பஞ்சரத்னம்

அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில் எந்தவித பங்கும் இல்லையென்றாலும், பையன் அழும்போதுகூட கலப்படமே இல்லாத சுத்தமான முஹாரி ராகத்தில்தான் அழுவதாகப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தாள். பஞ்சரத்தினமும் சங்கீத ஆர்வலெரெல்லாம் ஒன்றும் இல்லை. அவரின் தாத்தா திருவையாறில் குடியிருந்தபோது இவர் பிறந்ததால் முதல் பேரனான இவருக்குப் பஞ்சரத்தினம் என்று பெயர் வைக்க பஞ்சரத்தினத்தின் அப்பாவிற்கு முதல் குழந்தை பிறந்த ஆண்டே வேலை போய்விடப் பிரித்துப் போட்ட பெயர்ப் பொருத்தத்தில் குடும்பத்திற்கு உடனேயே பஞ்சம் வந்துவிட்டது. இருபது வருடம் பஞ்சப் பாட்டுப் பாடியே ஓடிவிட எப்படியோ ரயில்வேயில் வேலைகிடைத்து, கூட வேலைசெய்பவர்களெல்லாம் அவரை ரத்தினம் என்றே அழைக்க அவர் குடும்பமும் கொஞ்சம் மேலெழுந்து வந்ததாக நாகரத்தினம்மா , அவர்கள் வீட்டில் சர்க்கரை கடன் வாங்கச் சென்ற என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததை நான் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். “அது சரி!இவனுக்கு எப்படி தியாகையன்னு பேர் வச்சேள்?” என்று அம்மா, சர்க்கரையை வாங்கின உடனேயே கிளம்புவது அவ்வளவு நன்றாக இருக்காது என்று ஒரு கேள்வியைக் கேட்டுவைக்க ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்காக பஞ்சரத்தினம் ரயில்வே ஆம்புலன்ஸ் ட்யூட்டியாக தியாகராஜ ஆராதனையின்போது திருவையாறு சென்றிருந்த சமயம் இவன் பிறந்ததையும், பஞ்சரத்தினம் பையன் பிறந்த சேதிகேட்டு ட்யூட்டியைப் பாதியிலேயே விட்டுவிட்டு ரயில்வே ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போதே “தியாகையா!” என்று சந்தோஷத்தில் கத்திக் கொண்டேவந்ததையும் நேற்று நடந்ததுபோல் சொல்லி அப்படி இவர் கூப்பிட்டுக்கொண்டே வந்தபோது , குழந்தை பஞ்சரத்தினத்தைப் பார்த்து சிரித்ததால் தியாகையன் என்ற பெயரையே வைத்துவிட்டதாக ஒரு பெரிய ஆலாபனைக்குப்பின் ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் பாடகி போல நாகரத்தினம்மாள் நிறுத்தி உள்ளே சென்று இன்னும் கொஞ்சம் சர்க்கரையை எடுத்துவந்து என் வாயில் போட்டார்.

தியாகையன் குடும்பம் தெலுங்கு பேசும் குடும்பம். தெலுங்கு என்றால் சுத்தத் தெலுங்கெல்லாம் கிடையாது. ” ஏமி” “ச்சேசி” ரேபு” “ஆவணு ” ” இப்புடு” “ஒஸ்தானு” போன்ற சில தெலுங்கு வார்த்தைகளை அதிக அளவில் கலந்து பேசும் தமிழ்தான் அவர்களது தெலுங்கு. தியாகையனின் அப்பா பஞ்சரத்தினத்திடம், அவர்கள் குடும்பம் முற்காலத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு ஏதோ விதத்தில் சொந்தம் என வீட்டிற்கு வந்த உறவினர் சொல்லிவைக்க, தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் கறுப்பு வெள்ளை ஃபோட்டோவில் மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் இடையே இருந்த கொஞ்சூண்டு இடைவெளியில் தன்னால் இயன்ற அளவு கறுப்பாகப் பெரிய மீசை வரைந்து சிவாஜிகணேசனின் கட்டபொம்மன் படத்தோடு ஒப்பீடுசெய்து பெருமை பொங்கப் பலவித கோணங்களில் பார்த்துக் கொண்டிருந்ததோடில்லாமல் அது தந்த வீர உணர்வில் கால்வீசி கம்பீரமாக நடந்தபோது கால்தடுக்கி விழுந்து வலதுகாலில் ஃப்ராக்ச்சராகி ஒருமாதம் நடக்க முடியாமல் படுத்திருந்தார். அதுவும் ஒருவிதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அப்போதுதான் தன் மைந்தனின் சங்கீத ஆர்வத்தையும் அவன் முறையாகச் சங்கீதம் கற்றால் எந்த உயரத்துக்குப் போகமுடியும் எனவும் அவரால் உணரமுடிந்தது.

தியாகையனின் வீடு ரயில்வே காலனியின் மையத்தில் இருக்கும் சந்தையின் கீழ்ப்புறத்தில் செல்லும் ரோட்டை ஒட்டி அமைந்த ப்ளாக்கில் முதலாய் அமைந்த வீடு. சந்தை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் இலவச இணைப்பாக ஒவ்வொரு மாதமும் ஒர்க் ஷாப்பின் சம்பள நாளிலும் கூடும். காய்கறிகளுக்கென தனி இடமும் புளி பருப்பு மற்றும் தான்யங்களுக்கென தனி இடமும், மீன் மட்டன் போன்ற அசைவ வகைகள் ஒரு இடத்திலும் பிரிந்து ஒரு அசாத்திய ஒழுங்குடன் இருக்கும். மாடுகளுக்கென வைக்கோல், புல் இவைகூட மேற்கு மூலையில் விற்கப்படும். ஆனால் எங்களுக்குப் பிடித்ததெல்லாம் கீழ்ப்புறத்தில் கார்ப்பெண்டர் இழைப்பதுபோல் ஐஸ்கட்டிகளை இழைத்துத் தூவிவிற்கும் ஜிகிர்தண்டாவும் பல வண்ணங்களில் கலக்கிக் கொடுக்கப்படும் சர்பத்தும்தான். சம்பள சந்தையில் விசேஷமாக ” பீம புஷ்டி அல்வா” விற்பனை செய்யப்படும் இடம் களைகட்டி இருக்கும் . ஏதோ மேடைக் கச்சேரி நடக்கப் போவதுபோல் அமைக்கப்பட்ட பலகை போட்ட மேடையின்மேல் தார்ப்பாலின் கூரையிட்டு நான்கு மூலைகளிலும் ட்யூப் லைட் வெளிச்சம் வழிய ஒரு பெரிய பீமன் படம் வரைந்த ஃபோட்டொவை ஃபோகஸ் லைட் தெறிக்க வைத்து, பீமன் படத்தின் முன்னால் ஒரு சிறு குன்றுபோல் அல்வாவைப் பீமனுக்கே படையலிடப் பட்டது போல் வைத்திருப்பான் கடைக்காரன். பீமன் ஒரு கையில் கதையும் இன்னொரு கையில் நாம் எந்தக் கதையிலும் கேள்வியே பட்டிராதவாறு ஒரு பட்டாக்கத்தியும் வைத்திருப்பான். ஃபோகஸ் லைட் வெளிச்சத்திலும் ட்யூப் லைட்வெளிச்சத்திலும் மெரூன் மஞ்சள் அல்வா பெயர் தெரியாத பருப்புகள் பொதிந்து நாம் பார்க்கக்கூடிய முன்பக்கம் மாத்திரம் ஜொலிஜொலித்து மினுங்க எங்கள் வாய்களில் ஜலம் குடகின் ஊற்றுபோல் பெருகும். கடைக்காரன் ஃபோட்டோ பீமனின் கையிலுள்ள, புராணங்களுக்கு அப்பாற்பட்ட பட்டாக்கத்தியின் உண்மை வடிவத்தைக் கையில்கொண்டு, வாங்குவோருக்கு அல்வாவை அவன் வெட்டிக் கொடுக்கும் அழகே தனியாக இருக்கும். ஆனால் எங்கள் அப்பா ஒருமுறைகூட பீம புஷ்டி அல்வா வாங்கிக் கொடுக்காத நிலையில் தியாகையனின் அப்பாதான் கால் ஒடிந்து படுத்திருக்கும்போது அந்த எங்களின் கனவுத் தின்பண்டமான அல்வாவை என்னை வாங்கிவரச் சொல்லித் தியாகையனையும் கூட அனுப்பினார். அல்வாவை வாங்கி அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிவருவதுபோல எடுத்துவரும்போதுதான் சந்தையில் பாடிக்கொண்டிருந்த ஒரு தெலுங்குப் பாடகன் தியாகையன் தவறுதலாக என்னிடம் உதிர்த்த இரண்டு மூன்று தெலுங்கு வார்த்தைகளைக்கேட்டு எங்கள் பின்னாலேயே துரத்திக் கொண்டு தியாகையன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

தியாகையன் வீட்டு வாசல்முன் நாங்கள் விரட்ட விரட்ட அகலாது நின்ற அந்தத் தெலுங்குப் பாடகன் திடீரென்று ” எந்தரோ மஹானு பாவுலு ” என்று மனமுருகிப் பாட அந்தப் பாடலைத் தியாகராஜ ஆராதனையில் ஆம்புலன்ஸ் ட்யூட்டியில் இருக்கும்போது கேட்டு மயங்கியிருந்த பஞ்சரத்தினம் மீண்டும் மனம் மயங்கிக் கேட்டு அந்தப் பாடகனை வீட்டிற்குள் வரச்சொல்லி அவனைப் பற்றி விசாரித்து அவனுக்குச் சாப்பிடக் காசுகொடுத்து அனுப்பிட தியாகையனின் அம்மாவை அழைக்கும்போது , தியாகையன் அதேபாடலை மிகுந்த பக்தியுடன் கள்ளக்குரலில் பாடிக்கொண்டிருக்க அந்தத் தெலுங்குப் பாடகன் தியாகையனை உரத்த குரலில் பாடுமாறு பணித்தபோதுதான் தியாகையனுக்குள் புதைந்திருந்த சங்கீத அறிவு வெளிவந்தது. ” அந்தரீகி வந்தனமுலு ” என ஒரு நிலையில் பாடலைத் தியாகையன் முடித்துக்கொள்ள, தெலுங்குப் பாடகன் அவனை ஆசிர்வதித்துத் தியாகையனுக்கு முறையாகச் சங்கீதம் சொல்லித்தந்தால் நல்ல பாடகனாக அவன் வரமுடியும் எனச் சுந்தரத் தெலுங்கினில் பஞ்சரத்தினத்திடம் செப்பிக் கிளம்பும்போது நான் என் கையில் ஒட்டிக் கொண்டிருந்த அல்வாவை என் காணிக்கையாக அவனுக்குக் கொடுத்தேன்.

பக்கத்திலிருந்த மாரியம்மன் கோவிலில் மார்கழி மாதத்தில் அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோவில் திறப்பதற்கு முன்னாலேயே பாட்டு போட்டுவிடுவான் சவுண்ட் சர்வீஸ் பையன் . அதைக் கேட்டுவிட்டுத்தான் கோவில் அர்ச்சகரே குளிக்கப்போவார். அப்படி நாலு மணிக்குப் பாட்டுப் போடச் சொன்னது கோவில் ட்ரஸ்டி வாத்தியார்தான். வாத்தியார் என்றால் பள்ளிக்கூட வாத்தியார் இல்லை. குஸ்தி வாத்தியார். அப்படி நாலு மணிக்கு ஆரம்பித்து வினாயகர் , முருகன் மாரியம்மன், கண்ணன் மற்றும் ஐயப்பன் மேலெல்லாம் டி.எம்.எஸ்., சீர்காழி, எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா இவர்கள் பாடிய பாடல்கள் பத்து இருபதைப்போட்டு முடித்தால், அதன்பின் வாத்தியாரின் பெண்ணும் மற்றும் அவள் தோழிகளும் ஒருமணி நேரம் கச்சேரி செய்ய சரியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. குஸ்தி வாத்தியாரின் ஒரே பெண் ராஜேஸ்வரி அதுபாட்டுக்கு பூமி அதிர நடந்து பள்ளிக்கூடத்திற்கும் சினிமாக் கொட்டகைக்கும் போய்வந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பெண் ரமா, வாத்தியார் வீட்டில் புதிதாக வாங்கிய டேப் ரெக்கார்டரில் தொடர்ந்து பாட்டு கேட்கும் ஆசையில் பேரிங்க் போன மாவு மெஷினின் மயிர்க் கூச்செறிய வைக்கும் சத்தத்தை ஒத்த வாத்தியாரின் பெண் ராஜேஸ்வரியின் குரலை அடாவடியாகக் குயிலின் குரல்போல் இனிமையாக இருப்பதாகவும் டேப் ரெகார்டரில் பாடல்களைக் கேட்டு ப்ராக்டிஸ் செய்தால் சினிமாவில் எஸ். ஜானகியின் இடத்தைப் பிடித்துவிடலாம் எனச் சொன்னதை நம்பி வீட்டையே டீக்கடை ஆக்கியிருந்தார் வாத்தியார். போதாக் குறைக்கு கோவிலில் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்த முப்பிடாரியை மிரட்டி ராஜேஸ்வரிக்குக் கர்னாடக சங்கீதத்தையும் ஊட்டிக்கொண்டிருந்தார். கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த மூன்று மாதங்களிலேயே மார்கழி மாதம் குறுக்கிட ராஜேஸ்வரியின் அரங்கேற்றத்தில் மாரியம்மனே நடுங்கிப்போயிருந்தாள். கோவிலின் சுற்று வட்டாரமே மாரியம்மனை விட்டுவிட்டு சவுண்ட் சர்வீஸ் பையனிடம் முறையிட்டு எப்படியாவது மைக்கில் கோளாறு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொன்னதை அவனால் செய்யமுடியவில்லை. வாத்தியாரிடம் பணம் வாங்க முடியாமல் போனால்கூடப் பரவாயில்லை . யார் அடி வாங்கிச் சாவது?

அப்படி ஒரு சூழ்நிலையில்தான் தியாகையனும் மாரியம்மன் கோவிலில் மார்கழிக்குளிரில் பாட சந்தர்ப்பம் கேட்டு வாத்தியாரிடம் நின்றான். அவன் வாத்தியாரிடம் அப்படி வாய்ப்பு கேட்ட நாளில் ராஜேஸ்வரியால் கோவிலுக்கு வரமுடியாமலும் போயிருந்தது. வாத்தியாரும் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் மாணிக்க வினாயகம் ஜட்ஜாக உட்கார்ந்திருந்ததுபோல் வெற்றிலை சிவந்த நாக்கைச் சுழற்றிவிட்டு ” ஒரு பாட்டு படிடே, கேட்போம் ” என்ற உடனேயே “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் ” என்று தியாகையன் தனக்குப் பிடித்த பாட்டை நன்றாகவே பாடிக்காட்ட, வாத்தியார் தியாகையனுக்கு சான்ஸ் கொடுத்தால், அது தன் பெண் ராஜேஸ்வரியின் ” ப்ரைம் டைம் ” வாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும் என சட்டென உணர்ந்து அடுத்த வருடத்தில் நிச்சயம் கோவிலில் பாடலாம் எனவும் அதற்குமே இன்னும் அதிகப் பயிற்சி அவனுக்குத் தேவை எனவும் ஒரு அநியாய ரிசல்ட்டை அறிவிக்க, தியாகையன் ஸ்லோ மோஷனில் துக்கம் பொங்கும் முகத்துடன் வீட்டிற்குப் போனான்.

வருட ஆரம்பத்தின் முதல் சில தினங்களிலேயே என் அம்மாவிற்குக் கோபம் வரும் அளவிற்கு எங்கள் வீட்டிலேயே இருந்த அத்தை ஏதோ சொல்லிவிட, அம்மாவின் அப்பா சீனிவாசய்யரின் சங்கீத ரத்தம் ஓடும் அவள் உடம்பில் அன்று அந்த ராக நிரடல் சற்றே அதிகமாக திருவையாற்றில் அப்போது நடந்துகொண்டிருந்த தியாகராஜ ஆராதனைக்குக் கிளம்பிவிட்டாள். அன்று ஏனோ சீக்கிரம் குளித்துவிட்டுக் கோவிலில் பொங்கல் வாங்கப் போய் கும்பலில் மாட்டிக்கொண்டு குட்டையாய் இருந்த காரணத்தால், பெரிய பையன்கள் வாங்கும்போது வழிந்த பொங்கலின் சூடான துளிகள் மூக்கிலும் உதட்டிலும் பட்டிருந்ததை மட்டும் துடைத்து வாயில் போட்டுக்கொள்ளக் கிடைத்ததை எண்ணி வருத்தத்தில் இருந்த என்னை, ” வாடா போகலாம் ” என்று தர தரவென்று இழுத்துக்கொண்டுபோனாள். நாங்கள் பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது ” நானும் வருவேன் ” என்று மூஞ்சி முழுக்க பவுடர் பூசிக்கொண்டு அழுதுகொண்டே வந்த என் தம்பியின் முகத்தைத் துடைத்துவிட்டுக்கொண்டே ” எல்லாம் அந்த கைகாரி பண்ற வேலை ” என்று சொல்லும்போதே அத்தைமீது வந்த கோபத்தை அடக்க முடியாது தம்பியின் முதுகில் ஓங்கி ஒன்று கொடுத்தாள். அதன்பின் அவன் உச்சஸ்தாயியில் வெகு நேரம் அலறிக்கொண்டிருந்ததை நிறுத்தப் படாதபாடு படவேண்டியிருந்தது. அதே பொழுதினில், நாகரத்தினம்மாவும் தன் பையன் தியாகையனின் மனவருத்தத்தைப் போக்கத் திருவையாற்றிற்கு செல்லும் நோக்குடன் பஸ் ஸ்டாண்ட் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.

திருவையாற்றில் நானும் என் தம்பியும் காவிரிக் கரையிலும் தியாகராஜரின் சமாதி அருகிலும் அந்தச் சூழலின் எழிலோ, நாள் முழுக்க அந்த இடத்தின் காற்றைப் பல இசை விற்பன்னர்கள் பக்திகுழைந்த குரல்களிலும் பல்வேறு வாத்யங்கள்கொண்டும் நாதமயமாக்கிக் கொண்டிருந்ததோ எதுவும் பாதிக்காது எங்கள் உலகத்தின் விளையாட்டில் திளைத்திருக்க, தியாகையன் மட்டும் என் அம்மாவின் அருகில் உட்கார்ந்து சலிக்காமல் மாற்றி மாற்றிக் கேட்கக் கிடைத்த சங்கீதத்தை அவன் வயதுக்குப் பொதுவாக வாய்க்காத உற்சாகத்துடன் பருகிக்கொண்டிருந்தான். திரும்பி ஊர் வரும் வரை நாகரத்தினம்மாவிடம் என் அம்மா தியாகையனின் சங்கீத ஆர்வம் பற்றியே பேசிக்கொண்டு வந்தாள். எல்லோரும் தியாகையன் ஒரு மகத்தான உயரத்தை சங்கீதத்தில் தொட்டுவிடுவானென நம்பியிருக்க, அவனுக்குச் சொல்லிக் கொடுக்க சரியான குருவைத் தேடிக்கொண்டிருந்தார் பஞ்சரத்தினம்.

தியாகையனைப் போலவே எங்கள் பள்ளிக்கூடத்தில் படித்துவந்த ஸ்ரீதருக்கும் பாட்டு நன்றாக வந்தது. ஸ்கூலின் மத்தியான இன்டர்வெல்லில் இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் பாட்டுப் போட்டி அடிக்கடி நடக்கும். அகஸ்தியர் படத்தில் வரும், ” நமசிவாய எனச் சொல்வோமே ” என்ற பாட்டை ஸ்ரீதர் ஆரம்பிக்க ” நாராயணா எனச் சொல்வோமே ” எனத் தியாகையன் தொடர இதுபோல் இரண்டு பேர் பாடும் பாடல்களைத்தான் இவர்கள் பாடுவார்கள். நடுவில் வரும் ம்யூஸிக் மற்றும் தாளத்தை குண்டு கணேசன் என்பவன் கவனித்துக்கொள்ள நாங்கள் அவ்வப்போது நாத வெள்ளத்தில் திளைப்போம். இப்படி ஒருமுறை மத்தியான இடைவேளைவரைக் காத்திருக்க முடியாது ” டி. ட்வெண்டி” போல ஒரு அவசரப் போட்டியை குண்டு கணேசன் அறிவிக்க இரண்டு பீரியட்ஸுக்கு நடுவிலேயே ” வென்றிடுவேன் , உன்னை வென்றிடுவேன் ” என்று இருவரும் சங்கீத மஹா யுத்தத்தை ஆரம்பிக்க, குண்டு கணேசன் நாக்காலேயே வீணை நரம்புகளை அதிவேகமாக மீட்டி பாடலின் முடிவாக ஒவ்வொரு நரம்பும் அறுந்துபோவதைத் தத்ரூபமாய் செய்துகொண்டிருந்து அவனே அந்தப் போட்டியின் நாயகனாய் வித்தை காட்டிகொண்டிருந்ததில், கணக்கு வாத்தியார் வந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை. அவரும் எல்லாப் பசங்களும் ஒரே கும்பலாய் ஓரிடத்தில் எட்டிப் பார்ப்பது என்னவாய் இருக்கும் என ஆச்சர்யப் பட்டு, குண்டு கணேசனின் நரம்பு வித்தையின் சத்தத்தில் அவனுக்குக் காக்காய்வலிப்பு வந்துவிட்டதோ எனக்கலவரப்பட்டு அவரே பென்ச் மீது ஏறி எட்டிப்பார்த்ததில் உண்மை தெரியவர எங்கள் எல்லோரையும் க்ளாசுக்கு வெளியே நிறுத்தி மண்டி போடவைத்துவிட்டார். அத்தோடு பாட்டுப்போட்டி எல்லாம் நின்றுபோக தியாகையன் பாடுவதைக் கேட்க நான் ஸ்கூல் டே வரைக் காத்திருக்க வேண்டியிருந்தது. நடுவில், தியாகையன் சங்கீதம் கற்றுக்கொள்ள வாரம் மூன்று முறை ஸ்ரீரங்கம் போய் வந்து கொண்டிருந்தான்.

காலவெள்ளம் எங்கள் குடும்பத்தை வேறு திசையில் இழுத்துச் சென்றதில், தியாகையனும் அன்பு மிகுந்த அவன் தாய் நாகரத்தினம்மாவும் தியாகையனை சங்கீத சாம்ராட்டாக ஆக்கிவிடத் துடித்துக்கொண்டிருந்த அவன் தந்தை பஞ்சரத்தினமும் எங்கள் ஞாபகத்திலிருந்து விலகிப்போனார்கள். பல வருடங்களுக்குப் பின் எனக்கே சங்கீதத்தின்மீது காதல்வர, தியாகராஜ ஆராதனை நடக்கும் சமயம் திருவையாறு போனபோது என்னை அடையாளம் கண்டுகொண்ட தியாகையன் காக்கி யூனிஃபார்மில் இருந்தான். ” என்னடா இது, சங்கீதம் உனக்குக் காவலா இருக்கும்னு நினைச்சுண்டிருந்தோம். ஆனா, நீ இப்படி சங்கீதத்துக்குக் காவலா காக்கி போட்டுண்டு நிக்கறீயே !” என ஆச்சர்யமும் , துக்கமும் தாங்காது அம்மா கேட்டபோது, அவன் தந்தை பஞ்சரத்தினத்தின் அடிபட்ட வலது கால் விளங்காது போனதையும், அவர் வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிக்கொண்டதில் இவனுக்கு ஒர்க் ஷாப்பில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்ததையும் இப்போது செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் ட்யூட்டியில் திருவையாறு வந்திருப்பதையும் சொல்லிக்கொண்டிருக்கும்போது பஞ்ச ரத்ன கீர்த்தனையை சங்கீத சதஸ் பாட ஆரம்பித்திருந்தது.

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5மார்கழி காதலி