பார்த்துப் பேசு                 

 

மீனாட்சிசுந்தரமூர்த்தி

வா தியாகு  நல்லா இருக்கியா பா.
நல்லாருக்கேன் அண்ணி,
அண்ணன் வெளில போயிருக்காரா?
இல்ல பா, குளிச்சிட்டிருக்கார்.

அதற்குள் சுந்தரம் வந்துவிட்டார்.
வாப்பா சௌக்கியமா ?
அம்மா எப்படியிருக்காங்க ?
நல்லாதான் இருக்காங்க அண்ணே,
சக்கரை மட்டும் அப்பப்ப அதிகமாகும்
சரிபா.
பார்த்துக்க பத்திரமாய்.

இருவருக்குமாக பூரி உருளைக் கிழங்கு
தடடில் கொண்டு் மேசையில் வைத்தேன்.
இப்பதான் டிபன் சாப்பிட்டேன் அண்ணி.
பரவாயில்லை பா,  வா.
இருவரும் உண்டு முடித்ததும்  காபியைத்
தந்து விட்டு  மூன்று பூரிகளை எடுத்துக் கொண்டு  அமர்ந்தேன் .

இவருடைய  அக்காவிடம் படித்தவன் இவன்.எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு  மெக்கானிக் கடையில்
வேலை பார்த்தான்.அம்மா கோலமாவு விற்பவள்.அப்பா கட்டிட வேலை செய்பவர்.
எப்படியோ ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டு லைசென்ஸ் வாங்கி விட்டான்.
ரொம்ப அழகாகப் பேசுவான்.பேச்சு
எல்லாரையும் ஈர்க்கும். உறவு முறை சொல்லி அழைப்பான். ஆனால் பணவிஷயத்தில் ரொம்ப  கெட்டிக்காரன்..

                                                        

டீச்சர் அக்கா என்றுதான் இவருடைய அக்காவை அழைப்பான். இவருடைய மாமாவும் வாத்தியார்தான்.அவரை சார் என்றே  அழைப்பான்.இவர்கள் இருவரும் எங்கே சென்றாலும். இவன்தான் சவாரி.
தங்கள் மகனைப் போலவே பார்த்துக் கொண்டார்கள். தினம் ஒருவேளையாவது
அவனுக்கு உணவளிக்காது விடுவதில்லை. அதேபோல் ஐம்பது ரூபாய் என்றால் நூறாகவே தருவார் சரஸ்வதி டீச்சர். (இவருடைய அக்கா)பல சமயங்களில் உடனே
வாங்க மாட்டான் அப்புறம் கொடுங்க என்பான். இரண்டு மூன்று சவாரி சேர்த்துஅதிகமாகவே சொல்லி வாங்கிக் கொள்வான்.நாங்கள்  விடுமுறைக்கு வந்தாலும் இவனே குடும்ப ஆட்டோக்காரன்.  நான்கைந்து ஆண்டுகளில் சொந்தமாக மூன்று ஆட்டோ வாங்கிவிட்டான். சரஸ்வதி டீச்சர் வீட்டிற்கு எதிரிலிருந்த  அடுக்குமாடிக்  குடியிருப்பில்
வாடகைக்கு இருந்தது இவர்கள் குடும்பம்.

தியாகு  அண்ணிக்கு கண்ணாடி மாத்தக் கிளம்புகிறோம்.
உன்னோட தம்பி சேகர் எப்படி இருக்கிறான்  என்றார் இவர்.
நல்லாருக்காண்ணே, பெங்களூரில்  சொந்தமா பெரிய வீடு வாங்கிட்டான்.
ஒரே பையன் பத்தாவது படிக்கிறான்.

ஆமாம். இவனுடைய தம்பி இவனுக்கு
நேர்மாறானவன். அதிர்ந்து பேச மாட்டான்.
படிப்பில் கெட்டிக்காரன். அரசு உதவித்தொகையில் பொறியியல் படித்து ஐ.டி கம்.பெனி ஒன்றில் வேலை  பார்க்கிறான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்  சரஸ்வதி
டீச்சர் காலமானார். அவருடைய கணவர்அடுத்த ஆறுமாதத்தில்  மாரடைப்பில். இறந்து விட்டார். அதனால்  எங்களுக்கும்
கடலூர் போக  அவசியமில்லாமல் போனது. சென்னை தாம்பரத்திலேயே
வீடு வாங்கித் தங்கி் விட்டோம்.

அண்ணி், வைஜயந்தி எங்க இருக்குது?.


 சிகாகோவில் இருக்காங்க  பா
ஒரு பெண்குழந்தை மூன்று வயதாகிறது.
நல்லா இருக்கட்டும்.
வேலைக்குப் போகுதா ?
ஆமாம்

ஏது இவ்ளோ தூரம் தியாகு?வினவினார் இவர் 
இங்க ஒரு வேலையா வந்தேன் அப்படியே
உங்க ஞாபகம் வந்தது.
போன் நம்பர் இருந்ததால  உங்களிடம் கேட்டுட்டு வர முடிஞ்சது.

நீங்களும்  ரிடையர் ஆகிட்டீங்கனு உங்க
நண்பர் ரவி சொன்னாரு.
ஊர் பக்கம் வந்துடலாமே.
பார்க்கலாம் பா,

எப்படிப் பேசுகிறான்?. வேலையில்லாமல்
தேடிக்கொண்டு வருவானா என்ன?.
தோணித் துலங்கி ஒரு மனை பெருமாள் நகரில் வாங்கி வைத்திருந்தோம். சரஸ்வதி டீச்சர் சொல்லியிருப்பார்கள் போல. இவன் ஒரே நச்சரிப்பு, ,’அண்ணா ரெண்டு பெண் குழந்தைகள்,அம்மா,அப்பா
பெரிய குடும்பம்.சொந்தமா சின்னதா ஒரு வீடு கட்டப் பார்க்கிறேன்.
அந்த மனையைக் கொடுத்தீங்கன்னா உதவியா இருக்கும். அவ்ளோ தூரத்தில் நீங்க
என்ன வீடா கட்டிப் போகப்போறீங்க

நல்ல பையன் கொடுத்து உதவு தம்பி.
அக்கா இந்த ஒரு மனைதானே நான் வாங்கி வைத்திருப்பது.
அட போ தம்பி, பெண்ணை ஆத்துல வெள்ளம் வந்தா முதல்ல பெருமாள் நகர்தான் மூழ்கும்.
அப்ப இவனுக்கும் பாதிப்புதானே அக்கா.
மறுத்து மறுத்து பேசாதே
உனக்கெதுக்கு மனையெல்லாம்
இந்த வீடு உனக்குதான் தம்பி.
இருந்தாலும்…….


                                       

சும்மாவா தரப் போற,  விற்கதானே சொல்றேன்.

என்னிடம் இவர் கேட்ட போது
‘நாம் என்ன நான்கைந்து மனையா வச்சிருக்கோம்.
இது ஒண்ணுதான இருக்கு.

நல்ல இடத்தில் வேற வாங்கிக்கலாம்.
நமக்கு விற்க வேண்டிய தேவை இல்லைங்க,.
அக்காவும்  சொல்றாங்க மா
அவங்க கிட்ட இருந்தா தரணும்,
நம்மை  வற்புறுத்துவது என்ன நியாயம்.?.
நான் வாக்கு தந்திட்டேன்.
என்னவென்று?
தரேன்னு.
யாரைக் கேட்டு தந்தீர்கள் வாக்கு.
சரி விடு.
இப்படிப் பார்த்தா வாழவே முடியாது.
என்ன பெரிய வாக்கு .


இப்படி ஒரு விவாதம் எழுந்து அடங்கியது.

ஒரு மூன்று மாதம் கழித்து ஊருக்கு ஏதோ
வேலையெனச் சென்று வந்தார் இவர்.

மே மாதம் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தோம்.  ஒருநாள் மாலை  ஆஞ்சநேயர் கோவில் அழைத்துப் போக தியாகுதான் வந்தான்.
‘அண்ணி  ரொம்ப நன்றி.
எதற்கு பா?.
மனையை தந்ததுக்கு அண்ணி.
அப்படியா ?
அண்ணன் வந்து கிரயம் பண்ணித் தந்தாரே, முப்பதாயிரத்துக்கு.
உங்களுக்குத் தெரியாதா?


திருடனைத் தேள் கொட்டினது போல இவர் .
மிகப் பெரிய அதிர்ச்சி எனக்கு.

                                                                 

சமாளித்துக் கொண்டு
தெரியும் பா.
சரி நீ வீடு கட்ட ஆரம்பிச்சிட்டியா.
இல்ல அண்ணி போன வாரம் ஒருத்தர்
நல்ல வெலைக்கு கேட்டார் தந்திட்டேன்.
எவ்வளவுக்கு?
இரண்டேகால் லட்சத்துக்கு.

அதற்குப் பிறகு வீடு இரண்டுபட்டது.
படித்துப் பெரிய பதவியில் இருந்து என்ன
பயன் ?
வாக்கு தவறாமை தந்த நஷ்டம் இரண்டு
இலட்சம்.

நினைவு கலைந்தது,
இப்படிப்பட்டவன் இவன். எச்சரிக்கை தேவை என்றது மனம்.

Series Navigationகுன்றக்குடியை உள்வாங்குவோம்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ்