பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்

This entry is part 11 of 41 in the series 25 செப்டம்பர் 2011

– தேஷான் ருவன்வெல்ல
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரகாலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான்.

“எங்கேயாவது வெளியே போய் வருவோமா? ஒரே அலுப்பாக இருக்கிறது.”

“எங்கே போகலாம்?”

“எங்கேயாவது போகலாம். நான் பைக்கையும் எடுத்து வந்திருக்கிறேன்.”

சில நிமிடங்களுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்ட நானும் நண்பனும் பிரதான பாதையில் நுழைந்தோம்.

“எங்கே போகிறாய்?” – கேள்வி என்னுடையது.

” சும்மா இருக்கும் நாட்களில் போவதற்கு நல்லதொரு இடம் இருக்கிறது. எனது பல்கலைக்கழகத் தோழன் இப்ப ஒரு டொக்டர். எங்களுடன் ஒரே விடுதியில் தங்கியிருந்தவன். வா..வா என்று ரொம்ப காலமாகக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறான்.”

வெலிவேரிய பிரதேசத்தைக் கடந்து கொஞ்ச தூரம் சென்று குறுக்குத் தெரு சிலவற்றில் எனது நண்பன் அடிக்கடி வந்து செல்லும் ஒருவனைப் போல வண்டியைத் திருப்பினான். எனினும் நண்பன் வழி தவறியிருந்தான். நாம் மீண்டும் பிரதான பாதைக்கு வந்து நண்பன், யாரையோ தொலைபேசியில் அழைத்துப் பெற்ற அறிவுருத்தலின் படி வேறொரு குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தோம். விசாலமானதொரு நுழைவாயில் கதவருகே மோட்டார் சைக்கிள் நின்றது. நண்பனின் தொலைபேசி அழைப்புக்கிணங்க அப் பெரிய நுழைவாயில் கதவு திறந்தது.

“ஐயா ஒரு சின்ன வேலையில் இருக்கிறார். உங்களுக்கு அங்கே வரச் சொன்னார்.”

எனது நண்பனின் வைத்தியத் தோழன், நாங்கள் போகும்போது வீட்டினுள்ளேயே அமைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை அறைக்குள் பெரியதொரு வேலையில் ஈடுபட்டிருந்தார். எனவே வெளியே போடப்பட்டிருந்த கதிரைகளிரண்டில் அமர்ந்து நாம் காத்திருந்தோம். வைத்திய நண்பனின் சேவகன் தந்த தேனீரைச் சுவைத்தபடி அவர் வரும்வரையில் ஒரு பரவசத்தோடு நான் இருந்தேன்.

நாங்கள் அங்கு சென்று நாற்பது நிமிடங்கள் கழிந்த பின்னர், எனது நண்பனின் தோழன் கைகளிரண்டையும் துடைத்தபடி, மிகுந்த சாரமுள்ள மதுபான போத்தலொன்றையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார்.

“தாமதத்துக்கு மன்னிக்கவும்..தெரியாதா இனி? ”

எனச் சொன்ன வைத்தியத் தோழன், நான் யாரென வார்த்தையேதுமின்றித் தலையசைத்து வினவினார். நான் யாரெனத் தெரிந்துகொண்ட பிற்பாடு என்னை வரவேற்றதோடு, தான் எடுத்து வந்திருந்த மதுபான போத்தலின் மூடியை அகற்றி, பருகத் தொடங்கினார். சிறிது நேரத்துக்குப் பின்னர் மதுபானத்தின் வெறியில் அவர் உளர ஆரம்பித்தார். ஆரம்பமும் முடிவும் அற்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“எனக்கு இது இப்ப வேணாம்னு போயிடுச்சுடா.. செய்றதுக்கு ஒண்ணுமில்லாம செஞ்சுட்டிருக்கேன். நிறுத்தவும் முடியாதுதானே.விஷயம் வெளியே தெரிஞ்சுடுச்சுன்னா…. தெரியும்தானே.”

நான் மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானேன்.

“அதிகமா வாறது ஸ்கூல் பொண்ணுங்க..வேலையை சிக்கலாக்கிக் கொண்டு கடைசிக்கட்டத்துல வந்து அழுதுட்டிருப்பாங்க.”

ஆச்சரியத்தின் எல்லையைக் கடந்து கொண்டிருந்த நான் அக் கேள்வியைக் கேட்டேன்.

” எதைப் பற்றிச் சொல்றீங்க? எனக்கு எதுவும் புரியல.”

நன்கு வெறியேறியிருந்த வைத்தியத் தோழன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார்.

” உனக்கு தெரிஞ்சுக்க வேணும்னா இதோ…. எல்லாத்தையும் கேட்டுக்கோ. ரொம்பக் காலம் கடந்தாப் பிறகுதான் எமக்கு வேலை கிடைச்சுது. அதுவும் ரொம்பத் தூரப் பிரதேசம் ஒண்ணுல..கட்டடம் ஒண்ணு கூட இல்லாத பிரதேசம்.. கொஞ்ச நாள் போனாப் பிறகு எனக்குச் சொந்தமா ஒரு டிஸ்பென்ஸரியைத் தொடங்கினேன். இதற்கிடையில எனது நண்பனொருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றிக் கைவிட்டிருந்தான். அவளைத் திருமணம் முடிக்க விருப்பமில்லை எனச் சொன்னான். அவன், அப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு என்னிடம் வந்தான். நான் பயந்து பயந்து அம் மோசமான செயலைச் செய்தேன். அதன் பிறகு அவன், அவனைப் போன்ற அவனது நண்பனொருவனையும் என்னிடம் அனுப்பியிருந்தான். இப்படி இப்படித்தான் நான் அபார்ஷன் டொக்டர் ஆனேன். இந்த இரண்டு கரங்களினாலும் நான் இதுவரை 32 உயிர்களை வெளியே எடுத்துப் போட்டிருக்கிறேன்.”

வைத்தியத் தோழன், எம்மை அவரது சத்திரசிகிச்சையறைக்கு அழைத்துச் சென்றார்.

“இதோ பாரு.”

அவர், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து எமக்குக் காட்டினார். விதவிதமான மதுபான போத்தல்கள் அங்கு நிறைந்திருந்தன.

“நான் பெரியதொரு குற்றவாளின்னு எனக்குத் தெரியும். ஆனா கைவிடப்பட்டு வர்ற பெண்களுக்கு நான் ஒரு தெய்வம். எனக்கு இப்ப இது போதுமாகியிருக்கு. ஆனா என்னால இதை நிறுத்த முடியாது. நிறுத்துற அன்னிக்கு நான் மாட்டிக்குவேன். எல்லா வேலைக்கும் முன்னாடி நான் நல்லாக் குடிச்சுக்குவேன். வேலை முடிஞ்ச பின்னாடியும் நல்லாக் குடிப்பேன். ‘செத்தாக் கூடப் பரவாயில்ல..செய்’ன்னு இதோ இவள் சொன்னாள். செத்துடுவாள்னுதான் நான் நெனச்சேன். ஆனா அதிர்ஷ்டசாலி.. ஆறு மாசக் கருவை அப்புறப்படுத்தியும் கூட இவள் ஆரோக்கியமா இருக்கா..அந்த ஆறு மாசக் கருவப் பார்த்தப்ப எனக்கு செத்துப் போயிடலாம்னு தோணிச்சுடா.”

வைத்தியத் தோழன் கதறியழத் தொடங்கினார். நிறைய நேரம் மேசையின் மீது தலையை மோதியபடி விக்கி விக்கியழுத வைத்தியத் தோழன் இன்னும் நிறையக் கதைகளைச் சொன்னார். எனினும் நிறைய நேரம் கடந்திருந்ததால் அவரிடமிருந்து விடைபெற்று நாம் வெளியேறினோம். நானும், நண்பனும் மீண்டும் அறைக்குத் திரும்பும் வழியில் ஒரு வார்த்தை கூடக் கதைத்துக் கொள்ளவில்லை. இரவில் எங்களைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் ஒளிக் கீற்றுக்கள் ஹெல்மட்டின் கண்ணாடியினூடு, இன்னும் பிறவாத குழந்தைக் கருக்களின் உருவமாகத் தோன்றி மறைந்தன.

Series Navigationஇந்திரனும் அருந்ததிராயும்பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *