பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்

Spread the love

என் செல்ல செல்வங்கள் – பதிவர் துளசி கோபால் அவர்களின் புத்தகம்.

எழுதுவதற்கு விஷயங்கள் எத்தனை  எத்தனை   உள்ளன ! தான் வளர்த்த செல்ல பிராணிகள் குறித்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று நினைத்த அந்த  எண்ணத்துக்கு முதல் வணக்கம் !

சிறு வயதில் வளர்த்த மணி வாத்து நீரில் மூழ்கி இறந்ததில் துவங்குகிறது பயணம். கிட்ட தட்ட 19  வளர்ப்பு பிராணிகள். நாய்கள், புறாக்கள், பூனைகள் என..

ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எனக்கு புத்தகத்தில் முதல் பகுதி தான் வெகுவாக பிடித்தது. காரணம் நாய்கள் குறித்த பகுதி முதல் பாதிக்குள் முடிந்து விடுகிறது. இரண்டாம் பகுதி முழுதும் பூனை தான் ராஜ்ஜியம் செய்கிறது ! துளசி மேடம் கூட ஒரு இடத்தில் எனக்கும் மிக பிடித்த பிராணி நாய் தான் என்கிறார். அவை மிக அறிவு மிக்கவை. நாம் சொல்வதை அப்படியே புரிந்து கொள்ளும். அன்பை காட்டுவதிலும் அவற்றை மிஞ்சவே முடியாது.

ஒவ்வொரு செல்லம் துளசி மேடமிடம் வரும்   கதை சுவாரஸ்யம். ஒன்று கூட எங்கிருந்தும் வாங்காமல், தானாகவே அவர்கள் வீட்டு வாசலுக்கோ அல்லது பூனை என்றால் வீட்டுக்குள்ளோ வந்து விடுகின்றன. துளசி மேடமின்  கணவர் கோபால் கேரக்டர் மிக சுவாரஸ்யமாக விரிகிறது. “ஏன் இதையெல்லாம் வளர்க்கிறே? இனிமே ஒண்ணும் உள்ளே வர கூடாது” என்று ஒரு பக்கம் சொன்னாலும், பின் தானும் அவற்றுடன் சேர்ந்து அவற்றுக்கான  வேலைகள் செய்வதை சிரிக்க சிரிக்க சொல்கிறார்.

புத்தகம் முழுதும் அவர் நம் அருகில் அமர்ந்து பேசும் பாணியில் தான் எழுதப்பட்டிருக்கு. முழுக்க முழுக்க பேச்சு தமிழ் தான். இதுவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது

ஒவ்வொரு செல்லமாக இறப்பது வாசிக்கும் நமக்கே கஷ்டமாக உள்ளது எனில் வளர்த்தவர்களுக்கு எப்படி இருக்கும் ? அதிலும் ஒரு பூனைக்கு ஹெச். ஐ. வி வந்து அதன் பின்னும் வளர்த்து இனி பிழைக்காது என்கிற நாள் வரை வைத்து பார்த்தது நெகிழ்வு.

செல்ல பிராணிகள் பற்றிய தொகுப்பு எனினும் அது துளசி – கோபால் என்கிற இரு மனிதர்களின் வாழ்க்கையை, அவர்கள் வாழ்க்கை பயணத்தை ஒரு பக்கம் சொல்லி செல்கிறது. அவர்களுக்கு குழந்தை பிறக்க பல வருடங்கள் ஆனது, அப்போது செல்லங்களே துணையாய் இருந்தது, பின் மகள் பிறந்தது, ஒவ்வொரு ஊராக மாறியது என வாழ்க்கை விரிகிறது

முதன் முதலில் இந்தியாவில் டிவி வந்த காலத்தில் தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் மட்டுமே டிவி இருக்கும். அவர் வீட்டுக்கு போய் தான் மற்றவர்கள் பார்ப்போம். அப்படி மற்றொரு வீட்டில் ஒரு விம்பிள்டன் பைனல் இரவு முழுதும் பார்த்த கதை- பின் தாங்களே டிவி வாங்கிய பின் தெரு முழுதும் இவர்கள் வீடு வந்து டிவி பார்த்தது என சுவையான பிளாஷ்பேக்.

தனக்கு ஒரு ஆப்பரேஷன் ஆகி இரண்டு வாரம் தன் செல்ல நாய் ச்சிண்டுவை பிரிந்து இருந்ததும், அப்போது அவரை பார்க்க முடியாமல் அது கஷ்டப்படதையும் பின் வீட்டுக்கு வந்த பின், அவரை விட்டு ச்சிண்டு எங்கும் போகாமல் அருகிலேயே அமர்ந்து கொண்டதும் சொல்லும் இடம் நெகிழ்வு

இவர்கள் தான் எத்தனை முறை வீடு மாறியிருக்கிறார்கள்? “வீடு மாறும் அனுபவம் எங்களுக்கு பிக்னிக் போற மாதிரி” என  வீடு மாற எப்படி தயார் ஆவது என அசால்ட்டாக சொல்கிறார். செம காமெடியாய் உள்ளது

நிறைவாக: இந்த புத்தகம் ஒரே மூச்சில் படிக்க கூடிய புத்தகம் அல்ல. சில அத்தியாயங்கள் படித்து முடித்ததும் செல்லம் ஒன்று மரித்து விட, நமக்கும் மனது கனத்து போகிறது. இதனால் ஒரு நாளைக்கு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசிக்க வேண்டும் என்பது என் பரிந்துரை

செல்ல பிராணிகள் வளர்ப்போர் – மிக ரசிக்கவும், வளர்க்காதோர், அவை வளர்ப்பதில் உள்ள சிரமங்களை அறியவும் உதவும் இந்த புத்தகம் !
*****
புத்தகம்: என் செல்ல செல்வங்கள்
பதிப்பகம்:சந்தியா பதிப்பகம்
விலை: 80
பக்கங்கள்: 152

Series Navigationஓரு கடிதத்தின் விலை!தில்லிகை