பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?

அது துரதிர்ஷ்டத்துக்குக் கட்டிய கோயில்; அது மனத்தைப் பறிக்கும் திருடன்; கண்ணீருக்குப் புகலிடமாயும், மானத்துக்குச் சாவு மாதிரியும், வாய்த்திருப்பது; அது பிறரின் ஏளனத்துக்கு இருப்பிடம்; அது பயத்தின் களஞ்சியம்; சந்தேகத்தின் விளைநிலம்; ஆபத்தின் உறைவிடம்; மானமுள்ளவர்களின் தேசுவைப் பறிக்கும் காலன்; அது ஒரு வகைச் சாவு. தன்மானமுள்ளவனுக்குப் பிச்சையெடுப்பது என்பது ஒரு நரகமே தவிர வேறில்லை.

பிச்சைக்காரன் மானமழிகிறான். மானம் போனதால் கர்வத்தை விடுகிறான். கர்வம் போனதால் சிறுமையடைகிறான். சிறுமை யடைவதால் வேதனைப்படுகிறான். வேதனைப்படுவதால் துயரம் அடைகிறான். துயரத்தால் அறிவை இழக்கிறான். அறிவு இழந்தவன் நாசமடைகிறான். ஐயகோ, வறுமை என்பது எல்லா விபத்துக்களுக்கும் ஆணிவேர் ஆயிற்றே!

சினந்து சீறும் பாம்பின் வாயில் வேண்டுமானாலும் கையை வை! விஷத்தை வேண்டுமானாலும் குடி! யமன் இல்லத்திலாயினும் படுத்துத் தூங்கு! இமயமலையிலிருந்து விழுந்து உருண்டு உடலைச் சுக்கு நூறாக்குவதானாலும் செய்! ஆனால், துரோகியிடம் பெற்ற பணத்தைக் கொண்டு மட்டும் சுகபோகத்தில் மூழ்காதே!

நீ வறியவன் ஆகிவிட்டால் உன் உடலைத் தீக்கிரையாக்கி விடு! உதவி செய்ய விரும்பாத வஞ்சகனிடம் மட்டும் கையேந்தி நிற்காதே.
காடு மலைகளில் துஷ்டமிருகங்களுடன் வசிப்பது மேல்!‘’பிச்சை போடுங்கள்’’ என்கிற சிறுமைப்படுத்தும் சொல்லை மட்டும் சொல்லாதே!

இந்நிலைமைகளில், என் பிழைப்புக்கு வேறு வழி ஏதாவது உண்டா? திருடிப் பிழைக்கலாமா? அதுவும் மகாபாதகமாயிற்றே! பிறர் உடைமையை தனதாக்கிக் கொள்வது என்பதுதானே அதன் அர்த்தம்.

பொய் பேசுவதைவிட வாய்மூடி மௌனியாக இருப்பது என்றைக்கும் மேலானது. பிறர் மனைவியரைக் கூடுவதை விட புருஷன் வீரியமிற்றிருப்பதே மேலானது. வம்பு தும்புகளில் விருப்பங்கொள்வதைவிட உயிரை விடுவதே மேலானது. பிறர் உடைமையைத் திருடிப் பிழைப்பதை விட பிச்சையெடுத்து வாழ்வதே மேலானது.

அல்லது, பிறர் அளிக்கும் தானத்தைப் பெற்று உயிர்வாழலாமா? அதுவும் மகாபாதகம், நண்பர்களே, மகாபாதகம்! அதுவும் சாவின் இரண்டாவது வாயிலே.

நோயாளி, நாடுகடத்தப்பட்டவன், பிறர் உணவைச் சாப்பிடுபவன், பிறர் வீட்டில் தங்கி வசிப்பவன் — இவர்கள் அனைவரும் உயிர் வாழ்வது மரணத்திற்கொப்பானதே, அவர்கள் சாவதே மேல். ஏனெனில் சாவு அவர்களுக்கு மனச்சாந்தி அளிக்கும்.

ஆகவே, முனிவர் பறித்துக்கொண்ட தானியக் குவியலை எப்பாடு பட்டாவது நான் திரும்பப் பெறவேண்டும். என் ஐஸ்வரியம் அவ்விரு துஷ்டர்களுக்கும் தலையண¨யாய்ப் பயன்படுவதை நானே பார்த்தேன் .என் ஆஸ்தியை நான் திரும்பப் பெறவேண்டும். அந்த முயற்சியிலே சாக நேரிட்டாலும் நேரிடட்டும். இந்தப் பிழைப்பை விட சாவு எவ்வளவோ பரவாயில்லை. காரணம்,

தன் உடைமை பறிபோவதைப் பார்த்துக்கொண்டு சும்மாவிருக்கும் கோழைகள் இருக்கிறார்களே, அந்தக் கோழைகள் தர்ப்பணம் செய்யும் நீரை அவர்களுடைய மூதாதையர்கள்கூட ஏற்றுக்கொள்வதில்லை.

இப்படி மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு, இரவில் நான் மடாலயத்துக்குப் போனேன். முனிவர் நித்திரையில் ஆழ்ந்தபிறகு அந்தப் பையைக் கடித்து ஓட்டை போட்டேன். உடனே முனிவர் விழித்துக் கொண்டு மூங்கில்தடி எடுத்து என் மண்டைமேல் ஓங்கியடித்தார். ஆயுள்காலம் இன்னும் கொஞ்சம் பாக்கி, அதனால்தான் எப்படியோ ஒருவாறு உயிர் தப்பினேன்.

விதிப்படி அவனவனுக்கு உரியது அவனவனுக்குக் கிடைக்கும். அதைப் பெறுவதைத் தேவர்களாலும் தடுக்க முடியாது. ஆகவே நான் வியப்படையவுமில்லை.வருந்தவுமில்லை. ஏனெனில் எனக்குரிய பொருளை இன்னொருவன் எடுத்துக்கொள்ள முடியாது.

என்றது ஹிரண்யன் (எலி), ‘’அது எப்படி?’’ என்று காக்கையும் ஆமையும் கேட்டன. எலி சொல்லத் தொடங்கியது:

Series Navigationவெறும் தோற்ற மயக்கங்களோ?குளவி கொட்டிய புழு