பாசம் என்பது எதுவரை?

author
0 minutes, 18 seconds Read
This entry is part 25 of 29 in the series 28 ஏப்ரல் 2013

 

 

குழல்வேந்தன்

 

இன்று தேதி 30-1-2012. இந்த நாள் இனிய நாளாகத் தான் தொடங்கியது போல இருந்தது தென்றல் இல்லத்தில். அதிகாலைப் பொழுதின்  நிகழ்வுகள் அத்தனையும் வழமை போலவே ஆரம்பித்தன. இயற்கை அன்னையின் கருணையில், வஞ்சமில்லை; துரோகமில்லை; தென்றலின் தண்மையிலோ மாற்றமில்லை; மறுதலிப்பில்லை; பறவைகளின் பல்லிய பண்ணிசையிலும் பஞ்சமில்லை; பாதகமில்லை.

 

காலை 4 மணிக்கு வழமை போலவே விழிப்பதற்கான அலாரத்தின் கூவலோசை அந்த இல்லத்தாரின் உறக்கத்தை இதமாகக் கலைத்தது என்று கூறமுடியாது. வழமையாக ஒலிக்கும் அலாரம் அன்றும் ஒலித்ததுதான். ஆனால் கடிகாரத்தின்  கூவலுக்கு அவசியமே இல்லாதபடி அந்த இல்லத்தார் அனைவரும் விழிப்பதென்பது தவிர்க்க முடியாததாகி விட்டது இன்று.  காரணம், பெரியவர் கணபதி சாமியார் வழமைக்கு மாறாக மூன்றரை  மணிக்கெல்லாம் விழித்து ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்க ளையும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சிப்  பாடல்களையும் தமக்கே உரித்தான கட்டைக் குரலில் இசையாகவும் இல்லாமல் வசனமாகவும் இல்லாததொரு தனியான ராகத்தோடு நீட்டி முழக்கிப் பாடிக்கொண்டிருந்தார். அந்தப்  பெரியவரின் குரலோசைக்கு மதிப்பில்லாமல் போய்விடுமா என்ன தென்றல் இல்லத்தில்? அவருடைய குரலின்  சிம்ம கர்ஜனையைக் கேட்டு வில்லிப்புத்தூர் பெண்களும் ஆயர்ப்பாடியின் மாயவனும் மட்டுமல்ல, அட கும்பகர்ணனே எழுந்துவிடுவான் என்றால், தென்றல் இல்லத்தாரின் நிலையைச் சொல்லவா வேண்டும்!

 

குஞ்சு குழுவான்கள் கூட அந்த தாத்தாவின் சாரீரத்தில் மயங்கி, இல்லை, இல்லை; மருண்டு விழித்தன என்ற பேருண்மையை வாசகருக்கு கதைசொல்லி வெளிப்படை யாக சொல்லவா வேண்டும்? என்றாலும், வாசகரின் கற்பனைகளைக் கண்டபடி அதீதமான உயரத்துக்கும் ஆழ நீளத்துக்கும் தறிகெட்டு அலையவிடக்கூடாதென்பதற் க்காகவே இந்த எதார்த்த உண்மையை கதைசொல்லி உங்களுடன் பகிர்ந்துகொள்ளு கிறான்.

 

அதற்காக பெருந்தன்மையோடு வாசகர்களே கதைசொல்லியை தயவு செய்து பொறுத்து அருளுங்கள்.

 

இடைவெட்டு –

வாசகர்களே, பாசுரங்கள் பாடும் கணபதி சாமிகளிடம் போய் தயவுசெய்து யாரும் இவன் உங்களிடம்  ரகசியமாகப் பகிர்ந்துகொண்ட அவருடைய பெருமைகளைப் பற்றிச் சொல்லிவிடவேண்டாம். அப்புரம் உங்கள் காதுகள் உங்களுக்கானதாக இல்லாமல் போனால் அடியேன் பொறுப்பாளி அல்ல.

 

இது நிற்க, வாசகர்களே நீங்கள் பொறுமையோடும் நிதானமாகவும்  கவனமாகவும் இனி நான் சொல்லப்போகும் மற்ற தகவல்களையும் வாசித்துப் பாருங்களேன். ஐந்து மணிக்குள் தென்றல் இல்லத்தின் அங்கத்தார் அனைவரும் வெந்நீரில் நீராடி, ஈரம் போகத் தலைத் துவட்டி, உடுத்தி, கணபதி சாமியார் சொன்னபடி இல்லத்தின் பூசையறைக்கு வந்துசேர்ந்தனர். தென்றல் இல்லத்தில் அடிக்கப்போகும் புயலைத் தடுக்க நினைத்தோ அல்லது பகவான் பெருங்கருணையாலும் தம்முடைய சொற்பொழிவினாலும் சாவதானமாக வரப்போகும் சூறாவளியை, பேரிடி மின்னலை, பெரு மழையை  திசை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையாலோ குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியிலிருந்து

 

[ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும்யான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத்திருவேங்கட மலைமேல்

மீனாய் பிறக்கும் விதியுடையன் ஆவேனே]

 

என்ற பாசுரத்தின் பொழிப்புரை, கருத்துரை, விருத்தியுரை, அந்த பாடலில் பொதிந்துள்ள தத்துவம் முதலியவற்றையெல்லாம் விரித்துரைத்ததோடு குடும்ப நன்மையை உத்தேசித்தும் குழந்தைகள் உறங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் கதைகளையும் தம் பொழிவில் சேர்த்துக்கொண்டார் சாமிகள். அவர் சொன்ன கதைகளில் ஒன்றை வாசகரே நீங்களும்தான் கேட்டு அனுபவியுங்களேன்.

 

”ஒரு விறகுவெட்டிக்கு ஒரே ஒரு மனைவியாம். கணவனும் மனைவியும் கருத்தொருமித்த தம்பதியராம். அவர்கள் நாளும் விறகு வெட்டிக் கிடைக்கும் காசைக் கொண்டுதான் சுகஜீவனம் செய்தனராம். போதுமென்ற மனதோடு மகிழ்வாக வாழ்ந்தனராம். காலையும் மாலையும்  எந்த வேளையும் தங்கள் கடமைகளை செய்யும் முன் கிருஷ்ண மந்திரத்தையே ஜெபிப்பார்களாம். ஆனால், பகவான் அவர்களுக்கும் சோதனை வைக்காமல் இல்லையாம். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் ஐந்தாறு- பதினொன்றா என்று தெரியவில்லை- 2 அல்லது 4 வயசுக்குள் இறந்துவிடுமாம்.  கடைசியாக பிறந்த ஒரு குழந்தைக்கு மண்ணாங்கட்டி என்று பெயரிட்டு வளர்த்தனராம். குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தானாம்.  ஏனோ அந்தப் பையனுக்கு பெற்றோரிட்ட பெயர் பிடிக்கவில்லையாம். ’நம்ம ஊரிலேயே நல்ல பேரு வச்சிருக்கவங்கள பார்த்து நாமும் அப்படிப்பட்ட பேர வச்சிக்கனும்’னு முடிவு செஞ்சானாம் அந்த  பையன். அதனால  ஒரு தங்க நகைக்கடை முதலாளியைச் சந்தித்து அவர் பெயரை யாது? எனக் கேட்டானாம். அவரு தன் பேரை தருமராஜான்னு சொன்னாராம். அந்த நேரம் பார்த்து ஒரு பிச்சைக்காரன்  அவரிடம் யாசகம் கேட்க, அவனுடைய பாத்திரத்தில்  எத்தனை காசு விழுந்திருக்கிறதென்பதை எண்ணிப் பார்த்துவிட்டு, “இண்ணைக்கு உனக்கு போதுமான அளவு காசு சேர்ந்திருக்கு. நாளை வா பார்க்கலாம்”என்றாராம். அடுத்த நாள் மண்ணாங்கட்டி அந்த தருமராஜாவின் நகைக் கடைக்கு  சென்று என்ன நடக்கிறதென்று பார்க்க, அதே நேரம் முந்தின நாள் வந்த அதே பிச்சைக்காரன்  அங்கே வந்து யாசகம் கேட்க, இன்று உன் பாத்திரத்தில் ஒரு காசும் காணோமே! ஒன்றுமே இல்லாத உனக்கு எப்படி தருமம் செய்யமுடியும்? நாளை வா பார்க்கலாம் என்று இரவலனை அனுப்பிவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாராம். மூன்றாம் நாளும்  பிச்சைக்காரனுக்கு  முதலாளி  என்ன செய்வாரென்பதைப் பார்க்க மண்ணாங்கட்டி வழக்கமான நேரத்தில் வழக்கமான இடத்துக்கு போக, தருமராஜா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாராம். காரணம், அந்த நகைக்கடை உடைக்கப்பட்டு கடையிலிருந்த அத்தனை உடமைகளும் திருடப்பட் டிருந்ததாம். மண்ணாங்கட்டி, ’அட நம்ம பேரே நல்லாத்தானே இருக்குது. எமராசன்  ஓலைய எடுத்துப் பாக்கிறப்போ எப்படிப்பட்டவனும் மண்ணாத்தானே போகப் போறான்’னு திருப்தி அடைந்தானாம்.

 

இப்படி ஒரு கதைய சொல்லிட்டு கணபதி சாமியாரு, “தருமராஜா திடீர்னு ஒண்ணு மில்லாத பிச்சைக்காரனாயிட்டான். ஒரு காசு போட்டிருந்தாலாவது புண்ணியப் பலன் இருந்திருக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. எல்லாரும் அதை புரிஞ்சிக்கிட்டு விட்டுக்குடுத்துப் போனா எவ்வளவோ நல்லா இருக்கும். சகலமும் கிருஷ்ணார்ப்பனம்னு நல்லதோ கெட்டதோ அந்த பகவானையே நெனைச்சிக்கோங்க. நல்லதுதான் நடக்கும்”னு சொல்லி மங்களம் பாடி பூசையையும் பொழிவையும் முடிச்சாரு.

அப்புறந்தான் அது நடந்தது. அதுதாங்க – நான் சொன்நேன் இல்ல. தென்றல் இல்லத்துக்குள்ள சண்டமாருதமா புயலடிக்க ஆரம்பிச்சது.  இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை எல்லாம் தென்றல் இல்லத்தாரு குடும்பத்தோட ஒப்பிட்டுப் பாக்குறப்போ?  அட ஒண்ணுமே சொல்லத் தோணல போங்க.

 

நானு என்ந நடக்குதுன்னு காலைல இருந்து பாத்துக்கிட்டுதாங்க  இருக்கேன். எல்லாம் எனக்கு வேடிக்கையாத்தான் இருக்கு. அட, தென்றல் இல்லத்துல மொதல்ல மழைன்னா மழை, அப்படி ஒரு மழையடிக்குதுங்க. அட, அது என்ன மழை தெரியுமா? அந்தக் குடும்பத் தலைவர் பழனிச்சாமியோட செல்வப் புதல்வரோட  கண்ணீரு மழையேதாங்க. அழுவுறாரு அழுவுறாரு. அழுகாச்சின்னா அப்படி ஒரு அழுகாச்சி. நீங்க ஒண்ணும் சாமியாரோட பொழிவ கேட்டு மெய்மறந்து அந்தப் பேரானந்தப் பரவசத்திலோ இல்லன்னா நடந்துகொண்டிருந்த சடங்குப் புகையாலேயோ அவரு கண்ணு பஸ்மமா பொழியிதுன்னு நெனச்சி வீணா உங்களோட எண்ணத்துல மண்ணப் போட்டுக்காதிங்க.

 

அவரு ஒரு மாதிரியானவருங்க. அவரைப் பத்தியும், அவரோட அழுகைக்கான காரணம் பத்தியும் நீங்களே போகப் போகப் புரிஞ்சிக்குவிங்க. அவருதாங்க தென்றல் இல்லத்தின் அடிநாதமா இருந்து இந்த நாளு வரைக்கும் அந்தக் குடும்பத் தேர எப்படியெல்லாம் ஓட்டனுமோ அப்படி எல்லாம் அவரோட விருப்பப்படி ஓட்டும் சாரதிங்க. சாரதின்னா அப்படிப்பட்ட திறமையான சாரதிங்க. அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கிருஷ்ணபகவான் கூட தேரோட்டும் சாகசத்திலும் தந்திரத்திலும் திறமையிலும் நம்ம ஆளுக்கிட்ட புதுப் பாடம் படிக்கணும்னு சொன்னா அது, ஹரிச்சந்திர மஹாராஜா மேல ஆணையா சொல்லுறேன், பொய் இல்லைங்க.

 

தேரோட்டும் சாரதின்னா சொன்னேன்? ஓட்டும் முறையப் பாத்தா சாரதின்னுதான் தோணும். உண்மையிலேயே அவருதாங்க அந்த குடும்பத்துக்கு இளையராஜா. இளைய ராஜான்னா சாதாரண ராஜா இல்ல. அவரு பேருக்கு ஏத்தமாதிரி ஆணழகருதாங்க. அந்தக் குடும்ப நாடாகிய தென்றல் இல்லத்தை நிர்வகிக்கும் திறமையிலோ, அண்ணன் ராமமூர்த்தியிடம் காட்டும் சகோதர வாஞ்சையிலோ, அண்ணி துர்காவிடம் காட்டும் அளப்பறிய மரியாதையிலோ இராமாயண சகோதரரும் மகாபாரத சகோதரரும் நம்ம சுந்தரமூர்த்தி என்ற இளவரசருகிட்ட பிச்சை எடுத்தாக்கூட அவர் கால்தூசுக்கு கூட ஈடாக மாட்டாங்க.

 

பாசம்னா அப்படிப்பட்ட குடும்பப் பாசம் நம்ம இளவரசருக்கு.. ஏறு நெத்தி; கண்களிலே பாக்கிறவங்களைக் கிறங்கடிக்கும் ஒரு மாயக் கவர்ச்சி; அவரோட பேச்சில இருக்கும் சொல்செட்டுக்கு செந்தமிழ் இலக்கணம் தந்த அகத்தியரைக் கூட ஒப்பு சொல்லமுடியாதுன்னா நீங்களே பார்த்துக்கொள்ளுங்களேன்! அவர் வாய் திறந்தால் முத்தமிழ்த் தேன் மணக்கும்! நல்ல தமிழ்ப் பால் மணக்கும்! கழுத்திலே மைனர்ச் செய்ன், விரல்கள் நிறைய மோதிரம், இடையிலே தங்க அரைஞாண், நடையிலே ராஜ நடை, கையிலே ஒரு பட்டுத்துணியால் அமைந்த   கருப்புக் குடை. ஆளோட நெறமோ  – கம்பரோட ’மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ’னு வர்ர பாட்டுல  ஐய்யோனு சொல்லக்கூடிய அந்த சொல்லுக்கு இவருதான் சுத்த இலக்கண விளக்கம்!   ஆளோட மேனிப்பத்தி சொல்லனும்னா கடோர்கஜனோட தேக அப்பியாசமும் பலமும் இவராண்ட தோத்துப்போயிடும்! இதுதாங்க நம்ம சுந்தரரோட மிக எளிய தோற்றம். அவரு தன்னப்பத்தி எப்பவும் இப்படித்தாங்க பெருமையா சொல்லுவாரு: “நானு ஒண்ணுமில்லாத பிச்சைக்காரன். என்னத்த செஞ்சாலும் இந்த குடும்பத்துல ஒருத்தனுக்கும் ஒருத்திக்கும் எள் அளவும் கடுகு அளவும்  நன்னி கெடையாது. நன்னி இல்லா நாய்க்குடும்பம். நானுதான் ஒழச்சி ஒழச்சி ஓடா தேஞ்சிப்போறேன்..” என்பதோட நிக்காமல் அவைக்குறிப்புகளில் இருந்து நாகரிகம் கருதி நீக்கப்பட்ட செழுந்தமிழ் இசைச் சொற்களை, இல்லை வசைச் சொற்களை, இல்லையில்லை கொங்குமண்டலத்தின் வட பாதிப் பகுதி திசைச் சொற்களை வஞ்சனை இல்லாமல் வாய் ஓயும் வரை பொழிந்து தள்ளுவாரு. இந்த வீர வசனங்களை தான் நம்ம ராஜா சிவாஜி கணேசன் பாணில நாளைக்கு 40 தரம்  முழங்குவாரு!

 

அட நம்ம ராஜாவுக்கு நல்லது பண்ணனும்னும் ராஜாவோட அலுப்பையும் சலிப்பையும் தணியச் செய்யணும்னும் பெரியவங்களாப் பார்த்து ’தியாகிகள் தின’மான இந்த நாளை தேர்ந்தெடுத்தாங்க போல இருக்கு. நம்ம ராஜாவோட தன்னலமற்ற தியாகத்துக்கு வீர வணக்கம் செலுத்தி விடைகொடுக்க வேண்டாமா பின்ன? அந்த குடும்பத் தேரையே ஓட்டறவரு எதுக்காக அழுவணும்? இண்ணைக்கு ராஜாங்க ஆட்சியை குடியரசா மாத்திட்டா என்னன்னு கணபதித் தாத்தா, பேருக்கு மட்டும் பேரரசராக இருக்கும் பெருந் தலைவர் பழனிச்சாமி, அவரோட வாழ்க்கைத்துணைவியாரான கோப்பெருந்தேவிப் பட்டம் ஏற்ற திருமதி பழனிச்சாமி பத்மா, டெல்லி சித்தப்பா ,ஊர் கவுண்டரு எல்லாரும் திடீர்னு முடிவெடுத்து அத செயல்படுத்தச் சொன்னா  எந்த ராஜாவுக்குதான் ஆத்திரம் வராது பின்ன? ஆண்டு அனுபவிச்ச பதவியையும் வசதிகளையும் திடீர்னு பறிக்கிறதா சொன்னா? அது அந்தத் தேரோட்டி ராஜாவுக்கு வருத்தமா இராதா என்ன? காலைல ஏழு மணிக்குள்ளவே இராஜாவோட இராஜமுத்திரை, செங்கோல், சிம்மாசனம் எல்லாத் தையும் பெரியவங்க பறிச்சிக்கிட்டாங்க பாவம்.

 

அப்புறம் இன்னொரு முக்கியமான பிரதிநிதியை தங்களுக்கு இதுவரை அறிமுகப்படுத் தாமைக்கு வாசகர்கள் கதைசொல்லியை தயவு செய்து சபிக்காமல் இருப்பார்களாக. நம்ம கதைல ராஜாவப் பத்தி சொன்னோமே, ’ராணி எங்க காணலியே’ன்னு நீங்க நினைக்ககூடும் இல்லையா? நம்ம ராஜாவுக்கு ’ பீ பீ டும் டும் டும்’னு ஜாம் ஜாமுனு தடபுடலா கல்யாணம் நடந்ததுக்கு அடையாளமா மாண்புமிகு இளைய மகாராணியாரு எப்பவும் இளைய மகாராஜாவோடயேதான் இருப்பாங்க. ராஜா ராணியம்மாவை பூப்போலத் தாங்குவாரு. ராணியாரோட மலரடிகள் மண்ணில் படக்கூடாதென்பதற்காக மாளிகையின் உள்ளேயும் வெளியேயும் ரத்தினக் கம்பளிகளைத்தான் விரிச்சி வைப்பாரு. அந்த கம்பளிகள்மேல துளி அழுக்கும் சேராமலிருக்க, ஒட்டாமலிருக்க நம்ம பெரிய மகாராணி கோப்பெருந்தேவிதான் பாத்துக்குவாங்க. வேலை ஆட்கள் கம்பளிகளை துடைப்பது இளைய ராணியாருக்குப் பிடிக்குமா என்ன? அப்புறம் வேலை ஆட்களுக்கு கூலி கொடுப்பது யாரு? கஜானா காலி ஆயிடுச்சின்னா?  இந்தச் சங்கடங்களை எல்லாம் தவிர்க்கவும், செல்ல ராணியாருக்கு மெல்லரிசியைப் பொங்கிப் போடவும் பிற வேலைகளைச் செய்யவும் – வேலைகள் என்றால் பேன் பார்ப்பது, உரிய நேரத்தில் சோறு ஊட்டுவது, இளைய ராணியாரின் உடைகளை துவைப்பது, குறிப்பாக, உள்ளாடைகளையும் விட்டுவிடாமல், மணம் மிகு மஞ்சன நீரிலே மலர்களிட்டு         பன்னீர் சந்தனம் முதலியவற்றை அந்த நன்னீரிலே கரைத்துக் குளிப்பாட்டுவது    உள்ளிட்ட எல்லா வேலைகளையும்   மகாராணிதான் செய்தாகவேண்டும். இல்லைனா இளையராணியின் துணைவரான நம்ம சுந்தரம்  சமுத்திரமென பொங்கிவிடுவார்.

 

”அந்த இளையராணி எப்படி இருப்பாங்க? அந்த செல்வப் பெருமாட்டியோட திருநாமம் என்ன?’ போன்ற வாசகர்களின் வினாக்களுக்கு பதில் அளிக்காமல் வாசகரை கதைசொல்லி ஒருபோதும் ஏமாத்தமாட்டான். நம்ம இளைய ராணியாரு சுந்தரத்துக்கு ஏத்த சரியான ஜோடிதான். அழகுல ஷேக்ஸ்பியரோட கிளியோபாட்ராவும்கூட இளைய ராணிகிட்ட கைகூப்பி வணங்கத்தான் வேணும். அவங்களோட அந்தப் பேரழகின் ரகசியம் என்ன தெரியுமா? ஏழு நாளுல எழுவது முறை பெண்களுக்கான அழகு நிலையத்துக்கு போய் அலங்கரிச்சுக்கிறதுதான். அவங்க பேருகூட அந்த இளைய ராணிக்கு ரொம்ப பொருத்தமானதுதான். அந்த இளையராணியோட பேரு கொஞ்சம் நீளமாத்தான் இருக்கும். அந்தத் திருநாமமாவது: அலங்காரவள்ளி அம்சக்குமாரி பாஞ் சால தேவி பரிமளகந்தி என்பதுதான் இளையராணியாரோட இனிய திருநாமம்.

 

இளைய ராணியாருதான் தென்றல் இல்லத் தேசத்தை தன் விருப்பம் போல ஆட்டி வைக்கும் சாட்டைக் கயிறு.  பம்பரமாக மயங்கிடும்  இளவரசர் என்னதான் செய்வாரு பாவம்! நம்ம இளையராணியாருதான் தென்றல் தேசத்தின் மதியூகமுள்ள மந்திரி. மந்திரி சொன்னா இளவரசரோ, கோப்பெருந்தேவியாரோ, பேரரசரோ மற்றய உறுப்பினர் களான பேரரசர் பழனிச்சாமியின் மூத்த பிள்ளையான ராமமூர்த்தியோ – இவருக்கு ராஜா பட்டமெல்லாம் கெடையாது. போனாப்போவுதுண்ணு கல்வித்துறை, தொலைபேசித் துறை, கலைத்துறை  என்பவற்றோடு, தான் கற்று சம்பாதிக்கும் ஊதியத்தை எப்போ தெல்லாம் இளவரசரும் பேரரசரும் கேட்கிறார்களோ அப்போது விரும்பியோ விரும்பா மலோ தந்துவிடுவதால், வங்கித்துறை முதலியவற்றை ஒப்படைத்துவிடலாம் – அவரோ அவரது துணைவியார் துர்காவோ மறுப்பு சொன்னதில்லை மருந்துக்கும். ராஜ தந்திரத்திலும் மதியூகத்திலும் சாணக்கிய மூளையை பிரம்மா நம்ம இளைய ராணிக்கு படச்சி வச்சிருக்குறாரு.

 

இடை வெட்டு 2_

 

தம்பி உடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழியைநம்ம இராமமூர்த்தி இராமனைப் போலவே நம்பினாரு. தமயனைப் பொறுத்தவரை தம் தம்பி சுந்தரமூர்த்திதான் லட்சுமணன்.   தம்பிக்காக கேட்பதை எல்லாம் கேட்கும்போதெல்லாம் கொடுக்கும் கற்பகத் தருவாக அண்ணன் இருக்கணும்னு தம்பி நெனைப்பு.  அட, தம்பிக்கு மட்டும் இல்லைங்க. பேரரசர் பெருமான்  பழனிச்சாமிக்கும் அப்படித்தாங்க.

 

பழனிச்சாமியோட இளமை இருப்புப் பின்னணி:

 

வாசக அன்பர்கஆள் சகோதரர் நேசத்துக்கு பங்கமோ திருஷ்டியோ ஏற்பட்டுவிடக் கூடாது  அல்லவா? ஆகவே,  கொஞ்சம் நம்ம பேரரசரது இளமைப்பருவத்து சாகசக் கதைகளையும் அதன் பின்னணியையும் வாசகர்கள் தெளிவாக  விளங்கிக்கொள்ள வேண்டுமே என்ற அக்கறையோடு கதைசொல்லி இப்போ கொஞ்சம் நம்ம பழனிச்சாமியின் இளமைக் கால சம்பவங்களைப் பற்றி தங்களோடு கதைப்பதையும் சூள்கொட்டாமல் செவிக்குள் போட்டுக்கொள்ளுங்களேன்.

 

நம்ம   பழனிச்சாமி,  அதுதாங்க தென்றல் இல்லத்துக்கு ஏக சக்கரவர்த்தின்னு சொன்னோமில்ல? அந்தப் பெரியவரு  நல்ல உழைப்பாளிதாங்க. ஆனா சின்ன வயசுல கொஞ்சம் அப்படி இப்படின்னு இருப்பாரு போல. யாருதான் அந்த வாலிப வயசுல அந்த நெனைப்பு இல்லாம இருந்தவங்க… அந்த வாலிப வயசுல அவரை ”பழனி பழனி” னுதாங்க எல்லாரும் கூப்பிடுவாங்க. நம்ம பெரியவரு பழனிச்சாமியோட  இருப்பப் பத்தி சொல்லனும்னா அது ஒரு அம்பிகாவதி-அமராவதி காவியம் போலவோ ரோமியோ-ஜூலியட்டு காவியம் போலவோ, இல்லைனா, லைலா-மஜுனு காவியம் போலவோ விரியுமுங்க. அதுல சுவாரசியம் என்னன்னா, ’பழனிச்சாமியோட வாழ்க்கைல அமராவதியுமுண்டு; ஜூலியட்டுமுண்டு; லைலாவுமுண்டு’ன்னு ஒரு காலத்துல ஊரும் உறவுகளும் சொல்லக் கேள்வி!

 

அப்ப குமாரசாமின்னா தெரியாதவங்க அந்த சுத்துவட்டாரத்திலேயே இருக்கமாட்டாங்க. அவ்வளவு பேரும் புகழும் உடையவரு நம்ம குமாரசாமி. அவரு பேருலதான் அத்தனை நிறுவனங்களும் அந்த ஊருல ஒரு காலத்துல இருந்துச்சாம். குமாரசாமி டெக்ஸ்டைல்ஸ், குமாரசாமி ஜுவல்லரிஸ், குமாரசாமி ஆட்டோ மொபைல்ஸ், குமாரசாமி எலக்ட்ரானிக்ஸ்  இத்தியாதி.  இத்தியாதி குமாரசாமி என்ற பேரு பொறிக் கப்பட்ட பொருட்களுக்கு அந்த ஊருல பெரும் வரவேற்பும் மரியாதையும் உண்டு. அந்தப் பேருக்கு அக்மார்க்கு அல்லது ஐ எஸ் ஐ முத்திரைக்கு உள்ள மரியாதை இருந்ததுன்னா கேட்கவா வேணும்.  அப்படிப்பட்ட நிறுவனங்களோட முதலாளி யாரு தெரியுங்களா? அவருதாங்க நம்ம பழனிச்சாமியோட மூத்த அண்ணாருங்க. அப்போ அந்த குடும்பம் அந்த ஊருக்கே எடுத்துக்காட்டா இருந்த நல்ல வசதியான பெரிய கூட்டுக்குடும்பங்க.

 

குமாரசாமி முதலாளிக்கு அந்த ஊருல பெரிய கௌரவமும் மரியாதையும் இருந்த துங்க. காரணம், அவரு சிறந்த நிர்வாகியாக இருந்ததுதாங்க. அன்பு சகோதரர்கள்  படத்துல வர்றமாதிரி  தம்பிகளை நேசித்ததும்,  பொறுப்புகளை தம்பியரிடம் பகிர்ந்து கொடுத்ததும் – ஒற்றுமை குலையாமல் கட்டைவிரல்போல இருந்து குமாரசாமி நிறுவனங்களை நிர்வகிக்க அவரைத் தவிர எவரால முடியுமுங்க?

 

 

நிறுவனப் பொறுப்புகளை கவனித்த தம்பியர் விவரங்கள்:

 

முதல் தம்பி கிருஷ்ணசாமி ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தையும், இரண்டாவது தம்பி  இராமசாமி ஜுவல்லரியையும், மூன்றாவது  தம்பி  குழந்தைசாமி எலக்ட்ரா னிக்ஸ் நிறுவனத்தையும் கவனித்துக்கொள்ளுவர். இளயவரான நம்ம பழனிச்சாமிக்கு டெக்ஸ்டைல்ஸை நிர்வகிக்கிற பொறுப்பு தரப்பட்டிருந்தது.

கால மாற்றமும் சகோதரர்களின் திருமணங்களும் குடும்பத்தில் சலசலப்பையும் விரிசலையும் உruவாக்குவதுபோல இருந்ததை அறிந்த அண்ணன் குமாரசாமி தாம் நிலபுலன்களையும் நிறுவனங்களையும் குடும்பத்தில் வெறுப்பும் பகையும் உருவாகாமல் இருக்க பிரித்துக் கொடுத்துவிடுவதாகக் கூறி தம் சகோதரர் நிர்வகித்த நிறுவனங்களின் முழு உரிமை சகோதரரையே சேரும் என்றும் அவரவருக்கு உரிய சொத்துக்களின் பங்கை பிரித்துக்கொடுப்பதாகவும் கூறி பிரித்துக்கொடுத்துவிட்டாராம்.

 

நம்ம பேரரசரு இப்போ ஒரு துணிக் கடைக்கு முதலாளியானதோடு சில ஏக்கர் நஞ்சை புஞ்சைகளுக்கும் தனி உரிமையாளராகிவிட்டார்.  செல்வப்பிள்ளையாகி கையில் காசும் வைத்து செலவு செய்த முதலாளிக்கு விரைவாக நிறைய பணம் சேர்க்கவேண்டுமென்ற ஆசை உருவாக, சூரத்துக்கும்  பம்பாய் முதலிய இடங்களுக்கும் போய் நேரடி துணிக் கொள் முதல் செய்து மொத்தவிலைக்கு விற்கத் திட்டமிட்டார். அதன்படியே அவரும் கூட்டாளிகளில் சிலரும் சேர்ந்து கொள்முதலுக்காக கிளம்பினர்.  கூட்டாளிகளிடம் இருந்த சில கூடா குணங்களையும், தேனை நாடும் வண்டைப் போல தேவைக்கு அதிகமாகவே படிச்சிக்கிட்டாரு நம்ம மாமன்னர்.

 

பழனிச்சாமி சூரத்துக்கும் பம்பாய்க்கும் சென்று துணிகளை கொள்முதல் செய்ததில் முதலில் கொஞ்சம் இலாபம் கிடைக்க, பெரிதாக தம் ஜவுளிக்கடையை விரிவாக்கிடத் திட்டமிட்டாரு பேரரசரு. திட்டமிட்டதெல்லாம் சரிதான். ஆத்துல ஒத்த காலு- சேத்துல மத்த காலுனு காரியம் செஞ்சா எப்படிங்க?அதுமட்டும் இல்லிங்க, தம் மனைவியாராகிய பேரரசியைக் கூட நம்பாம கடை சிப்பந்தி சிங்காரத்துக்கிட்ட  பொறுப்புகளை கவனிக்கச் சொல்லிப்புட்டு மாசக்கணக்கா வெளியூருக்கு கிளம்பினா திரும்பறது இல்ல இவரு சொந்த ஊருக்கு. அப்பறம் சிங்காரத்தோட கொண்டாட்டத்துக்கும் கும்மாளத்துக்கும் கேக்கவா வேணும்? பேரரசரு தன்னோட வேவார வேலைகள் குறும்பு லீலைகளை யெல்லாம் முடிச்சிப்பிட்டு ஊருக்குத் திரும்பி வந்து    சிங்காரத்துக்கிட்ட ஜவுளிக்கடை யோட கணக்க பத்திக் கேக்க, சிங்காரம் போட்ட கணக்கால இவரு நெல கொலஞ்சிப் போயிட்டாரு.

 

வேற என்ன கணக்கு காட்டி இருப்பாரு? எல்லா வெவரமான நம்பிக்கைக்குரிய வேலை யாளும் காட்டுற மாதிரி நஷ்டக்கணக்குதான். அப்புறமென்ன, ஒண்டவந்த பெடாரி  ஊரு பெடாரிய வெரட்டுற மாறி சிங்காரம் பண்ண குள்ளநரித் தந்திரத்தால பேரரசரோட கடை ராஜ்ஜிய பரிபாலனம் சிங்காரத்தோட கைக்கே மாறிடுச்சி.  இப்படி நம்ம பேரரசரு நம்பக்கூடாதவங்களையெல்லாம் நல்லவங்கணு நம்பி எத்தனை எத்தனையோ கைப் பொருட்களையும் பேரரசியாரோட நகைநட்டுக்களையும் நெல புலன்களையும்  கை நழுவ விட்டாருங்கிறதப்பத்தி தனிக் காப்பியமே எழுதலாம்.

 

அது கிடக்க, நம்ம பேரரசரோட மூத்தப் புள்ள ராமமூர்த்தியப் பத்தி கொஞ்சமும் சொல்லவேண்டியது கதைசொல்லிக்கு கடமை இல்லைங்களா?. ராமமூர்த்திங்கிறது இவருக்குப் பொருத்தமான பேருதாங்க. காரணம் இவரு வில்வித்தை,  யானை ஏத்தம்,  குதிரையேத்தம்னு எல்லாம் படிக்கலனாலும் பேரரசரோட நெலமைய தெரிஞ்சி அவருக்கு தொல்லகில்ல குடுக்காம பள்ளீக்கொடத்துக்குப் போயி பொருப்பா நாலெழுத்து  படிச்சி சொந்த முயற்சியால ஒரு பேங்குல கிள்ர்க்கா சேந்து படிப்படியா பேங்கு டெஸ்ட்டெல்லாம் எழுதி ஆபிசர் நெலமைக்கித் தன்ன ஒசத்திக்கிட்டவரு.

பேரரசரோட குடும்ப வண்டிய பழைய நெலமையளவுக்கே மீண்டும் சொந்தபந்தம் பாராட்டுற மாதிரி  ஒசத்தனவரு. அதுமட்டுமில்லாம, தம்பி சுந்தரமூர்த்தியையும் நல்ல கான்மென்டுல போட்டு படிக்கவச்சவரு. தம்பி நல்லாப் படிச்சி தன்னவிட ஒசந்த நெலமைல இருக்கணும்னு ஆசப்பட்டவரு. ஆசப்பட்டபடியே எல்லாம்  நடந்துட்டா அதுக்கப்பறம் மனுஷ சக்திக்குமேல ஒரு மண்ணும் இல்லன்னு ஆயிடுமில்லிங்களா? ’தான் படிக்க பட்ட கஷ்டங்கள் தம்பிக்குக் கூடாதுன்னும் தம்பி  நல்லா படிக்கணும், தன்னால நெறவேத்தி வைக்கமுடியாத தந்தை பழனிச்சாமியோட ஆசையான குடும்பத்துல ஒருத்தராச்சும் டாக்டராவனும்கிற கனவ தம்பி மூலமா நிறைவேத்தணும், தானும் தம்பியும் இராம-லஷ்மணரப்போல மத்த குடும்பங்களுக்கு உதாரணமா இருக்கணும்கிறதெல்லாம் ராமமூர்த்தியோட ஆவலாதிங்க.

 

ஆனா, நம்ம சுந்தரமூர்த்தி யோட திறமைகளுக்கு முன்ன அண்ணனோட ஆசையெல் லாம் கழுத வாயிக்கு முன்னால கட்டின செம்முள்ளங்கிக் கெழங்குத் துண்டப்போல தானாச்சி. சுந்தரமூர்த்தி  ஒன்பதாங் கிளாசு படிக்கிறப்பவே நம்ம மீசக்கார வாதியாரு மக கலைசெல்விக்கு கணக்கா காகிதத் தூதனுப்ப, கலைச்செல்வியோ  புத்திசாலித் தனமா ”நாளைக்கி சாயங்காலம் ஸ்கூலு உடறப்போ நீ வா. நானு என்னோட முடிவச் சொல்லறேன் னு சொன்னவ அப்பாக்கிட்ட அந்த கடிதாசிய குடுத்துப்பிட்டா.

 

அடுத்தநாளு ஆசைஆசையா கலைசெல்விய தேடிப்போன சுந்தரமூர்த்திக்கு நம்ம வாத்தியாரு குடுத்த தீவாலிப் பட்டாச சுந்தரால எப்பவும் மறக்கமுடியல. அந்த வாத்தியார நெனச்சே சுந்தரமூர்த்தி  ஸ்கூலுக்கு முழுக்குப்போட்டுட்டாரு. ஆனா அப்பா அம்மா அண்ணனெல்லாம் தன்னவிட மடசாம்பிராணிங்க, மக்குப் பண்டாரங்கங்கிறத உறுதிப்படுத்தறதுக்கு சுந்தருக்கு ரெண்டு வருஷம் வேண்டியதா இருந்துச்சி பாவம்.  தெனம் ஸ்கூலுக்கு போறேன்னு சொல்லி வீட்டுல இருந்து பொறப்பட்டுப்பிட்டு ஸ்கூலு விடற நேரத்துக்கு வீட்டுக்கு மத்த புள்ளைங்கமாதிரியே திரும்பிடவேண்டியது. அப்புறம், ஒரு நோட்டையோ புஸ்த்தகத்தையோ வெச்சினு படிக்கிறமாதிரி பாவலா காட்ட வேண்டியது.

 

சுந்தரோட இந்த புத்திசாலித்தனத்த அந்த வீட்டுல யாராலேயுமே கண்டு பிடிக்க முடியல. ஆனா ஒருநாள் க்ளாஸ் டீச்சரு  சுந்தரோட வீட்டுக்கு போட்ட கடிதாசித்தான் சுந்தரோட முகமூடிய டர்ருன்னு கிழிச்சது. அப்புறம் அப்பா சுந்தர பாத்து, “நீ என்னா செய்யப்போறே”ன்னு கேக்க, இவரு ”எப்பா நானே இனிமே உங்களோட பொறுப்புகள எடுத்துக்கிறேன். நீங்க இனிமே ரெஸ்ட்டு எடுங்க”னு சொல்ல, உச்சி குளிர்ந்துபோனது பேரரசருக்கு.

 

அப்பறம், காலாகாலத்துல பழனிச்சாமி காலுகட்டுப் போட்டுட்டாரு அண்ணனுக்கும் தம்பிக்கும். பழனிச்சாமிக்கிட்ட பேரரசியம்மா ”சண்ட சச்சரவு இல்லாம புள்ளைங் களுக்கு நம்மகிட்ட இருக்கிற சொத்துபத்துங்கள பிரிச்சிக் குடுத்துடலாம்”னு சொல்ல, பெரியவருக்கு ஒப்பவும் முடியல, மறுக்கவும் முடியல பாவம். அவுரு நெலம ’பூனைக்கி மேலு, யானைக்கி வாலு’ங்கிறமாரி ஆயிப்போச்சி. மனைவி சொல்ல தட்ட வும் முடியாம, செல்ல மகனான சுந்தர் போடுற கணக்க மீறவும் முடியாம இரு தலக் கொல்லி எரும்பா ஆயிட்டாரு.

 

அதுக்குமேல ”இளய அரசருக்கு என்ன வேணுமோ எல்லாம் எடுத்துக்கட்டும். மத்தது ராமுவுக்கு”னு அப்பா நேரடியா சொல்லி இருந்தாக்கூட பரவாயில்ல. ஆனா, அந்த தியாகிங்க தெனத்தண்ணைக்கி சொத்த சமமாப் பிரிக்க வந்தவங்ககிட்ட எல்லாம் பெரியவரான பழனிச்சாமி ”மூத்தது மோல, எங்க எளயதுதா காள. அதனால சுந்தருக்கு சாதகமாத்தான் நீங்க பேசணும், நடந்துக்கணும்”னு சொல்லி ஆளுக்கும் வேட்டி வெளுப்புக்கும் ஏத்தாப்புல வெள்ளையப்பன வெளையாட உட்டு பாகம் பிரிக்கக் கூட்டிட்டு வந்தாரு.

 

அவங்க எளையவரோட விருப்பபடியே சொத்துபத்துக்கள பிரிக்க, அந்தக் கூட்டத் துலையே கணபதி சாமிகள்மட்டும் ”மூத்த பையனுக்கு சேஷ்டபுத்திர பாகமுண்டில் லையா?னு கேக்க, அங்கே வெடிச்சது பாருங்க ஒரு அணுகுண்டு.  பெரும் சர்ச்சைக்கிடையில் அந்த குடும்பத் தலைவரு இப்படிச் சொன்னாரு ஒரு ஞாயம். மூத்தவனுக்கு என்னாங்க கேடு. ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறான். அவனோட பொணம் போனாக் கூட பொண்டாட்டிக்காரிக்கி பின்சினு இருக்கு. எம்மவந்தா பாவம். சூதுவாது இல்லாம எங்கூட ஒளைச்சான். எல்லாம் அவுனுக்குத்தான். அவன் பாத்து குடுக்கிறத வாங்கிக்கினா உண்டு. இல்லன்னா மிச்சம் மீதியும் கெடைக்காது” னு சொல்ல, ராமமூர்த்தி ஆத்திரமா “அவரு படிக்காம இருந்ததால அவரால வேலைக்கிப் போகமுடியல. படிக்கிறப்போ படிச்சிருந்தா? னு கேட்க,” உன்னோட ஞாயம் அழுவுன வெங்காயமுடா. எதுக்குடா மாசமாசம் சம்பாரிச்சிக்கினே சொத்துபத்துனு பேயா அலைற?. இப்புடி சொத்துக்கு பேயா அலைற நாயே  உனுத்து சுடுகாடுதாண்டா சொத்து பத்து. அங்க போயி சாவுடா.”னு ஊருக்கே கேக்கறமாறி சுந்தரமூர்த்தி  கத்த, எங்கிருந்தோ வந்த துர்கா இராமமூர்த்திகிட்ட சொன்னா: ”பாசமுங்கிறது எல்லாம் மனு ஷங்களோட வேஷம் கலைர்றவரைக்குந்தாங்க. பச்சோந்திங்க இருக்குற எடத்துல பசுவுக்கு இனிமே என்னாங்க வேல? உங்களுக்கு ஒடம்புல தெம்பு இருக்கு. நமக்கு யாரு கிட்டையும் காசுக்காகவோ பொருளுக்காகவோ கெஞ்சி வாழனுங்கிற அவசிய மில்லைங்க. எல்லாத்தையும்விட தலநிமிர்ந்து வாழக்கூடிய தன்மானமும் தன்னம்பிக்கையும் இருக்குங்க. நீங்க இங்க எச்சி பாலு குடிச்சவங்களால அவமானப் படுத்தப்படறத என்னால பொறுக்கமுடியலிங்க. அதனால கெளம்புங்க. இந்த மனுஷங்க மனசவிட வீதி விரிஞ்சிகிடக்குதுங்க.னு சொல்ல, இராமமூர்த்தியும் புதியஉண்மையை புரிந்துகொண்ட புத்தரைப் போல பற்று அற்ற மனத்தவனாய் தன் பாதங்களில்  ஒட்டியிருந்த மண்ணை உதறிவிட்டுவெளியேறினான்.

 

 

 

0

 

Series Navigationமாயக்கண்ணன்விஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *