பா. சத்தியமோகன் கவிதைகள்

பா. சத்தியமோகன் கவிதைகள்

அதாகப்பட்டது..!

என்னிடம் ஒரு பேனா உள்ளது

உள் சட்டைப் பையில் வைக்கிறேன்

வெளியில் வைத்தால்

வரவு செலவு கணக்கு எழுதவே கேட்கிறார்கள்

அதுவோ

காவியம் எழுதும்

காப்பியம் பழகும்

அன்பு பேசும்

என்னிடம் அழகிய மாலைப்பொழுது உள்ளது

அங்கு எப்போதும் குயில்களின் கீச்சு கேட்கும்

சங்கீதக் குருவிகள் குளிர் பேசும்

அதன் முகவரியை பொழுதுபோக்காகவே கேட்கிறார்கள்

உள் சட்டையில் துடிக்கும் இதயம் போல

தினம் தினம் பூத்து ஒளிர

சந்தனச் சூரியன் உண்டு

அதனைக்காட்டிட தக்க நபர் கிட்டார்

பேனா-

மாலைப்பொழுது –

சந்தனச்சூரியனோடு நிற்கும் என்னை

இதோ இப்போதுகூட ஒருவன்

12Bபஸ் எப்பவரும் என்று கேட்கவே அருகில் வருகிறான்!

*****

ஆம் தோழி இதுதான் உனக்கும்நடக்கும்!

என் சொந்த சேமிப்பில்

மெளனத்தை வைத்திருந்தேன்

உள்ளேயே குமுறும் சொற்களை

சிறிது சிறிதாக கவனித்து பிரார்த்னையாக மாற்றினேன்

அடுத்த படிக்கட்டில்

பிரார்த்னை

நம்பிக்கையாவதை உணர்ந்தேன்

நம்பிக்கையை வாரிஎடுத்துக் கொண்டபோது

அன்பு சுரந்தது

அன்பு கொண்டபோதோ

யாரிடமும்

எதனிடமும் முரண்படாத சமாதானமாக ஆகிவிட்டேன்!

*****

உறுத்தல்

எதிர் பிளாட்டில்

நான் போடும் பாலிதீன் குப்பைகள்

எதிர் காற்றில்

என் வீட்டுக்கே வரும் என்பதை

ஏன் நான் மறக்கிறேன்?

யாரும் காணாத போது

பறந்து வரும் எதிர் வீட்டு

தலை முடிக்குப்பையை

அவர்கள் தோட்டப்புல் தரைக்கே

ஏன் நான் தள்ளி விட வேண்டும்?

எதிர்வீட்டுக்கு செய்யும் பிழைகள் குறித்து உணர்ந்து

திருத்திக்கொள்ளும்போது மகிழ்ச்சி வந்தது

சராசரி மனித உணர்வு

அமெரிக்காவுக்கு இருந்தால்

அவர்கள் நாட்டு மாதாந்திரக் கழிவு மூட்டைகள்

இந்தியக் கடல் அலையில் மிதக்குமா?

வடிவமில்லாத ஆனால் அழுத்தமான உறுத்தல் எனக்குள் மிதக்கிறது.

*****

Series Navigationபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறிதலைமை தகிக்கும்…