பின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .

This entry is part 8 of 35 in the series 11 மார்ச் 2012

எம் ஜி சுரேஷை, ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இலக்கியக் கூட்டங்களில் பார்த்துப் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. அவர் அதிகம் உலகத் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். நன்றாக ஊதியம் வரக்கூடிய வங்கி வேலையை விட்டு விட்டு, புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் ‘ என்று சற்று விசித்திரமான தலைப்பு கொண்ட புத்தகத்தை, அவர் வெளியிட முயன்று கொண்டிருந்தார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட, இருவாட்சி இலக்கியத் துறைமுகம் பொங்கல் மலர் 3ல், அவரது கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நேர்க்கோடு இலக்கியம், எல்லோரும் செய்வது. ஆனால் சுரேஷ் போன்றவர்கள், அதையும் தாண்டி ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் போவார்கள். ஒரு ஆரம்பம், ஒரு நடு, ஒரு முடிவு போலல்லாமல், குலுக்கிப் போட்ட சோழிகளைப் போல, வரிசை ஏதுமற்று எழுதப்படும் கதைகள், பின் நவீனம் என்கிறார் சுரேஷ். சில பேர் எழுதும் கவிதைகள் கூட சமயத்தில் அப்படித்தான் இருக்கின்றன. அவையும் பின் நவீன கவிதைகளோ என்னமோ!

கட்டுரையில் சுவாரஸ்யமான விசயங்கள் இருக்கின்றன. ஜே கேயின் ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ நாவலை, மரபார்ந்த நாவலாகச் சொல்லும் இவர், தன்னுடைய நாவலை ( அட்லாண்டிஸ் மனிதன் ) பின் நவீன நாவலாகச் சொல்கிறார். யுவன் சந்திரசேகர் கூட இப்படிக் கதைகள் எழுதியிருக்கிறார். சிலந்தி வலையைப் போல, ஒரு மையத்தைக் கொண்டு பின்னாமல், எங்கும் தொடர்பற்று இருக்கும் நிலையை கொண்ட கதைகளை இவர் மேற்கோள் காட்டுகிறார். தமிழில் சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளை இவர், பின்நவீனத்துவம் கொண்டவை என்று ஒப்புக் கொள்கிறார். பின் நவீனத்துவக் கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்படும்போது, அவை பின்நவீனத்துவப் படங்களாக மாறுகின்றன என்பது இவரது வாதம்.

இவர் தன் வாதத்தை முன்வைக்க, மேற்கோள் காட்டியிருக்கும் திரைப்படங்கள் நான்கு.

சோலாரிஸ்.

ஸ்டானிஸ்லாவ் லெம் என்கிற ருஷ்ய நாவலாசிரியர் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இயக்குனர் ஆந்திரேய் தார்கோவ்ஸ்கி. விண்வெளி ஆய்வுக்கூடத் தில் தற்கொலை செய்து கொண்ட வீரரின் இறப்பை ஆராய அனுப்பப்படும் உளவியல் மருத்துவர் கிறிஸ் கெல்வின், நியூட்ரான்களால் செயற்கையாக உருவாக்கப்படும், இறந்து போன தன் மனைவி ஹாரியை சந்திக்கிறார். எது அசல், எது பிம்பம் என்று புரியாமல், மனம் பிறழ்ந்து பூமிக்குத் திரும்புகிறார். ஆய்வுக்கூடம் அருகில் இருக்கும் கடலின் உயிரினம் ஒன்று, கூடத்தில் உள்ளவர்களின் மனதில் புகுந்து, அவர்கள் விரும்பும் நபர்களை, நியூட்ரான்கள் மூலம் உருவாக்கி அவர்களை குழப்பமடையச் செய்கிறது.

ரோஜாவின் பெயர்

ஷான் கானரி நடித்த படம். இத்தாலி மடாலயத்தில் உள்ள துறவிகள், மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். நூலகத்தின் அருகாமையிலேயே இந்த சாவுகள். துப்பறியச் சென்ற அதிகாரி, சாவுக்கான காரணத்தை கண்டுபிடிக்கிறார். அரிஸ்டாடில் எழுதிய கவிதையியல் புத்தகத்தில், இன்பியல் பகுதியில் உள்ள பக்கங்களில் விஷம் தடவப்பட்டிருக்கிறது. துறவிகள் இன்பியல் அறியக்கூடாது. அதைப் புரட்டுபவர்கள், நாக்கில் எச்சில் தொட்டு, புரட்டும்போது, விஷம் பட்டு இறந்து போகிறார்கள். மூத்த துறவியின் வேலை இது. அக்காலத்து கிருத்துவ கட்டுப்பாடுகளை விமர்சனம் செய்யும் படமாக இது இருந்தது.

க்ளாக் ஒர்க் ஆரஞ்ச்

ஆண்டனி பர்ஜஸ் எழுதிய நாவலை, ஸ்டேன்லி குப்ரிக் படமாக எடுத்திருக்கிறார். அலெக்ஸ் என்கிற இளைஞனை பற்றிய படம். வன்முறையில் நாட்டம் கொண்ட அவனைத் திருத்த, சிறையில் வெறுப்பு மருத்துவம் என்கிற பெயரில், வன்முறைக் காட்சிகள் கொண்ட கிளிப்பிங்ஸைத் திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். அவன் மனம் வன்முறையிலிருந்து விலகுகிறது. ஆனாலும் சிறையிலிருந்து மீண்டு வரும் அவனை, ஒரு சராசரி மனிதனாக சமூகமும், ஏன் அவன் நண்பர்கள், உறவினர்கள் கூட ஏற்கவில்லை. அரசு அவனை மீண்டும் சிறைக்கனுப்பி, வன்முறையை விரும்புபவனாக மாற்றுகிறது.

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்

ஸ்டிபன் ஸ்பீல்பெர்க்கின் படம். உடல் நலமில்லாமல் படுத்திருக்கும் மோனிகாவின் மகனுக்கு உற்சாகமூட்ட, சிறுவனைப் போலவே தோற்றம் தரும் டேவிட் என்கிற இயந்திரத்தை உருவாக்குகிறார்கள். கடைசியில், மகனை விட டேவிட் மேல் அதீத பாசம் கொள்கிறாள் மோனிகா. அதுவும், மோனிகா தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்று பல தந்திரங்களைச் செய்கிறது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அதைக் குப்பைத் தொட்டியில் ( எந்திரன் படத்தில் வருவது போல ) போட்டு விடுகிறாள் மோனிகா. ஆனாலும், அதன் தேடலைப் புரிந்து கொண்டு, மோனிகாவைப் போல ஒரு இயந்திரத் தாயை உருவாக்குவதோடு படம் முடிகிறது.

படித்துப் பார்த்ததில் இவை எல்லாமே ஒரு அதீத கற்பனை கொண்ட திரைப்படங்கள் என்றுதான் தோன்றுகிறதே தவிர, சுரேஷ் சொல்வது போல மையத்தைத் தகர்த்து எழுதப்படும் பின் நவீனத்துவ படைப்புகள் போல் இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. எல்லாவற்றிலும் ஆரம்பம், நடு, முடிவு இருக்கிறது.

சோலாரிஸில், ஆய்வுக்கூடத்தில், விஞ்ஞானி தற்கொலை ஆரம்பம். உளவியல் மருத்துவர், நீயூட்ரான்களால் உருவாக்கப்பட்ட மனைவியைக் கண்டு புத்தி பேதலிப்பது நடு. பூமிக்கு வந்தும் அவர் நிலை மாறாமல் வாழ்வது, முடிவு.

மற்ற மூன்று திரைப்படங்களிலும் கூட, இப்படிப் பகுத்துப் பார்க்க முடியும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் காட்சிகள் எடுக்கப்பட்டு, ரசிகனின் கற்பனைக்கு ஏற்ப முடிவுகளை விட்டுவிடும் திரைப்படங்கள் தமிழில் கூட வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் படம் பார்ப்பவர்கள் இதை ‘ படம் அங்கங்கே ஜம்ப் ஆவுது ‘ என்பார்கள். இப்போது பின்நவீனத்துவம் என்கிறார்கள். பாக்யராஜின் ‘ அந்த ஏழு நாட்களில் ‘ கன்னத்தில் அறை வாங்கும் ஹாஜா செரீப், அடுத்த ஷாட்டில் வட்டிக்கடை முன்பு விழுவான். சூப்பர் பின்நவீனத்துவ ஷாட் இது!

எனக்கு ஒன்று புரிகிறது. கதை எழுதும்போது, தோன்றியதை எல்லாம் எழுதிவிட்டு, அதை அப்படியே தொகுத்தால் அது பின்நவீனத்துவ நாவல். கோர்வையாக எடுத்த படத்தை, எடிட்டிங் டேபிளில் கலைத்துக் கோர்த்தால், அது பின்நவீனத்துவப் படம். சுரேஷின் கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு வந்த தெளிவு இது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. கணையாழியின் ஆசிரியராக அசோகமித்திரன் இருந்த போது, இளைஞர்கள் நான்கு பேர், இதழை கேலி செய்யும் விதமாக, ஆளுக்கொரு தொடர்பில்லாத வரியைச் சொல்லி, பின் அதைக் கோர்த்து, ஒரு தலைப்பிட்டு, கவிதை என்று கணையாழிக்கு அனுப்பி வைத்தார்கள். பொருள் ஏதுமில்லாத வரிகளைக் கொண்ட அதை, கணையாழி வெளியிட்டும் விட்டது. இதை சொன்னவர் அந்த நான்கு பேரில் ஒருவரான ஓவியக்கவிஞர் அமுதோன். பின் நவினத்துவப் படைப்புகள் கணையாழி காலத்திலேயே வெளிவந்து விட்டன.

ஆனால் இது ஒரு தொற்று வியாதி போல, வித்தியாசமான டைட்டில் வைக்கிறேன் பேர்வழி என்று, சில இளைஞர்கள் ஒரு பத்து வருடங்களுக்கு முன், கவிதை நூல் வெளியிட அரம்பித்தார்கள். அதில் ஒன்று தான், அமிர்தம் சூர்யா எழுதிய ‘ முக்கோணத்துக்கு நான்கு பக்கம் ‘

#

Series Navigationஜென் ஒரு புரிதல்- பகுதி 34ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *