பிரேதம்

Spread the love

 

புத்தகம் மூடியே
கிடந்தது மேஜையில்
காபி ஆறிப்போயிருந்தது
ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை
இன்னும் யாருக்கும்
தகவல் தெரிவிக்கவில்லை
மனம் ஏற்றுக் கொள்ள
மறுத்தது
அவளுக்கு உற்ற துணையாய்
இருப்பேன் என்றேன்
ஆனால் இதற்கு
துணை வர முடியவில்லை
ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள
மருத்துவரை அழைக்கலாமா
என்று யோசனை எழுந்தது
நான் இன்னும்
உயிருடன் இருப்பது
குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது
எனது ஆன்மா பாதாள அறையில்
சிறைபட்டுவிட்டது
மீண்டும் அறை கதவை
திறந்து உள்ளே சென்றேன்
இத்தனை நாட்களாக வியாதி
அவளை மென்று
தின்று கொண்டு இருந்திருக்கிறது
ஏன் எல்லா பாரத்தையும்
தூக்கி சுமந்தாள்
மரணம் நிகழாத வீடு இல்லை
என்று இதற்காகத்தான்
அடிக்கடி சொல்லி வந்தாளா
விதி எனது வாழ்க்கையில்
முற்றுப்புள்ளி வைத்தது
இன்னும் சில மணி
நேரங்களில்
தீ அவளை தின்றுவிடும்
அவள் புழங்கிய வீட்டில்
வசிப்பது
ஒரே ஆறுதலாக இருந்தது
அழைப்பு வரும் வரை
நான் காத்திருக்க வேண்டுமா என
மனதில் கேள்வி எழுந்தது!

———————————–

Series Navigationகன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்பஞ்சதந்திரம் தொடர் 47