பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல் 

Spread the love

 

 

– பத்மநாபபுரம் அரவிந்தன் –

 —————————–——————–

ஒட்டகங்கள் மேய்ந்து

திரியும் பாலைவன மணற்காடு

முட்கள் நிறைந்த குற்றுச் செடிகளை

நக்கித் திங்கும் சொர சொர நாக்கு

 

எப்பொழுதும் முதுகில் இறக்க முடியா 

சுமைபோல பெருந் திமில்

கிடைக்கும் இடத்தில் குடிக்கும்

தண்ணீரை சேமிக்கும்

அவற்றின் நீர்ப்பை

வெப்பத்தைத் தாங்கி 

மணல் புதைய நடக்கும் காற் குளம்புகள் 

கள்ளிச் சொட்டுப் போல்

சுரக்கும் பால் கொழும்பு.. 

பாலைவன கப்பல்கள் அவைகள்

 
இவைகள் இல்லாது போயிருப்பின் 

இப்படி அழகான நகரினை

உருவாக்கும் தருணம் 

பாரசீக மண்ணுக்கு எப்படி வந்திருக்கும்

 

எண்ணை ஊற்றினை கண்டெடுக்கும்

வரைதனில் தன்னை சுமந்த,

தன் சுமையைச் சுமந்த

ஒட்டகங்களை இன்று மறந்தது ஏனோ

 இன்றும் ஒன்றிரண்டு ஒட்டகங்கள்

 

மேய்கின்றன  பாலைவனத்தில் ..

 

மண்ணடியில், கடலடியில்

தேங்கிக் கிடந்த எண்ணைவளம்

கண்டடைந்த பிற்பாடு

குவிகின்ற செல்வத்தால்

வாழ்ந்த பாலையை நகரமாக்கி

அவைகளை பண்ணையில் அடைத்து

வளர்ப்பது என்பது

பாரசீகத் திமிர்தானே

 

நீண்ட நெடுந்தொலைவு பாலையில்

பயணிக்கும் அவற்றின் கால்கள்

கொட்டடிக்குள் முடங்குவதா 

பாலையில் வாழவென்றே

படைக்கப் பட்டவைகள்

பாலைவனக் கப்பல்களாய்

பெரும்பயணம் செய்பவைகள் 

இப்பொழுது அவைகள்

தேவையில்லை சுமை தூக்க

நவீன வாகனங்கள், சாலைகள் உங்களுக்கு

 

உங்கள் முன்னோர்களையும்

அவர்கள் சுமைகளையும்

சுமந்த அவைகளை சுடுமணலில்

கால்பதிக்க சுதந்திரமாய் விடுங்கள்

நடக்கட்டும் அவைகள்…

 

புல் போட்டு கொட்டடியில்

வளர்க்க அவைகள்

ஆடுகள் அல்ல .. பாலைவனத்தின் கப்பல்கள் ..

Series Navigationவலியாரே  பெரியோர்  ?