பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’

வளவ. துரையன்

[ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’

உலகம் நாம் நினைப்பதுபோல் இல்லை. பெரும்பாலும் நாம் எண்ணுவதற்கு நேர்மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் முரண்கள் வழிப்பட்டதாகத்தான் அது நடந்து செல்கிறது. அது போகும்போது அதன் காலடிகளில் சிக்கி நசுங்கித் தம் வாழ்வை இழப்பவர்கள் பெரும்பாலும் ஒன்றுமே அறியா அப்பாவிகளாகவும் கிராமத்து மக்களாகவும்தாம் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு  வாழ்வின் திரும்பிய பக்கமெல்லாம் சோகம் மட்டுமே கிடைக்கிறது.. அவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடந்துகொண்டே இருக்கிறது? படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வழி இதற்கு விடை கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வள்ளுவரே இந்த முரணுக்குத் தோற்றுவாயை அறிய முயன்று திகைக்கிறார். எல்லாரையும் மோசம் செய்பவன், பிறரை அண்டிக் கெடுப்பவன், பொறாமையை நெஞ்சில் சுமந்திருப்பவன் ஆகியோருக்குச் செல்வம் நிறையச் சேர்கிறது. ஆனால் தன்னால்  முடிந்த மட்டும் பிறருக்கு நல்லது செய்து உழைப்பவனோ வாழ்வின் அழிவுக்கே தள்ளப்படுகிறான். இன்னும் நிறைய இதில் ஆராய்வதற்கு இடம் உள்ளது என்ற முடிவுக்கு வந்த வள்ளுவர்,

”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்”

என்று எழுதிச் செல்கிறார். தங்கள் வாழ்வில், மட்டுமன்றி பிறரது வாழ்விலும் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அந்தப்பார்வை உங்களுக்கு ஓர் அனுபவமாக மாறட்டும். அது உங்களுக்கு ஒரு படிப்பினையைத் தரட்டும். அதிலிருந்து ஆய்வு செய்து நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்பதுபோல் அவர் குறள் அமைந்திருக்கிறது. அதனால்தான் நவீன இலக்கியம் சில காட்சிகளை நேரடியாகவும் சிலவற்றைப் படிமங்களாகவும் காட்டுகிறது. கவிதை, சிறுகதை, நாவல் எல்லாவற்றிலும் படைப்பாளன் ஏதோ ஒன்றை நமக்குத் தெரிவிக்க முடிவெடுத்துத்தான் படைக்கின்றான்.

அப்படித்தான் இந்த “அரபிக் கடலின் ஓரத்தில்” நாவலை நான் பார்க்கிறேன். தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் உலவிய காலத்தில் தன் முதல் நாவலான “வண்டிப்பாதை”யைப் படைத்த நாவலூர் குமரேசன் தற்போது ”அரபிக்கடலோரத்தில்” என்ற இரண்டாவது நாவலில் மேற்குக் கடற்கரையின் ஒரு கிராமத்து வாழ்வைக் காட்டுகிறார். இரண்டிலுமே சாதாரணமான பேச்சுநடையைக் கையாண்டிருப்பது மட்டுமே பெரிய ஒற்றுமை. மற்றபடி இரண்டுமே வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. நாவல் பெரும்பாலும் பின்னோக்கு உத்தியில் செல்கிறது.

ஒரு பாவமும் செய்யாத ஜெயலேகாவும் கங்காதரனும் ஏன் இந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் எனும் ஒரு வினா நம்முன் எழுவது தவிர்க்க இயலாததாகிறது. நெடுநாள் திருமணமாகாமலிருந்தவனுக்கு மனம் விரும்பிய பெண் கிடைத்து மணம் முடிந்தபிறகு அப்பெண் முன்பே ஒருவனுடன் ஓடிப்போனவள் என்று அறியும்போது படும் வேதனை எழுத்தில் சொல்ல முடியாது. இத்தனைக்கும் அவன் தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவன். அதுபோல வாய் பேச முடியாத ஜெயமாலாவிற்கு மனம் விரும்பும் வாழ்வு கிடைக்கிறது. ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் அவள் கணவன் ரயில் விபத்தில் மாண்டுபோவது ஏன் நடக்கிறது? நாவலின் இறுதிப்பகுதியைப் படித்து முடிக்கும்போது ”செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என எண்ணி நம்மால் அவர்களுக்கு இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே விட முடிகிறது.

மாலுக்குட்டியின் வாழ்வு பின்னால் தறிகெட்டுப்போகும் என்பதை அவள் முன்பே செய்த ஒரு செயலைக் காட்டி ஆசிரியர் உணர்த்திவிடுகிறார். எனவே அவளின் குடும்பப் பெண் எனும் தகுதி நிலைகுலையும்போது  நம் மனம் பதறுவதில்லை. மாறாக அதை ஏற்கவும் செய்கிறது.

அதேபோல ஒரு தந்தைக்குப் பிறந்த இரு மகன்களே சொத்திற்கு அடித்துக் கொள்வதை  மிகச் சாதாரணமாக நாம் பார்க்கிறோம். எனவேதான் வெவ்வேறு தந்தைகளுக்கு மகன்களான கோவிந்தனும் கருணாகரனும் தம் மரபு வழிச் சொத்திற்கு வழக்காடுவது யதார்த்தமாகிறது. நாவலின் ஓட்டத்தில் நாமும் பதற்றமின்றி அதை ஏற்கிறோம்.

தொடக்கத்தில் மெதுவாகச் செல்லும் நாவல் போகப்போக பந்தயக் குதிரை ஓடுவது போல வேகம் எடுத்து சலிப்பில்லாமல் ஓடுகிறது. குமாரகேசனின் தள வருணனை வாசகனை நாவல் நடக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்வதில் வெற்றி பெறுகிறது. பலாப்பழத்திற்கும் ஈக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பழத்தின் வாசனை ஈக்களை எங்கிருந்தோ கொண்டு வந்து சேர்த்து விடும். அந்த ஈக்களை விரட்ட விற்பவர்கள் சிறு இலைகள் கொண்ட குச்சியை வைத்திருப்பார்கள். இதை நினைவிற்குக் கொண்டு வருகிறது நாவலின் இந்த வரி. “ பலாப்பழத்துல ஈ மொச்சற மாதிரி கடைக்குப் போறப்ப வாறப்ப அக்கா மகள் மாலுக்குட்டி மேல மொச்சற கண்ணுகளுக்கு அம்மாமன்தான் பாதுகாவல்”

இராமன் அயோத்தி நகர் விட்டுக் கானகம் செல்கிறான். காலையில் எழுந்த கோழிகள் தம் சிறகுகளை அடித்துக் கொள்வதை இராமனின் பிரிவுத்துயர் தாளாமல் அவை தம் வயிற்றில் அடித்துக் கொள்கின்றன என்று தற்குறிப்பேற்ற முறையில் கம்பர் கூறி இருப்பார். அதுபோல கங்காதரன் செத்துப்போகிறான். அப்போது ”கொடுமையைத் தாங்காத சூரியன் தலை மறைவாகுது” என்று நாவலாசிரியர் தன் குறிப்பை அதன்மேல் ஏற்றுவது நயமாக இருக்கிறது.       மொத்தத்தில் நவீன இலக்கிய உலகிற்கு அணி சேர்க்கும் ஒரு புதிய வரவுதான் என்று இந்த “அரபிக் கடலின் ஓரத்தில்” நாவலைத் துணிந்து கூறலாம்.

Series Navigationஉள்ளிருந்து உடைப்பவன்சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி