பாரதியாரின் நவீனத்துவம்

Spread the love

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

டிசம்பர் தோறும் பாரதியின் பிறந்த தினம் நினைவு கூறப்பட்டாலும், அவர்தம் கவிதைகள் மீதான கவர்ச்சி என்பது மாதம், நாள், சாதி பாகுபாடின்றி தமிழர்களின் வாழ்வியலுடனும், படைப்பாளிகளின் நவீனத்துவப் புனைவுகள் மீதும் அதீத செல்வாக்கினைச் செலுத்தியே வருகிறது. சமூக சுதந்திரம், தனிமனித சுதந்திரம், பெண்ணியம், விடுதலை வேட்கை, தமிழ்ப்பற்று, அறிவுநிறை முதலான பண்புநலன்களை தனது முற்காலப் படைப்பாளிகளிடமிருந்து தள்ளி அகலக்கால் வைத்தே தனது கவிதைகளின் எடுத்துரைப்பைப் பாரதி கொணர்ந்திருந்தார் எனலாம். இவரின் படைப்புக்களைப் பாமரர் மேலோட்டமாகப் புரிந்து கொள்ளத்தக்கதாயும், உயரிலக்கிய பரீட்சார்த்திகள் ஆழ்ந்த வியப்புணர்வுடன் நோக்கத்தக்க கவிதை ஜனநாயகத்தை (Poetry Democracy) ஏற்படுத்தியமை பாரதியின் உன்னதமான சாதனை எனலாம்.

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் –
நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்!!”

போன்ற வரிகளில் கோலாச்சும் ஜனநாயகம் நவீன பெண்ணிய விவாதங்களில் இரண்டறக் கலக்கும் விதத்தில் பாரதியார் ஏற்படுத்தித் தந்த மொழிமை எவ்வளவு அபாரமானது. வெறுமனே ஓரிரு பாடல்களுக்குள் பாரதியாரின் மகிமையை எடுத்தியம்புவது அவ்வளவு சுலபமானதல்ல. அவர்தம் 238 பாடல்களின் மீதான விவாதத்தில் பாதிக்கு மேல் “பாரதியாரின் நவீனத்துவம்” என்ற Main Content ல் தொடங்கி பல உப உள்ளடக்கங்கள் பிறக்கக் கூடும்.

சமகாலத்தில் முளைகொண்ட வெவ்வேறுபட்ட மேலைத்தேயக் கோட்பாடுகளான நவீனத்துவ, பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் எப்படி பரிசோதனை முறைகள் மூலம் நாவல், சிறுகதை, நீள்கவிதை, குறுங்கவிதை என்று வெளியிடுகின்றனரோ அதேபோல தனித்த ஒருவராக பாரதியார் தனது சமூகத்தின் மீதான அக்கறைகளையும், அபத்தங்களையும் பாடியிருந்தார்.
அடிமைச் சமூக மரபுகளும், பிரபுத்துவ பாரம்பரியங்களும் தனிமனித சுதந்திரத்தில் மிகவும் கொடூரமான தாக்குதல் மேற்கொண்ட காலம் அது. அதற்குள்ளிருந்து மக்களை எப்படி மீட்கலாம் என்ற மேன்மையான பிரக்ஞை அவரைச் சூழ்ந்திருந்தது. அல்லது அதனை தனது மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாக உணர்ந்திருந்தார். அதனால் தான் புதிய ஆத்திச்சூடியை எழுதிய போது அதற்கான காப்பில் “பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே” என்ற பிரபஞ்சப் பொதுமையை (Universalism) அறிமுகஞ்செய்திருந்தார். (இவ்வகையான சித்தர் பாடல்கள் ஒருபுறம் இருந்தாலும் பாரதியின் ஆதியந்த வரிகளின் தார்மீகக் கடமையுணர்வு வேறுபட்டதாகும்)

“உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலகத்தீர்!
பெண்மைக்கிரங்கிப் பிழை
பொறுத்தல் கேட்கிறேன்”

என்ற குயில்பாட்டின் காதல் கதையில் பெண்மை என்ற உள்ளூர் கருப்பொருளை நிறுத்தி இங்குள்ள கொடுமைகளை நீங்களும் கேளுங்கள் என்ற சர்வதேச நீதிவழங்கல் முறை போல இப்படிப் பல கவிதைகளைப் பாடி நிகழ்கால தெளிவுபடுத்துகை என்ற தொணியை காத்திரமாக ஒலிக்கச் செய்துள்ளார்.

அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான மக்களின் சிந்தனை ஊடாட்டம் (Interaction) மீது பாமர மனங்களை மிக இலகுவில் சிந்திக்க வைத்த தன்னிலை உந்துகைகள் பாரதியை, வெகுசனப் படைப்பாளனா? கல்வியியல் புனைவாளனா? என்ற சிந்தனைகளை விமர்சகர்களிடையே ஏற்படுத்தி விடுகிறது.

தேசியவிடுதலை, பெண்மை, மொழிப்பற்று, காதல் என்ற நாற்பெரும் பிரிவுகளுக்குட்பட்ட பாரதியின் நவீனத்துவம் அடிமைத்தனத்தைக் கட்டுடைத்தல் என்ற தனித்த தேர்வின் கருக்களாகும். வெகுசன இலக்கியம் (Mass Literature) சமூக மாற்ற உணர்வை மழுங்கடிக்கத் தக்கது. ஆனால் பாரதியின் படைப்பு விகாசம் பரந்த வெளிகளுக்கும், கலாசார திரிபுகளை உடைப்பதாகவும் இருந்ததுடன், சமூக மாற்ற உணர்வை சந்த-பொருட் சுவைகளுடன் வெளிப்படுத்தியதாலும் தான் மிக உயர்ந்த மஹாகவி ஆனார் எனில் மிகையல்ல.

தான் ஒரு இலக்கியவாதி ஆகவேண்டும் என்ற முகாந்திரம் பாரதிக்கு இருந்திருக்கவில்லை. அவரை ஒரு புனைவாளன் ஆக்கியது அவர் வாழ்ந்த சமூகம்தான். ஆனால் அவரது படைப்புக்களை இன்று ஆய்வுக்காக எடுக்கும் போது இருபதாம், இருபத்தோராம் நூற்றாண்டின் மரபு-நவீன இலக்கிய வாதிகளின் படைப்புக்களில் பாரதியின் செல்வாக்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் உள்ளது. “நமக்குத்தொழில் கவிதை”, “வேடிக்கை மனிதரைப்போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” போன்ற ஒற்றை வசனங்கள் அவரது சுயசரிதையின் ஹைக்கூ வடிவங்கள் என்றே கூறலாம்.
======
.

Series Navigationகனவு : இலக்கிய நிகழ்வுவெண்ணிற ஆடை