பழமொழிகளில் தெய்வங்கள்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை பாழ்பட்டுவிடும்.நம்பிக்கை அதீதமாகவும் இருப்பது துன்பந்தரும். ஆனாலும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது. இந்நம்பிக்கையில் பெரும்பாலோரிடத்த்து அதிகமாகக் காணப்படுவது தெய்வங்கள் குறித்த நம்பிக்கையே ஆகும். தெய்வ நம்பிக்கை மனிதன் மனிதனாக வாழ உறுதுணையாக அமைகிறது. இவ்விறை நம்பிக்கை வாழ்க்கையில் மனிதனுக்கு மனச் சோர்வு ஏற்படாது காக்கின்றது.

தெய்வ நம்பிக்கை தளரிக்னறபோது மனிதன் தன்னம்பிக்கையை இழக்கின்றான். தன்னப்பிக்கையை மனிதன் இழக்கின்ற நிலையில் விரக்தியின் விளம்புநிலையைத் தொட்டுவிடுகின்றான். மனிதன மனத்தின் விரக்தியை விரட்டும் ஒப்பற்ற நம்பிக்கையாகத் தெய்வ நம்பிக்கையானது திகழ்கிறது.

தவறும் எண்ணம் உடையவனாக இருப்பவனும் தவறு செய்வோனும் தெய்வ நம்பிக்கையால் நல்வழிப்படுத்தப்படுகின்றனர். நமது முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகத் தெய்வங்களைப் பற்றிக் கூறி அதன்வழி வாழ்வியல் நெறிகளை எடுத்துரைத்துள்ளனர்.

பிள்ளையார் – குரங்கு

அனைத்துக் கடவுளர்களுக்கும் முழுமுதற் பொருளாகவும், முழுமுதற்கடவுளாகவும் விளங்குபவர் பிள்ளையார் ஆவார். அவரே கணத்திற்குத் தலைவராக விளங்குவதால் கணபதி என்றும் விநாயகன் என்றும் அழைக்கப்படுகின்றார். மக்கள் அனைவரும் எந்தச் செயலையும் தொடர்வதற்கு முன்பாகப் பிள்ளையாரை, மண், மஞ்சள், பசுவின் சாணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு உருவாக்கி வணங்கி வழிபடுவர்.

அதன் பின்னர் தங்களின் செயல்களைத் தொடங்குவர். சில சமயம் இப்பிள்ளையாரை உருவாக்கும்போது அனுமனைப் போன்றதொரு உருவம் ஏற்பட்டுவிடுவதுண்டு. அதுபோல நாம் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய அது வேறொன்றில் போய் முடிந்து சிக்கலை உருவாக்கும். இதனால் பல்வேறு துன்பங்கள் ஏற்படும். இத்தகைய சூழலை,

‘‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதைதான்’’

என்ற பழமொழி விளக்குகிறது.

சுக்கு – சுப்பிரமணியம்

விநாயகருக்கு இளையவர் சுப்பிரமணிகக் கடவுளான முருகன் ஆவார். இவரைக் கந்தன், கடம்பன், கார்த்திகேயேன், தண்டபானி என்று பல்வேறு பெயர்களில் கூறுவர். வேழமுகத்தோனைான விநாயக் பெருமானுக்கு இளைவர் முருகப் பெருமான் ஆவார். சிவனுடைய நெற்றியில் தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கயைில் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பெற்றவர். தந்தைக்கே உபதேசம் செய்து சுவாமிநாதனாக விளங்குபவர்.

வேதங்கள், ‘‘சுப்பிரமண்ய ஓம்!, சுப்பிரமண்ய ஓம்!, சுப்பிரமண்ய ஓம்!’’ என்று மூன்று முறை கூறுகின்றன. இவர் அனைத்துத் தெய்வங்களிலும் நிறைந்திருப்பவர். ஞான வடிவாய் அஞ்ஞான இருளை அகற்றி அழகுருவாய்த் திகழ்பவர். இவரின் பெருமையை,

‘‘சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்லை

சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

அனைத்து மருந்துகளிலும் கலந்திருப்பது சுக்கு. திரிபாலை, முப்பாலை சூரணங்கள் ஏலாதி, பஞ்சமூலங்கள் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பது சுக்கே ஆகும். சுக்கினைச் சர்வரோக நிவாரணி என்று சித்த மருத்துவத்தில் கூறுவர். அதுபோன்றே சுப்ரமண்யராகிய முருகப்பெருமானும் அடியவர்களின் அனைத்துத் துன்பங்களையும் போக்கக் கூடியவராக விளங்குகிறார். அத்தகைய மயில் வாகனனின் பெருமையையும் அருள் தன்மையையும் உணர்த்துகின்ற வண்ணம் இப்பழமொழி அமைந்துள்ளது.

முருகனாகிய கந்தன் மயில் மீது ஏறி விளையாடுவதில் அதிவிருப்பம் உள்ளவன். அதனாலேயே முருகப் பெருமானை மயிலோன், மயில் வாகனன் என்று பெயரிட்டு அழைப்பர். திருப்புகழில் இடம் பெற்றுள்ள மியல் விருத்தம் இதற்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது. இத்தகைய முருகனின் விருப்பத்தை விளக்குவதாக,

‘‘கந்தனுக்குப் புத்தி கவட்டிக் குள்ளதான்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

கந்தன் பாலமுருகனாவான். அப்பாலன் மயில் மீது ஏறி இருபக்கமும் கால்களைப் போட்டு உலகசை் சுற்றிவருவான். இதனைக் கவட்டிக்குள் என்பது உணர்த்துகிறது. இருசக்கர வண்டியில் ஏறும்போது இருகால்களையும் வண்டியின் இருபக்கமும் போட்டு ஏறி உட்கார்ந்து அவ்வண்டியை ஓட்டுவோம். அதுபோன்று முருகன் மயில் மீதமர்ந்து விளையாடுவார் என்று முருகப் பெருமானின் விருப்பமான விளையாடலை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

கந்த சஷ்டி நோன்பு

முருகப் பெருமானுக்கு உகந்த நோன்பு சஷ்டி விரதம் ஆகும். தொடர்ந்து எட்டுநாள்கள் விரதம் இருந்து சஷ்டி அன்று முருகப் பெருமானை வணங்கி வழிபட்டு விரதத்தை முடிப்பர். அவ்வாறு சஷ்டியில் நோன்பிருந்து முருகனை வழிபட்டால் முருகனுடைய அருள் கிட்டும். வாழ்வு வளமுறும். எதுவும் செய்யாது வேண்டினால் இறைவனுடைய அருள் சுரக்குமா? சுரக்காது. சஷ்டிவிரதம் இருந்து முருகன் அருள் பெற்றுய்க என்று,

‘‘சஷ்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

கந்தனுக்குாக சஷ்டியில் விரதம் இருந்தால்தான் அகமாகிய பையில் அருள் சுரந்து வரும் என்று இப்பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி,

‘‘சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்’’

என்று திரித்து மக்களிடையே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சஷ்டி-சட்டி என்றும் அகப்பை-ஆப்பை என்றும் வழக்கில் திரித்து வழங்கப்ட்டுள்ளது நோக்கத்தக்கது.

சிவபெருமான்

இவ்வுலகைப் படைத்துக் காத்து, அழித்து என அனைத்தையும் செய்பவன் சிவபெருமான் ஆவார். இவரை அழிக்கும் கடவுள் என்பர். ஊழி முதல்வன் என்றும் நீல மணிமிடற்றோன், நீலகண்டன் என்றும்பல்வேறான பெயர்களில் மக்கள் அழைக்கின்றனர்.

சித்தர்கள் சிவனருள் பெறுவதற்காகத் தவமிருக்கின்றனர். சித்தத்தை அடக்கி தவமிருக்கும் அவர்தம் மனம் சிவனைப் போன்று செல்லும் தன்மை உடையது. சித்தத்தை அடக்கியாள்வதால் அவருக்குத் சித்தன் என்ற பெயர் ஏற்பட்டது. அவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டார்கள். அவர்கள் சிவனையே என்று ம் நாஎடி சிவன் போன்றே சென்று கொண்டிருப்பார். இதனை,

‘‘சித்தன் போக்குச் சிவன் போக்கு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. இங்கு போக்கு என்பது செல்வது என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சித்தனும் சிவனும் செல்வதில் ஒன்றாவர். மனதை அடக்கிக்கிடப்பவர்கள் சிவனைப் போன்றிருப்பர் என்பது இதன் பொருளாகக் கொள்ளலாம்.

சிவன் சொத்து

சிவபெருமானுக்கு உரிய சொத்துக்களைத் தெரியாமல் எடுத்தல் கூடாது. கோவிலுக்குரிய உடைமைகள் எதுவாக இருப்பினும் அதனை எடுப்பது குலத்தைக் கெடுக்கும் செயலாகும். எந்த ஒரு சிறுபொருளையும் கோவிலில் இருந்து எடுத்து வருதல் கூடாது என்பர்.

சிவன் கோவிலைச் சுற்றி வரும்போது சுற்று முடியுமிடத்தில் சண்டிகேசுவரர் சாமி சன்னதி இருக்கும். அதனைச் செவிட்டுச் சாமி என்று கூறுவர். அவர் சன்னதிக்கு வந்து அவரை வணங்கிவிட்டு இருகைகளையும் முட்முறை தட்டி வணங்கி வருவர். பலருக்கு இதற்குரிய காரணம் தெரியாது. காரணம் தெரியாமலேயே ஏதோ சடங்கிற்காகச் செய்தல் வேண்டும் என்று கருதி கைகளைத் தட்டிவிட்டு வருவர்.

சண்டிகேசுவரரே சிவபெருமானின் உடைமைகளைக் காக்கும் காவல்காரரும் கணக்கப்பிள்ளையுமாவார். பெரிய தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லும்போதும் வேலைபார்த்துவிட்டு வரும்போதும் வாயில்காப்பவர் எவ்வாறு சோதனையிட்டுப் பார்த் பின்னர் செல்வாரோ அதுபோன்றே சிவனடியார்கள் சிவன் கோவில் சென்று சிவனை வழிபட்ட பின்னர் கோவிலைச் சுற்றி வந்து வெளியேறும்போது தாங்களாகவே சண்டிகேசுவரர் சன்னதி முன் சென்று கைகளில் ஒன்றுமில்லை என்று இரு கைகளையும் தட்டிக் காட்டி வணங்கிவிட்டு வருவர். சிவனுடைய சொத்தை யாரேனும் அபகரித்தால் அவருடைய குடி கெட்டுவிடும் என்பதற்காகவே இவ்வாறு தொன்றுதொட்டு நமது வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன. இதனை,

‘‘சிவன் சொத்து குலநாசம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இப்பழமொழி சொலவடைபோன்று காணப்படினும் சிவபெருமானின் குணத்தை எடுத்துரைக்கும் பழமொழியாக அமைந்துள்ளது. தீய குணமுடையவர்களை சிவன் அழிப்பான் என்பது இப்பழமெழியின் உட்கருத்தாக உள்ளது.

சிவ வழிபாடு

மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபடவேண்டும். மொழியும் மெய்யும் வழிபடும்போது மனம் வேறெங்கேனும் சென்றால் அஃது சரியான வழிபாடாக அமையாது. அனைத்தும் ஒருங்கே ஒன்றுபட்டு இறைவனை வழிபடுவதே உண்மையான வழிபாடாகும் இறைவனை அமைதியான சூழலில் வழிபட வேண்டும். இரைச்சல், சண்டைகள் உள்ளிட்டவை நடந்து கொண்டிருக்கம்போது மன ஒருமையுடன் வழிபாடு செய்ய இயலாது. மனதில் குழப்பமே மிஞ்சும். அதிகமான இரைச்சல் மன ஒருமைப்பாட்டைக் குலைப்பதுடன் பதற்றமான சூழலை ஏற்படுத்தும். இத்தகைய இரைச்சல்களை இறை வழிபாட்டின்போது தவிர்க்க வேண்டும் என்பதனை,

‘‘சிவ பூசையில கரடி வந்து கத்துன மாதிரி’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

இங்கு கரடி என்பது விலங்கைக் குறிக்கின்ற சொல் கிடையாது. இது அதிக ஒலி எழுப்பக் கூடிய இசைக் கருவியாகும். இதனை ஒலித்தால் அமைதியான முறையில் சிவனை வழிபட முடியாது. மனம் ஊசல் குண்டினைப் பொன்று அலைபாயும். மன நிம்மதிக்காகக் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழிபாடு நடத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல் சிந்தனையையும் வழிபடும் முறையையும் பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறியிருப்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய நெறியாகும்.

அரியும் சிவனும்

காக்கும் கடவுளான திருமாலைப் பெருமாள், நெடுமால், ஹரி என்று பல்வேறு பெயர்களில் வழங்குவர். திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள் என்று அழைக்கப்பட்டனர். சிவனை அரன் என்று மக்கள் குறிப்பிடுவர். இச்சிவபெருமானை வங்கும் அடியவர்களைச் சைவர்கள் என்று வழக்கில் வழங்குவர். பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் இறைவன் ஒருவனே. இதனை உணராதவரே தமக்குள் சச்சரவிட்டுக் கொண்டுத் துன்புறுவர்.

சைவம், வைணவம் எல்லாம் ஒன்றே! எல்லா இறைவனும் ஒன்றே. மனிதர்கள் இவையெல்லாம் ஒன்று எனத் தெரிந்திருந்தும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டு துன்புற்று மடிகின்றனர். இச்சமய் சண்டைகள் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சிலசுயநலக்காரர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். திருமாலே உயர்ந்தவர் பெரியவர் என்று சிலரும் சிவனே உயர்ந்தவர் என்றும் சிலர் பேதம் பார்ப்பது அறிவின்மை ஆகும். இருகடவுளர்களும் ஒருவரே ஆவா். இவ்வாறு பேதம் பார்ப்பது அறிவின்மை ஆகும். இதனை,

‘‘அரியும் சிவனும் ஒண்ணு

அறியாதவன் வாயில மண்ணு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

அரி என்று சொல்லக்கூடிய திருமாலும், சிவபெருமானும் ஒருவரே. இதை அறியாதவர்கள் தமது வாழ்க்கையை இழப்பர்.அதனால் தெய்வம் ஒன்றே என அறிந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்று இப்பழமொழி வாயிலாக நம்முன்னோர்கள் மொழிந்துள்ளனர்.

தெய்வங்கள் குறித்த பழமொழிகள் கடவுளர்களைப் பற்றிய பல்வேறு செய்திகளையும், நோன்பு அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குவதுடன், இறைவன் ஒருவனே! இதனை உணர்ந்து ஒற்றுமையுடன் வாழுங்கள் என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன. இறைவன் ஒருவனே என்று உணர்ந்து, அனைவரும் ஒன்றுபட்டு நல்வாழ்வு வாழ்வோம்.

Series Navigationசின்ன மகள் கேள்விகள்முள்வெளி அத்தியாயம் -5