பஞ்சதந்திரம் தொடர் 26 யோசனையில்லாத உபாயம்

This entry is part 24 of 30 in the series 15 ஜனவரி 2012

யோசனையில்லாத உபாயம்

 

ரு காட்டில் ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் நாரைகள் கூடு கட்டி இருந்து வந்தன. மரத்தின் ஒரு பொந்தில் ஒரு கருநாகம் இருந்தது. நாரைகளின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைப்பதற்குமுன்பே அவற்றை தின்று காலங்கழித்து வந்தது.  அப்படியே ஒருநாள் ஒரு நாரையின் குஞ்சுகளைப் பாம்பு தின்றுவிட்டது. அதனால் அந்த நாரை துக்கத்தோடு ஏரிக்கரைக்குப் போய் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு அழுது தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்றது.

 

அதைப் பார்த்த ஒரு நண்டு, ‘’மாமா, ஏன் இப்படி இன்றைக்கு அழுகிறீர்கள்?’’ என்று கேட்டது.

 

‘’நண்பனே, நான் என்ன செய்யட்டும்? பாக்கியமில்லாதவன். என் குஞ்சுகளையும் என் சுற்றத்தாரின் குஞ்சுகளையம் மரப்பொந்தில் இருக்கும் பாம்பு தின்று விடுகிறது. அந்தத் துக்கத்தால் அழுகிறேன். அதைக் கொல்வதற்கு ஏதாவது உபாயம் இருந்தால் சொல் என்றது நாரை.

 

நண்டு யோசித்தது. ‘இந்த நாரை என் இனத்தின் இயற்கைப் பகைவன். ஆகவே, அசல் உண்மையைபோல் தோன்றுகிற மாதிரி போய் உபதேசம் செய்கிறேன். அதனால் மற்ற நாரைகளும் நாசமாய்ப் போகட்டும்.

 

‘’பேச்சை வெண்ணெய்போல் ஆக்கிவிடு; மனத்தை ஈவிரக்கமின்றி வைத்துக்கொள். ஒரு காரியத்துக்குச் சத்துருவைத் தாண்டி அதைக் கொண்டே அதன் குலத்தை அழித்துவிடு’’

 

என்ற ஒரு பழமொழி உண்டு’ என்று தனக்குள் முடிவு செய்து கொண்டது.

 

பிறகு நண்டு வெளிப்படையாக, ‘’மாமா, அப்படியானால் ஒன்று செய். கீரி இருக்கும் வளையிலிருந்து பாம்பு இருக்கும் பொந்துவரை வழி நெடுக மீன் இறைச்சித் துண்டுகளைப் போட்டுக்கொண்டே போ. அந்த வழியாகக் கீரி போய் அந்தக் கெட்ட பாம்பைக் கொன்று விடும்’’ என்றது.

 

சொன்னபடியே நாரை செய்துவிட்டது. மீனிறைச்சித் துண்டுகளைப் பின்பற்றிச் சென்ற கீரிப்பிள்ளை அந்தத் துஷ்டப் பாம்மைக் கொன்றது. அதோடு நிற்காமல் மரத்திலுள்ள எல்லா நாரைகளையும் சாவதானமாகப் பிடித்துத் தின்றது.

 

அதனால்தான் ‘உபாயத்தைத் தேடும் விவேகி அதிலுள்ள அபாயத்தையும் பார்க்கவேண்டும்…’ என்று சொல்கிறேன்’’ என்றான் துஷ்ட புத்தியின் தந்தை.

 

தந்தையின் பேச்சைத் துஷ்டபுத்தி கேட்கவில்லை. இரவில் போய், யாரும் காணமுடியாதபடி மரப்பொந்தில் தந்தையை உட்கார வைத்தான். பிறகு காலையிலேயே குளித்துவிட்டு நல்ல துணிமணிகளை உடுத்திக்கொண்டு தர்மபுத்தியுடனும் அதிகாரிகளுடனும் அந்த மரத்தண்டை வந்தான். வந்ததும்,

 

‘’சூரியன், சந்திரன், காற்று, தீ, ஆகாயம், பூமி, நீர், இதயம், யமன், பகல், இரவு, சந்திப்பொழுதுகள், தர்ம தேவதை இவையெல்லாம் மனித நடவடிக்கைகளை அறியும்.’’

 

ஹே, பகவதி! வனதேவதையே! எங்கள் இருவரில் யார் திருடன் என்று சொல்’’ என்று துஷ்டபுத்தி உரக்கக் கத்தினான்.

 

மரப்பொந்திலிருந்த துஷ்டபுத்தியின் தந்தை, ‘’பணத்தைத் தர்ம புத்திதான் திருடினான்’’ என்று பதில் சொன்னான். அதைக் கேட்டதும் எல்லா அதிகாரிகளின் கண்களும் ஆச்சரியத்தால் விரிந்தன.

பணத்தைத் திருடிய குற்றத்திற்காக நீதிபதியைக் கொண்டு தர்ம புத்திக்குத் தக்க தண்டனை அளிப்பதைப் பற்றி அதிகாரிகள்  எல்லோரும் யோசிக்கலாயினர். அந்தச் சமயத்தில், தர்மபுத்தி எரி பொருட் களைக் கொண்டுவந்து குவித்து அந்த மரப்பொந்துக்கு நெருப்பு வைத்தான். அது தீப்பற்றி எரிகிற காலத்தில், பாதி உடம்பு சுடப்பட்டு, கண்கள் பிதுங்கிய படியே பரிதாபகரமாகக் கத்திக்கொண்டு துஷ்டபுத்தியின் தந்தை பொந்திலிருந்து வெளியே வந்தான். உடனே எல்லோரும் ‘என்ன இது?’ என்று கேட்டனர். ‘’இதெல்லாம் துஷ்டபுத்தியின் வேலை’’ என்று தந்தை சொன்னான். அதைக் கேட்டு அரசரின் ஆட்கள் துஷ்டபுத்தியை அதே மரத்தின் ஒருகிளையில் தூக்கிலிட்டனர். தர்ம புத்தியைப் புகழ்ந்து ராஜ கிருபை அவனுக்குக் கிடைக்கும்படி செய்து திருப்திப்படுத்தினர்.

 

அதனால்தான் ‘தர்மபுத்தி, துஷ்டபுத்தி…’ என்கிற செய்யுளைச் சொன்னேன்’’ என்றது கரடகன்.

 

மேலும் கரடகன் பேசுகையில், ‘’சீ, மடையா! உன் மிதமிஞ்சிய பாண்டியத்தியத்தால் உன் வம்சத்தையே எரித்துவிட்டாய்.

 

உப்பு ஜலத்தை யெட்டியவுடன் நதிகள் முடிவடைகின்றன. பெண்களுக்குள் வேற்றுமை ஏற்பட்டவுடன் பந்துக்களின் உறவு முடிவடைகின்றது. போக்கிரிகளின் காதை எட்டியவுடன் ரகசியம் முடிவடைகின்றது. கெட்ட புதல்வன் பிறந்தவுடன் குலம் முடிவடைகின்றது

 

என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். மேலும் மனிதனாகட்டும் மிருகமாகட்டும் ஒரே வாயில் இரண்டு நாக்குகள் உள்ள பிறவியை எப்படி நம்புவது? ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

இரண்டு நாக்குகள் கொண்ட, ஆங்காரமும் நிஷ்டூரமும் நிறைந்த துஷ்டனின் வாயும் பாம்பின் வாயும் தீமை செய்வதற்கென்றே அமைந்துள்ளன.

 

எனவே, உன் நடத்தையைக் கண்டு என் உயிருக்கே ஆபத்தேற்படுமோ என்று பயப்படுகிறேன். ஏனென்றால்,

 

போக்கிரி உன்னைப் புகழ்ந்தாலும் சரி, அவனை நம்பாதே! நீண்டகாலமாகத் தீனி கொடுத்து வந்தாலும் கொடுத்தவன் கையையே பாம்பு கடிக்கிறது.

 

தீப்பொறி சந்தனக் கட்டையிலிருந்து பிறந்திருக்கலாம்; என்றாலும், அது எரித்து விடுகிறது. நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் போக்கிரி போக்கிரியே. போக்கிரிகளின் சுபாவமே இப்படித்தான்.

 

ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

‘’பிறர் குற்றங்களை நுணுகி ஆராய்ந்து, தன் குணத்தை மட்டும் புகழ்ந்து கொள்ளும் துரோகியை நம்புகிறவர்கள் நாசமடைகிறாரர்கள். அதுதான் அவர்களின் விதி.’’

 

மற்றவர்களை அவதூறு செய்யும் மனிதனின் நாக்கு உடனே நூறு துண்டங்களாக அறுந்து விழாவிட்டால், அந்த நாக்கு நிச்சயமாக வஜ்ரத்தினால் செய்யப்பட்டதே! பிறரைப்பற்றி தோஷம் சொல்லிக் கொண்டிருக்கும்போது யாருடைய நாக்குமௌனவிரதம் அனுஷ்டிக்கிறதோ அந்த மனிதன்தான் மனித சிங்கம். பிறருக்கு நன்மை செய்வதில் நாட்டங்கொண்ட அவனுக்கு பாவம் ஒருபோதும் வரக்கூடாது.

 

ஆகையால், சோதித்துப் பார்த்த பிறகுதான் சகவாசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

‘’கல்வியுள்ளவனாகவும் நேர்மையுள்ளவனாகவும் ஒருவன் இருந்தால் அவன் நட்பை நாடிப் பெறு, கல்வியுள்ளவனாயிருந்தாலும் மூர்க்கனாக இருந்தால் அவனிடம் எச்சரிக்கையாக இரு. நேர்மையுள்ளவனாயிருந்தும் மூடனாயிருந்தால் அவனிடம் அனுதாபம் காட்டு. முட்டாளாகவும் மூர்க்கனாகவும் இருந்தால் அவனை ஆரம்பத்திலிருந்தே தூர விலக்கிவிடு.’’

 

உன் முயற்சிகள் உன் வம்சத்துக்கு மட்டுமில்லாமல் அரசனுக்கும் நாசம் விளைத்துள்ளன. அரசனையே இந்தக் கதிக்கு ஆளாக்குகிற நீ இதர ஜனங்களைப் புல்லுக்குச் சமானமாகத்தான் கருதுவாய்.

 

ஆயிரம் பலம் எடையுள்ள தராசை எலிகள் தின்று விடுமேயானால் ராஜாளி யானையையே தூக்கிச் செல்லுமே! பிறகு பையனைத் தூக்கிச் செல்வது கஷ்டமா?

 

என்றொரு பழமொழியுண்டு’’ என்றது கரடகன்.

 

‘’அது எப்படி என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது.

 

இரும்பைத் தின்ற எலி

 

ரு ஊரில் நாதுகன் என்றொருவன் இருந்தான். அவன் ஒரு வியாபாரி. அவன் சொத்துக்கள் அழிந்துபோனதால் தேசாந்தரம் செல்ல உத்தேசித்தான். ஏனென்றால்,

 

முன்பெல்லாம் கௌரவத்தோடு சுகபோகத்தில் வாழ்ந்து வந்தவன், பின்னால் சொத்து இழந்த பிறகும் அதே நாட்டிலோ ஊரிலோ தொடர்ந்து வசித்தால், அவன் அதமன்தான்.

 

யார்யாரோடு முன்பெல்லாம் ஒருவன் ரொம்ப காலத்துக்கு பெருமையுடன் கேளிக்கையில் மூழ்கியிருந்தானோ அவர்களே அவன் ஏழையாக மாறியதும் அவனை நிந்திக்கிறார்கள்.

 

அவன் வீட்டில் முன்னோர்கள் விட்டுச்சென்ற தராசு ஒன்று இருந்தது. அது ஆயிரம் பலம் எடையுள்ளது. அதை லட்சுமணன் என்ற வியாபாரியிடம் அடகு வைத்துவிட்டு, நாதுகன் தேசாந்தரம் போனான்.

 

அப்படி ரொம்ப காலம் வரைக்கும் வெளிநாடுகளில் சுற்றித் திரிந்தான். பிறகு அந்த நகரத்துக்கே திரும்பி வந்தான். வியாபாரியிடம் போய், ‘’லட்சுமணா! நான் அடகு வைத்த தராசைக் கொடு!’’ என்று கேட்டான்.

 

‘’நாதுகனே, உன் தராசை எலிகள் தின்றுவிட்டன’’ என்று வியாபாரி பதிலளித்தான்.

 

நாதுகன் அதைக் கேட்டு, ‘’சரி. எலிகள் தின்றது உன் குற்றமில்லை. இந்த உலகமே இப்படித்தான். எதுவுமே சாஸ்வதமில்லை. அது போகட்டும். நான் குளிப்பதற்கு ஆற்றுக்குப் போகிறேன். உன் மகன் தனதேவனை என் ஸ்நான சாமான்களை எடுத்துவர என்னோடு அனுப்பு’’ என்றான்.

 

தராசைத் திருடியது லட்சுமணன்தான். அவனை மனச்சாட்சி உறுத்தியது. அதற்குப் பயந்தபடியே தனதேவனைப் பார்த்து ‘’குழந்தாய், இந்த நாதுகன் உன் சிற்றப்பா மாதிரி, குளிக்க ஆற்றுக்குப் போகிறார். நீ ஸ்நான சாமான்களை எடுத்துக்கொண்டு அவரோடு போ!’’ என்றான்.

 

ஆஹா, இது எவ்வளவு சரியான வார்த்தை!

 

யாரும் பூர்ணபக்தியுடன் யாரிடமும் அன்பு செலுத்துவதில்லை. பயமோ ஆசையோ துளியாவது தூண்டாத காரண காரியங்கள் எதுவுமில்லை.

 

காரியமும் காரணமும் இல்லாமல் யாராவது ஆதரவு காட்டினால் அதைக் கொஞ்சம் சந்தேகிக்க வேண்டும். முடிவில் அதைப்பற்றி அச்சப்படவும் வேண்டும்.

 

மிகுந்த சந்தோஷத்துடன் தனதேவன் ஸ்நான சாமான்களை எடுத்துக்கொண்டு நாதுகனோடு நதிக்குச் சென்றான். நாதுகன் நதியில் குளித்துவிட்டு வெளியே வந்தான். மலையிலுள்ள ஒரு குகையில் தனதேவனைத் தள்ளினான். அதன் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்துவிட்டு, வியாபாரியின் வீட்டுக்குத் திரும்பினான். லட்சுமணன் அவனைப் பார்த்து, ‘’நாதுகனே, உன்னோடு வந்த தனதேவன் எங்கே?’’ என்ற கேட்டான்.

‘’லட்சுமணா! ஆற்றங்கரையில் ஒரு ராஜாளி அவனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது’’ என்று நாதுகன் பதில் சொன்னான்.

 

‘’ஏய், நீ பொய் சொல்லுகிறாய். பெரிய உடம்பு உள்ள என் பையனை ராஜாளி எப்படித் தூக்கிச் செல்ல முடியும்?’’

 

‘’லட்சுமணா! எலிகள் மட்டும் இரும்புத் தராசைத் தின்னுமோ? உனக்குப் பிள்ளை வேண்டுமென்றால் எனக்குத் தராசைத் திருப்பிக்கொடு!’’ என்றான் நாதுகன்.

 

இப்படி வாதித்துக்கொண்டே இருவரும் அரசனின் அரண்மனையை அடைந்தனர். அங்கு வந்ததும் லட்சுமணன், ‘’ஐயோ, என்ன அநியாயம்! என் மகனை நாதுகன் திருடிவிட்டானே!’’ என்று உரக்கச் சத்தமிட்டான்.

 

நீதி வழங்கும் அதிகாரிகள் நாதுகனைப் பார்த்து, லட்சுமணனின் பையனைத் திருப்பிக்கொடு’ என்றனர்.

அதற்கு நாதுன், ‘நான் என்ன செய்யட்டும்? நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு ராஜாளி அவனைத் தூக்கிச் சென்று விட்டதே!’’ என்றான்.

 

“நாதுகனே, நீ சொல்வது உண்மையல்ல. என்ன இது, பதினைந்து வயதுப் பிள்ளையை ராஜாளி எப்படித் தூக்கிச் செல்ல முடியும்?’’ என்று அதிகாரிகள் சொன்னார்கள்.

 

நாதுகன் சிரித்துக்கொண்டே, ‘’பெரியோர்களே! இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்:

 

ஆயிரம் பலம் எடையுள்ள தராசை எலிகள் தின்று விடுமேயானால் ராஜாளி யானையையே தூக்கிச் செல்லுமே! பிறகு பையனைத் தூக்கிச் செல்வது கஷ்டமா?’’

 

என்று சொன்னான். ‘’அது எப்படி?’’ என்று அவர்கள் கேட்டனர்.

 

நாதுகன் தராசின் விருத்தாந்தத்தைச் சொன்னான். அவர்கள் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டு, ஒருவனிடம் தராசையும் மற்றவனிடம் பையனையும் ஒப்படைத்தனர்.

 

அதனால்தான் ‘ஆயிரம் பலம் எடையுள்ள…’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்றது கரடகன்.

 

கரடகன் மேலும் பேசுகையில், ‘’மூடனே, சஞ்சீவகனிடம் பிங்களகன் காட்டும் அன்பைக் கண்டு சகிக்காமல் இந்தக் காரியம் செய்திருக்கிறாய்.

 

என்றென்றும் இதுதான் வழக்கம்: நல்ல குலத்தில் பிறந்தவனை நீசகுலத்தில் பிறந்தவன் தூஷிக்கிறான்; பெண்ணின் காதலைப் பெறுகிறவனை அதைப் பெறமுடியாதவன் தூஷிக்கிறான்; தானம் செய்பவனை லோபி தூஷிக்கிறான்; நேர் நடத்தை உள்ளவனை துஷ்டன் தூஷிக்கிறான். தேஜஸ்வியைக் குரூபி தூஷிக்கிறான்; அங்கக் குறைபாடு உள்ளவன் அழகனைத் தூஷிக்கிறான்; சுகத்தோடிருப்பவனை அதிர்ஷ்டமில்லாதவன் தூஷிக்கிறான்; சாஸ்திர ஞானமுள்ளவனை முட்டாள் தூஷிக்கிறான்.

 

என்கிற வாக்கில் நியாயம் இருக்கிறது. அதுபோலவே,

 

மூடன் பண்டிதனை வெறுக்கிறான்! ஏழை பணக்காரனை வெறுக்கிறான்; பாவி புண்ணியவானை வெறுக்கிறான்; விபசாரி குலஸ்திரீயை வெறுக்கிறாள்.

 

ஞானிகள்கூட இயற்கைச் சுபாவத்தின்படிதான் நடக்கிறார்கள்; ஜனங்கள் இயற்கை சுபாவத்தின்படியே நடந்தால் சட்ட தண்டனைகள் என்ன செய்ய முடியும்?

 

ஒரு தடவை சொன்னதுமே யார் கிரகிக்கிறானோ அவனுக்கு உபதேசம் செய்வதுதான் தகும். இருதயமில்லாமல், அசைந்து கொடுக்காமல், கல்போல் நீ இருக்கிறாய். உனக்கு உபதேசிப்பதில் லாபமென்ன? முட்டாள், உன்னோடு இருப்பதே சரியில்லை! என் சேர்க்கையால் ஒருவேளை எனக்கும் அனர்த்தம் உண்டாகலாம்.  ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

ஒரு நாட்டிலோ, கிராமத்திலோ, நகரத்திலோ, வீட்டிலோ துஷ்டனுடன் நீ வசித்தால், விவகாரம் எதுவும் இல்லாமற் போனாலும், சகவாசம் வைத்துக்கொண்டவனுக்கு அனர்த்தம்தான் விளையும்.

 

விவேகமற்ற துஷ்டனுடன் சேருவதைவிட கடலிலோ, பாதாளத்திலோ; நெருப்பிலோ ஆழமான குழியிலோ விழுவதுமேல்.

 

நல்லவர்களுடனோ கெட்டவர்களுடனோ பழகுவதால் அவரவர்களின் குணங்கள் நம்மீதும் படித்துவிடுகின்றன. எல்லா இடங்களிலும் வீசிவருகிற காற்று நல்ல வாசனையையும், கெட்ட வாசனையையும் சுமந்து வருவது போல். பறவைகளாகிய எங்கள் இருவருக்கும் தாய் தந்தையர் ஒருவரே. என்னை யெடுத்து முனிவர் வளர்த்தார். அவனைக் கசாப்புக்காரன் வளர்த்தான். அரசே! அவன் கசாப்புக்காரனின் பேச்சைக் கேட்டான். நான் முனிவரின் வார்த்தைகளைக் கேட்டேன். இதைத்தான் நீ கண்கூடாகக் காண்கிறாய். குணமும் தோஷமும் சேர்க்கையைப் பொறுத்திருக்கிறது.

 

என்கிற கதையில் விவேகம் இருக்கிறது’’ என்றது கரடகன். ‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *