பாதுகாப்பு

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

தெலுங்கில்: ஓல்கா
தமிழாக்கம் : கௌரி கிருபனநந்தன்
tkgowri@gmail.com

volgaதனலக்ஷ்மி அழாகாய் இருக்க மாட்டாள் என்பதில் சுஜாதாவுக்கு சந்தேகம் இல்லை, நம்பிக்கைதான். காதலர்களின் மனைவியர்கள் அழகாக இருப்பார்கள் என்று அவள் படித்த நாவல்களில், கதைகளில் எங்கேயும் இல்லை. படிப்பு, அழகு, எப்போதும் வியாதிக்காரியாய் கையில் ஒன்று இடுப்பில் ஒன்றுமாக, அடிக்கடி எல்லோரின் மீது கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு, கோடாலி முடிச்சுடன் பங்கரையாய் நாள் முழுவதும் காட்சி தரும் மனைவியர் இருக்கும் கணவன்மார்கள் தான் வெளி உலகத்தில் தன்னைப் போன்ற அழகான பெண்களுக்காக தேடுவார்கள் என்பதில் சுஜாதாவுக்கு ஏனோ அசைக்க முடியாத நம்பிக்கை!
அதனால்தான் சுதாதா ராஜாராமனை “உங்கள் மனைவி அழகாக இருக்க மாட்டாளா?’ என்று கேட்கவும் இல்லை. அவளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளவும் முனையவில்லை.
ராஜாராமனுக்கு தன்னிடம் ஈர்ப்பு இருக்கிறது என்று தெரிந்தது முதல் சுஜாதா அந்த ஈர்ப்பு வளருவதற்கு உண்டான வேலைகளை எல்லாம் செய்தாள். அவன் தன்னை நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியையும் கூர்ந்து கவனித்து அனுகூலமாய் இன்னொரு அடி எடுத்து வைத்தாள். அவனுக்கு வயது நாற்பது என்றும், திருமணம் ஆகி விட்டது என்றும், இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சுஜாதாவுக்குத் தெரியும். ஆனாலும் சரி அவள் அந்த திசையிலேயே நடந்தாள். முப்பத்தி ஐந்து வயது நிரம்பிய இந்த வாழ்க்கையில் சுஜாதா இது போன்ற ஈர்ப்புகளிலிருந்து இருபது முறை பாதுகாப்பாக வெளியேறி இருக்கிறாள்.
இருபத்தியோராவது தடவை அப்படி வெளியேற வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
“எதுக்காக வெளியேற வேண்டும்? அவனுக்கு தன்னைப் போன்ற அழகான, புத்திசாலித்தனம் நிறைந்த பெண் வேண்டும். அந்தப் பெண்ணின் காதல் வேண்டும். அதற்காகத்தான் தன்னிடம் நெருங்கி வருகிறான். இத்தனை வருடங்களாய் கணவன் இல்லாத தன்னுடைய பத்தினித்தன்மையால் என்ன கிடைத்து விட்டது? கன்னியாய், கற்புக்கரசியாக இருந்ததற்கு யார் பாராட்டி விருது வழங்கி இருக்கிறார்கள்? வர வேண்டிய அவதூறுகள் வந்தாகி விட்டது. சுமக்க வேண்டிய பழிகளை சுமந்தாகி விட்டது. வேண்டிய அளவுக்கு கண்ணீர் வடித்தாகி விட்டது. காதல், ஒரு ஆணுடன் தொடர்பு, இவற்றைப் பற்றிய அனுபவங்களை, உணர்வுகளை தான் ஏன் மறுக்க வேண்டும்? இந்த விதமான எண்ணத்துடன் சுஜாதா இந்த முறை சந்தேகத்திற்கு இடமளிக்காமல் ராஜாராமை தன் வாழ்க்கையில் வரவேற்றாள்.
இந்த உறவில் இருக்கும் சுகம், சந்தோஷம் எவ்வளவு என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொள்ளும் நாள் என்றைக்காவது வரக்கூடும் என்று மனதிற்கு தெரிந்து இருந்தாலும் அந்த நாள் இவ்வளவு சீக்கிரமாக வந்து விடும் என்று சுஜாதா நினைக்கவில்லை. ஒரு ஆணுக்கு இரண்டாவது பெண்ணாக இருப்பதில் இவ்வளவு வேதனை இருக்கும் என்று சுஜாதா நினைத்திருக்கவில்லை.
ஆரம்ப நாட்களில் ரொம்ப சந்தோஷமாகவே இருந்தாள். ராஜாராமனை கவர்ந்து விட்டேன் என்ற பெருமை, புதிய உறவால் ஏற்பட்ட உற்சாகம் சுஜாதாவுக்கு மகிழ்ச்சியை அளித்தன. ராஜாராமனைத் தவிர வேறு எண்ணம் இல்லாத வகையில் நாட்கள் கடந்து விட்டன,
அவன் தென்படாத வரையில் சுஜாதாவுக்கு அவன் எப்போ கண்ணில் படுவான் என்ற யோசனைதான். அத்துடன் வேறு எந்த எண்ணமும் மனதில் வந்தது இல்லை. நாளாவட்டத்தில் அந்த எண்ணங்களுடன் அவன் எப்போதும் தன்னிடமே ஏன் இருக்க மாட்டான் என்ற அத்ருப்தி, அவனுக்காக தான் எதிர்பார்ப்பது போல் அவன் தன்னிடம் வரும் வாய்ப்புக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறானா என்ற சந்தேகம் சுஜாதாவின் மனதில் கொடியைப் போல் பரவத்தொடங்கியது. நாளடைவில் பந்தல் போட்டது போல் திடமாகி விட்டது. அன்று முதல் சுஜாதாவின் மனதை ஏதோ வேதனை துளைத்தெடுக்கத் தொடங்கியது.
ராஜாராமனுக்கு தானும், தன்னுடைய காதலும் நிச்சயமாக தேவை என்ற தைரியம் போய், நாளாக நாளாக அவனைப் பற்றிய எண்ணங்கள் சுஜாதாவின் வாழ்க்கைக்கு ஆதாரமாகி விட்டன. ஆனால் அந்த எண்ணங்கள் அவளுக்கு தெம்பையும், சந்தோஷத்தையும் அளிப்பதை விட தோய்வடையச் செய்து கொண்டிருந்தன.
இறுதியில் ராஜாராமன் சுஜாதாவிடம் அடிக்கடி வர முடியாமல் போனதற்கு சொல்லும் காரணங்களில் ஒன்றைக்கூட நம்ப முடியாத நிலைக்கு வந்து விட்டாள். அவனால் வர முடியாத போதெல்லாம் குழந்தைகளுக்கு உடம்பு சரியாக இல்லை என்றும், தன் மனைவி தனலக்ஷ்மிக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டாற்போல் இருக்கிறதென்றும் சொல்லும் போது சுஜாதாவுக்கு ஆத்திரத்தில் இதயம் பற்றி எறிவது போல் இருந்தது. அவனுக்கு தான் முக்கியம் இல்லையா என்று நினைத்து கண்ணீர் வடித்தாள். “அவன் தன்னுடைய சொத்து. தன்னிடமே இருக்க வேண்டும். தன் கையை மீறிப் போகக் கூடாது. என்ன செய்வது?’ இது போன்ற யோசனைகளுடன் சுஜாதாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல் இருந்தது.
அதற்கு முன் ஒய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகத்திற்கு சென்று கொண்டிருந்த சுஜாதா அழகு நிலையத்திற்குச் செல்லத் தொடங்கினாள். சிநேகிதிகளுடன் சினிமாவுக்கு, டிராமாவுக்குப் போவதை அறவே நிறுத்தி விட்டாள். எப்போ ராஜாராமன் வருவானோ என்று எதிர்பார்த்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதையே நிறுத்திவிட்டாள். ஒண்டி ஆளாக இருந்தாலும் கொஞ்சம் பெரியதாக, வீட்டின் முன்னால் தோட்டம் இருக்கும் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வீட்டையும், அந்த தோட்டத்தையும் அழகாக பராமரிக்கும் சுஜாதா அவற்றை அசிரத்தைச் செய்யத் தொடங்கினாள். ராஜாராமன் வரும்போது யாரும் இருக்கக் கூடாது என்று சிநேகிதிகளை தன் வீட்டுக்கு அழைப்பதை, அவர்களுடன் பேசி பொழுது போக்குவதை நிறுத்திவிட்டாள். அவர்கள் வீட்டுக்குப் போவதையும் குறைத்துக் கொண்டாள். நேரம் முழுவதையும் ராஜாராமனுக்காக காத்திருப்பதிலோ, அவனுக்காக வருத்தப்படுவதிலோ, அவனுடன் சேர்ந்து கழிப்பதிலேயோ செலவிட்டாள். விசாலமாக படர்ந்து, பலவிதமான உயிரோட்டமான உறவுகளுடன் ஒளிர்ந்து கொண்டிருந்த சுஜாதாவின் வாழ்க்கை நாளடைவில் குன்றிப் போய் வீட்டுடன் குறுகிப் போய் விட்டது. வீட்டிலும் சந்தோஷமாக இருக்கும் நேரம் ரொம்ப குறைந்து விட்டது.
போகப்போக சுஜாதாவிடம் அமைதியின்மை அதிகரித்தது. ராஜாராமன் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம் அதிகரித்தது. முதலில் தான் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத, தன் எண்ணங்களில் இடம் பெறாத தனலக்ஷ்மி இன்று அவளுக்கு எதிரியாகி விட்டாள். ராஜாராமனைவிட தனலக்ஷ்மியைப் பற்றி அதிகமாக யோசிக்கும் நிலைக்கு வந்து விட்டாள் சுஜாதா. எப்படியாவது அவளிடமிருந்து ராஜாராமனை விடுதலை செய்ய வேண்டும். அங்கே ராஜாராமனுக்கு எந்த சுகமும் இல்லை என்று நினைத்தாள். தான் சமைக்கும் அரைகுறை சமையலைக் கூட வாரி வளைத்துக் கொண்டு சாப்பிடும் ராஜாராமனைப் பார்க்கும் போது தனலக்ஷ்மி வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் இல்லத்தரசியாக கூட இருக்கவில்லை என்று புரிந்தது. எல்லா விதத்திலேயும் தான் ராஜாரமனுக்கு சந்தோஷம் தரும்போது, அவன் தனக்கு முழுவதுமாக சொந்தம் ஏன் ஆக கூடாது?
தனலக்ஷ்மியிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொள்ளச் சொல்லி முதல் முதலில் தயக்கத்துடனும், சந்தேகமாகவும் கேட்ட சுஜாதா போகப் போக அது தன்னுடைய உரிமை என்பது போல் மிரட்டத் தொடங்கினாள். நாட்கள் செல்லச் செல்ல சுஜாதாவின் வார்த்தைகள் தொல்லைக் கொடுத்து வருவதாகத் தோன்றியது. எரிந்து விழத் தொடங்கினான். சுஜாதா அழுதாள். அவன் கிளம்பிப் போன பிறகு அமைதி இல்லாமல் தவித்தாள். தன்னுடைய தனிமையை நினைத்து தன் மீதே இரக்கம் கொண்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள். கண்ணீர் வடிந்த பிறகு மேகமூட்டத்துடன் கூடிய மனதுடன் தீனமாய் காட்சி அளித்தாள். போகப்போக இளைத்துத் துரும்பாகிவிட்டாள்.
இந்த நிலையை சுஜாதாவின் சிநேகிதிகள் கவனித்தார்கள். அவளுடைய நெருங்கிய சிநேகிதி கீதா ஒரு நாள் வந்து உள்ள விஷயத்தைச் சொல்லச் சொல்லி பிடிவாதம் பிடித்தாள்.
யாரிடமாவது சொல்லவில்லை என்றால் இனி தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டாள் சுஜாதா.
அதனால் கீதா வந்து, “உன்னுடைய கவலைதான் என்ன? எந்த அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டாய்?” என்று தூண்டித் துருவி கேட்டதும் இனியும் மறைத்து வைக்க முடியாமல் உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டாள். கீதா தன்னை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்ப்பாள் என்றோ அல்லது தன்னுடன் சேர்ந்து துக்கத்தை கொண்டாட தயாராவாள் என்றோ நினைத்தாள். கீதா கொஞ்சம் பகுத்தறிவு உள்ள மனுஷி. அதனால் சுஜாதா சொன்னதைக் கவனமாக கேட்டுக்கொண்டு அவள் மனதிற்கு அமைதி கொடுக்கும் வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள். நடந்து முடிந்து போனதற்கு கடிந்து கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படிச் செய் என்று தீர்ப்பு வழங்குவதும் பரிகாரமாகி விடாது என்று நினைத்தாள்.
”நீ ரொம்ப முட்டாளாக இருக்கிறாய்” என்றாள்.
“உண்மைதான்.” உடனே ஒப்புக்கொண்டாள் சுஜாதா.
தான் ராஜாரமனுடன் உறவு வைத்துக் கொண்டதுதான் முட்டாள்தனம் என்று நினைத்திருந்தாள் சுஜாதா. ஆனால் கீதா அது ஒன்றும் முட்டாள்தனம் இல்லை என்று சொல்லிவிட்டாள்.
“நீ எந்த ஈர்ப்புக்கும் படிந்து போகாமல் கட்டுப்பாட்டுடன், தபஸ்வினியாக இருக்கவில்லை என்பது இல்லை என் வருத்தம். அப்படி இருப்பதுதான் உயர்வு என்றும் நான் எண்ணவில்லை. ஆனால் நீ இந்த ராஜாராமன் உனக்கு சொந்தம் ஆகவில்லை என்று வேதனைப் படுகிறாயே? அதுதான் முட்டாள்தனம் என் உத்தேசத்தில். உன்னுடைய மற்ற நட்புகளில் இதுவும் ஒன்று என்று நீ நினைத்து இருந்தால் உனக்கு இந்த வேதனை இருந்திருக்காது. நான் உன்னுடைய சிநேகிதி. உன்னைச் சந்தித்துப் பேசுவது நன்றாக இருக்கும் என்றால், நினைத்தபோது வருவேன், இருவரும் சேர்ந்து எத்தனையோ விஷயங்களைப் பகிருந்துகொள்வோம். கற்றுக்கொள்வோம். ஜாலியாக நேரத்தை கழிப்போம். இருவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் வரையில்தான் சேர்ந்து இருப்போம். அதுபோன்ற உறவுதான் ராஜாராமனுடையது என்று நினைத்தாய் என்றால் இந்த அமைதியின்மையிலிருந்து வெளியேறி இருப்பாய், இப்பொழுது பார்! இதற்கு முன்னால் இருந்த சந்தோஷங்கள் எல்லாம் உன்னிடம் காணாமல் போய் விட்டன. அவனுடைய யோசனையைத் தவிர வேறு இல்லை. வாழ்க்கையை அமைதி இல்லாமல் ஆக்கிக் கொண்டு விட்டாய். இளைத்துவிட்டாய். ஒரு நபருடன் இருக்கும் தொடர்பு உன்னை இந்த அளவுக்கு மாற்றி விட்டது என்றால் அதன் அர்த்தம் என்ன? நாம் ஒரு நட்பில், காதலில் இருக்கிறோம் என்றால் அதனிடமிருந்து நமக்கு சந்தோஷம் கிடைக்க வேண்டும், கஷ்டங்கள் வந்தால் அவற்றைக் கடக்கலாம். ஆனால் எல்லாமே துக்கம் தருவதாகவும், சோகமயமாகவும் ஆகிவிட்டால், அந்த உறவு நம் வாழ்க்கையை கொஞ்சமாவது விசாலமாக ஆக்க வில்லை என்றால், வாழ்க்கை புதிய மாற்றத்துடன் உற்சாகம் நிறைந்ததாக ஆகவில்லை என்றால் அந்த உறவைப் பற்றி கட்டாயம் யோசிக்க வேண்டும்.
இதற்கு முன்னால் இருந்த தன்னம்பிக்கை இப்பொழுது உன்னிடம் இல்லை. இதற்கு முன்னால் உனக்கு எதையோ இழந்து விடுவோம் என்ற பயம் இருந்தது இல்லை.
சம்சார சாகரத்தில் மாட்டிக் கொள்ளாமல் நீ நிம்மதியாக வாழ்ந்து வருகிறாய் என்று பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தால், நீ அந்த புதைகுழிக்காக தவித்துக் கொண்டிருக்கிறாய். உன் வேதனை அர்த்தம் இல்லாதது.
அந்த ராஜாராமனுக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்று தெரிந்துதான் நீ அவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாய். அவன் உனக்கு சொந்தம் ஆக வேண்டும் என்றால் நீ யாகவே தாங்க முடியாத பாரத்தை தலையில் வைத்துக் கொள்வதுதான். உனக்கு அந்த சுமை ஏன்? எனக்கு புரியவில்லை.” கீதா ஒரே மூச்சில் தான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லி முடித்துவிட்டாள்.
“எனக்கும் புரியவில்லை. ஆனால் ராஜாராமன் எனக்குச் சொந்தமாக வேண்டும். என்னுடைய ஆளாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.”
“அவன் மூலமாய் குழந்தைகளை பெற வேண்டுமென்று…” சந்தேகமாய் பார்த்தாள் கீதா.
சுஜாதா சிரித்து விட்டாள். “அந்த வாய்ப்பு இல்லை. அவன் ஆபரேஷன் பண்ணிக் கொண்டு விட்டான்.”
“பின்னே எதற்காக வேண்டுமென்றே போய் சுழலில் மாட்டிக் கொள்கிறாய்? நீ தான் வேண்டும் என்று அவன் நினைத்தால் விவாகரத்துக்காக பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அந்த போராட்டத்தில் வரும் கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கு உன்னைத்தான் பொறுப்பாளி ஆக்குவான். உன்மீது பழி போடுவான். அந்த பரிணாமத்தில் உங்கள் இருவருக்கும் இடையே தூரம் அதிகரிக்குமே தவிர குறையாது. அதன் பிறகு குழந்தைகளிடமிருந்து தன்னைப் பிரித்துவிட்ட அரக்கி போல் தென்படுவாய். குழந்தைகளை அவன் விட்டுக்கொடுக்க மாட்டான். குழந்தைகள் எங்கே தன்னை விட்டுப் போய் விடுவார்களோ என்ற பயத்தில் அவர்களுக்கு மேலும் நெருக்கமாவதற்கு முயற்சி செய்வான். உங்களுடைய உறவு அறுந்து போகாமல் இருக்காது. அவனுக்கு மனைவியிடமிருந்து பிரிந்து போவதில் விருப்பம் இல்லை என்றால் உன்னுடைய பிடுங்கல் தாங்கி கொள்ள முடியாமல் உன்னிடமிருந்து விலகிப் போய் விடுவான். அது உனக்கு நல்லது என்பது என்னுடைய உத்தேசம். நீயாகவே அவனுக்கு சிறை கைதியாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாய். அது உனக்குப் புரியவில்லை.” கீதா ரொம்ப நேரம் கீதோபதேசம் செய்துவிட்டுப் போனாள்.
ஆனால் நன்றாக காய்ந்த தோசைக் கல்லின் மீது தெறித்த நீர்த் துளிகள் போல் இந்த வார்த்தைகள் சுஜாதாவின் மூளையின் பதியவில்லை. அவன் மனம் மட்டும் அடுப்பின் மீது வைக்கப்பட்ட தோசைக்கல் போலவே கொதிக்கத் தொடங்கியது. அந்த மாதிரி எரிவதில் தான் ஏதாவது சுகத்தைக் கண்டு பிடித்து இருக்கிறோமா என்று சுஜாதாவுக்கு சந்தேகம் கூட வந்தது.
அந்த சந்தேகம் வந்ததும் மனம் மேலும் கலக்க மடைந்து பிர்லா மந்திர் சென்றாள். தெய்வ தரிசனம், குளிர்ந்த காற்று, அமைதியான சூழ்நிலை மனதை கொஞ்சம் சமாதானப்படுத்தும் என்று நினைத்தாள். ஆனால் அவள் விருப்பம் நிறைவேறவில்லை. தெய்வ தரிசனம் கொஞ்சம் கூட பயன்படவில்லை. போறாத குறைக்கு க்யூவில் நின்று நின்று கால்கள் கடுத்தன. அன்று சனிக்கிழமை என்று நினைவு இல்லாமல் போனதற்கு தன்னையே நொந்து கொண்டாள். அந்த எரிச்சலில் சுவாமியை சரியாக பார்க்கவும் இல்லை. குளிர்ந்த காற்றையாவது அனுபவிப்போம் என்று நினைத்து அருகில் இருந்த செடிகள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
அன்று மாலை நிறைய பேருக்கு குளிர்ந்த காற்று தேவைப் பட்டது போலும். அந்த இடம் முழுவதும் மக்கள் கூட்டத்துடன் சந்தடியாக இருந்தது. குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டு, பெரியவர்களை பதற்றப்பட வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள். அந்த குழந்தைகளைப் பார்த்ததும் சுஜாதாவின் மனம் இலேசாகி விட்டது. தன்னையும் அறியாமல் இதழ்கள் மீது முறுவல் பூத்தது. சுற்றுச் சூழலை, அக்கம் பக்கத்தில் இருந்த மனிதர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே தன்னுடைய விஷயத்தை மறந்து போக வேண்டும் என்று முயற்சி செய்தாள்.
சுஜாதாவுக்கு நான்கைந்து அடிகள் தொலைவில் இரண்டு பெண்மணிகள் உட்கார்ந்து இருந்தார்கள். இருவரும் நிசப்தமாய், ஏதோ யோசனையில் மூழ்கி விட்டவர்களைப் போல் அமர்ந்து இருந்தார்கள். அதில் ஒருத்தியைப் பார்த்தால் திரும்பத் திரும்ப பார்க்கணும் என்ற அளவுக்கு அழகாக இருந்தாள். அழகு என்ற வார்த்தை பொருத்தமாக இருக்காதோ என்னவோ. ரொம்ப கண்ணியமாக இருந்தாள். மாநிறமாக இருந்தாலும் ஒளி வீசும் கண்கள். சற்று பூசிய உடல்வாகு. அடர்த்தியாக இருந்த கூந்தலை கொண்டையாக முடித்திருந்தாள். ஓரிரு முறை அவளை கூர்ந்து பார்த்த சுஜாதா திரும்பவும் தன்னுடைய வேதனையில் மூழ்கிவிட்டாள். இதற்கு முன்பாக இருந்தால் அப்படி தன்னுடைய பார்வையில் தனிப்பட்ட விதமாக தோன்றியிருந்தால், ரொம்ப நேரம் அவர்களை கவனித்து, முகஜாடையை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களுடைய ஸ்கெட்ச் வரைவதற்கு முயற்சி செய்வாள். இப்பொழுது பென்சிலை கையில் எடுத்து ரொம்ப நாளாகி விட்டது.
ராஜாராமன் சொல்லும் நொண்டி சாக்குகளை தான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? இந்தமுறை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் முடிவு செய்து விட வேண்டும். காதலுடன் தன்னை அணைத்துக் கொள்ளும் கைகளால், முத்தமிடும் அந்த இதழ்களால் அந்த சோனி மனைவியை கடமைக்காகவாவது எப்படி அணைத்துக் கொள்வான்? எப்படி முத்தமிடுவான்? என்னை காதலிக்கிறான் என்றால் இனி அவன் தனக்கு மட்டுமே சொந்தம். அப்படி இல்லாமல் போவதை தான் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?
நினைக்க நினைக்க சுஜாதாவுக்கு துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. கண்ணீர் வெளியே வந்து விடாமல் இருப்பதற்கு பெறும் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“தனலக்ஷ்மி! நீ கூட ராஜாராமனைப் போல் முட்டாளாக இருக்காதே. மனதை திடப்படுத்திக் கொள். கஷ்டங்கள் எப்படி வந்ததோ அப்படியே போய் விடும். கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு பொறுமையாய் இரு. தனலக்ஷ்மி அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும் போது உனக்கு இந்த தொல்லை வந்து சேருவானேன்?”
சுஜாதாவுக்கு நான்கடி தொலைவில் இருந்த அந்த அழகான பெண்மணியிடம் பக்கத்தில் இருப்பவள் பேசிக் கொண்டிருந்தாள்.
அந்தப் பேச்சைக் கேட்டதும் சுஜாதாவுக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
தனலக்ஷ்மி என்றால் இவளா? ராஜாராமின் மனைவி இவள்தானா? இவ்வளவு அழகாக, கண்ணியமான தொற்றுத்துடன் இருப்பவன் அந்த ராஜாராமின் மனைவியா?
சுஜாதா கண்களையும், மனதையும் ஒருமுகப்படுத்தி தனலக்ஷ்மியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் இருந்தவள் பேச்சை நிறுத்திவிட்டு கிளம்புவதற்காக எழுந்து நின்று கொண்டாள்.
“நான் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு வருகிறேன். நீ போய்க் கொள் அண்ணி” என்றாள் தனலக்ஷ்மி. அவள் வார்த்தைகளில் இருந்த நிதானம், பேசும் தோரணையில் இருந்த பண்பும் சுஜாதாவின் கவனத்திலிருந்து தப்பவில்லை.
இரண்டாமவள் கிளம்பிப் போவிட்டாள். தனலக்ஷ்மி தனியாய், கவலையுடன் உட்கார்ந்து இருந்தாள், சுஜாதாவைப் போலவே. சுஜாதாவுக்கு அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து அவள் கண்களில் நீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. சுஜாதா தன் கன்னங்களைத் தடவி பார்த்த போது ஈரம் தட்டுபட்டது. பதினைந்து நிமிடங்கள் அப்படியே தனலக்ஷ்மியைப் பார்த்தபடி, அவளுடன் சேர்ந்து கண்ணீர் வடித்தாள் சுஜாதா.
தனலக்ஷ்மி கிளம்புவதற்காக எழுந்து கொண்டாள். சுஜாதாவும் எழுந்துகொண்டு அவள் பின்னாலேயே நடந்தாள்.
தனலக்ஷ்மி பஸ்ஸ்டாப்பில் போய் நின்றுகொண்டாள். சுஜாதாவும் அவள் பக்கத்திலேயே நின்றாள். பஸ் ஸ்டாண்டில் இவ்விருவர் மட்டுமே இருந்தார்கள். தனலக்ஷ்மி தன் பக்கம் பார்த்த போது சுஜாதாவுக்கு இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது.
அந்த துடிப்பினை ஜெயிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தோடு, தனலக்ஷ்மியிடம் பேச வேண்டும் என்ற விருப்பமும் சேர்ந்து கொண்டது. இனியும் கட்டுபடுத்திக் கொள்ள முடியாமல் சுஜாதா பேச்சுக் கொடுத்தாள்.
“நீங்க எங்கே போகணும்?”
“விஜயநகர் காலனி.” தனலக்ஷ்மி பண்புடன் பதில் சொன்னாள். சுஜாதாவிடம் அதே கேள்வியைக் கேட்டாள். சுஜாதா சொன்னாள்.
சுஜாதா ஒவ்வொரு விவரமும் கேட்டாள். அவள் சொன்னாள். சுஜாதா பற்றிய விவரங்களை அவள் தெரிந்து கொண்டாள்.
சுஜாதாவுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்துகொண்டு, “கொடுத்து வைத்தவங்க” என்றாள்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க?” ஆர்வத்துடன் கேட்டாள் சுஜாதா.
“திருமணம் ஆனால் எல்லாமே வேதனைதான்” என்றாள் கவலையுடன்.
“உங்களுடைய வேதனை என்ன?” சுஜாதா கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு கேட்டாள்.
“என் வீட்டுக்காரரை எப்படி கொலை செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். அதைவிட வேதனை வேறு என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.” வருத்தம் கலந்த சிரிப்பை உதிர்த்தாள்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லா விட்டால் எங்கள் வீட்டுக்கு வாங்களேன். வீடு பக்கத்தில்தான் இருக்கு.” நட்புடன் கேட்டாள் சுஜாதா.
தன் கண்களில் நட்பு வெளிப்படையாய் தென்படும் என்று சுஜாதாவுக்குத் தெரியும். எதிராளியிடம் கொஞ்சம் நட்பு சுபாவம் இருந்தாலும் தன் கண்கள் அவர்களை ஈர்த்து விடும் என்றும் தெரியும். சுஜாதாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. தனலக்ஷ்மி சுஜாதாவின் வீட்டுக்கு வந்தாள். வீட்டையும், அந்த வீட்டில் எந்த கவலையும், வருத்தமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுஜாதாவைப் பார்த்து பொறாமைக் கொண்டாள். அந்த விஷயத்தை அவளிடம் சொல்லவும் செய்தாள்.
பிறகு மெதுவாக தனக்கும் தன் கணவன் ராஜாராமனுக்கு இடையே வந்த ரகளையைப் பற்றிச் சொன்னாள்.
“கடந்த ஒரு வருடமாக அழுது அழுது சலிப்பு வந்து விட்டது. அந்த ஆளைக் கண்டால் விரக்தி வந்து விட்டது. குழந்தைகளைப் பற்றிகூட யோசிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. விவாகரத்துக் கொடுத்து விடப் போவதாக நாளையோ மறுநாளோ சொல்லி விடுகிறேன்.”
“நீங்க எதுக்காக டைவோர்ஸ் கொடுக்கணும்? உங்களுக்கு என்ன குறைச்சல்? அவர் உங்களுக்கு துன்பம் தருகிறார். அவர் உங்களுக்குத்தான் சொந்தம். உங்களுடைய உரிமையை மற்றவர்களுக்கு எதற்காக விட்டுக் கொடுக்கறீங்க?” சுஜாதாவால் தன்னை கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை.
“நான் ஒரு வருஷமாய் அப்படி நினைத்துக் கொண்டுதான் சண்டை போட்டுக் கொண்டு வருகிறேன். இனி தெம்பு இல்லை. இப்படி சண்டை போடுவதிலேயே என் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. நமக்குச் சொந்தம் என்று யாரையுமே நினைக்கக் கூடாதோ என்னவோ. வயிற்றில் பிறந்த குழந்தைகளே நமக்கு சொந்தம் இல்லாமல் போய் விடுகிறார்கள். மூன்று முடிச்சு போடுவதற்கு ஒரு லட்சம் வாங்கிக் கொண்டவன் நமக்கு எப்படி சொந்தமாவான்?”
“ஒரு லட்சம் வரதட்சிணை கொடுத்தீங்களா?” சுஜாதா வியப்படைந்தாள்.
“ஒரு லட்சத்திற்கு ஒரு ரூபாய் குறைந்தாலும் இந்த வரனைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை என்று எங்க மாமனார் அப்பாவிடம் கச்சிதமாக சொல்லிவிட்டார். ஒரு லட்சம் கேஷ், ஸ்கூட்டர், பீரோ, டபிள் காட் எல்லாம் கொடுத்தால் தவிர திருப்தி அடையவில்லை. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எல்லாம் வியாபாரம் என்று தோன்றுகிறது. அந்த வியாபாரத்தில் எல்லாமே லாபம்தான் என்று நினைத்திருந்தேன். முழுவதுமாக திவாலாகி விட்டேன் என்று இப்பொழுது புரிகிறது.”
“இப்பொழுது என்ன செய்வதாக இருக்கீங்க?”
அவளுக்கு தான் யார் என்று சொல்லி ராஜாராமனுடன் தான் தொடர்பை துண்டித்துக் கொள்வதாகச் சொல்லி விட வேண்டும் என்ற அளவுக்கு ஆவேசம் வந்தது சுஜாதாவுக்கு. ஆனால் ஏனோ சொல்ல முடியவில்லை.
“அவரிடமிருந்து பிரிந்து போய் ஏதாவது வேலை பார்த்துக்கொண்டு வாழணும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறேன்.”
தனக்கு என்ன ஆகிவிட்டது என்று சுஜாதாவுக்குப் புரியவில்லை. ராஜாராமன் தனக்குச் சொந்தம் ஆகிவிடுவான் என்ற செய்தியை அவன் மனைவியே தன்னிடம் சொல்லும் போது தனக்கு சந்தோஷம் ஏற்படாமல் இருப்பானேன்? தன் இதயம் இவ்வளவு பாரமாகிப் போவானேன்? சுஜாதாவுக்குப் புரியத்தான் இல்லை.
“நான் பி.காம். முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்கிறேன். எங்கேயாவது வேலை இருந்தால் சொல்லுங்களேன். டைப்பிங் தெரியும். இப்பொழுது ஸ்பீடாக அடிக்க முடியாமல் போகலாம். ஆனால் பத்து நாட்களில் பிக்கப் செய்து விடுவேன்.”
சுஜாதாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
“அடடா! நீங்க ஏன் வேதனைப் படுறீங்க?” என்று தனலக்ஷ்மி ஆறுதல் சொன்னாள். அப்பொழுதும் சுஜாதாவால் உண்மையைச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு தன்னுடைய முகவரியை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனாள் தனலக்ஷ்மி.
சுஜாதா உடனே ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகளை சூட்கேசில் வைத்துக் கொண்டு கீதாவின் வீட்டுக்குக் கிளம்பினாள்.
‘ராஜாராமனைப் பார்க்க மாட்டேன். பார்க்கவும் முடியாது என்னால். அவன் இப்பொழுது வந்தால் என்ன செய்வது?’ ஆட்டோவில் ஏறிக்கொண்டு கீதாவின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள். கீதா சுஜாதா சொன்ன விஷயத்தைக் கேட்டுவிட்டு திகைத்துவிட்டாள்.
“இது போன்ற பிரச்சனைகள் உன்னைத் தேடிக்கொண்டு வருவானேன்? ராஜாராமனின் சங்காத்தமே உனக்கு வேண்டாம் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தால் இப்பொழுது அவனுடைய மனைவியின் பாரத்தையும் தலையில் போட்டுக் கொள்கிறாயா? மொத்தத்தில் உனக்கு நிம்மதியாக இருக்கும் கொடுப்பினை இல்லை.” பெருமூச்சு விட்டாள் கீதா.
ஒரு வாரம் ராஜாராமனிடமிருந்து தப்பித்துக் கொண்டு திரிந்தாள் சுஜாதா. ஆபீஸ் போனிலும் தொடர்பு கொள்ள முடியாமல் ஜாக்கிரதையாக இருந்தாள். வாரம் கழித்து ஞாயிறு அன்று தன்னுடைய வீட்டுக்குச் சென்றாள். சாவகாசமாக வீட்டைப் பெருக்கித் துடைத்துவிட்டு, தலைக்குக் குளித்தாள். எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் சுஜாதாவின் எண்ணம் ஒன்றேதான். ராஜாராமனுடன் எவ்வளவு சீக்கிரமாக, எவ்வளவு குறைவான கஷ்டத்துடன் உறவை துடித்துக் கொள்வது என்றுதான். இந்த யோசைனையுடன் பாலை பொங்க விட்டாள். பொறியல் தீய்ந்து போயிற்று. தீய்ந்துவிட்ட பொறியலை மேலாக எடுத்து வேறு கிண்ணத்தில் மாற்றிக் கொண்டிருந்த போது வாசற் கதவை தட்டிய சத்தம் கேட்டது. போய் கதவைத் திறந்தாள். எதிரே தனலக்ஷ்மி! சுஜாதாவுக்கு பயமாக இருந்தது. தனலட்சுமி வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விட்டது தான்தான் என்று அவளுக்குத் தெரிந்து விட்டால்? அந்த நினைப்பே சுஜாதாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சுஜாதாவின் பயத்தை சிதறடிப்பது போல் தனலக்ஷ்மி நட்புடன் சிரித்தாள். சுஜாதா தேறிக்கொண்டவளாய் தனலட்சுமியை உள்ளே வரவேற்று உட்கார வைத்தாள்.
தனலக்ஷ்மி தான் ராஜாராமனை விட்டுப் பிரிந்து போவதாகவும், குழந்தைகளை ரெசிடென்ஷியல் பள்ளியில் செர்பித்து விட்டதாகவும், கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வேலைக்கான முயற்சிகளை செய்யப் போவதாகவும் சொன்னாள்.
“பெண்கள் ரொம்ப முட்டாள்தனமாக இருப்பார்கள் என்பதற்கு நானே பெரிய உதாரணம். கணவனை விட்டுப் பிரிந்து விட வேண்டும் என்று நினைப்பு வரும் போதெல்லாம், குழந்தைகளை ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்ப்பிக்க வேண்டும் என்று நினைபேன். திரும்பவும் அப்படி யோசிப்பதை பாவச்செயலாய் நினைத்து பயந்து வந்தேன். குழந்தைகள் ஹாஸ்டலில் இருப்பது பயங்கரமான விஷயமாகத் தோன்றும். நேற்று என் குழந்தைகளை சேர்பிக்கப் போனேன் இல்லையா? எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் தெரியுமா? அதில் விவாகரத்து பெற்றுக் கொண்ட பெற்றோரின் குழந்தைகள் மூன்று பேர் இருந்தார்கள். அவ்வளவுதான். தாய் தந்தை சேர்ந்து வாழ்ந்து கொண்டே குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்ப்பிக்கும் போது இல்லாத குற்ற உணர்வு பிரிந்து போன பிறகு சேர்ப்பித்தால் ஏன் இருக்க வேண்டும் என்று புரியவில்லை. அங்கே இருக்கும் குழந்தைகளைப் பார்த்த பிறகு என் குழந்தைகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்று தோன்றியது. என் இதயத்திலிருந்து பாரம் பெரும்பாலும் குறைந்து விட்டது. எனக்கு இங்கேயோ எங்க ஊரிலோ வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று தன்னம்பிக்கையுடன் பேசினாள் தனலக்ஷ்மி.
இது போன்ற தன்னம்பிக்கை ராஜாராமன் அறிமுகம் ஆவதற்கு முன்னால் சுஜாதாவிடம் இருந்தது. ராஜாராமன் அவள் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த பிறகு சுஜாதாவுக்கு எப்போதும் பயம்தான். எப்போதும் சந்தேகம்தான். எப்போதும் பாதுகாப்பு இல்லாத உணர்வுதான்.
தனலக்ஷ்மியைப் பார்க்கப் பார்க்க கூடிய சீக்கிரத்தில் ராஜாராமனை விட்டு வெளியேற வேண்டும் என்று தோன்றியது சுஜாதாவுக்கு.
தனலக்ஷ்மி கிளம்பிப் போன மறுநாள் ராஜாராமனைச் சந்தித்தாள். மனைவியுடன் முறித்துக் கொண்டு விட்ட விஷயத்தைச் சொல்லி சுஜாதாவைச் சந்தோஷப் படுத்துவோம் என்று வந்தவனுக்கு சுஜாதா சொன்ன செய்தி இடியாய் இருந்தது.
“உனக்காக தனலக்ஷ்மியை விட்டு விட்டேன்” என்றான் சுஜாதா சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாமல்.
‘யாரை யார் விட்டு விட்டார்கள் என்று தெரியும்.’ மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் சுஜாதா. வெளியில் மட்டும் அந்த விஷயம் தனக்கு அனாவசியம் என்றாள். ராஜாராமனுக்குக் கோபம் வந்து விட்டது. மிரட்டினான். சுஜாதாவுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவை எல்லோருக்கும் சொல்லி ரகளை செய்யப் போவதாய் எச்சரித்தான். ஆபீசில், நண்பர்களுக்கு நடுவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் செய்து விடுவதாக சொன்னான். சுஜாதா, “உன் இஷ்டம் வந்தது போல் செய்துக் கொள்” என்றாள்.
“நான் இழந்த சுதந்திரத்தை, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையைத் திரும்ப பெறுவதற்கு, பாதுகாப்பு இன்மையிலிருந்து வெளியேறுவதற்கு ஏதாவது விலை கொடுக்க வேண்டும் என்றால் கொடுத்து விட்டுப் போகிறேன். ஆனால் உன்னுடைய பந்தத்தில் சிக்குண்டு வாழ்நாள் முழுவதும் அந்த பந்தம் எங்கே அறுந்து போய் விடுமோ என்ற பயத்துடன் வாழ்வதற்கு நான் தயாராக இல்லை” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
சுஜாதாவின் வார்த்தைகள் ராஜாராமனுக்கு புரியவில்லை. ஒருக்கால் பெண்களுக்கு தாம் பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற பிரமையில் இருக்கும் ஆண்கள் யாருக்கும் சுஜாதாவின் வார்த்தைகள் புரியாதாய் இருக்கும். அதே போல் ஆண்களால் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைக்கும் பெண்களுக்கும் புரியாது. சுஜாதாவின் அனுபவம் அவளுக்கு இந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. இது எல்லோருக்கும் புரிபடுவது கொஞ்சம் கஷ்டம்தான்.
சுஜாதாவுக்கு அந்த மாதம் முழுவதும் எரிச்சலுடன் கழிந்தது. ஆனால் ராஜாராமனின் தொல்லை விட்டுப்போய் விட்டது. பாவம் ராஜாராமன்! அவனுடைய நிலைமை இரண்டுங்கெட்டானாகி விட்டது. வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விட்டான்.
எப்பொழுதாவது சுஜாதா, “பாவம் ராஜாராமன்!” என்று சொல்லப் போனால் கீதா இடைமறித்து, “ஆண்களைப் பற்றி எதற்காக இரக்கம் காட்டுகிறாய்? அவனுடைய பரந்த மார்பில் தலையைச் சாய்த்துக் கொண்டு இரு கரங்களில் பாதுகாப்பு பெறுவதற்கு ஒரு லட்சம் வரதட்சணையுடன் வருவதற்கு திரும்பவும் எந்த அபலையாவதுத் தயாராக இருப்பாள்” என்பாள்.
“இந்த முறையாவது வரதட்சிணை வாங்காமல் ஏதாவது ஏழைப் பெண்ணை பண்ணிக் கொண்டு புத்தியுடன் இருந்தால் நன்றாக இருக்கும்” என்பால் சுஜாதா.
“திரும்பவும் நீ அந்த எழைவீட்டுப் பெண்ணின் பாரத்தையும் உன் தலையில் போட்டுக் கொள்ளணும் என்று ஆசைப்படுகிறாயா?” சிரித்தாள் கீதா.
கீதா, சுஜாதா இருவரும் சேர்ந்து தனலக்ஷ்மிக்காக ஒரு வேலையைப் பார்த்தார்கள். தனலக்ஷ்மி தன்னுடைய பெற்றோர்களை சம்மதிக்க வைத்து வந்து அந்த வேலையில் சேர்ந்து கொண்டாள். இரண்டு பெண்கள் இணைந்து நடத்தி வரும் வர்கிங் விமென்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்தாள். சுஜாதா ஒவ்வொரு ஞாயிறும் தனலக்ஷ்மியிடம் போவாள். இருவரும் சேர்ந்து குழந்தைகளைப் பார்க்கப் போவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு சினிமாவுக்கோ பார்கிற்கோ போவார்கள். தனலக்ஷ்மி நட்பு சுபாவம் கொண்டவள். அவளுடன் நட்பு சுஜாதாவுக்கு நிம்மதியை அளித்தது.
தனலக்ஷ்மிக்கு சுமாராக சம்பளம் வந்தது. ஹாஸ்டலுக்கு பீசு கட்டி, குழந்தைகளின் பீசு கட்டி பணத்திற்கு நெருக்கடியாக இருந்து வந்தது. கோர்டில் கேசு முடியும் வரையில் ராஜாராமன் பணம் எதுவும் தரப் போவதில்லை என்று சொல்லிவிட்டான். அதுவரையில் தன் குழந்தைகள் எப்படி சாப்பிடுவார்கள் என்று நினைத்தான்? அவ்வளவு கடின இதயம் படைத்தவர்களாக ஆண்களால் எப்படி இருக்க முடிகிறது? வியப்பாக இருந்தது. குழந்தைகள் ஹாஸ்டலில் நன்றாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலையில் தனலக்ஷ்மி எப்பொழுதும் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தாள்.
தனலக்ஷ்மிக்கு இன்னும் கொஞ்சம் நல்ல வேலை கிடைத்தால் தேவலை என்று சுஜாதா பார்த்துக் கொண்டிருந்த போது, ஒருநாள் தனலக்ஷ்மி வந்து தான் வேலையை விட்டுவிடப் போவதாகச் சொன்னாள். சுஜாதா விப்படைந்த போது,
“நானே ஒரு வர்கிங் விமென்ஸ் ஹாஸ்டலை நடத்துவோம் என்று நினைக்கிறேன்” என்றாள்.
இப்பொழுது அவள் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். அதை நடத்துவது இரண்டு பெண்கள். அவர்களுக்கு மாதம் கணிசமான தொகை மிஞ்சுகிறது. தான் ஐம்பது பேருடன் தொடங்கினால் சரியாக இருக்கும் என்று தன்னுடைய திட்டத்தை எல்லாம் சொன்னாள். சுஜாதாவுக்கும் உற்சாகம் வந்து சேர்ந்து கொண்டது. கீதாவிடமும் சொன்னார்கள். மூன்று பேருமாக சேர்ந்து வீடு தேடினார்கள். கடன் வாங்கினார்கள் வேண்டியதை எல்லாம் வாங்கி வந்தார்கள். விளம்பரம் கொடுத்தார்கள். மூன்று பேரின் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. தங்களுடைய சக்தியை முழுவதுமாக அதில் செலுத்தினார்கள். முதல் மாதம் இருபது பெண்கள் சேர்ந்தார்கள். மூன்றாவது மாதம் எழுபது பேராகி விட்டார்கள். இனிமேல் இடமில்லை என்று யாரையும் சேர்த்துக்கொள்ள வில்லை.
தனலட்சுமியின் சாமர்த்தியம் முழுவதும் அவள் ஹாஸ்டலை நடத்திச் செல்லும் முறையில் புரிந்தது சுஜாதாவுக்கு. இத்தனை பேரை சமாளித்துக் கொண்டு, மற்றவர்கள் பாராட்டும் வகையில் ஹாஸ்டலை நடத்துவது என்றால் சாதாரண விஷயம் இல்லை. சுஜாதாவும் வீட்டை காலி பண்ணிவிட்டு ஹாஸ்டலில் சேர்ந்து கொண்டாள். தனலட்சுமியின் கை சமையலை சாப்பிடும் போது மட்டும் சுஜாதாவுக்கு ராஜாராமன் மீது இரக்கம் பொங்கி வரும். பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டு எத்தகைய பொக்கிஷத்தை இழந்து விட்டானோ என்று தோன்றியது.
பார்த்துக் கொண்டிருந்த போதே விமென்ஸ் ஹாஸ்டல் தொடங்கி ஒரு வருடம் கழிந்து விட்டது. சுஜாதா, தனலக்ஷ்மி, கீதாவுக்கு இடையே நட்பு வலுவடைந்தது. சுஜாதாவுக்கு அவ்வப்பொழுது தான் யார் என்று தனலக்ஷ்மியிடம் சொல்லி விடுவோமா என்ற விருப்பம் பலமாகத் தோன்றும்.. ஆனால் சொல்லத்தான் முடியவில்லை. இறுதியில் அந்த நாள் வந்துவிட்டது. தனலக்ஷ்மி மகளின் பிறந்தநாள் விழாவை ஹாஸ்டலில் எல்லோருமாய் சேர்ந்து ரொம்ப ஜாலியாக கொண்டாடினார்கள். தனலக்ஷ்மி ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். வங்கியில் அவள் அக்கௌண்டில் இருப்பு கூடிக் கொண்டே இருந்தது. குழந்தைகளை ஹாஸ்டலிலிருந்து அழைத்து வந்து தன்னிடமே வைத்துக் கொண்டாள். அவர்கள் தம் தாயைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னே அவள் சந்தோஷமாக இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?
அன்று இரவு சந்தடி அடங்கியபிறகு அவள் சுஜாதாவின் அறைக்கு வந்தாள்.
“இதெல்லாம் உன் மூலமாய்தான். நான் இன்று இவ்வளவு நிம்மதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு நீ தான் காரணம்” என்று கண்ணால் ஜலம் விட்டாள். சுஜாதாவுக்கு இனியும் விஷயத்தை மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை.
“ராஜாராமனுக்கும் உனக்கும் சண்டை வருவதற்குக் காரணம் நான்தான். ஆனால் அன்று உன்னைப் பார்த்த பிறகு, உன்னுடைய பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு ராஜாராமனிடமிருந்த தொடர்பில் ஆர்வம் போய் விட்டது. அவனுடன் முழுவதுமாக முறித்துக் கொண்டு விட்டேன்.” நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னாள் சுஜாதா. தனலட்சுமியின் திகைப்பு கிரமமாய் குறைந்து சிரிப்பாக மாறியது. எல்லாம் கேட்டு முடித்த பிறகு நிம்மதியாக சிரித்து விட்டாள். நினைத்து நினைத்து சிரித்தாள்.
“உங்கள் இருவருக்கு இடையில் நான் வர மாட்டேன் என்றும், நீயும், ராஜாராமனும் சேர்ந்து இருங்கள் என்று சொல்ல நினைத்தேன். நான் உறவை முறித்துக் கொண்ட பிறகு அவன் உன்னிடம் வருவான். அப்பொழுது நீயே முடிவு செய்வாய் என்று நினைத்தேன். என்னுடைய தலையீடு வேண்டாம் என்று நினைத்தேன்” என்றாள் சுஜாதா. தனலட்சுமியின் வாழ்க்கையில் புயலை உண்டாக்கியதற்கு மன்னிப்புக் கேட்க முயன்றபோது தனலக்ஷ்மி தடுத்துவிட்டாள்.
“நீ எனக்கு நன்மையைத்தான் செய்தாய் என்று சொன்னாள் நம்ப மாட்டேங்கிறாயே?”
“என்ன நன்மை? உன் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகி விடவில்லையா? நீ ஒண்டியாய், எந்த துணையும் இல்லாமல், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாய் இல்லையா?” சுஜாதா நொந்து கொண்டாள்.
தனலக்ஷ்மி நிறைவுடன் சிரித்தாள்.
“சின்னாபின்னம்! ஆதரவற்ற நிலை! உண்மையிலேயே ராஜாராமனிடமிருந்து பிரிந்து போவதற்கு முன் என் வாழ்க்கை சின்னாப்பின்னமாக இருந்தது. அப்பொழுது மட்டுமே இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், திருமணம் ஆவதற்கு முதலிலிருந்தே என வாழ்க்கையை என்ன செய்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு விஷயத்திற்கும் இயலாமையுடன் யாரோ ஒருவர் பக்கம் பார்த்துக் கொண்டிருப்பேன். எனக்காக அவர்கள் யோசிக்க வேண்டும் என்றும், முடிவு செய்ய வேண்டும் என்றும் நினைப்பேன். திரும்பவும் அவை பிடிக்காமல் வருத்தப்படுவேன். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல முடியாமல், சொன்னாலும் கேட்டுக் கொள்பவர்கள் இல்லாமல் உண்மையிலேயே என் வாழ்க்கை குழப்பமாக இருந்தது. இன்று நான் இருக்கும் அளவுக்கு சந்தோஷமாக, தன்னம்பிக்கையுடன் என்றுமே இருந்தது இல்லை. என் திருமணத்தின் போது நான் எவ்வளவு பதற்றத்துடன், கவலையுடன் இருந்தேன் தெரியுமா? வரதட்சிணை, சீர் வரிசை கொடுக்கும் வரையில் அதைப் பற்றிய கவலை, அவனுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் தெரிந்துகொண்டு, அவற்றுக்கு நான் பழக்கப்பட்டுக்கொண்டு, அவை ரொம்ப உயர்வானவை என்று நம்புவதற்கு மனதுடன் எவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருந்ததோ என்னால் சொல்ல முடியாது. அதற்குப் பிறகு ஒவ்வொரு விஷயத்திற்கும் அவன் பக்கம் பார்ப்பது, அவனுடைய அனுமதி பெறுவது, எங்கே அவனுக்குக் கோபம் வந்து விடுமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து சாவது, அதற்குப் பிறகு அவனை இழந்து விடுவேனோ என்ற பயம்! ஒரு நாளும் நிம்மதியாக தூங்கியது இல்லை. அவனிடமிருந்து பிரித்து போகணும் என்று முடிவு செய்த அன்றிலிருந்துதான் நான் திரும்பவும் மனுஷியாக மாறத் தொடங்கினேன். இன்று எனக்கு எந்த விதமான இன்செக்யூரிடி இல்லை. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் நீ தான் என்று நினைத்தால் உன் மீது அன்பு கூடிகொண்டே போகிறது” என்று சுஜாதாவை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள் தனலக்ஷ்மி. தம்முடைய வாழ்க்கைக்கு தாமேதான் கர்த்தாக்கள் என்று தெரிந்து கொண்டதால் வந்த பாதுகாப்பு உணர்வு அவர்கள் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.

Series Navigation
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Ganesh says:

    இது….. உண்மையில் எதார்த்தம் !தற்கால நிகழ்வை தத்ரூபமாக சொல்லும் யுக்தி! அனுபவங்கள் பதிவு செய்யத் தூண்டும் வைட்ட்மின்களாய் இங்கே….சிறு கதை அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *