஷ்டனையும், கல்நெஞ்சனையும் கண்டு யார்தான் பயப்படமாட்டார்கள்? பெரிய பாம்பின் வாயிலிருந்து விஷம் சொட்டுகிற மாதிரி அவர்கள் வாயிலிருந்து விஷம் சொட்டிக்கொண்டே இருக்கும்.

 

வெள்ளை மனம் படைத்த அன்னப்பறவை இருட்டிலே ஏரி நீரில் நட்சத்திரங்களின் பிம்பங்களைக் காண்கிறது. அவை வெண்தாமரை என்று நினைத்து, கொத்திப் பார்த்து ஏமாந்து போகிறது. பகலிலே தாமரைகளைக் கண்டு அவை நட்சத்திரங்கள் என்று நினைத்துப் பயந்து கொத்தாமலே இருந்து விடுகிறது. அதுபோல, சூது வாதுள்ளவர்களைக் கண்டு உலகமே பயப்படுகிறது. அவர்களை விட்டுத் தூர விலகி ஆபத்தைத் தவிர்க்கிறது.

 

என்ன கஷ்டகாலம்! நான் பிங்களகனுக்கு என்ன தீமை செய்தேன்?” என்றது சஞ்சீவகன்.

 

”நண்பனே, அரசர்கள் காரணமில்லாமலே தீமை செய்கிறவர்கள், பிறரைப் பலவீனப்படுத்துவதிலேயே நாட்டங் கொண்டவர்கள் அவர்கள்” என்றது தமனகன்!

 

”நீ சொல்வது ரொம்பவும் நிஜம். இந்தப் பழமொழிகளும் சரியாகத்தன் சொல்கின்றன!

 

சந்தன மரத்தில்  பாம்புகள் இருக்கின்றன. தாமரைத் தடாகத்தில் முதலைகள் இருக்கின்றன. அதுபோலவே, நற்குணங்களைக் கெடுக்கத் துஷ்டர்கள் இருக்கிறார்கள். சுகத்துக்குத் தடங்கல்கள் இல்லாமல் இருக்காது.

 

மலையுச்சியில் தாமரை மலர்கிறதில்லை; துஷ்டனிடம் நல்ல செய்கைகள் பிறப்பதில்லை; சந்நியாசிகள் என்றும் மன வேறுபாடு அடைவதில்லை; கோதுமையிலிருந்து நெல் முளைக்கிறதில்லை.

 

உத்தமமான துறவிகள் உன்னதமான மரியாதையுடையவர்கள்; அவர்கள் தீச்செயல்களை மறந்துவிட்டு என்றென்றும் நற்செய்கைகளையே நினைவில் வைக்கின்றனர்”

 

என்றது சஞ்சீவகன்.

 

மேலும் தொடர்ந்து, ”இதெல்லாம் என் குற்றமே. ஒரு வஞ்சகனிடம் அல்லவா நான் சிநேகம் பாராட்டினேன்! ஒரு கதை தெரிவிப்பது போல,

 

காலப் பொருத்தமற்ற காரியம் செய்யக்கூடாது; அபாண்டமான வார்த்தை பேசக்கூடாது; நயவஞ்சகனுக்குச் சேவை செய்யக்கூடாது. தாமரைக் குளத்தின் அருகே தூங்கிக் கொண்டிருந்த அன்னப் பறவையை அம்பு கொன்றது.”

 

என்றது சஞ்சீவகன்.

 

”அது எப்படி?” என்று தமனகன் கேட்க சஞ்சீவகன் சொல்லலாயிற்று;

Series Navigationநீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவராமுன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்