பழமொழிகளில் பணம்

Spread the love

வாழ்க்கையில் அனுபவப்பட்டுப் பெற்ற பாடங்களைத் தமிழர்கள் பழமொழிகளாக்கிகப் பின்வரும் சந்ததியினரின் வாழ்க்கைக்குப் பயன்படும் என்று அவற்றை விட்டுச் சென்றனர். பழமொழிகளுள் பல்வேறுவிதமான உள்ளடக்கக் கூறுகள் காணப்படுகின்றன. மனிதப் பண்புகள், செயல்கள், பொருள்கள் பற்றிய மதிப்புகள், தொழில்களைப் பற்றிய செய்திகள் உள்ளிட்டவை அதிகம் பழமொழிகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

பணம்

பணம் படைத்தோர் பற்றியும், அவர்களது செயல்களையும் சமுதாயத்தில் பணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் பழமொழிகளில் இடம்பெற்றுள்ளன. முதன் முதலில் மக்கள் தங்களிடம் இருந்த பொருள்களைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதற்கு ஈடாகத் தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொண்ட பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்து வந்தது.

அக்காலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை வைத்து ஒருவரின் செல்வநிலை கணக்கிடப்பட்டது. அதனால் மக்கள் கால்நடைகளைப் பேணிப் பாதுகாத்து வந்தனர். இத்தகைய காரணத்தாலேயே அக்காலத்தில் ஒருநாட்டின் மீது போர் தொடுக்கக் கருதினால் முதலில் இந்நாட்டு மன்னனிடம் உள்ள ஆநிரைகளைக் கவர்ந்தனர். இதனை இலக்கண நூல்கள்(தொல்.பொருள்., புறத்திணையியல், புறப்பொருள் வெண்பாமாலை) நன்கு தெளிவுறுத்துகின்றன.

இதன் பின்னர் பொருள்களுக்கு மாற்றாக நாணயம், பணம் ஆகியவை நடைமுறைக்கு வந்தபின்னர் ஒருவரிடம் இருக்கும் பணத்தின் அளவைக் கொண்டு அவனது பொருளாதார உயர்வைக் கணக்கிட்டனர். இன்று சமுதாயத்தில் பணமே அனைத்துக்கும் முதன்மையானதாக்க் கருதப்பட்டுவருவது நோக்கத்தக்கது.

பணம் – குணம்

சிலரிடம் பணமிருக்கும் குணமிருக்காது. சிலரிடம் நல்ல குணமிருக்கும். ஆனால் பணமிருக்காது. ஆனால் இவை இரண்டும் சேர்ந்திருப்பது அரிது. இருப்பினும் இவை ஒரு சிலரிடம் மட்டும் இணைந்து காணப்படும்.

சமுதாயத்தில் பணத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குணமா? அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதைக் கொண்டு போய் குப்பையில் போடு. குணமா சோறு போடுகின்றது? என்றெல்லாம் சமுதாயத்தில் குணத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.

ஆனால் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட விழாக்களுக்குச் சென்றால் பணம் படைத்தோருக்கென்று தனி மரியாதை வழங்கப்படுவதைக் காணலாம். இதனை மனதிற் கொண்டே,

“பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே!“

என்ற பழமொழியினை நம் முன்னோர்கள் கூறினர். இதனை உணர்ந்து வாழ்க்கையில் நாம் நடந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தலை இந்தப் பழமொழி நமக்கு வழங்குகின்றது.

ஒருவர் இறந்துவிட்டால் அவரது பணத்திற்காகச் சிலர் அழுவர். ஆனால் குணத்திற்காக அழுபவரே உண்மையானவர்களாவர். பணம் வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவர் இழிந்த குணமுள்ளவராக இருந்தாலும் அவரது பணத்திற்காகப் பலர் கூடுவர். அவ்வாறு கூடுவோரிடம்உண்மையான உள்ளார்ந்த அன்பிருக்காது. இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்துவதாக,

“பணத்திற்கு அழுதாயோ? குணத்திற்கு அழுதாயோ?“

என்ற பழமொழி அமைந்துள்ளது. வீட்டிலுள்ள ஒருவர் இறந்துவிட்டால் அவரது உறவினர்கள் இவ்வாறு நடந்து கொள்வர். பணக்கார்ருடைய உறவினர்களின் பண்பினை விளக்குவதாகவும் இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தின் ஆற்றல்

ஒரு மனிதனுக்கு இரண்டுவிதமான பலம்(வலிமை) வேண்டும் என்று கூறுவர். ஒன்று ஆள்பலம். இதனை நடைமுறையில் ஜனக்கட்டு என்பர். மற்றொன்று பணபலம். இதனைப் பணக்கட்டு என்பர். இவற்றில் ஏதேனும் ஒன்றினை உடையவனே வலிமையானவனாக்க் கருதப்படுகின்றான். இவற்றை ஒருவன் தனது வாழ்நாளில் மறவாது தேடிவைத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய கருத்தினை,

“ஒன்று ஜனக்கட்டு வேணும் இல்லே பணக்கட்டு வேணும்“

என்ற வழக்குத் தொடர் நன்கு புலப்படுத்துகின்றது.

தங்களிடம் உள்ள பணபலத்தால் பலர் எத்தகைய செயல்களையும் செய்துகொள்கின்றனர். அவர்கள் பணத்தைக் கொடுத்தே அத்தனை காரியங்களையும் சாதித்துக் கொள்கின்றனர். பணத்தால் யாரைவேண்டுமானாலும், எதைவேண்டுமானாலும் வாங்கிவிடலாம். பணத்தால் முடியாத செயல் உலகினல் ஏதும் இல்லை என்ற பணத்தின் முக்கியத்துவத்தை, அதன்வலிமையை,

“பணம் பத்தும் செய்யும்“

“ஈட்டி எட்டினவரை பணம் பாதாளம் பரை“

என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. பணமிருந்தால் ஒருவனால் ஒரே நேரத்தில் பத்துவிதமான செயல்பாடுகிளைச் செய்யமுடியும்.

“ஈட்டி எட்டினவரை பணம் பாதாளம் வரை“ என்ற பழமொழியினை, “ஈட்டி எட்டினம்புட்டுத்தான் பணம் பாதாளம் வரைக்கும் பாயும்“(எட்டினம்புட்டு-எட்டியவரை-சிறிய அளவு)

என்று கூறுவர். ஒருவன் உடல் பலத்தால் சிறிதளவு செயல்களையே செய்ய இயலும். பணம் படைத்தவன் அதனைவிடப் பலமடங்கு செயல்களைப் பணத்தின் வாயிலாக செய்து கொள்வான். அதனால் பணத்தின் ஆற்றலை அறிந்து ஒருவன் அதனை நேர்மையான வழிகளில் தேடிக்கொள்ளவேண்டும் என்ற வாழ்க்கை நெறியையும் இஃது எடுத்துரைக்கின்றது.

பொது அவையில் பணம் படைத்தவனுடைய சொல்லே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நல்ல ஒழுக்கமுள்ள ஏழையொருவன் நல்ல கருதுக்களைக் கூறினால் அதனைப் பொதுஅவையானது ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதை,

“ஏழை சொல்லு அம்பலம் ஏறாது“

என்ற பழமொழி விளக்குகின்றது.

மனிதனது ஆசை

ஆசை ஒரு நோய். அது வளர்ந்துகொண்டே செல்லும் தன்மை உடையது. அது தீரா நோயைப் போன்றது. அதற்கு மருந்தென்பது கிடையாது. ஒவ்வொருவரும் ஆசை உடையவர்களாக விளங்குகின்றனர். அதனாலேயே புத்தர், “ஆசையே துன்பத்திற்குக் காரணம்“ என்று கூறினார்.

மண், பெண், பொன், பொருள், பணம் என்று ஆசைகளின் எண்ணிக்கை அளவின்றிச் சென்றுகொண்டே இருக்கம். அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய ஆசை பணத்தின் மேல்தான் எனலாம். இருப்பவன், இல்லாதவன் அகிய இருவருமே பணத்தின் மீது பேராசை கொண்டு விளங்குகின்றனர்.

பணம் படைத்தோன் தன்னிடம் அளவுக்கதிகமான பணம் உள்ளது என்று மனநிறைவு கொள்ளாமல் மேலும் மேலும் பல வழிகளிலும் பணத்தைத் தேடி அலைகின்றான். இல்லாதவன் தனது வறுமையைத் தீர்ப்பதற்காகப் பணத்தைத் தேடி அலைகின்றான். இருவருமே தங்களது தேவை நிறைவடைந்தாலும் பணத்தின் மீது ஆசைப்பட்டு அதனை அதிகமாகச் சேர்ப்பதற்கு அவைர். பணம் ஆசையை வளர்க்கும். பண்பைத் தேய்க்கும் தன்மை கொண்டது. யாராக இருப்பினும் பணம் என்றவுடன் ஆசையாய் அதனை வாங்கிக் கொள்வர். இதனை,

“பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்“

என்ற முதுமொழி விளக்குகின்றது. மனிதனுடைய பேராசை என்ற பண்பினை விளக்குவதாக இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

இங்ஙனம் பணம், குணத்தை வளர்க்க வேண்டும். பணத்தைத் தேவைக்கேற்ப வைத்திருத்தல் வேண்டும். நேரிய வழியிலேயே பணத்தை ஈட்ட வேண்டும் அவ்வாறு ஈட்டிய பணத்தை நல்ல செயல்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற பல்வேறு விதமாக கருத்துக்களைப் பணம் குறித்த பழமொழிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

 

Series Navigationகறுப்புப்பூனைஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்