பிடுங்கி நடுவோம்

Spread the love

விசாலமான வீடுகள்
வினாக் குறியாய்க்
குடும்பங்கள்

மாமா என்கிறோம்
அம்புலியை
யாரோ என்கிறோம்
அண்டை வீட்டாரை

எல்லாரும் திறனாளிகள்
எல்லாரும் பட்டதாரிகள்
எல்லாரும் கடனில்

அனைவர் கையிலும்
அறிவுச் சாவி
திறக்கத்தான்
நேரமில்லை

மருந்துகள் ஏராளம்
நோய்கள் அதைவிட
ஏராளம்

ஆதாயம் தேடும்
வியாபாரப் பொருள்களாய்
உறவுகள்

விரைவான உணவுகள்
மெதுவான சீரணங்கள்

ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிகிறார்
சிரிக்கத் தெரிவதில்லை

வாழும் நிலம் செத்துக்
கொண்டிருக்கிறது
குற்றுயிராய்
மனித நேயம்

வாருங்கள்
வாழ்க்கையைப்
பிடுங்கு நடுவோம்

அமீதாம்மாள்

Series Navigationவாசு பாஸ்கரின் “ மறுபடியும் ஒரு காதல் “ஆசை அறுமின்!