பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “

சிறகு இரவிச்சந்திரன்.

விளையாட்டைப் பற்றிப் பல படங்கள் வந்ததுண்டு. இது ‘விளையாட்டு ‘ப் பையனை பற்றிய படம். நாமும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். மரத்தடியில், பஸ் ஸ்டாப்பில், ஒத்த வயது நண்பர்கள் இயல்பாகப் பேசிக் கொள்வது போலவே, படம் எடுப்பது, இப்போதைய டிரெண்ட். அதற்கு முதல் வித்து வெங்கட்பிரபு. ரஞ்சித் அவரது சிஷ்யன். பின் படம் வேறு எப்படி இருக்கும்?
தினகரன் (எ) தீனா ( தினேஷ் ) +2 அரியர்ஸ் மாணவன். பூர்ணிமா ( நந்திதா ) டென்த் மாணவி. கதைக்களம் ஆவடி தாண்டிய ஒரு கிராமம். வருடம் கி.பி. 2000. உதார் விட்டு, ஓடி ஒளியும் கதாநாயகனுக்கு, பட்டப்பெயர் ‘ அட்ட ‘. வாழ்வின் ஒரே லட்சியம், தீனாவிற்கும் அவன் நண்பர்களுக்கும், காதலிப்பதுதான். தோழர்கள் எல்லோரும் காதலில் செட் ஆகிவிட, அதிகம் பீலா விடும் தீனாவிற்கு, பல தோல்விகள் பூர்ணிமா ‘ அண்ணா’ என்கிறாள்; இன்னொருத்தி, அவனிடமே, அவன் அண்ணனுக்கு காதல் கடிதம் கொடுக்கிறாள்; ஒருவழியாக +2 முடித்து, பிஏ வரலாறு 3ம் வருடம் படிக்கும்போது, பூர்ணிமா மீண்டும் அதே கல்லூரியில் முதல் வருடம். “தீனா உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் “ என்கிறாள். நோட்டில் காதல் குருவிகள் வரைந்து, தீனா- பூர்ணீ என எழுதுகிறாள். கடைசியில் வேறு ஒருவனுடன் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவன், அவளது பால்ய வயதுத் தோழன். அவன் பெயரும் தீனா! காதலிப்பதைக் கிடப்பில் போட்டு விட்டு, காலாற நடந்து கொண்டிருக்கும் தீனா மேல், தானாக வந்து மோதி, திருமணமும் செய்து கொள்கிறாள் கிளைமேக்சில் ஒருத்தி.
தினேஷ், வெற்றிமாறன் படங்களில் நடித்தவர். நடிப்புப் பயிற்சியும் பெற்றவர். லீட் ரோலுக்கு சரியாகச் செட் ஆகிறார். புவர் தயாரிப்பாளர்களின் விமல் ஆகலாம். நந்திதா, இனி வரும் படங்களில், எடுக்கும் வேடங்களும் கொடுக்கும் நடிப்புமே, அவரது திரை வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இதில் பெரிதாக ஒன்றுமில்லை. குடித்து விட்டு, கீச்சுக் குரலில் பேசுவது இப்போது காமெடியாகிவிட்டது. சீக்கிரம் மாற வேண்டும்.
நிச இடமா என்று தெரியவில்லை. செட் என்றால், கலை இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. அந்தப் புறநகர் குடிசைப் பகுதி படு யதார்த்தம். ஒளிப்பதிவாளரும் (பிகே வர்மா?) குறை வைக்கவில்லை. இரவிற்கும், விடியல் பொழுதிற்குமான லைட்டிங் சூப்பர். சந்தோஷ் நாராயணன் இசை, கானாவைத் தாண்டி மெலடி, சோகப் பாடல்களில் ‘இவரிடம் ஏதோ விசயம் இருக்குறது’ என யோசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் ஓகே.
ஒரு கட்டு கட்டியும், காலி வயிறோடவே இருப்பது மாதிரி ஒரு பீலிங் தருகிறது படம். நாவல்களிலிருந்தும், உலகப்படங்களிலிருந்தும், உருவி, உரு மாற்றும் குருவின் சாமர்த்தியம் இவருக்கு இல்லை. படிக்கட்டில் தொங்கியபடி, நாயகன் சைட் அடிக்கும் காட்சிகளில், படத்தின் முன்பாதி, அந்தப் பேருந்தைப் போலவே ‘விர்’ என்று வேகம் எடுக்கிறது. பின்பாதி பிரேக் டவுன்.
ரஞ்சித்துக்கு ஒரு யோசனை. இரண்டு கதைகளாக எடுத்துக் கொண்டு, இரண்டின் முன்பாதிகளுக்குத் திரைக்கதை அமைத்துக் கொண்டு, பிறகு இணைத்துக் கொண்டால் படம் சக்சஸ். இரண்டும் ஒட்டாதே என்றால், இப்போது ஒன்று எடுத்ததில் மட்டும் என்ன ஒட்டிக் கொண்டா இருக்கிறது?
குப்பைக் கூளங்களைக் கொளுத்திக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார்கள் வீடற்ற, தெருவோர நடைபாதைவாசிகள். டிஸ்கஷனில் தூக்கிப் போட்டதை வைத்துப், படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் வெ.பிரபுவின் உதவியாளர்கள். அவருடையது பிரியாணி என்றால், இவர்களுடயது குஸ்காவின் மிச்சம்.
0
கொசுறு
ஏவிம் ராஜேஸ்வரியில் என் பக்கத்து சீட்டுக்காரர் ஆறடி உயரம். ஒதுக்கப்பட்ட இருக்கை போதாமல், அவர் வளைந்து நெளிந்ததில், எனக்கு ஏகத்துக்கு ‘இடி’பாடு. அதற்குப் பிராயச்சித்தமாக, இடைவேளையில், அவர் எனக்கு கடலை பர்பி வாங்கிக் கொடுத்தது வேறு விசயம். படம் முடிந்தவுடன், வெளியே என்னை இழுத்துக் கொண்டு போய், விபரீதக் கற்பனைகளுக்கு என்னை ஆளாக்கி, ‘டீ சாப்பிடறீங்களா? “ என்று கேட்டது ஆச்சர்யம். எனது தலை இடதும் வலதுமாக அசைந்தது. டீக்குப் பதிலாக ‘ரொட்டீ’ என்று இருந்திருந்தால், எனது தலை வேறு மாதிரி ஆடியிருக்கும். ‘மம்மு’தா பிரச்சினை அது.
0

Series Navigationஅழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்பூனைகளின் மரணம்