பஞ்சதந்திரம் தொடர் 56

கல்வி கற்ற முட்டாள்கள்

ஒரு ஊரில் நான்கு பிராமணர்கள் நண்பர்களாக இருந்தனர். அதில் மூவர் எல்லா சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து கரை கண்டவர்கள். ஆனால் புத்தியென்பது கிடையாது. ஒருவன் சாஸ்திரமே அறியாதவன். ஆனால் மிகவும் புத்திசாலி.

ஒரு சமயம் அவர்கள் கூடி ஆலோசித்தனர். ‘’வெளிநாட்டிற்குச் சென்று அரசர்களைச் சந்தோஷப்படுத்தி பணம் சம்பாதிக்கா விட்டால் வித்தையால் என்ன பிரயோஜனம்! அதனால் எவ்விதமாகிலும் நாம் யாவரும் வேறு தேசம் செல்வோம்’’ என்று. அவ்விதமே புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும், அவர்களில் மூத்தவன், ‘’நம் நால்வரில் ஒருவன் மூடன். அவனுக்குப் புத்தி மட்டும் உண்டு. கல்வியின்றி புத்தியால் மட்டும் அரசனுடைய அருளைப் பெறமுடியாது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் அவனுக்குப் பாகம் கொடுக்க மாட்டோம். அதனால் அவன் திரும்பி தன் வீட்டிற்குச் செல்லட்டும்’’ என்றான்.
அப்பொழுது இரண்டாமவன், ‘’அறிவுள்ளவனே, உனக்கு கல்வியில்லை. அதனால் வீட்டிற்குச் செல் என்றான். அப்பொழுது, மூன்றாமவன் சொன்னான், ‘’இவ்விதம் செய்வது நியாயமில்லை. ஏனெனில் நாம் பாலபருவம் முதல் ஒன்றாகவே விளையாடியுள்ளோம். புத்திசாலியே, நீ எங்களுடன் வா, நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பங்கு உனக்கு அளிக்கிறோம்’’ என்றான்.

இதற்கு யாவரும் ஒப்புக்கொண்டு செல்லும்பொழுது வழியில் ஒரு காட்டில் இறந்த சிங்கத்தின் எலும்புக்கூட்டைப் பார்த்தனர். அப்பொழுது ஒருவன், ‘’முன்பு கற்றுக்கொண்ட கல்வியைச் சோதித்துக் கொள்வோம். இங்கு ஏதோ இறந்த மிருகம் இருக்கிறது. அதை நாம் அடைந்த வித்தையின் பிரபாவத்தால் திரும்ப உயிர்ப்பிப்போம்’’ என்றான். அப்பொழுது ஒருவன் ‘’எனக்கு எலும்புகளை ஒன்று சேர்க்கத் தெரியும்’’ என்றான். இரண்டாமவன், ‘’நான் தோலும் மாமிசமும் ரத்தமும் அளிப்பேன்’’ என்றான். மூன்றாமவன் ‘’நான் உயிர் உள்ளதாகச் செய்வேன்’’ என்றான்.

பிறகு ஒருவன் எலும்புகளை ஒன்று சேர்த்தான். இராண்டாமவன் அதைத் தோல், மாமிசம், ரத்தத்தால் நிரப்பினான். மூன்றாமவன் அதற்கு உயிர் அளிப்பதில் ஈடுபட்டபொழுது புத்தியுள்ளவன் அதைத் தடுத்து, ‘’இது சிங்கம். இதை நீ உயிருள்ளதாகப பண்ணினால் அப்பொழுது நம் எல்லோரையும் கொன்றுவிடும்’’ என்றான். அதற்கு அவன் ‘’சீ மூடனே, நான் வித்தையை பலனற்றதாகச் செய்யமாட்டேன்’’ என்றான்.

அதற்கு அவன் ‘’அவ்விதமெனில் ஒரு கணப்பொழுது தாமதியுங்கள். அதற்குள் நான் இந்த அருகிலுள்ள மரத்தில் ஏறிக்கொள்கிறே’ன்’ என்று சொல்லி அவ்விதமே செய்தான். அந்தக் சிங்கத்திற்கு உயிர் அளித்தவுடன் அது அவர் மூவர் மேலும் பாய்ந்து கொன்றது. சிங்கம் வேறு இடத்திற்குச் சென்றதும் அந்தப் புத்திசாலி மரத்திலிருந்து இறங்கி வீட்டிற்குச் சென்றான்.

அதனால்தான், ‘கல்வியைவிட புத்தி உத்தமம்…’ என்று சொல்கிறேன்’ என்றான் சுவர்ணசித்தன். அதைக் கேட்டுச் சக்ரதரன் தர்க்கித்தான்.

‘’இது காரணமற்றது. ஏனெனில் விதியால் பீடிக்கப்பட்டவர்கள் அதிக புத்தி பெற்றிருந்தாலும் நாசமாகின்றனர். அற்ப புத்தியுள்ளவனும் விதியால் காப்பாற்றப்பட்டால் சந்தோஷமாக இருக்கின்றான்:

“அன்பே, சதபுத்தி தலையில் இருக்கிறான். சகஸ்ரபுத்தி கயிற்றில் தொங்குகிறான். ஏகபுத்தியான நான் பரிசுத்தமான ஜலத்தில் விளையாடுகிறேன்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றான் சக்ரதரன். சுவர்ணசித்தன் அது எப்படி?’’ என்று கேட்க, சக்ரதரன் சொன்னான்:

அதிக புத்தி அதிக நாசம்

ஒரு நீர்நிலையில் சதபுத்தி, சகஸ்ரபுத்தி என்ற பெயருடைய இரண்டு மீன்கள் வசித்துவந்தன. அவைகளுக்கு ஏகபுத்தி என்ற தவளை நண்பனாயிற்று. இவ்விதமே அவை மூன்றும் ஜலத்தின் ஓரத்தில் சிறிது காலம் ஒருவரோடு ஒருவர் பேச்சுக்கள் பேசி சுகத்தை அனுபவித்துவிட்டு மறுபடியும் ஜலத்தினுள் நுழைந்துவிடும்.
ஒருநாள் அவை பேசிக்கொண்டிருக்கும்போது அந்தி மயங்கும் வேளையில் கையில் வலையை வைத்துக்கொண்டு செம்படவர்கள் வந்தார்கள். அந்தத நீர்நிலையைப் பார்த்துத் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்: ‘’அதிக ஜலமற்ற இந்த ஏரியில் நிறைய மீன்கள் இருப்பதுபோலக் காணப்படுகிறது. அதனால் காலையில் வருவோம்’’ என்று. இவ்விதம் சொல்லி அவர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றனர். அவைகளும் இடிவிழுந்ததற்கொப்பான அந்தப் பேச்சைக் கேட்டு தங்களுக்குள் யோசனை செய்தன.

அப்பொழுது தவளை சொல்லிற்று: ‘’ஏ நண்பர்களே, சதபுத்தி, சகஸ்ரபுத்தியே, இப்பொழுது என்ன செய்தால் தகும்? ஓடுவதா அல்லது தங்குவதா?’’

அதைக்கேடட சகஸ்ரபுத்தி சிரித்துவிட்டு, ‘’ஏ நண்பனே, வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் பயப்படாதே. அவர்கள் இங்கே வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அப்பொழுது என் சுயபுத்தியால் உன்னையும் என்னையும் காப்பாற்றுகிறேன். ஏனெனில் நான் அநேகவிதமாக ஜலத்தில் செல்வதை அறிவேன்’’ என்றது.

அதைக் கேட்டுச் சதபுத்தி, ‘’ஆஹா, சகஸ்ரபுத்தி சொல்வது சரியானதே. எவ்விதமெனில்,

எங்கு காற்றுகூடப் புகாதோ சூரியகிரணமும் நுழையாதோ அந்த இடத்தில் கூட புத்திசாலிகள் புத்தி சீக்கிரமாக நுழைகிறது.

அதனால், வார்த்தையைக் கேட்டதனால் மட்டும் பரம்பரையாக வந்து பிறந்த இடத்தை விட முடியாது. அதனால் வேறு எங்கும் செல்லக்கூடாது. நான் உன்னை என் புத்திப் பிரபாவத்தால் காப்பாற்றுகிறேன்’’ என்றது.

தவளை சொல்லிற்று: ‘’எனக்கு ஒரு புத்திதான் இருக்கிறது. அது என்னை ஓடு என்கிறது. அதனால் நான் வேறு ஏதாவது நீர்த்தேக்கத்திற்கு இன்றே என் மனைவியுடன் செல்லப்போகிறேன்’’ என்றது.

இப்படிச் சொல்லி தவளை இரவு சமயத்தில் வேறு நீர்த்தேக்கத்திற்குச் சென்றது. மறுதினம் காலையில் யமகிங்கரர்கள் போன்ற உருவுடைய செம்படவர்கள் வந்து ஏரியில் வலையைப் பரப்பினர். மீன், ஆமை, தவளை, நண்டு முதலிய எல்லா நீர்ஜந்துக்களும் வலையால் கட்டப்பட்டு எடுக்கப் பட்டன. அந்த சதபுத்தியும், சகஸ்ரபுத்தியும் கூட பலவிதமாக நீரில் பாய்ந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்த்தும் முடியாமல் வலையில் விழவே, அவையும் கொல்லப்பட்டன.

பிறகு சாயங்கால சமயத்தில் சந்தோஷத்துடன் அந்தச் செம்படவர்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். சதபுத்தி கனமாக இருந்ததால் ஒருவன் தலையில் தூக்கிக்கொண்டான். மற்றொருவன் கயிற்றினால் சகஸ்ரபுத்தியைக் கட்டித் தூக்கிச் சென்றான். அப்பொழுது நீர்த்தொட்டியின் ஓரத்தில் நின்ற தவளை தன் மனைவியிடம், ‘’அன்பே, பார், பார்!

அன்பே, சதபுத்தி தலையில் இருக்கிறான். சகஸ்ரபுத்தி கயிற்றில் தொங்குகிறான். ஏகபுத்தியான நான் பரிசுத்தமான ஜலத்தில் விளையாடுகிறேன்.’’
என்று சொல்லிற்று. அதனால்தான் ‘விதிக்கு புத்திமட்டும் பிரமாணமில்லை’ என்று சொல்லுகிறேன்’’ என்றான் சக்ரதரன்.

சுவர்ணசித்தன் ‘’அது அவ்விதமே இருக்கட்டும். இருந்தாலும்கூட நண்பனின் வார்த்தையை மீறி நடக்கக் கூடாது. பின் என்ன செய்வது? நான் தடுத்தும்கூட மிகுந்த பேராசையாலும், வித்தையின் அஹங்காரத்தாலும் நீ நிற்கவில்லை.

அல்லது இவ்விதம் சொல்வதிலும் நல்ல நியாயமிருக்கிறது.

“மாமா, சங்கீதத்தை நன்றாகத்தான் அறிவாய். ஆனால் நான் தடுத்தும் நீ நிறுத்த வில்லை. அதனால் அந்தச் சங்கீதத்திற்குப் பரிசாக இந்த அபூர்வ மணியைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்.”

என்றான் சுவர்ணசித்தன். சக்ரதரன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்:

சங்கீதம் பாடிய கழுதை

ஒரு ஊரில் உத்தன் என்ற பெயருடைய கழுதை இருந்தது. அதுவும் பகல் வேளையில் வண்ணான் வீட்டில் பாரத்தைச் சுமந்துவிட்டு இரவில் இஷ்டம் போலச் சுற்றியது. ஒரு தினம் அது இரவில் வயற்காட்டில் சுற்றும் பொழுது ஒரு நரியுடன் அதற்கு நட்பு ஏற்பட்டது. அவை இரண்டும் வெள்ளரித் தோட்டத்தின் வேலியைப் பிய்த்துக் கொண்டு உள்ளே நுழைந்து அதன் காய்களை இஷ்டம்போலத தின்று, பகலில் தங்கள் தங்கள் இடத்துக்குச் சென்றன.

ஒருசமயம் தோட்டத்தின் நடுவில் கர்வத்துடன் நின்ற கழுதை நரியிடம், ‘’ஏ சகோதரி மகனே, பார்! இரவு மிகவும் நிர்மலமாக இருக்கிறது. அதனால் நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன். அதை எந்த ராகத்தில் பாட வேண்டும்?’’ என்று கேட்டது.

நரி ‘’மாமா, நாம் திருட்டுக் காரியத்தில் ஈடுபட்டிருப்பதால்  அது அனர்த்தத்தை விளைவிக்கும்.

திருடனும், காதலனும் சப்தம் செய்யாமலிக்க வேண்டும். தும்மலுள்ளவன் திருட்டுத் தொழிலையும், தூக்கமுள்ளவன் களவாடுவதையும், வியாதியுள்ளவன் நாக்கின் ஆசையையும் (அவர்கள் வாழ விரும்பினால்) விடவேண்டும்.

என்று சொல்லப்படுகிறது. மேலும் உன் சங்கீதமானது சங்க நாதத்தைப் போலிருக்குமேயல்லாமல் மதுரமாக இராது. தூரத்திலிருந்து கேட்டும் தோட்டக் காவலாளிகள் பிடித்துக் கட்டிப்போடுவார்கள் அல்லது அடித்துக் கொலை செய்வார்கள்.  அதனால் பேசாமல் சாப்பிடு’’ என்றது.

அதைக்கேட்டு கழுதை சொல்லிற்று: நீ காட்டில் வசிப்பவனாதலால் சங்கீதத்தின் ருசியை அறியமாட்டாய். அதனால்தான் இப்படிச் சொல்கிறாய்.

‘சரத்கால சந்திரன் இருட்டை விரட்டி காதலியும் அருகிலுள்ளபொழுது தன்யர்களின் காதில் சங்கீதத்தின் ரீங்கார அமுதம் விழுகிறது’ என்று சொல்லப்படுகிறது’’ என்றது கழுதை.

நரி கேட்டது: ‘’மாமா, அது உண்மைதான். ஆனால் உன் கணைப்பு கடூரமாக இருக்கிறது. அதனால் உன் காரியத்தையே கெடுக்கும் காரியத்தால் என்ன பயன்?’’ என்று,

கழுதை சொல்லிற்று: ‘’சீ மூடனே, என்ன, எனக்குச் சங்கீதம் தெரியாதா? அவைகளின் வித்தியாசங்களைக் கேள்:

ஏழு ஸ்வரங்கள், மூன்று கிரமங்கள், இருபத்தொன்று மூர்ச்சனைகள் உண்டு. நாற்பத்தொன்பது தானங்கள், மூன்று லயங்கள், மூன்று மாத்திரைகள், யதிகளுக்கு மூன்று ஸ்தானங்கள், ஆறு ப்ரஸ்தாரங்கள், நவரஸங்கள், முப்பத்தாறு ஸ்வர பேதங்கள், நாற்பது பாஷைகள், சங்கீதத்தில் ஆறுநூற்று எண்பத்தைந்து கீதங்கள், அதனுடைய அங்கங்கள் யாவும் கொண்டதாக ஸ்வரங்களுடன் கூடிச் சுத்தமாக இருக்கிறது.

உலகில் சங்கீதத்தைவிடச் சிறந்த ஒன்றை தேவர்கள் கூடப் பார்க்கவில்லை. முன்பு ராவணன் பரமேஸ்வரனை தந்திகளை மீட்டிப் பாடிச் சந்தோஷப்படுத்தினான்.

ஏன் என்னை நீ ஞானமற்றவன் என்று சொல்லித் தடுக்கிறாய்?’’ என்றது கழுதை.

நரி சொல்லிற்று: ‘’மாமா, அது உண்மைதான். நான் வேலி ஓரத்திலுள்ள துவாரத்திலிருந்து காவலாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ உன் இஷ்டம் போலப் பாட்டுப் பாடு’’ என்றது.

அவ்விதமே செய்தபொழுது கழுதை கழுத்தை உயரத் தூக்கிக் கொண்டு சப்தம் செய்ய ஆரம்பித்தது. உடனே காவலாளிகள், கழுதையின் கனைப்பைக் கேட்டுக் கோபத்தால் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டே குச்சிகளை எடுத்துக்கொண்டு ஓடி வந்து, அதை நையப் புடைத்தனர். அது பூமியில் விழுந்ததும், அது வேகமாக நடக்காமலிப்பதற்காக அதன் கழுத்தில் கனமான கல்லைக் கட்டிவிட்டுக் காவலாளிகள் உறங்கினர். கழுதையும் தன் ஜாதி சுபாவப்படி வேதனையடைந்துவிட கணப்பொழுதில் எழுந்து நின்றது.

நாய்களுக்கும் குதிரைகளுக்கும் விசேஷமாகக் கழுதைகளுக்கும் அடிகளால் உண்டான வேதனை முகூர்த்த நேரத்திற்குப்பின் இருப்பதில்லை.

என்று சொல்லப்படுகிறது.

பிறகு அந்தக் கல்லைத் தூக்கிக்கொண்டே வேலியை நாசம் செய்து விட்டு ஓட ஆரம்பித்தது. இந்தச் சமயத்தில் நரி அதைத் தூரத்திலிருந்தே பார்த்து ஆச்சரியத்துடன்,

மாமா, சங்கீதத்தை நன்றாகத்தான் அறிவாய். ஆனால் நான் தடுத்தும்  நீ நிறுத்தவில்லை. அதனால் அந்தச் சங்கீதத்திற்குப் பரிசாக இந்த அபூர்வ மணியைக் கட்டிக்கொண்டிருக்கிறாய்.

என்று சொல்லிற்று.

அதனால் நீயும் என்னால் தடுக்கப்பட்டும்கூட நிற்கவில்லை’’ என்றான் சுவர்ணசித்தன்.

அதைக்கேட்ட சக்ரதரன், ‘’ஏ நண்பனே, நீ சொல்வது உண்மை. ஆனால் இதுவும் நியாயம்தான்:

எவனுக்குச் சுயபுத்தி இல்லையோ, நண்பனின் வார்த்தையையும் கேட்பதில்லையோ, அவன் நெசவுக்காரன் மந்தரகனைப்போல பணம் யாவற்றையும் இழக்கிறான்.

என்றான் சுவர்ணசித்தன்.

‘’அது எப்படி?’’ என்று கேட்க, சக்ரதரன் சொன்னான்

சுயபுத்தியற்ற நெசவாளி

ஒரு ஊரில் மந்தரகன் என்ற நெசவுக்காரன் இருந்தான். ஒரு சமயம் அவனுடைய தறியின் எல்லாக் கழிகளும் உடைந்தன. அவன்  மழுவை எடுத்துக்கொண்டு கட்டைக்காகச் சுற்றிக்கொண்டு சமுத்திரக் கரையை அடைந்தான். அங்கு ஒரு மரத்தைப் பார்த்து யோசித்தான். ‘’இந்த மரம் பெரியதாகக் காணப்படுகிறது. இதை வெட்டுவதால் நெய்வதற்கு வேண்டிய சாமான்களையெல்லாம் நிறையப் பண்ணலாம்’’ என்று தீர்மானித்து அதன்மேல் மழுவை எறியத் தூக்கினான்.

அந்த மரத்தில் ஒரு தேவதை வசித்தது. அது சொல்லிற்று: ‘’இந்த மரம் என்னுடைய இருப்பிடம். அதனால் இதைக் காப்பாற்ற வேண்டும். ஏனெனில் இங்கு சமுத்திர அலைகளினர் குளுமையான காற்று என் உடலில் பட மிகவும் சுகமாக வசிக்கிறேன்’’ என்றது.

நெசவுக்காரன் சொன்னான்: ‘’தேவதையே அதற்கு நான் என்ன செய்வேன்? மரத்தினால் செய்த உபகரணங்களில்லாததால்  என் குடும்பம் பசியால் வாடுகிறது. அதனால்வேறு எங்காவது சீக்கரமாகப் போய்விடு. நான் இதை வெட்டுகிறேன்’’ என்றான்.

தேவதை சொல்லிற்று: ‘’உன்னிடம் நான் சந்தோஷமடைந்துள்ளேன். உனக்கு ஏதாவது விருப்பமானதைக் கேள். இந்த மரத்தை மட்டும் காப்பாற்று’’ என்றது.

நெசவுக்காரன் சொன்னான்: ‘’அவ்விதமெனில்  என் வீட்டிற்குச் சென்று என் நண்பர்களையும், மனைவியையும்  கேட்டுவிட்டு வருகிறேன்’’ என்றான். தேவதையும் அதற்குச் சரிஎன்று ஒப்புக்கொண்டதும் நெசவுக்காரன் தன் வீட்டை நோக்கிச் செல்வதற்காக ஊருக்குள் நுழையும்பொழுது அவனுடைய நண்பனான நாவிதனைப் பார்த்தான். அவனிடம் கேட்டான்: ‘’ஏ நண்பனே, எனக்கு ஒரு தேவதையின் அருள் கிட்டியுள்ளது. அதனால், சொல்! என்ன வேண்டிக்கொள்வது?’’ என்றான். நாவிதன் சொன்னான்: ‘’அன்பனே, அவ்வித மெனில், ஒரு ராஜ்யத்தைக் கேள். நீ அரசனானால் நான் மந்திரியாவேன். இருவரும் இந்த உலக சுகத்தை அனுபவித்த, பரலோகத்தின் சுகத்தையும் அனுபவிப்போம்’’ எனறான். நெசவுக்காரன் சொன்னன்: ‘’ஏ நண்பனே, அவ்விதமே ஆகட்டும். ஆனால் என் மனைவியையும் கேட்கிறேன்’’ என்றான்.

நாவிதன் சொன்னான்:

‘’வேண்டாம், ஸ்திரீகளுடன் யோசிப்பது நல்லதல்ல. முக்கியமாக ருது காலத்தில் போஜனமும் துணிகளும் கொடு, நகை முதலியவைகளும் பெண்களுக்குக் கொடு. ஆனால், அறிவாளி அவளுடன் கலந்து ஆலோசிக்க மாட்டான்.

எங்கு ஸ்திரீயும், சூதாடுபவனும், குழந்தையும் அதிகாரம் செய்கிறதோ அந்த வீடு நாசத்தை அடைகிறது என்று பார்க்கவமுனி சொல்லியுள்ளார்.

புருஷன் பெண்களின் வார்த்தைகளுக்கு எதுவரை காது கொடாமலிருக்கிறானோ அதுவரையே மதிப்புடன் இருக்கிறான். அதுவரையே அதிகாரியாக இருக்கிறான்.

இந்தப் பெண்களே சுயநலக்காரிகள்தான். கேவலம் தன் சுகத்தில் ஈடுபடுபவர்கள். தன் வயிற்றுப் பிள்ளைகள் கூட தன் சுகத்திற்குப் பின்பே விரயமாகிறார்கள்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றான் நாவிதன்.

நெசவுக்காரன் சொன்னான்: ‘’இவை யாவும் உண்மைதான். இருந்தாலும் அந்தப் பதிவிரதையைக் கேட்கவேண்டும்’’ என்றான்.

இப்படி அவனிடம் சொல்லி வேகமாகச் சென்று மனைவியிடம் சொன்னான்: ‘’அன்பே இன்று எனக்கு ஒரு தேவதையின் அருள் கிட்டி உள்ளது. அது இஷ்டப்பட்டதைக் கொடுக்கிறது. அதனால் நான் உன்னைக் கேட்பதற்காக வந்துள்ளேன். அதனால், சொல்! என்ன வேண்டிக்கொள்வது? என் நண்பன் நாவிதனோ ராஜ்யத்தை வேண்டிக்கொள் என்கிறான்’’ என்றான்.

அவள் பதில் சொன்னாள்: ‘’அன்பனே, நாவிதர்களுக்குத்தான் என்ன புத்தியிருக்கும்? அதனால் அவன் வார்த்தையைக் கேட்காதே.

பாடகன், சந்நியாசி, கீழ்த்தரப்பட்டவன், நாவிதன், குழந்தை, யதிகள், பிக்ஷ¤க்கள் ஆகியோருடன் எப்பொழுதும் யோசனை செய்யக்கூடாது.

என்று சொல்லப்படுகிறது. மற்றொன்று:

மிகவும் கவலையும், பயங்கரமான சங்கடங்களும் உள்ளது அரச பதவி. சமாதானம், சண்டை, இடம் மாற்றல், முற்றுகையிடல், சேர்க்கை, கபடம், முதலியவற்றின் கவலையால் மனிதனுக்கு ஒருபொழுதும் சுகம் என்பதையே கொடுக்காது.

அப்படியே,

எந்த ராஜ்யத்தின் பொருட்டுச் சொந்த சகோதரனும் மகனுமே அரசனைக் கொல்ல விரும்புகிறானோ அந்த ராஜ்யத்தைத் தூரத்தில் தள்ளு.

என்றாள் மனைவி.

நெசவுக்காரன் கேட்டான்: ‘’நீ சொல்வது உண்மையே. பின் சொல். என்னவேண்டுவது?’’ என்றான். அவள் பதிலளித்தாள்:

‘’நீயோ தினந்தோறும் ஒரு துணியை நெய்கிறாய். அதனால் எல்லாச் செலவுகளும் சரிகட்டுகின்றன. இப்பொழுது உனக்கு வேறு இரண்டு கைகளும் மற்றொரு தலையும் வேண்டிக்கொள். அதனால் முன்பும், பின்புமாக ஒவ்வொரு துணி நெய்ய முடியும். இரண்டாவதின் விலையால் விசேஷமான காரியங்கள் செய்வதால் நம் ஜாதியார் மத்தியிலே கௌரவத்துடன் காலத்தைக் கழிக்கலாம்’’ என்றாள்.

அவனும் அதைக்கேட்டுச் சந்தோஷத்துடன் சொன்னான்: ‘’சரி அன்பே, சரியாகத்தான் சொன்னாய். அவ்விதமே செய்கிறேன் இது நிச்சயம்’’ என்றான்.

பிறகு நெசவுக்காரன் சென்று தேவதையிடம் வேண்டினான்: ‘’தேவதையே, நீ விரும்பியதைக் கொடுக்கிறதானால் அப்பொழுது எனக்கு மற்றும் இரண்டு கைகளும் ஒரு தலையும் கொடு’’ என்றான். இவ்விதம் அவள் சொன்ன அந்தக் கணத்திலேயே இரண்டு தலையும், நான்கு கைகளும் அவனுக்கு உண்டாயின. பிறகு அவன் சந்தோஷத்துடன் வீட்டுக்குத் திரும்பும் பொழுது ஊர் ஜனங்கள் ‘’இவன் ராக்ஷஸன்’’ என்று எண்ணி அவனைக் கட்டை, கற்களால் அடித்துக் கொன்றனர்.

அதனால்தான் ‘’எவனுக்குச் சுயபுத்தியில்லையோ…என்று சொல்கிறேன்’’ என்றான் சக்ரதரன்.

சக்ரதரன் மேலும் சொன்னான்: எந்த மனிதனுமே வீணான பேராசை என்னும் பிசாசால் பீடிக்கப்பட்டால் சிரிப்புக்கு இடமாகிறான். இவ்விதம் சொல்வதில் நியாயமிருக்கிறது:

நடக்கக்கூடாத விருப்பத்தில் எவன் மனதைப் பறிகொடுக்கிறானோ அவன் சோமசர்மனின் தந்தைபோல வெளுத்த தேகத்துடன் படுக்கிறான்.

சுவர்ணசித்தன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்:

Series Navigationபாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு