பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்

சமயோசித புத்தியற்ற குயவன்

 

ரு ஊரில் ஒரு குயவனிருந்தான். அவன் ஒரு சமயம் கவனமில்லாமல் வெகு வேகமாக ஓடி கூர்மையான நுனி உடைய ஒரு உடைந்த பாத்திரத்தின் மேல் விழுந்தான். அதன் கூரிய நுனி அவனுடைய நெற்றிக்கட்டை நன்கு கிழித்து விட்டது. ரத்தத்தினால் நனைந்த உடலுடன் எப்படியோ எழுந்திருந்தான். பிறகு சரியாக அதற்கு வைத்தியம் செய்யாததால் அந்தக் கூர்மையான அடி கோடுமான பெரிய வடுவாக ஆகிவிட்டது.

 

ஒரு சமயம் ஊர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டபொழுது பசியால் வாடிய அவன் யாரோ ராஜசேவகனுடன் வேறு தேசம் சென்று அங்கு அவனும் ராஜசேவகனாக ஆனான்.

 

அந்த அரசனும் அவன் நெற்றியில் உள்ள வடுவைப் பார்த்து, ‘’இவன் யாரோ ஒரு வீர புருஷனே. அதனால்தான் இவன் நெற்றியில் அடி பட்டிருக்கிறான்’’ என்று எண்ணினான். இவ்விதம் எண்ணி எல்லோரையும் விட அதிகமாகவே அவனுக்கு வெகுமானங்களும் பரிசுகளும் வழங்கி அவனைக் கவனித்துக் கொண்டான். அவனுக்கு அதிகமாக வெகுமான மளிப்பதைப் பார்த்து அரசகுமாரர்கள்கூட மிகுந்த பொறாமை அடைந்தனர். ஆனாலும் அரசனிடமுள்ள பயத்தால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

 

பிறகு ஒருநாள், வீரச்செயல்கள், யானையேற்றம், குதிரையின் அணிவகுப்பு படைவீரர்கள் முதலியவற்றைப் பார்வையிடும்பொழுது அரசன் அந்தக் குயவனிடம், ‘’ஏ, அரசகுமாரனே! உன் பெயரென்ன? நீ என்ன ஜாதி? உன் நெற்றியில் உள்ள இந்த வடு எந்தச் சண்டையில் ஏற்பட்டது?’’ என்று கேட்டான்.

 

‘’பிரபுவே, யுதிஷ்டிரன் என்ற பெயருடைய நான் குயவர் ஜாதியைச் சேர்ந்தவன். இது கத்தியால் ஏற்பட்ட காயமல்ல, அநேக உடைந்த பாத்திரங்களின் குவியலோடிருந்த கொல்லைப்புறத்தில் மதுபானத்தால் தள்ளாடியபடி நான் ஓடி ஒரு உடைந்த சட்டியின் மேல் விழுந்தேன். அதனால் என் நெற்றி கிழிக்கப்பட்டு இந்த வடு ஏற்பட்டது’’ என்று அவன் பதிலளித்தான்.

 

அதைக்கேட்டு அரசன் ‘’ஐயோ, அரசகுமாரனைப்போலுள்ள இந்தக் குயவனால் நான் ஏமாற்றப்பட்டேன். ஆகவே, இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும்’’ என்று எண்ணி அவ்விதமே செய்தபொழுது, ‘’அரசே, அவ்விதம் செய்யாதீர்கள். சண்டையில் என்னுடைய பராக்கிரமத்தைப் பாரும்’’ என்றான் குயவன்.

 

‘’குயவனே, நீ குணக்குன்றாக இருக்கலாம். ஆனாலும் சென்றுவிடு. மகனே, நீ வீரன்தான், கல்விமான்தான்; பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறாய். ஆனால் நீ உதித்த குலத்தில் யானைகள் கொல்லப்படுவதில்லை. என்றொரு பழமொழி உண்டு என்றான் அரசன்.

 

‘’அது எப்படி?’’ என்று குயவன் கேட்ட, அரசன் சொன்னான்.

 

சிங்கம் வளர்த்த நரி

 

ரு காட்டில் ஒரு சிங்கமும் அதன் மனைவியும் இருந்தன. ஒரு நாள் பெண் சிங்கம் இரண்டு ஆண்குட்டிகளைப் பெற்றது. சிங்கமும் தினம் மிருகங்களைக் கொன்று பெண் சிங்கத்திற்குக் கொடுத்து வந்தது. ஒருநாள் காட்டில் சுற்றிவந்த அதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. சூரிய பகவானும் அஸ்தமனகிரியை அடைந்துவிட்டான். வீட்டிற்குத் திரும்பும் சிங்கத்துக்கு வழியில் நரிக்குட்டி ஒன்று அகப்பட்டது. அதுவும் ‘இது குழந்தையாயிற்றே’ என்று இரக்கப்பட்டு தன் பற்களினுடையே கௌவித் தூக்கிக்கொண்டு முயற்சியுடன் அதை உயிரோடு கொண்டு வந்து பெண் சிங்கத்தினிடம் கொடுத்தது. அப்பொழுது பெண் சிங்கம் ‘’கணவனே, ஏதாவது நீ சாப்பிடுவதற்குக் கொண்டு வந்திருக்கிறாயா?’’ என்று கேட்டது.

 

‘’அன்பே, இந்த நரிக்குட்டியைத் தவிர இன்று வேறு ஒன்றும் கிடைக்க வில்லை. இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. குட்டிதான் வேறு, என்று எண்ணி நான் அதைக் கொல்லவில்லை.

ஏனெனில்,

 

பெண், பிராம்மணன், சந்நியாசி, குழந்தை ஆகியோர்களை ஒருபொழுதும் கொல்லாதே! உயிர்போகும் நிலை வந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதே.

 

இப்பொழுது நீ இதைச் சாப்பிட்டு பசியைத் தணித்துக்கொள். காலையில் வேறு ஏதாவது கொண்டு வருகிறேன்’’ என்றது ஆண் சிங்கம். ‘’நாதா, நீ அதைக் குழந்தை என்று எண்ணிக் கொல்லவில்லை. பின் எப்படி நான் என் வயிற்றுக்காக இதைக் கொல்வேன்?

 

ஒரு பழமொழி உண்டு:

 

உயிர் போகும் நிலை வந்தாலும் செய்யத் தகாததைச் செய்யக் கூடாது. செய்யத் தக்கதையும் விடக்கூடாது. இதுவே நல்லோர்களின் தர்மம்.

 

ஆகவே, இது எனக்கு மூன்றாவது புத்திரனாக இருக்கட்டும்’’ என்று பெண் சிங்கம் சொல்லி தன் முலைப்பாலால் அதை மிகவும் புஷ்டியுள்ளதாக வளர்த்தது. இப்படியே அந்த மூன்று குட்டிகளும் ஒன்றுக்கொன்று ஜாதி வித்தியாசமே இல்லாமல், ஒரே விதமான ஆசாரமும், விளையாட்டுமாக பாலபருவத்தைக் கழித்தன.

 

ஒருசமயம் அந்தக் காட்டில் சுற்றித் திரிந்துகொண்டு ஒரு காட்டானை வந்து சேர்ந்தது. அதைப் பார்த்து அந்தச் சிங்கக் குட்டிகளிரண்டும் கோபமடைந்து அதைக் கொல்ல விரும்பி அதை நோக்கிச் சென்றன. அப்பொழுது அந்த நரிக்குட்டி, ‘ஐயோ, இது யானை. உங்கள் குலத்தின் எதிரி. அங்கு செல்லக்கூடாது’’ என்று சொல்லிற்று. இவ்விதம் சொல்லித் தன் வீட்டை நோக்கி நரிக்குட்டி ஓடிற்று. அவையும் தங்களுடைய மூத்த சகோதரன் ஓடிவிட்டதால் உற்சாகமிழந்தன.

 

சண்டையில் ஒரே ஒரு வீரன் உற்சாகத்துடனிருந்தால் சைன்யத்திற்கே உற்சாகமேற்படும். கோழை கோழைத்தனத்தையே உண்டு பண்ணுவான்.

 

என்று சொல்வது சரிதான்.

 

அதனாலேயே அரசர்கள் போர்வீரர்களை பலசாலியாகவும், சூரனாகவும், வீரனாகவும், உற்சாகமுள்ளவனாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். கோழைகளை அறவே விட்டுவிடுகின்றனர்.

 

பிறகு இரு சகோதரர்களும் வீட்டை அடைந்து பரிகாசத்துடன் தந்தையிடம் மூத்த சகோதரனின் செயலைக் குறிப்பிட்டு, ‘’இது யானையை தூரத்தில் பார்த்தவுடனேயே ஓட்டம் பிடித்துவிட்டது’’ என்று சொல்லின.

 

அதுவும் அதைக்கேட்டு கோபம் நிறைந்த உள்ளத்துடனும், துடிக்கின்ற சிவந்த உதடுகளும், சிவந்த கண்களும், நெற்றியைச் சுருக்கியதால் அதில் இரண்டு கோடுகளும் விழுந்ததாக அவைகளைத் திட்டிக்கொண்டு கோபமாகப் பேசியது. அப்போது பெண் சிங்கம் அதைத் தனியாக அழைத்துச் சென்று அதற்குப் புத்திமதி சொல்லிற்று. ‘’குழந்தாய், ஒரு பொழுதும் இவ்விதம் பேசாதே. அவை இரண்டும் உன்னுடைய சகோதரர்கள்’’ என்றது. ஆனால் அந்தச் சாந்தமான வார்த்தையால் அதிகக் கோபமடைந்த அது பெண் சிங்கத்தினிடம், ‘’நான் அவர்களைவிட வீரத்திலோ, அழகிலோ, வித்தையிலோ, பழக்கத்திலோ, சாமர்த்தியத்திலோ குறைந்தவனா என்ன? ஏன் அவர்கள் என்னைப் பரிகசிக்கின்றனர்? ஆகவே நான் நிச்சயம் அவர்களைக் கொல்லப் போகிறேன்’’ என்று சொல்லிற்று.

 

 

அதைக் கேட்டு பெண் சிங்கம் நரிக்குட்டி உயிருடன் இருக்க வேண்டுமென்று விரும்பியதால் உள்ளூற சிரித்துக்கொண்டே சொல்லிற்று:

 

மகனே, நீ வீரன்தான், கல்விமான்தான், பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறாய். ஆனால், நீ உதித்த குலத்தில் யானைகள் கொல்லப் படுவதில்லை.

 

அதனால் கவனமாகக் கேள். குழந்தாய், நீ நரியின் பிள்ளை. நான்  தயை மிகுதியால் உன்னை என் முலைப்பாலால் புஷ்டியாக வளர்த்தேன். என் புத்திரர்கள் தமது குழந்தைத்தனத்தால் உன்னை நரியென்று அறியாமலிருக்கிறார்கள். அவை தெரிந்துகொள்வதற்கு முன்பே வேகமாகச சென்று உன் ஜாதியாரிடம் போய்விடு. இல்லையெனில் அவர்களால் கொல்லப்பட்டுப் போவாய்’’ என்றது.

 

நரிக்குட்டி அதைக் கேட்டு மிகுந்த பயமடைந்து மெல்ல மெல்ல நழுவி தன் ஜாதியாருடன் சேர்ந்துகொண்டது.

 

ஆகையால் நீயும்  ராஜபுத்திரர்கள் நீ குயவன் என்று அறிவதற்குள் இங்கிருந்து வேகமாகச் சென்றுவிடு. இல்லையேல் நிந்திக்கப்பட்டுச் சாவாய்’’ என்றான் அரசன். குயவனும் அதைக் கேட்டு வேகமாக வெளியேறிவிட்டான்.

 

அதனால்தான் ‘சுயநலத்தை விட்டு எந்தப் போக்கிரி…’ என்று நான் சொன்னேன். சீ மூடனே, நீ ஒரு பெண்ணுக்காக இந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்திருக்கிறாய். ஒருபொழுதும் ஸ்திரீகளை நம்பக்கூடாது.

 

யார் பொருட்டு என் குலத்தை விட்டேனோ உயிரில் பாதியைக் கொடுத்தேனோ, அவள், என்னைப் பிரியமற்றுவிடுகிறாள். யார்தான் ஸ்திரீகளை நம்ப முடியும்?

 

என்ற கதை சரிதான்’’ என்றது குரங்கு.

 

அதைக்கேட்ட முதலை ‘’அது எப்படி?’’ என்று கேட்க, குரங்கு சொல்லிற்று:

 

நன்றிகெட்ட ஸ்திரீ

 

ரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். அவன் தன் மனைவியை உயிருக்கு மேலாக நேசித்தான். அவன் தினந்தோறும் தன் குடும்பத்தினருடன் சண்டையிட்டவாறு இருந்தான். அந்தப் பிராம்மணன் சண்டையைப் பொறுக்கமாட்டாமல், தன் குடும்பத்தைவிட்டு மனைவியிடமுள்ள பிரியத்தால் மனைவியுடன் வெகுதூரத்திலுள்ள வேறு ஊருக்குப் புறப்பட்டான். பெரிய காட்டின் நடுவில் போகையிலே மனைவி, ‘’அன்பரே தாகம் என்னை வதைக்கிறது. எங்காவது தண்ணீரைத் தேடும்’’ என்றாள். அவள் வார்த்தைப்படி அவன் ஜலத்தை எடுத்துக் கொண்டு வருவதற்குள் அவள் இறந்து விட்டிருப்பதைப் பார்த்தான்.

 

அவள்மேல் அவனுக்கிருந்த அதிக அன்பினால்  அவன் வருத்தப்பட்டுப் புலம்பினான். அப்பொழுது ஆகாயத்திலிருந்து ‘’பிராம்மணனே, நீ உன் ஆயுளில் பாதியைக் கொடுத்தால் உன் மனைவி பிழைத்துக்கொள்வாள்’’ என்றொரு சொல் கிளம்பிற்று.

 

அதைக்கேட்டு பிராம்மணன் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு மூன்று வார்த்தைகளால் தன் உயிரில் பாதியைக் கொடுத்தான். அவன் சொன்ன மாத்திரத்திலேயே அந்தப் பிராம்மண ஸ்திரீ உயிர் பெற்றாள். பிறகு அவர்களிருவரும் ஜலத்தைக் குடித்துவிட்டு காட்டுப் பழங்களையும் சாப்பிட்டு விட்டுச் செல்ல ஆரம்பித்தனர். பிறகு நாளடைவில் ஏதோ ஒரு ஊருக்கு வந்து சேர்ந்து அங்குள்ள நந்தவனத்தில்  நுழைந்தனர்.  அங்கு பிராம்மணன்  தன் மனைவியிடம், ‘’அன்பே, நான் உணவைக் கொண்டுவரும் வரை நீ இங்கேயே இரு’’ என்று  சொல்லிவிட்டுச் சென்றான்.

 

அந்தப் பூஞ்சோலையில் ஒரு நொண்டி ஏற்றத்தை இறைத்துக் கொண்டு தேவாமிருதமான குரலில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தான்.  அதைக் கேட்டு பிராம்மணப்பெண் காதல் கொண்டு அவனருகில் சென்று, ‘’பிரியனே, நீ என்னை அடையாவிட்டால், ஒரு பிராம்மண ஸ்திரீயைக் கொன்ற பாவத்தை நீ அடைவாய்’’ என்று சொன்னாள்.

 

அதற்கு முடவன், ‘’வியாதியால் பீடிக்கப்பட்ட நான் என்ன செய்ய முடியும்?’’ என்று சொன்னான். ‘’ஏன் அப்படிச் சொல்கிறாய்? நிச்சயம் உன்னை நான் சேரத்தான் வேண்டும்’’ என்றாள் அவள். அதைக்கேட்டு முடவன் அவளைச் சேர்ந்தான். அவனுடன் சேர்ந்தபின் அவள், ‘’இனிமேல், என் வாழ்வு முழுவதும் உங்களுக்கு என்னை அளிக்கிறேன். இதை அறிந்து நீங்களும் எங்களோடு வரவேண்டும்’’ என்றாள். அவனும் ‘’அவ்விதமே ஆகட்டும்’’ என்று ஒப்புக்கொண்டான்.

 

பிறகு பிராம்மணன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்து அவளுடன் சாப்பிட ஆரம்பித்தான். ‘’இந்த முடவன் பசியாக இருக்கிறான். அதனால் இவனுக்கும் ஒரு கவளம் கொடு’’ என்றாள் மனைவி. அவ்விதமே கொடுத்த பின், மனைவி ‘’பிராம்மணனே, உதவியற்று நீ வேறு கிராமத்திற்குச் செல்லும் பொழுது எனக்குப் பேசுவதற்குத் துணையாக ஒருவருமில்லை. ஆகவே இந்த முடவனையும் நம்மோடு அழைத்துச் செல்வோம்’’ என்றாள்.

 

‘’என்னையே நான் தூக்கச் சக்தியற்றிருக்கிறேன். பின் இந்த நொண்டியை இழுத்துக்கொண்டு செல்வானேன்?’’ என்றான் அவன்.

 

‘’பெட்டியில் வைத்து அவனை நான் தூக்கிச் செல்கிறேன்’’ என்று அவள் சொன்னாள். அவளுடைய குயுக்தியான வார்த்தையால் புத்தி குழம்பிப்போய் அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

 

அவ்விதமே செய்தபின் ஒரு தினம் ஒரு கிணற்றின் அருகில் சிரம பரிகாரம் செய்து கொண்டிருந்தபொழுது அந்த முடவனின் உதவியுடன் அவள் தன் கணவனைக் கிணற்றில் தள்ளிவிட்டாள்.

 

அவள் முடவனைத் தூக்கிக்கொண்டு ஏதோ ஒரு ஊருக்குள் சென்றாள். அங்கு வரி, திருட்டு, பாதுகாப்பு இவைகளுக்காக அரசனின் காவலாளிகள் இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருந்தபொழுது அவள் தலையிலிருக்கும் பெட்டியைப் பார்த்தனர். பலாத்காரமாக அதைப் பிடுங்கி எடுத்துச்சென்று அரசன் முன்னே வைத்தனர். அரசனும் அதைத் திறந்து பார்த்தபொழுது அதில் ஒரு முடவன் இருக்கக் கண்டான்.

 

இந்தச் சமயத்தில் அந்தப் பிராம்மண ஸ்திரீ அழுது புலம்பிக் கெகண்டே காவலாளிகளைப் பின் தொடர்ந்து அங்கு வந்தாள். அரசன் அவளைப் பார்த்து, ‘’என்ன விஷயம்?’’ என்று கேட்டான். ‘’வியாதியால் பீடிக்கப்பட்ட இவர் என் கணவர். இவரைத் தாயாதிகள் துன்புறுத்தினர். நான் அன்பினால் கவலையடைந்த மனதுடன் இவரைத் தலையில் தூக்கிக்கொண்டு உங்களருகில் அழைத்து வந்தேன்’’ என்றாள் அவள். அதைக்கேட்டு அரசன், ‘’நீ என் சகோதரி. இரண்டு கிராமங்களைப் பெற்றுக்கொண்டு உன் கணவனோடு சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு சந்தோஷமாக இரு’’ என்று சொன்னாள்.

 

அந்தப் பிராம்மணன் விதிவசத்தால் ஏதோ ஒரு சந்நியாசியால் கிணற்றிலிருந்து தூக்கிவிடப்பட்டான். அவன் சுற்றிக்கொண்டு அந்தப் பட்டினத்திற்கே வந்து சேர்ந்தாள். அந்தத் துஷ்ட மனைவி அவனைப் பார்த்ததும் அரசனிடம், ‘’அரசே, என்னுடைய கணவனின் சத்ருவான இவன் வந்துள்ளான்’’ என்று கூறினாள். அரசனும் அவனைக் கொல்ல உத்தரவளித்தான். அப்பொழுது அந்தப் பிராம்மணன் ‘’பிரபுவே, என்னிடமிருந்து இவள் ஒன்று வாங்கிக்கொண்டிருக்கிறாள். நீர் தர்மப்பிரபு வானால் அதைக் கொடுக்கச் சொல்லும்’’ என்று சொன்னான்.

 

‘’பிரியமானவளே, நீ இவனிடமிருந்து பெற்றுக்கொண்டது ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அதைக் கொடுத்துவிடு’’ என்று அரசன் சொன்னான். அவள் அதற்கு ‘’அரசே நான் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை!’’ என்று பதிலளித்தாள். அதற்குப் பிராம்மணன், ‘’நான் மூன்று வார்த்தைகளால் என் ஆயுளில் பாதியை உனக்கு அளித்தேன். அதைக் கொடு’’ என்றான். அவளும் அரசனிடமுள்ள பயத்தால் அவ்விதமே ‘’உயிரை நான் கொடுத்தேன்’’ என்ற மூன்று வார்த்தைகளைச் சொன்னாள். சொல்லிக் கொண்டிருந்தபடியே உயிரை விட்டாள்.

 

அப்பொழுது ஆச்சரியமடைந்த அரசன் ‘’இது என்ன விஷயம்?’’ என்று கேட்டான். பிராம்மணனும் பழைய வரலாற்றையெல்லாம் அவனுக்கு அறிவித்தான்.

 

அதனால், ‘’யார் பொருட்டு என் குலத்தை விட்டேனோ…’’ என்று சொல்லலானேன்’’ என்றது குரங்கு.

 

குரங்கு மறுபடியும் ‘’இந்தக் கதையும் இதற்குச் சரிதான்:

 

ஸ்திரீகளால் உத்தரவிடப்பட்ட புருஷன் எதுதான் கொடுக்க மாட்டான், என்னதான் செய்யமாட்டான்? குதிரையாக இல்லாவிட்டாலும் கனைப்பான்: அகாலத்தில் மொட்டையும் அடித்துக்கொள்வான்.’’

 

என்றது.

 

‘’எது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)இழப்பு