பஞ்சதந்திரம் தொடர் 46

கிழவனும் குமரியும்

ஒரு ஊரில் காமாதுரன் என்றொரு கிழட்டு வியாபாரி இருந்தான். அவன் மனைவி இறந்து போய்விட்டாள். அவனுக்குக் காமத்தால் அறிவு மழுங்கி விட்டது. நிறையப் பணம் கொடுத்து ஒரு ஏழை வியாபாரியின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அந்தப் பெண்ணுக்கு ஒரே துக்கமாயிருந்தது. அந்தக் கிழட்டு வியாபாரியை ஏறெடுத்துப் பார்க்கவும் அவளுக்கு முடியவில்லை. அது நியாயந்தானே?

இறந்த சடலங்களைக் கொலையாளி எறிந்து விட்டதால் வெள்ளெலும்புகள் நிறைந்து கிடக்கும் ஒரு கிணறு போலத்தான் தலைநரைந்த பேர்வழிகளும் காணப்படுகிறார்கள். அந்தக் கிணற்றைக் கண்டு வேகமாக ஓட்டமெடுப்பதுபோலவே, காதலை விரும்பித் திரியும் தலை நரைத்தவர்களைக் கண்டால் பெண்கள் ஓடிவிடுகிறார்கள்.

திரை படிந்து, நடை தளர்ந்து, பற்கள் உதிர்ந்து, பார்வை மங்கி, அழகு குன்றி, தள்ளாடிச் செல்பவனை உறவினர்களும் லட்சியம் செய்வதில்லை, மனைவியும் பணிவிடை செய்வதில்லை. ஐயோ, பாவம்! அவனைச் சொந்த மகனும் கவனிப்பதில்லை.

ஒரு இரவில் அவன் படுக்கையில் படுத்திருந்தான். கணவனுக்குத் தன் முதுகைக் காட்டியபடியே மனைவியும் அதில் படுத்திருந்தாள். அப்போது அந்த வீட்டில் ஒரு திருடன் நுழைந்தான். திருடனைக் கண்டதும் மனைவி பயந்து போய், கணவன் கிழவனாயிருந்த போதிலும் கெட்டியாகக் கட்டியணைத்துக் கொண்டாள். கணவன் ஆச்சரியப்பட்டுப் போனான். உடம்பெல்லாம் புளகித்துவிட்டது. ‘என்ன ஆச்சரியம்! இவள் ஏன் இன்றைக்கு என்னை அணைத்துக்கொள்கிறாள்?’ என்று யோசித்தான். கூர்ந்து பார்த்த போது, அறையின் ஒரு மூலையில் திருடன் இருப்பதைக் கண்டுவிட்டான். ‘திருடனைக் கண்ட பயத்தினால்தான் இவள் என்னை அணைத்துக் கொண்டாள். அதில் சந்தேகமில்லை’ என்று தெரிந்து கொண்டான். எனவே, கணவன் திருடனைப் பார்த்து,

‘’என்னைக் கண்டதும் தினந்தோறும் ஒதுங்கிச் சென்றவள் இன்றைக்கு என்னை வந்து அணைத்துக் கொள்கிறாள்! பரோபகாரியே, உனக்கு என் நன்றி. உனக்கு இஷ்டமானதை இங்கிருந்து எடுத்துச் செல்!’’

என்று சொன்னான். அதைக் கேட்ட திருடன்,

‘’திருடுவதற்கு ஏதாவது இங்கிருந்தாலும் அவை எனக்குத் திருடத் தக்கவையாக இல்லை. அவள் இப்படி உன்னை அணைத்துக் கொள்ளாமல் இருந்தால் நான் திரும்பவும் இங்கு வந்திருப்பேன்’’

என்று பதில் சொன்னான்’’ என்றது தீப்தாட்சன். அது மேலும் பேசுகையில், ‘’ஆகவே, திருடனாயிருந்த போதிலும் ஒருவனிடமிருந்து நன்மை கிடைக்கக்கூடும். அப்படியிருக்க, சரணாகதியடைந்தவனைப பற்றிக் கேட்க வேண்டுமா? மேலும், அவர்கள் இவனைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். ஆகவே இவன் நம் நன்மைக்காகவே வேலை செய்வான். அவர்களுடைய பலவீனத்தையாவது காட்டிக் கொடுப்பான். ஆகையால் இவனைக் கொல்லக் கூடாது’’ என்றது.

இதைக்கேட்ட ஆந்தை அரசன் மற்றொரு மந்திரியான வக்ரநாசனைப் பார்த்து ‘’நண்பனே, இந்த நிலைமையில் என்ன செய்யலாம் என்று நீ நினைக்கிறாய்’’ என்று கேட்டது.

‘’அரசே, இவனைக் கொல்லக்கூடாது. ஏனென்றால்,

தன் அணிகளில் சச்சரவுகள் ஏற்படுவது விரோதிக்குத் தான் நன்மை தரும் – திருடன் உயிரைத் தந்தான். பிசாசு இரண்டு மாடுகளைத் தந்தது என்ற கதையில் உள்ளபடி,

என்று வக்ரநாசன் பதிலளித்தது.

‘’அது எப்படி?’’ என்று ஆந்தை அரசன் கேட்க வக்ரநாசன் சொல்லத் தொடங்கியது:

வேதியனும், திருடனும், பிசாசும்

ஒரு ஊரில் ஒரு தரித்திரம் பிடித்த பிராமணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்துக் காலம் தள்ளினான். நல்ல உடை, எண்ணெய், சந்தனம், பூமாலை முதலிய அலங்காரங்கள் எதையும் என்றைக்கும் அவன் கண்டதில்லை. தாம்பூலம் போட்டுக்கொள்வது முதலிய சுகங்களையும் கண்டதில்லை. அவனுடைய முடியும், மீசையும், தாடியும், நகங்களும், உடல் ரோமமும் நீண்டு வளர்ந்திருந்தன. வெய்யில், குளிர், மழையால் அவனுடைய உடம்பு வற்றிச் சுருங்கிப்போய் இருந்தது.

யாரோ ஒருவன் அவனிடம் இரக்கங்கொண்டு இரண்டு கன்றுக் குட்டிகளைக் கொடுத்தான். சின்னஞ்சிறிசிலிருந்து அவற்றைப் பிராமணன் வளர்க்கலாயினான். வெண்ணெய், எண்ணெய், மாட்டுத்தீவனம் ஆகியவற்றை பிச்சையெடுத்து வந்து அவற்றுக்குச் கொடுத்தான். அவை நன்றாக வளர்ந்து கொழுத்தன.

அவற்றை ஒருநாள் ஒரு திருடன் கண்டுவிட்டு, ‘இந்த இரண்டு மாடுகளையும் திருடிவிடலாம்’ என்று உடனே நினைத்தான். ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு இரவில் புறப்பட்டு வந்தான். பாதி வழியில் ஒருவனைச் சந்தித்தான். அவனுக்கு உயர்ந்த மூக்கும், கோணிக்கொண்டு சென்ற கண்களும், இருந்தன. முடிச்சு முடிச்சாகத் தசைநார்கள் தடித்துத்திரண்டு உடலெங்கும் இருந்தன. இடைவெளி விட்டுப் பற்கள் கூர்மையாக வளர்ந்திருந்தன. அவனுடைய குழிவிழுந்த கன்னமும், தாடியும், உடலும் நெருப்பு மாதிரி மஞ்சளாக இருந்தன. அவனைப் பார்த்ததும் திருடன் நடுநடுங்கிப்போனான். ‘’நீ யார்?’’ என்று கேட்டான்.

‘’உண்மையைச் சொல்வதென்றால், நான் ஒரு பிரம்மராக்ஷசன். என் பெயர் சத்யவசனன். இனி நீ யார் என்று சொல்’’ என்றது பிசாசு. ‘’நான் ஒரு திருடன், கொடிய செயல்கள் புரிபவன். ஒரு ஏழைப் பிராம்மணனின் இரண்டு பசுமாடுகளைத் திருடப் போய்க் கொண்டிருக்கிறேன்’’ என்றான் திருடன்.
அதைக் கேட்டு நிம்மதியடைந்த பிசாசு, ‘’நண்பனே, நான் மூன்று நாளைக்கொருதரம் சாப்பிடுவேன். இன்றைக்கு அந்தப் பிராம்மணனைச் சாப்பிடுகிறேன். நாம் இருவரும் ஒரே காரியமாகப் போவது மிகவும் நல்லதாயிற்று’’ என்றது.

இருவரும்போய் பிராமணன் வீட்டில் ஒளிந்துகொண்டனர். நல்ல தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு நின்றனர்.  பிராமணன் தூங்கியவுடன் அவனைச் சாப்பிட பிசாசு புறப்பட்டது. அதைக் கண்ட திருடன், ‘’நண்பனே, இப்படிச் செய்வது நியாயமல்ல. நான் மாடுகளைத் திருடிக் கொண்டு போனபிறகுதான் நீ பிராமணனைச் சாப்பிடவேண்டும்’’ என்று சொன்னான். ‘’நீ திருடுகிற சத்தத்தில் பிராம்மணன் விழித்துக்கொண்டாலும் கொள்வான். அப்புறம் என் காரியம் வீணாய் விடும்’’ என்றது பிசாசு. ‘’நீ சாப்பிட ஆரம்பிக்கும்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டால்  நானும் மாடுகளைத் திருட முடியாமல் போய்விடுமே! முதலில் மாடுகளை நான் திருடுகிறேன், பிறகு நீ பிராம்மணனைச் சாப்பிடு’’ என்றான் திருடன்.

இப்படியே இருவரும் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்கள். ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று சத்தமிட்டுக் கொண்டார்கள். இதைக் கேட்டுப் பிராம்மணன் விழித்துக் கொண்டான். உடனே திருடன் பிராமணனைப் பார்த்து, ‘’பிராமணனே, இந்தப் பிசாசு உன்னைச் சாப்பிட விரும்புகிறது’’ என்று சொன்னான். அதைத் தொடர்ந்து பிசாசும், ‘’பிராமணனே, உன் இரண்டு மாடுகளையும் இந்தத் திருடன் திருட  விரும்புகிறான்’’ என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுவிட்டு, பிராம்மணன் நிதானமாக எழுந்து தன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொண்டு மந்திரத்தைத் தியானம் செய்தான்.  அதனால்  அவன் பிசாசிடமிருந்து தப்பித்துக்கொண்டான். பிறகு அவன் ஒரு தடியைக் கையில் எடுத்துவரவே, திருடன் ஓடிவிட்டான். பசுமாடுகள் இரண்டும் காப்பாற்றப் பட்டன.

அதனால்தான் ‘தன் அணியில் சச்சரவு ஏற்பட்டால் அது விரோதிக்குத்தான் நன்மை தரும்..’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது வக்ரநாசன். அது மேலும் பேசுகையில், ‘’இன்னொரு விஷயமும் உண்டு:

மகாத்மாவான சிபிச்சக்கரவர்த்தி புறாவைக காப்பதற்காகத் தன் மாம்சத்தைக் கழுகுக்குத் தந்தார் என்ற கதையைப் புண்ணியம் விரும்புவோர் கேட்கின்றனர். ஆகவே, அடைக்கலம் புகுந்தவர்களைக் கொல்வது தர்மமல்ல’’

என்றது வக்ரநாசன்.

அதன்பிறகு ஆந்தையரசன் பிராகாரகர்ணனைப் பார்த்து, ‘’நீ என்ன நினைக்கிறாய். சொல்!’’ என்றது.

‘’அரசே, அவனைக் கொல்லக்கூடாது. ஏனென்றால், அவனைக் காப்பாற்றினால் நாளடைவில் ஒருவேளை உங்களிருவரிடையே அன்பு வளர்ந்து இருவரும் சுகமாகக் காலங்கழிக்கலாம்,

ஒருவனுடைய மர்மத்தை இன்னொருவன் பாதுகாக்காவிட்டால், வயிற்றுப் பாம்பும் புற்றுப் பாம்பும் நாசமடைந்ததுபோல், அவர்கள் நாசமடைகின்றனர்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது.

‘’அது எப்படி?’’ என்று ஆந்தையரசன் கேட்டது. பிராகாரகர்ணன் சொல்லத் தொடங்கியது:

வயிற்றுப் பாம்பும் புற்றுப்பாம்பும்

ஒரு ஊரில் தேவசக்தி என்றொரு அரசன் தன் மகனோடு இருந்தான். புற்றில் குடியேறுவதற்குப் பதிலாக அவனுடைய புத்திரனின் வயிற்றில் ஒரு பாம்பு குடிகொண்டது. அதனால் அரசகுமாரனின் உடம்பு நாளுக்கு நாள் மெலிந்து நலிந்து போயிற்று. அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிற்று. தேசாந்தரம் போய்விட்டான். ஏதோ ஒரு நகரத்தில் பிச்சை எடுத்துச் சாப்பிட்டு ஒரு பெரிய கோவிலில் படுத்து அவன் காலம் தள்ளி வந்தான்.

அந்த ஊரில்  பலி என்ற அரசன் இருந்தான். அவனுக்குப் பருவம் அடைந்த இரண்டு புத்திரிகள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி தினந்தோறும் அரசனின் கால்மாட்டில் இருந்துகொண்டு, ‘’அரசே, உமக்கு வெற்றியுண்டாகட்டும்’’ என்பாள். மற்றவள் வந்து ‘’அரசே, விதித்ததை அனுபவியுங்கள்’’ என்பாள். அதைக் கேட்டு அரசன் கோபமடைந்தான். தன் மந்திரிகளிடம், ‘’மந்திரிகளே, இப்படி தீமையே பேசும் இந்தப் பெண்ணை யாராவது ஒரு பரதேசிக்குக் கொடுத்துவிடும். விதித்ததை இவளே அனுபவிக்கட்டும்’’ என்று சொன்னான். ‘’அப்படியே’’ என்று மந்திரிகள் ஒப்புக் கொண்டு, சில பணிப்பெண்களோடு அந்தப் பெண்ணை அழைத்துப்போய், கோவிலில் இருந்த அரசகுமாரனுக்குக் கொடுத்து விட்டார்கள்.

அவள் தன் கணவனைச் சந்தோஷத்தோடு ஏற்றாள். கடவுள் என்றே கொண்டாடினாள். அவனோடு வேறு நாட்டுக்குச் சென்றாள். வெகு தொலைவிலிருந்த ஒரு நகரத்தில் ஒரு குளக்கரையின் அருகே இருந்த வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி கணவனை வைத்துவிட்டு, அரசகுமாரி தன் பணிப்பெண்களுடன் நெய், எண்ணெய், உப்பு, அரிசி முதலியவற்றை வாங்கச் சென்றான். அவள் சாமான்களை வாங்கிக்கொண்டு திரும்பியபோது, கணவன் ஒரு பாம்புப்புற்றின்மேல் தலைவைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய வாயிலிருந்து பாம்பு வெளியே தலை நீட்டி, படமெடுத்தபடி, காற்று வாங்கிக் கொண்டிருந்தது. அரசகுமாரி அதைப் பார்த்துவிட்டாள். அதே சமயத்தில் எறும்புப் புற்றிலிருந்து இன்னொரு பாம்பு காற்றுவாங்க வெளியே தலை நீட்டியது.

பாம்புகள் ஒன்றையொன்று பார்த்துவிட்டன. இரண்டுக்கும் கோபத்தால் கண்கள் சிவந்துவிட்டன. புற்றும்பாம்பு வயிற்றுப் பாம்பைப் பார்த்து, ‘’சீ, நீசனே! இவ்வளவு அழகான அரசகுமாரனைத் துன்புறுத்த உனக்கு எப்படி மனம் வருகிறது?’’ என்றது. ‘’நீதான் நீசன். பொன்நிறைந்த இரண்டு குடங்களை நீ மண்ணடித்து மூடி விட்டிருக்கிறாயே!’’ என்றது வயிற்றுப்பாம்பு. இப்படி ஒன்றின் பலவீனத்தை மற்றொன்று வெளிப்படுத்தியது.

‘’துஷ்டனே, கடுகை அரைத்துக் குடித்தால் சீ செத்துவிடுவாய் என்ற வைத்தியமும் யாருக்குமே தெரியாமல் போயிற்றா?’’ என்றது புற்றுப்பாம்பு.

“புற்றின்மேல் வெந்நீரை ஊற்றினால் நீ செத்துவிடுவாய் என்ற வைத்தியமும் யாருக்கும் தெரியாமல் போயிற்றா” என்றது வயிற்றுப் பாம்பு.

மரத்தின்பின் மறைந்து நின்று, அரசகுமாரி இந்தப் பேச்சுக்களைக் கேட்டுவிட்டாள். பாம்புகள் சொல்லிக்கொண்டபடியே செய்து முடிந்தாள். இரண்டு பாம்புகளும் செத்தொழிந்தன. அவளால் கணவனுடைய உடம்பும் குணமாயிற்று, பணமும் நிறைய கிடைத்தது. அவள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றாள். தாய் தந்தையரும், உறவினர்களும் அவளை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்தனர். அவள் கணவனோடு சுகமாக வாழ்ந்தாள். விதித்ததை அனுபவிக்கிறாள் அல்லவா அவள்!

அதனால்தான், ‘ஒருவனுடைய மர்மத்தை இன்னொருவன் பாதுகாக்காவிட்டால்…’ என்றெல்லாம் சொல்லலானேன்’’ என்றது பிராகாரகர்ணன்.

அதைக்கேட்ட ஆந்தையரசன் அவ்விதமே செய்ய நினைத்தது. அரசன் முடிவு செய்ததைக் கண்ட ரக்தாட்சன் தனக்குள்ளே சிரித்துக்கொண்டே மறுபடியும்  பேசத் தொடங்கியது. ‘’கஷ்டம், கஷ்டம்; உங்களால் அரசன் நாசம் செய்யப்படுகிறார். ஒரு பழமொழி உண்டு:

எங்கே கௌரவிக்க வேண்டியவர்களைக் கௌரவிக்காமல், கௌரவிக்கத் தகாதவர்களைக் கௌரவிக்கிறார்களோ, அங்கே பஞ்சம், மரணம், பயம் மூன்றும் வந்து சேரும்.

கண்ணெதிரே பாவம் செய்தாலும் அதை நிம்மதியாகப் பார்த்தபடியே மூடன் சந்தோஷிக்கிறான். தன் மனைவியையும், அவளுடைய கள்ளப் புருஷனையும் ஒரு தச்சன் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்தான்.

என்றது ரக்தாட்சன்.

‘’அது எப்படி?’’ என்றனர் மந்திரிகள். ரக்தாட்சன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationஎஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “காத்திருப்பு