படைப்பு

Spread the love

        

கலீல் ஜிப்ரான்

தமிழாக்கம் : ஞானம்.

கடவுள் தன்னிடமிருந்து ஒரு ஆன்மாவைப் பிரித்து

அழகுற வடிவமைத்தார் அவளை.

அனைத்து அன்பையும் நளினத்தையும் அவள் மீது

பொழிந்து ஆசீர்வதித்தார்.

அவளிடம்  மகிழ்வெனும் கோப்பையைக் கையளித்துச் சொன்னார்,

” கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்து போனாலொழிய

இந்தக் கோப்பையிலிருப்பதை அருந்தாதே ! ஏனெனில்

மகிழ்ச்சியென்பது எங்கோ அப்பால் இல்லை

இக்கணத்தில்தான் இருக்கின்றது.”

அவளிடம் துயரெனும் வேறொரு கோப்பையைக்

கையளித்துச் சொன்னார்:

“ இந்தக் கோப்பையில் இருப்பதை அருந்து !

வாழ்வில் இன்பமெனும் நிகழ்வு

அலை போல் வந்துவந்து போவதன்

அர்த்தத்தைப் புரிந்து கொள்வாய். ஏனெனில்

துயரம் எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்துள்ளது

கடல் நீரைப்போல.”

பூவுலகின் மீதான திருப்திப் பெருமூச்சை

அவள் எப்போது வெளிவிடுகிறாளோ அப்போது

அவளை விட்டு அகலுவதான அன்பினையும்

முதன் முதலாக புகழ்ச்சி ( முகஸ்துதி )  என்பதில்

எப்போது மயங்கிப் போகிறாளோ அப்போது

அவளிடமிருந்து முற்றிலுமாக அகன்று போகும்

இனிமையையும் கடவுள் கையளித்தார்.

எல்லாவற்றிலும் சரியான பாதையில்

எப்போதும் நடப்பதற்கான ஞானத்தையும்

எல்லாவற்றின் மீதான அகலாத பாசத்தையும்

அவளது நெஞ்சகத்தின் ஆழத்தில் புதைத்து

புறக்கண்களால் காண முடியாதனவற்றைத் தரிசிக்கும்

ஞானக்கண் ஒன்றினையும் சுவர்க்கத்தில் இருந்து

கருணையுடன் பரிந்தளித்தார்.

நம்பிக்கை எனும் நூல் கொண்டு

வான வில்லின் வனப்பிலும் மென்மையிலும்

தேவதைகள் புனைந்த மெல்லியபட்டாடைகளை

அணிவித்தார் அவளுக்கு.

இருத்தலுக்கும் விடியலுக்குமான

நிழல் கொண்டு போர்த்தினார் அவளை.

பின்னர். . . . .

கொழுந்து விட்டெரியும் கோபத்திலிருந்து

சுட்டெரிக்கும் தீயினையும்

அறியாமை எனும் பாலையிலிருந்து

சுழன்றடிக்கும் புயலையும்

சுயநலம் எனும் கடற்கரையிலிருந்து

குத்திக்கிழிக்கும் மணற்றுகள்களையும்

காலங்களின் பழமையினின்று களி மண்ணையும் எடுத்து

அனைத்தும் சேர்த்து

வடிவமைத்தார் ஆண் மகனை.

ஆசைகளை அடைவதனால் மட்டும்

அணையும் தீயான குருட்டு தைரியத்தை

அளித்தார் அவனுக்கு.

வைத்தார் அவனுக்குள் மரணத்தால்

விளிம்பிடப்பட்ட உயிர்ப்பினை.

 

உரத்துச் சிரித்தார் கடவுள்  . . . .

மனிதன் மீது தளும்பி வழியும்

அன்பினையும் இரக்கத்தினையும் கொண்டு

இருத்தினார் தனது வழிகாட்டலின் கீழ்.    21.6.2013.

Series Navigationமொழியின் அளவுகோல்