பஞ்சதந்திரம் தொடர் 48

பொன் எச்சமிட்ட பறவை

ஒரு மலைக்கருகில்  பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு பறவை இருந்து வந்தது. அதன் எச்சத்திலிருந்து தங்கம் உற்பத்தியாகி வந்தது.

ஒருநாள் அந்த இடத்துக்கு ஒரு  வேடன் வந்தான். அந்தப் பறவை அவன் எதிரிலேயே எச்சம் இட்டது. அது விழுகையிலேயே தங்கமாக மாறுவதை வேடன் கண்டான். ஆச்சரியமடைந்து போனான். ‘’ஆஹா, குழந்தைப் பருவத்திலிருந்து நான் பறவைகளைப் பிடித்து எட்டு வருஷங்கள் ஆகின்றனவே! ஒரு நாளாவது பறவையின் எச்சத்தில் பொன்னைக் கண்டதில்லையே!’’ என்று எண்ணினான். அந்த மரத்தில் வலையை விரித்தான். சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் அந்தப் பறவை முட்டாள்தனமாகப் பழைய இடத்திலேயே உட்கார்ந்தது. உடனே வலையில் சிக்கிக்கொண்டது. வேடன் அந்த வலையிலிருநது எடுத்துக் கூண்டில் அடைத்து தன் ஜாகைக்குக் கொண்டு போனான். ‘’இது அபசகுணம் படைத்த பறவை. இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? இதன் குணவிசேஷத்தை யாராவது பார்த்துவிட்டு அரசனுக்குத் தெரிவித்தால் நிச்சயம் என் உயிருக்கு ஆபத்து உண்டாகலாம். எனவே நானே நேரில் போய் அரசனிடம் தெரிவிக்கிறேன்’’ என்றெல்லாம் யோசித்தான். அப்படியே தீர்மானித்து அரசனிடம் போய்த் தெரிவித்தான்.

அந்தப் பறவையைப் பார்த்ததும் அரசனின் தாமரைக் கண்கள் மலர்ந்தன. அரசனுக்குப் பரமதிருப்தி ஏற்பட்டது. ‘’காவலாளிகளே, இந்தப் பறவையை மிகவும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ளுங்கள். அது இஷ்டப்பட்டதைச் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் கொடுங்கள்’’ என்று சொன்னான்.

அப்போது ஒரு மந்திரி, ‘’இந்த நம்பத்தகாத வேடனின் பேச்சை மட்டும் நம்பி இந்தப் பறவையை வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? எப்போதாவது எங்கேயாவது பறவையின் எச்சத்தில் பொன் உண்டானதுண்டா? ஆகவே இதைக் கூண்டிலிருந்து எடுத்து விடுங்கள்’’ என்று சொன்னான்.

மந்திரியின் வார்த்தையைக் கேட்டு அரசன் பறவையை விடுவித்தான். அந்தப் பறவை போய் ஒரு உயர்ந்த வாயிலின் வளைவின் மேல் உட்கார்ந்துகொண்டு, பொன் மயமான எச்சத்தை இட்டுவிட்டு,

முதலில் நான் முட்டாள் ஆனேன். பிறகு என்னைப் பிடித்தவன் முட்டாள் ஆனான். பிறகு அரசனும் மந்திரியும் முட்டாள்கள் ஆனார்கள். எல்லோருமே ஒரு முட்டாள் கூட்டம்தான்.

என்று சொல்லி, தன்னிஷ்டம்போல் ஆகாயத்தில் பறந்துபோயிற்று. அதனால்தான், ‘முதலில் நான் முட்டாள்…’ என்ற செய்யுளைச் சொல்லலானேன்’’ என்றது ரக்தாட்சன்.

ஆந்தைகள் மீண்டும் ரக்தாட்சனின் நல்ல வார்த்தைகளை மதிக்கவில்லை. ஆந்தைகளுக்கு எதிராக விதி வேலை செய்தது. ஸ்திரஜீவிக்கு (காக்கை) மாம்சம் முதலான பலவிதமான உணவுகளை நிறையக் கொடுத்து மேலும் மேலும் போஷித்து வந்தன.

அதன்பிறகு ரத்தாட்சன் தன்னைச் சேர்ந்த ஆந்தைகளைக் கூட்டி வைத்து ரகசியமாகப் பேசியது. ‘’அரசனின் நன்மையும், இந்தக் கோட்டையும் இத்துடன் சரி. பரம்பரை மந்திரி சொல்லவேண்டியதை நான் சொல்லிவிட்டேன். ஆகவே, நாம் வேறு மலைக்குகைக்கு இப்பொழுதே போய்விடலாம், வாருங்கள்.

ஆபத்து வரும்முன்பே காரியம் செய்பவன்தான் விளங்குகிறான். செய்யாதவன் வருந்துகிறான். காட்டில் வாழ்ந்து கிழவனாகிவிட்ட நான் பேசும் குகையைப் பற்றிக் கேள்விப் பட்டதேயில்லை.

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்று சொல்லிற்று. ‘’அது எப்படி?’’ என்று அவை கேட்க, ரக்தாட்சன் சொல்லிற்று:

பேசும் குகை

ஒரு காட்டில் கரணகரன் என்னொரு சிங்கம் இருந்தது. அது ஒருநாள் பசியால் வாடிப்போய் இங்கும் அங்கும் சுற்றிப் பார்த்தது. ஒரு மிருகம் கூடக் கிடைக்கவில்லை. அஸ்தமிக்கும் வேளையில் அது ஒரு பெரிய மலைக் குகையை நெருங்கி அதற்குள் நுழைந்து யோசிக்கத் தொடங்கியது. ‘’இரவில் இந்தக் குகைக்கு ஏதாவது ஒரு மிருகம் நிச்சயமாக வரும். ஆகவே நான் இதில் ஒளிந்துகொள்கிறேன்’’ என்று எண்ணியது.

ததிமுகன் என்ற நரி அந்தக் குகைக்கு எஜமானன். அது வந்து வாயிலில் நின்றுகொண்டு, ‘’குகையே, குகையே’’ என்று ஊளையிட்டுப் பார்த்தது. பிறகு ஒரு வினாடி பேசாமல் இருந்துவிட்டு மறுபடியும் ஊளையிட்டது. ‘’ஏ குகையே, நான் வெளியே போய்ச் சுற்றிவிட்டுத் திரும்பவும் உன்னிடம் வந்து சேர்ந்தால் நீ என்னோடு பேச வேண்டும் என்பது உனக்கு ஞாபகம் இல்லையா? இன்றைக்குப் பேசமாட்டேன் என்கிறாயே! சரி, நான் வேறு ஒரு குகைக்குப் போகிறேன் அது என்னைக் கூவி அழைக்கும்’’ என்றது நரி.
இதைக் கேட்ட சிங்கம், ‘’அவன் வரும்போது இந்தக் குகை எப்போதும் எதிர்கொண்டு அழைக்கும்போல் இருக்கிறது. இதில் சந்தேகமில்லை. இன்று என்னைக் கண்டு பயந்து குகை பேசாமலிருக்கிறது.

பயத்தால் நடுங்குபவர்களுக்கு கைகால்கள் வேலை செய்வதில்லை. வார்த்தையும் வெளிவருவதில்லை. அங்கங்களில் நடுக்கம் அதிகமாகின்றது.

என்று சொல்லப்படுவது சரிதான். ஆகவே, நானே அவனை வரவேற்கிறேன். அதைக் கேட்டு அவன் குகைக்குள் நுழைவான். எனக்கு இரை கிடைத்துவிடும்’’ என்று எண்ணிக்கொண்டது. அப்படியே தீர்மானித்துவிட்டு, சிங்கம் நரிக்கு வரவேற்பு அளித்தது. ஆனால் சிங்கத்தின் கர்ஜனையை குகை அதிகப்படுத்தியதால் அதன் எதிரொலி முழங்கி வெகு தொலைவிலுள்ள காட்டுவாசிகளையும் நடுங்கச் செய்தது. நரி ஓடிக்கொண்டே,

ஆபத்து வருமுன்பே காரியம் செய்பவன் தான் விளங்குகிறான். செய்யாதவன் வருந்துகிறான். காட்டில் வாழ்ந்து கிழவனாகிவிட்ட நான் பேசும் குகையைப் பற்றிக் கேள்விப் பட்டதேயில்லை.

என்று சொல்லியது. அதை மனதில் நிறுத்தி நீங்களும் என்னோடு வந்துவிடுங்கள்’’ என்றது ரக்தாட்சன். அம்மாதிரி தீர்மானம் செய்து, ரக்தாட்சன் தன் பரிவாரங்களுடன் ஒரு தூரதேசத்துக்குச் சென்றது.

ரக்தாட்சன் போனதால் ஸ்திரஜீவிக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. ‘’இது நமக்கு நன்மைதான். அவன் தீர்க்கதரிசியானதால் சென்றுவிட்டான். இவர்களோ மூடர்கள். ஆகவே இவர்களை நான் சுலபமாகக் கொல்லலாம்.

தீர்க்கதரிசனமும், பரம்பரைச் சேவையுமுள்ள மந்திரிகள் அரசனுக்கு இல்லாமற்போனால் அந்த அரசன் நிச்சயமாகவும் துரிதமாகவும் நாசமடைகிறான். என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

சாந்தமான நயத்தைக் கைவிட்டு அதற்கெதிராக அரசனுக்கு யோசனை சொல்பவன் மந்திரி உருவிலிருக்கும் எதிரியே. புத்திசாலிகள் இதை அறிந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு எண்ணியபிறகு, தினந்தோறும் காட்டிலிருந்து ஒவ்வொரு கட்டையாகக் கொண்டுவந்து ஸ்திரஜீவி தன் கூட்டில் போட்டு வைக்கத் தொடங்கியது. அவை பின்னால் குகையை எரிப்பதற்குத்தான். அந்தக் கூடு பெரிதாகிக் கொண்டு வருவது தங்களை எரிப்பதற்குத்தான் என்பதை அந்த முட்டாள் ஆந்தைகள் அறிந்துகொள்ளவில்லை.

விரோதியுடன் நட்புகொள்ளாதே. நண்பனை வெறுத்துத் துயர்ப்படுத்தாதே. இழந்த நண்பனைத் திரும்பப் பெற முடியாது. விரோதி எப்பொழுதும் போல் விரோதியாகவே இருப்பான்.

என்று சொல்லிவைத்துள்ளது சரியே.

ஆக, கூடுகட்டும் சாக்கில்  ஆந்தைகளின் கோட்டைவாயிலிலே கட்டைகளை அடுக்கிக்கொண்டே வந்து, ஒரு பெரிய குவியல் சேர்ந்தது. பொழுது விடிந்தது. ஆந்தைகள் குருடாகிவிட்டன. அந்த வேளையில் ஸ்திரஜீவி வேகமாகப் புறப்பட்டுப் போய் மேகவர்ணனை அடைந்தது. ‘’அரசே, விரோதிகளின் குகையை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து முடித்து விட்டேன். நீங்கள் உங்களுடைய பரிவாரங்களுடன் புறப்படுங்கள். ஒவ்வொருவரும் காட்டிலிருந்து ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்துவாருங்கள். குகைவாயிலிலுள்ள என் கூட்டில் அவற்றைக் கொண்டு வந்து போடுங்கள். நரகத்திலுள்ள கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் அனுபவிப்பதுபோல் சித்ரவதை அனுபவித்து நமது எதிரிகள் எல்லோரும் சாவார்கள்’’ என்று சொல்லிற்று.

அதைக்கேட்டு மேகவர்ணன் மகிழ்ச்சியடைந்தது. ‘’பெரியவரே, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள். பார்த்து வெகுநாள் ஆயிற்றே!’’ என்றது.

“குழந்தாய், பேசுவதற்கு இது நேரமல்ல. நான் இங்கு வந்ததை எதிரியின் ஒற்றன் யாராவது ஒருவேளை பார்த்துவிட்டுப் போய்த் தெரிவித்து விடலாம். அதைக்கேட்டறிந்து அந்தக் குருட்டு எதிரிகள் வேறெங்காவது தப்பித்துச் சென்றுவிடலாம். சீக்கிரம் ஆகட்டும். புறப்படுங்கள்!

துரிதமாகச் செய்யவேண்டிய காரியத்தைத் தாமதப்படுத்தினால் தேவர்கள் கோபமடைந்து அதைத் தடை செய்கின்றனர்.
கைகூடும்போலிருக்கிற காரியத்தைத் துரிதமாகச் செய்து முடிக்காவிட்டால், அந்தக் காரியத்தின் ரஸத்தைக் காலம் நன்றாகக் குடித்துவிடுகிறது. (பிறகு காரியம் செய்யும்போது வெறும் சக்தைதான் மிஞ்சும், பலன் இருக்காது.)

`எதிரிகள் எல்லோரையும் கொன்றுவிட்டு நீ வீட்டுக்குத் திரும்பியபின் எல்லாவற்றையும் கவலையின்றிச் சொல்கிறேன்’’ என்றது ஸ்திரஜீவி.

அதன் ஆலோசனையைக் கேட்டு, காக்கையரசன் தன் பரிவாரங்களோடு புறப்பட்டுச் சென்றது ஒவ்வொரு காக்கையும் ஒரு கொள்ளியை அலகில் பிடித்துத் தூக்கிக்கொண்டு போயிற்று. ஆந்தைகளின் குகையை அடைந்ததும் ஸ்திரஜீவியின் கூட்டில் எரிகிற கொள்ளிகளை எறிந்தன. ஆந்தைகள் பகல் குருடர்கள் அல்லவா? நரகத்தில் கொதிக்கும் கொப்பரையில் படும் சித்ரவதைக்கு ஆந்தைகள் ஆளாயின. அந்த நேரத்தில் ரக்தாட்சன் சொன்ன பேச்சை ஆந்தைகள் ஞாபகப்படுத்திக்கொண்டன. இவ்விதமான ஆந்தை விரோதிகள் ஒருவர் பாக்கியின்றி எல்லோரையும் மேகவர்ணன் கொன்று தீர்த்துவிட்டு, தன்னுடைய பழைய ஆலமரக் கோட்டைக்குப் பரிவாரங்களோடு திரும்பிப் போயிற்று.

அங்கே மேகவர்ணன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து, ஆனந்த மடைந்த உள்ளத்தோடு, ராஜசபையில்  ஸ்திரஜீவியைப் பார்த்து, ‘பெரியவரே, எதிரிகளின் நடுவே நீங்கள் எப்படி இத்தனை நாள் வாழ்ந்து வந்தீர்கள்?

விரோதிகளோடு ஒரு வினாடியேனும் கூடி வாழ்வதைவிட எரியும் நெருப்பில் விழுவதே மேல், என்று நல்லோர்கள் அறிவார்கள்.

என்றது மேகவர்ணன். அதற்கு ஸ்திரிஜீவி, ‘’அன்புள்ளவனே, கேள்:

ஆபத்து நெருங்கும்போது எந்த வழியால் நன்மை கிடைக்குமோ அந்த வழியை (அது நல்ல வழியானாலும், கெட்ட வழியானாலும் சரி)க் கூரிய அறிவுடன் பின்பற்ற வேண்டும். அர்ஜுனனைப் பார்! அவன் கைகள் யானையின் துதிக்கைக்கு ஒப்பானவை. போரில் தேர்ச்சி மிகுந்தவை. பாசுபதாஸ்திரத்தை வளைக்கும் வலிமை கொண்டவை, அப்படியிருந்தபோதிலும் அவை பெண்கள் அணியும் வளையல்களை ஏற்று அணிந்து கொண்டன. (அர்ஜுனன் பிரஹன்னளையாக மாறுவேடம் பூண்டான்.)

நீசப்பாவிகளான அரசர்களின் கொடூரமான பேச்சுக்களை எப்போதும் கேட்டுச் சகித்தவாறே, நல்ல காலத்தை எதிர்நோக்கி, அறிவும் பலமும் பெற்றவன் இருந்து வரவேண்டும். பீமனைப் பார்! கையில் கரண்டியைப் பிடித்துக்கொண்டு, புகையில் அழுக்கடைந்து, வேலைகளிலே ஈடுபட்டு, மத்ஸ்ய நாட்டில் சமையல்காரனாக இருக்கவில்லையா?

கெட்டகாலம் வரும்பொழுது நல்லகாலத்தை எதிர்நோக்கியபடியே புத்திசாலி தனது நெஞ்சைக் கடினமாக்கிக் கொண்டு தன் காரியத்தை (நல்லதோ கெட்டதோ எது வாயிலும் சரி)ச் செய்து தீரவேண்டும். காண்டீபம் என்கிற வில்லை நாணேற்றி மீட்டுவதால் கை காய்த்துப்போன அர்ஜுனன் ஸாஸ்ய நடனம் ஆடி, தன் மேகலைமணிகள் ஒலிப்பதைக் கேட்கவில்லையா?

அறிவும், உஷார் உணர்ச்சியும், உற்சாகமுள்ளவன் வெற்றிபெறவேண்டுமென்றால், தன் நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்துகொண்டு, தன் கௌரவத்தையும் அடக்கிவைத்து, நல்லகாலத்தை எதிர்நோக்கியவாறு இருந்து வரவேண்டும். இந்திரன், குபேரன், யமன்  ஆகியோருக்குச் சமமாகத் தன் சகோதரர்களால் பூஜிக்கப்பட்டு வந்த தர்மபுத்திரன் ஒரு யாத்ரீகனின் கோலைப் பிடித்தவாறு வெகுகாலம் கஷ்டப்படவில்லையா?

அழகும் வலிமையும் உள்ள குந்தியின் இரட்டைப் புதல்வர்கள் (நகுலன், சகாதேவன்) விராட மன்னனிடம் வேலையாட்களாக அமர்ந்து மாடுகளை எண்ணிக் கணக்குப் பார்ப்பதில் ஈடுபட்டு வாழவில்லையா?

உயர்குலத்தில உதித்தவள், இணையற்ற அழகும் இளமையும் பெற்று, லக்ஷ்மிபோல் ஒளிபொருந்தியவள் திரௌபதி. அவளும்கூட காலவித்தியாசத்தால் மத்ஸ்ய அரசனின் அரண்மனையிலே கர்வங்கொண்ட பெண்களால் ஸைரந்தரி (அடிமை) என்று அழைக்கப்படவில்லையா? சந்தனத்தைப் பொடி பண்ணிக்கொண்டு காலங் கழிக்கவில்லையா?

என்றது ஸ்திரஜீவி.

‘’பெரியவரே, எதிரிகளோடு வாசம் செய்வது கத்தி முனையில் தவம் செய்வதுபோலல்லவா இருக்கிறது!’’ என்றது மேகவர்ணன்.

‘’ஆமாம், அப்படித்தான், என்றாலும் இப்படிப்பட்ட முட்டாள் கூட்டத்தை நான் எங்கும் கண்டதேயில்லை. ரக்தாட்சன் ஒருவன் தான் மிகுந்த புத்திசாலி, பல சாஸ்திரங்களில் எல்லையற்ற அறிவுள்ளவன். மற்ற அனைவருக்கும் புத்தியில்லை. ரக்தாட்சன் ஒருவன் தான் என்னுடைய உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டவன். மற்ற மந்திரிகள் எல்லோரும் முட்டாள்கள், ராஜநீதி சிறிதும் அறியாதவர்கள். மந்திரி என்று பெயர் பண்ணிக்கொண்டு கெட்ட உபதேசங்கள் தந்து பிழைப்பு நடத்தி வருகிறவர்கள். இதுகூட அவர்களுக்குத் தெரியாமல் போயிற்று:

எதிரியின் அணியிலிருந்து வரும் நபரை நம்பிச் சேர்ந்து பழகுவது நாசமாகும். அப்படி வருபவனை விரட்டி விடவேண்டும். கஷ்டம் நித்தியமாயிருப்பது சங்கடம்தான். அப்படி வரும் எதிரியின் ஆள் நீ எங்கே உட்காருகிறாய், எங்கே படுக்கிறாய், எங்கே போய்விட்டு வருகிறாய், என்ன குடிக்கிறாய், என்ன சாப்பிடுகிறாய், என்பதையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொண்டு சமயம் பார்த்துத் தாக்குகிறான்.

ஆகவே அறம், அன்பு, பொருள் யாவற்றுக்கும் உறைவிடமான அறிவாளிகள் எல்லா முயற்சிகளும் செய்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அஜாக்கிரதையினால் அறிவு நாசமடைகிறது.

துர்ப்போதனை பெற்றதால் ராஜநீதியில் தவறு செய்யாதவன் யாராவது உண்டா? அளவுக்கு மீறி சாப்பிடுகிறவன் யார்தான் வியாதியால் கஷ்டப்படுவதில்லை? செல்வத்தால் செருக்குறாதவன் யார்? சாக்காடு யாரைத்தான் வீழ்த்திவிடுகிறதில்லை? உடைமைகளைக் கொண்டவன் யார்தான் கஷ்டமும் துயரமும் படுவதில்லை?

உடம்பை அசைக்காதவன் புகழையும், பதட்டமுள்ளவன் நண்பனையும், சொத்து இழந்தவன் குலத்தையும், பணம் படைத்தவன் தர்மத்தையும், பற்றுமிகுந்தவன் கல்வியையும், லோபி சுகத்தையும், கவனமில்லாத மந்திரிகளையுடைய அரசன் ராஜ்யத்தையும், இழக்க வேண்டியவர்களே.

என்ற சொல்லில் நிறைய விவேகம் இருக்கிறது. அரசே, எதிரிகளோடு வாசம் செய்வது கத்திமுனையில் தவம் கிடப்பதுபோல என்று தாங்கள் வர்ணித்தீர்களே, அதை நான் நேரில் அனுபவித்தேன்.

காலத்துக்குத் தக்கபடி அறிவாளி நடந்துகொள்வான்; எதிரியைத் தோளில்  தூக்கிச் செல்லவேண்டியதானாலும் செய்வான். ஒரு பெரிய கருநாகம் பல தவளைகளை விழுங்கிற்று.

என்றொரு பேச்சு உண்டு’’ என்றது ஸ்திரஜீவி. ‘’அது எப்படி?’’ என்று மேகவர்ணன் கேட்க, ஸ்திரஜீவி சொல்லிற்று:

 

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 17ப.மதியழகன் க‌விதைக‌ள்