பாவண்ணன் கவிதைகள்

Spread the love

 

 

1.தீராத புத்தகம்

 

எழுத்தையே உச்சரிக்கத் தெரியாதவன்

தன் கனவில்

ஒரு புத்தகத்தைப் படிப்பதாகச் சொல்கிறான்

நினைவிலிருந்து அதன் வரிகளை மீட்டி

உருக்கமான குரலில் கதைசொல்கிறான்

 

அந்தப் புத்தகத்தின் பெயர்

யாருமே கேட்டிராததாக இருக்கிறது

அதன் கதை

யாருக்குமே அறிமுகமற்றதாகவும் இருக்கிறது

ஆனாலும் அவனைப் பொருட்படுத்துகிறவர்கள்

யாருமற்றதாக இருக்கிறது அந்த ஊர்

 

அவர்களது புறக்கணிப்பைப்பற்றி

அவனுக்குத் துளியும் வருத்தமில்லை

அவர்களுக்குச் சொல்ல நினைத்ததை

குருவிகளிடமும் அணில்களிடமும்

கூச்சமில்லாமல் சொல்லத் தொடங்குகிறான்

சில சமயங்களில்

காகங்களும் நெருங்கிச் செவிமடுக்கின்றன

 

உற்சாகம் பீறிட

மணிக்கணக்கில் தொடர்கிறது கதையாடல்

ஏற்ற இறக்கங்களோடு ஒலிக்கிறது

அவன் குரல்

 

தற்செயலாக

தொலைந்துபோன பந்தொன்றை

தேடிவரும் சிறுமி

கதைகேட்டு மகிழ்ச்சியில் துள்ளுகிறாள்

அடுத்த நாள் இன்னும் சில சிறுமிகளோடு

ஓடிவந்து உட்கார்கிறாள்

நாளடைவில்

மாபெரும் குழந்தைக்கூட்டமொன்று பெருகி

ஆர்வத்தோடு நெருங்கிவர

தீராத புத்தகத்தின் கதையை

நாள்தோறும் முன்வைக்கிறது அவன் குரல்

 

2.காலடிச்சுவடுகள்

 

வேகவேகமாக

விண்ணிலேறிய பட்டம்

ஒற்றைக்கால் வீசி

நாட்டியமாடுகிறது

 

அந்தரத்தில் நிகழும் நடனத்தை

எல்லோரும் பார்த்துக் கைதட்டுகிறார்கள்

இடமென்றும் வலமென்றும்

சொன்ன திசைநோக்கி

நகர்வதைக் கண்டு புன்னகைக்கிறார்கள்

நீந்துவதைப்போன்ற அதன் கோலம்

அவர்கள் கண்களுக்குப் பரவசமூட்டுகிறது

அருகில் தெரியும்

மேகத்தைத் தீண்டுமாறு உற்சாகமூட்டுகிறார்கள்

 

வேகம் பெருகிய ஒரு தருணத்தில்

தடுமாறி அறுபட்டு விழுகிறது

தாவிப் பறந்த பட்டம்

 

காற்றின் மேடையில் பதிந்த

காலடிச்சுவடுகள்

ஒரே நொடியில் காணாமல் போக

ஒரு சருகுபோல

எங்கோ மிதந்து செல்லும் அதன் தோற்றம்

ஆழ்ந்த துக்கத்தைவிட்டுச் செல்கிறது

 

  1. தடை

 

பார்க்கவேண்டுமென

ஆசையே எழாதா?

 

தொலைபேசியின் மறுமுனையில்

பொங்கிப் பாய்கிறது உன்குரல்

 

முன்பெல்லாம்

கதைசொல்லிச் சிரிக்கவைத்ததுண்டு

காரணங்களை அடுக்கியதும் ஒரு காலம்

மன்னிப்பை யாசித்ததும்

புன்னகையால் மழுப்பியதும்

கேலி செய்து தப்பித்ததும்

வேறுவேறு காலங்கள்

இன்று உன் கேள்விக்கு

விடைசொல்ல மொழியின்றி

தொலைபேசியைத் துண்டிக்கிறேன்

 

உன் வேதனையையும்

விருப்பத்தையும்

அறியாத கல்லல்ல நான்

எனக்குத் தெரியும்

எதிர்பார்த்து எதிர்பார்த்து

வேட்கையுடன் உன் குரலில் வெடிப்பது

அடக்கமுடியாத ஆவல்

 

ஒவ்வொரு முறையும்

புறப்பட்டு வரவே திட்டமிடுகிறேன்

அரும்பும் ஒவ்வொரு கனவின் தளிரையும்

நசுக்கிவிடுகின்றன நெருக்கடிகள்

 

ஒரு ஏற்பாட்டைச் செய்துமுடிப்பதற்குள்

ஒரு திட்டத்தை வகுத்து புறப்புடும் முன்

ஒரு கனவுக்குத் தகுந்தவனாக மாறும்முன்

எங்கிருந்தோ உருண்டுவந்து விழுகிறது ஒரு தடை

 

  1. மாய உலகம்

 

நடுத்தோப்பில் உள்ள மரத்தடியில்

சுள்ளி சேகரிக்கிறாள் சிறுமி

ஆடுகளும் மாடுகளும் மேயும் மரத்தடியைவிட

கூச்சலிட்டு பிற சிறுமிகள் ஆடும் மரத்தடியைவிட

யாருமே இல்லாத மரத்தடி

அவளுக்குப் பிடித்திருக்கிறது

 

என்றோ முறிந்து விழுந்து

உலர்ந்திருக்கும் கிளையைக் கண்டதும்

ஒரு குதிரையென நினைத்து

ஆர்வமுடன் தாவி அமர்கிறாள் சிறுமி

நீண்டிருக்கும் கொம்புகளை

கடிவாளமாகப் பற்றி

வேகவேகமாக ஓட்டுகிறாள்

குளம்புச் சத்தத்தை

அவள் நாக்கு எதிரொலிக்கிறது

ஆனந்தமுடன் அவள் முகத்தை உரசி வீசுகிறது

எதிர்க்காற்று

 

வானத்தைக் கிழித்து

வேகமாய்ப் பறக்கும் குதிரையின்மீது

மார்புறத் தழுவிப் படுத்துக்கொள்கிறான்

யார் கண்ணிலும் படாத

மாய உலகத்துக்குப் போகச் சொல்லி

குதிரைக்கு உத்தரவிடுகிறாள்

எல்லாத் திசைகளிலும் பறக்கிறது

அவள் தலைமுடி

உறக்கத்தில் மலர்ந்த கனவில்

இசையும் துள்ளலும்

சிரிப்பும் ஆட்டமுமாக விரிகிறது

அவள் காணவிரும்பிய மாய உலகம்

 

கண்விழித்தபோது

அந்தி சரிந்திருப்பதைப் பார்க்கிறாள்

வெட்கச் சிரிப்போடு கிளையைவிட்டு இறங்குகிறாள்

அதன் உலர்ந்த பட்டையைத் தொட்டு முத்தமிடுகிறாள்

அங்குமிங்கும் விழுந்துகிடக்கிற சுள்ளிகளை

அவசரமாக எடுத்தடுக்கி சுமை கட்டுகிறாள்

மாய உலகிலிருந்து

எடுத்துவந்த வெளிச்சத்தின் ஒளியில்

அவள் கண்கள் சுடர்விடுகின்றன

தோப்பிலிருந்து வீட்டுக்குச் செல்லும் பாதையில்

அவள் கால்கள் நடக்கத் தொடங்குகின்றன

 

  1. அழகுச் சித்திரம்

 

அகன்ற மரத்தையும்

ஆடும் அதன் கிளைகளையும்

தற்செயலாக வந்தமர்ந்த மைனாவையும்

பின்னணியில் சுடரும் சூரியனையும்

ஒரே கணத்தில் இணைத்து

அழகுச் சித்திரமென காட்டி நிற்கிறது

சமிக்ஞைக்கு நின்ற

வாகனத்தின் கதவுக்கண்ணாடி

 

மரத்தின் விரிவையும்

கிளைகளின் நடனத்தையும்

மைனாவின் பார்வையையும்

சூரியனையும் சுமந்துகொண்டு

சமிக்ஞை கிட்டிய மறுகணமே

துள்ளித் தாவிப் பறக்கிறது

அந்த வாகனம்.

Series Navigation