பிறந்த நாள்

 

 

ஆர் வத்ஸலா

 

இன்று என் பிறந்த நாள்

பழைய சம்பிரதாயத்தில் ஊறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும்

அப்பா

எனக்கும்

என் அண்ணனுக்கும்

முதல் பிறந்தநாளை

சம்பிரதாயப்படி

கொண்டாடவில்லையாம்

அம்மா சொன்னாள்

 

அந்த செலவில்

இரண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்கு

உதவலாம் என்றாராம்

 

எனக்கு அது சற்று குறைதான்

பிறகு ஏழு வயதில்

அம்மாவின் கணக்குப் படி

எனக்கு ‘ஏழு கழுதெ வயசு’ ஆகி விட்டதால்

பிறந்த நாள் கொண்டாட்டத்தை

கனவில் கூட காணவில்லை

 

பின் பயணத்தில்

சிலதை இழந்து

சிலதை பெற்று

 

தேர்வுகள் எழுதிய பிறகு

பாடங்கள் கற்று

 

அழுகையின் ஒரே பயன்

மன அழுக்கின் வெளியேற்றம் தான்

என்றும்

மற்றவரின் கருத்து

கருத்து மட்டுமே

என்றும்

எனது உள்பட கருத்துகளுக்கு

ஒரு போதும்

புனிதத்தன்மை கிடையாது

என்றும்

புரிந்தது

 

ஆயினும்

உண்மையான அன்பின் வெளிப்பாடாக

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பெற்று

பேரன் பேத்தி பாட

மகளின் அரவணைப்பில்

மருமகன் கையால் செய்த

‘கேக்’கை வெட்டுகையில்

புகைப்படத்திற்காக

மட்டும் வருவதில்லை

என் புன்னகை

 

அந்த ‘கேக்’கில் எனது துண்டின் அளவை தீர்மானித்தது

எனது குடும்ப மருத்துவர்

என்றாலும்

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]ஜன்னல்…