பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி

Spread the love

ஒரு நகரத்தில் ஒரு நெசவாளி இருந்தான். அவன் பெயர் சோமிலகன். விதவிதமான வர்ணங்களிலே அரசர்களுக்கேற்ற அரிய அழகிய ஆடைகளையே அவன் எப்போதும் நெய்து கொண்டிருந்தான். எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தபோதிலும், உணவுக்கும் துணிக்கும் வேண்டியதற்கு மேலாக அவனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. மோட்டா ரகத் துணிகளை நெய்த இதர நெசவாளிகள் பணத்தில் புரளுவதையும் அவன் கண்டான். தன் மனைவியிடம், ‘’அன்பே அவர்களைப் பார்! அவர்கள் மோட்டா ரகத் துணிதான் நெய்கிறார்கள். என்றாலும் பணத்தைக் குவித்தவாறு இருக்கிறார்கள். இந்த ஊர் எனக்கு லாயக்கு இல்லை. நான் வேறெங்காவது போகப் போகிறேன்’’ என்று சொன்னான் அவன்.

‘’நாதா, வெளியூருக்குப் பிரயாணம் செய்தால் பணம் கிடைக்கும் என்று சொல்வது தவறு, ஒரு பழமொழி கூறுவதுபோல்,

விதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. விதி இருந்தால் மனித முயற்சி இல்லாமலே ஒன்று நடந்தேறும். விதி இல்லையானால், கைக்கு எட்டினதும் வாய்க்கு எட்டாது போகும்.

ஆயிரம் மாடுகளின் மத்தியிலிருந்தாலும், தாய்ப்பசுவைக் கன்றுக் குட்டி கண்டுபிடித்துவிடுகிறது. அதுபோலவே, முற்பிறப்பின் வினைப் பயனும் ஒருவனைப் பின்தொடர்கிறது.

நிழலும், வெய்யிலும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. அது போலவே, செய்கையும் செய்வோனும் பிணைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நீங்கள் இங்கேயே இருந்து காரியத்தைப் பாருங்கள் என்றாள் அவன் மனைவி.

‘’நீ சொல்வது தவறு. முயற்சி இல்லாமல் பயன் எதுவும் கிட்டாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

ஒரு கையால், தட்டி ஓசையுண்டாக்க முடியாததல்லவா? அதே போல், முயற்சியில்லாமல் காரியத்தின் பயனைப் பற்றிச் சிந்திக்கவும் முடியாது.

சாப்பிடும் வேளையில் விதிவசமாகச் சோறு கிடைத்தாலும் கையின் முயற்சியில்லாமல் ஒருபோதும் அந்தச் சோறு வாய்க்கு எட்டாது.
முயற்சியாலேயே செய்கைகள் பயன்பெறுகின்றன. மனோ ராஜ்யத்தால் அல்ல. சிங்கம் தூங்கிக்கொண்டிருந்தால், மிருகங்கள் தாமாக வந்து அதன் வாயில் விழுகின்றனவா? இல்லை!

முடிந்த அளவுக்கு ஒருவன் முயற்சி செய்து பார்த்தும் காரியம் பலிக்காவிட்டால் அவனைக் குறை சொல்வதில் பயனில்லை. விதிதான் அவன் முயற்சியில் குறுக்கிட்டுத் தடுத்தது.

ஆகவே, நான் கட்டாயம் வேறு தேசம் போகவேண்டும்’’ என்றான் நெசவாளி. வர்த்தமானபுரம் என்ற ஊருக்குச் சென்றான். அங்கே மூன்று ஆண்டுகள் தங்கினான். முன்னூறு பொற்காசுகளைச் சேர்த்தான். பிறகு தன் வீட்டுக்குத் திரும்பி வரலானான்.

பாதி வழியே ஒரு காட்டில் செல்ல வேண்டியதாயிற்று. காட்டில் நடக்கிறபோது சூரியன் அஸ்தமித்துவிட்டது. உயிருக்குப் பயந்தவனாய் அவன் ஒரு ஆலமரக்கிளையில் ஏறிப் படுத்துத் தூங்கினான். நடுராத்தியில் தூக்கத்தில் அவன் கனவு கண்டான். கனவில் இரண்டுபேர், கோபத்தால் கண்கள் சிவக்க ஒருவரையொருவர் ஏசிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

அதில் ஒருவன், ‘’ஏ செய்வோனே, இந்தச் சோமிலகன் உணவுக்கும் துணிக்கும் மேலாக எதையும் சம்பாதிக்க முடியாதபடி நீதான் பல வழிகளில் தடுத்திருக்கிறாய். ஆகவே நீ அவனுக்கு எதையும் கொடுக்கக்கூடாது. அப்படியிருக்க, ஏன் அவனுக்கு முன்னூறு பொற்காசுகளைத் தந்தாய்?’’ எனறான்.

மற்றவன், ‘’ஏ செய்கையே, முயற்சிக்கிறவர்களுக்கு நான் கட்டாயம் முயற்சிக்குத் தகுந்த பலனளித்துத் தீரவேண்டியிருக்கிறது. அதன் முடிவு உன்னைப் பொறுத்தது. அதை அவனிடமிருந்து நீதான் பறிக்க வேண்டும்’’ என்று பதில் சொன்னான். இதைக் கேட்டதும், நெசவாளி விழித்தெழுந்து பார்த்தான். பணப்பை காலியாயிருந்தது. ‘’ஐயோ, எத்தனைக் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் அது. ஒரே நொடியில் மறைந்து விட்டதே! என் முயற்சியெல்லாம் வீணாயிற்றே! பணமில்லாமல் எப்படி என் மனைவியின் முகத்திலும் நண்பர்கள் முகத்திலும் விழிப்பேன்?’’ என்று யோசித்தான். மறுபடியும் வர்த்தமானபுரத்துக்குப் போவதென்று தீர்மானித்தான். அங்கு போய், ஒரு வருஷத்திற்குள் ஐந்நூறு பொற்காசுகளைச் சம்பாதித்தான். திரும்பவும் வீட்டுக்குப்போகக் கிளம்பினான். வேறு வழியாகவும் நடந்தான்.

சூரியன் அஸ்தமித்தவுடன் அவன் மீண்டும் பழைய ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். ‘’ஐயையோ, விதி எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்னை! ஆலமர ரூபத்திலுள்ள அதே அரக்கனிடம் வந்து விட்டேனே!’’ என்று நினைத்தான். இப்படி எண்ணியபடியே மரக்கிளையில் தூங்கிப் போனான். கனவில் மறுபடியும் அந்த இரண்டு பேரையும் கண்டான். அவ்விருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவன், ‘’ஏ செய்வோனே, சோமிலகனுக்கு நீ ஏன் ஐந்நூறு பொற்காசுகள் கொடுத்தாய்? சாப்பாடு, துணி தவிர மேற்கொண்டு அவனுக்கு ஒன்றும் கிடையாதென்று உனக்குத் தெரியாதா?’’ என்று சொன்னான்.

அதற்கு மற்றவன், ‘’ஏ செய்கையே, முயற்சி செய்கிறவனுக்கு நான் கொடுதுதுத் தீரவேண்டியிருக்கிறது. அதன் முடிவு உன் பொறுப்பு என்னை ஏன் ஏசுகிறாய்?’’ என்று பதிலளித்தான்.

இதைக் கேட்டதும் சோமிலகன் பையைப் பார்த்தான். பை காலியாக இருந்தது. அவனுக்கு விரக்தி ஏற்பட்டது. ‘’ஐயோ, பணமில்லாமல் நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? இந்த ஆலமரத்திலேயே தூக்குப்போட்டுக் கொண்டு உயிர் விடுகிறேன்’’ என்று யோசித்தான்.

அப்படியே அவன் தீர்மானித்து, தர்ப்பைப் புல்லெடுத்து கயிறு செய்து கழுத்தில் சுற்றிக்கொண்டு ஒரு கிளைமேல் ஏறினான். அதில் கயிற்றின் ஒரு நுனியைக் கட்டினான். பிறகு அவன் கீழே குதிக்கப் போனான். அந்த வினாடியே, கனவில் வந்த இருவரில் ஒருவன் வானத்தில் தோன்றி, ‘’சோமிலகனே, இப்படி அவசரப்பட்டு நடக்காதே! நான்தான் உன் பணத்தை எடுத்துக்கொண்டேன். சாப்பாட்டுக்கும் துணிக்கும் மேலாக ஒரு காசுகூட உனக்குத் தராதவன் நானே. ஆகவே, நீ வீட்டுக்குப் போ! என்றாலும் நீ என்னைத் தரிசித்தது வீணாகவேண்டாம். இஷ்டமானதைக் கேள்’’ என்றான்.

‘’அப்படியானால் எனக்கு நிறைய பணம் கொடு’’ என்று சோமிலகன் கேட்டான்.

‘’நண்பனே, உன்னால் அனுபவிக்க முடியாததும், தானம் செய்ய முடியாததுமான பணத்தால் உனக்கு என்ன பலன்? உணவுக்கும் துணிக்கும் மேலாக உனக்கு அது பிரயோஜனப்படப் போவதில்லையே!’’ என்றான் அவன்.

‘’பிரயோஜனப்படாவிட்டாலும், அது எனக்கு வேண்டும். ஒரு பழமொழி உண்டு:

சிறந்த தானம் வழங்குவதில் மனங்கொண்டிருப்பவன் குரூபியாக இருந்தாலும், குலமற்றவனாயிருந்தாலும், அவனை உலகம் போற்றுகிறது.

நானும் பதினைந்து வருஷங்களாகப் பார்த்து வருகிறேன்.

அவை தொளதொளவென்று இருந்தாலும், இறுக்கமாகத்தான் இருக்கின்றன. விழப்போகிறவைபோல் காணப்பட்டாலும் அவை விழவில்லை.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றான் சோமிலகன். ‘’எது எப்படி?’’ என்று அவன் கேட்க, சோமிலகன் சொல்லலானான்:

Series Navigationசங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து