பிழிவு

 

                ஜனநேசன் 

 

“என்னம்மா, பள்ளிக்கூடத்திலிருந்து  வந்ததிலிருந்து   இப்படி சோர்ந்து  படுத்திருக்கே  “ என்றபடி  கணவர்  வெப்பமானியை மனைவியியின் நெற்றி முன் காட்டினார். தொன்னூற்றெட்டு  டிகிரியைக் காட்டியது. கணவருக்கு  நிம்மதி. கொரோனா  வீட்டுக்குள்  நுழைந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை.  .“உடம்புக்கு ஒண்ணுமில்ல; மனசுதான்  சரியில்லை. “                        “அதிகாரிகள்  எதுவம் நெருக்கடி தருகிறார்களா. “

“அவுங்க  கேட்ட  புள்ளிவிவரத்தையே திரும்பக்   கேட்டுதான் தொல்லை பண்ணுவாங்க.  இது பள்ளி பிள்ளைகளைப் பற்றியது…” என்று  சொல்லத் தொடங்கினார்.

ஆறுமாசத்திற்கு  முந்தி  ஒரு அப்பாகாரர்  தன் பிள்ளைகள் ஆனந்த், அரவிந்தை  பார்க்கணுமுன்னு போதையில்  தள்ளாடியபடி  வந்தார்.பள்ளி உதவியாளர்  ,அவரை  வராந்தாவிலே நிற்கச் சொல்லிவிட்டு அவரது மகன்களை  அழைத்து வந்தார். அப்பாவைப் பார்த்ததும் மகன்கள் பயந்து  அழுதுகொண்டு  போக மறுத்து  என்னிடம்  வந்து பதுங்கிக் கொண்டனர்.

“இங்க பாருங்க , நீங்க பிள்ளைகளுக்கு அப்பாவாக இருந்தாலும் பள்ளிக்கூட நேரத்தில்  இப்படிவந்து  தொந்தரவு பண்ணக்கூடாது .பிள்ளைக வெளியே வந்ததும் பேசிக்கிங்க. “

“பெரிய டீச்சரம்மா மன்னிச்சிருங்க. காலையிலே பிள்ளைகளை  அடிச்சிட்டேன் ; மனசு கேட்கலை. அவுங்களுக்கு  பிடிச்ச பிஸ்கட் ,மிட்டாய்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். நீங்களேகூட குடுத்திருங்கம்மா ; பிள்ளைகளை  நல்லபடியா  படிக்க வச்சுருங்கம்மா .நான் இனி இப்பிடி வரமாட்டேன்மா  ” குளறலாக பேசியபடி ஒரு பிஸ்கட் பாக்கட்டையும் , கைநிறைய  சாக்லட்களையும் கொடுத்தார். அவரது  தலை போதையாலோ ,குற்ற உணர்ச்சியாலோ  தொங்கி இருந்தது. கீழ்ப்பார்வை   மகன்களைத் தேடியது. மகன்கள்  என்னருகில் பதுங்கிக்கொண்டனர். அவர் தடுமாறி வருவதைப் பார்த்த  உதவியாளர் அந்த மனிதரை  இதமாகப்பேசி வெளியே  அழைத்துச் சென்றார்.

பிள்ளைகளை அமைதிப் படுத்தி  இடைவேளையில் வந்து தின்பண்டங்களை   வாங்கிக் கொள்ளுமாறு அவரவர்  வகுப்புகளுக்கு  அனுப்பினேன் .உதவியாளரிடம் நான்  விசாரிக்கும்  முன்னே  அவரே ,” அம்மா ,தப்பா எடுத்துக்காதீங்க ; இந்தக் கிராமத்துப் பள்ளியில இதெல்லாம சகஜம். அதனாலதான்  நான்  எப்பவும்  வராந்தாவிலே நின்னுகிட்டிருக்கிறது. இப்ப வந்துட்டு போனவரு  நல்ல கைதேர்ந்த கொத்தனாரு. முருகன்னு பேரு ; இவரால இந்த ஊரில கட்டடவேலை செய்யிறவங்க பெருகிட்டாங்க.              வருஷம் பூராவும் இவருக்கு வேலை இருக்கும். நல்ல சம்பாத்தியம். ராத்திரியானா குடிதான். வீட்டிலே  சண்டைதான்.  சம்சாரமும்  சித்தாளுவேலை தான். மணிமணியா  ரெண்டு பிள்ளைகளைப் பெத்தவ  புருஷன் தொந்தரவு   பொறுக்காம இந்தப் பிளைகளைத்  தவிக்க விட்டுட்டு  ஓடிப்போயிட்டா.   பிள்ளைகளையும்  பார்க்க முடியாம அம்மத்தா வீட்டில் விட்டுட்டு, சரியா வேலைக்கும் போகாம குடிச்சு சீரழியுறான் பாவி  . இந்தவூரு நுழைவிலே சாராயக்கடை வந்ததிலிருந்து இப்படி இந்த கிராமத்தில் ஆயிரம் கதைகள் இருக்குங்கம்மா. நாமதான்  பதனமா  இருந்துக்கணும். “

இந்நிகழ்ச்சிக்குப்  பின் நான்  பள்ளிக்கு வரும்போதும், வீட்டுக்குத் திரும்பும் போதும் என்னை  சாலையில்  பார்த்தால் வேட்டியை கால்வரை அவிழ்த்து விட்டு இடப்புறம் கழுத்தை சாய்த்துக்கொண்டு  பின்னந்தலையைச் சொறிந்தவாறு முருகன் நிற்பார்.அந்த இடத்தை நான் கடந்தபின் தான்  அவர் நகருவார் .ஊருக்குள்  பேருந்து  வராது. ஊர்விலக்கு சாலையில் இறக்கி விட்டுட்டு  அடுத்தடுத்த ஊருகளுக்கு மேற்குப்பக்கம் போயிரும். ஊருக்குள் பஸ் வராட்டாலும்  சாராயக்கடை வந்துட்டது. பேருந்தில் ஏற, இறங்க  சாராயக்கடையைக்  கடந்து போவது  அச்சலுத்தியாக இருக்கும். ஆசிரியர்கள் மூன்றுபேர்  நாலுபேர் சேர்ந்துதான்  போவோம், வருவோம். ஆனால்  எந்தவித அசம்பாவிதமும் இதுவரை  ஏற்பட்டதில்லை. டீச்சர்மார்  வருவது கண்ணில் பட்டவுடன் தடிப்பான பேச்சுகள்  அடங்கிவிடும். ஆனாலும்  எங்களுக்கு  பாம்புகளுக்கு மத்தியில் புழங்குவதுபோல் உடம்பெல்லாம் கண்ணும் காதுமாய்த்தான் இருக்கும். வழக்கத்துக்கு மாறான  சிறுசத்தமும் மெய்சிலிர்க்கச் செய்யும்.

ஒருநாள் சாயந்திரம் ; நாங்க பஸ் வர்ற சத்தம் கேட்டு நடையோட்டமா  வந்துட்டுருக்கோம். பஸ் நிற்காம நகர்ந்துருச்சு. கடைமுன்னே நின்றவங்க  டீச்சர்மாரு வர்றாங்க, நிறுத்துங்கன்னு  சத்தம் கொடுத்தும் நிற்கல. கொத்தனாரு முருகன்  வயக்காட்டில வேலை செஞ்சுகிட்டு இருக்கிற               ஆள்களுக்கு கைப்பேசியில்  சொல்லவும், அவுங்க அங்கே  பஸ்ஸை மறிச்சிட்டாங்க .ஊரே திரண்டிருச்சு.! பஸ்க்காரக சொன்ன எந்த சமாதானமும்  எடுபடலை ; அரைமணி நேரத்துக்கு மேல  பஞ்சாயத்து நடந்தது.அப்புறம் வண்டியை பின்னாலையே நகர்த்திட்டு வந்து எங்களை ஏத்திட்டுப்போனாங்க. அன்னைக்கிருந்து  பஸ் ஊருக்குள்ளே வரலாச்சு. இந்த பெருமையெல்லாம் அந்தக் கொத்தனார்  முருகனுக்குத்தான். இப்படிப்பட்டவன்  வேலைக்கு போகாம குடிச்சு குடிச்சு பிழைப்பைக் கெடுத்துக் கொண்டான் . .ஊருணிக் கரையில்  உக்காந்து போறவங்க வர்றவங்க கிட்ட  ஏதாவது பேசி வம்பளப்பான்.எங்களைப்  பார்த்தா எதுவும்  தெரியாதவன்போல்  எழுந்து நின்று வேறெங்கோ பார்த்திருப்பான்.                                                       பள்ளிநாளில  அந்தப் பசங்க ஆனந்தும் அரவிந்தும், மதியத்தில்  சத்துணவு சாப்பிடுவாங்க . காலையில் , இராத்திரிக்கு  எப்படியோ…ஊரார்  தயவில்…! பெரியவன் ஆனந்த்  ஆறாவது படிக்கிறான். கையெழுத்து அப்படியே  முத்து கோர்த்தது போலிருக்கும். கண்ணில  பார்த்ததை அச்சு அசலா அப்படியே  வரைவான். சின்னப்பையன் அரவிந்தும்  ஒருதடவைக்  கேட்டதை அப்படியே சொல்பிசகாம திரும்பச் சொல்லுவான். நல்ல திறமையான பிள்ளைகள் வாழ்க்கையைப் புரிந்து வாழத் தெரியாதவங்களுக்குப் பிறந்து அல்லல் படுதுக ..நாங்க பள்ளியில்  அந்தப்பிள்ளைகளை கவனமா பார்த்துக் கொள்வோம். தீபாவளி, பொங்கலுக்கு  நல்ல துணிமணிகள்  எடுத்து தருவோம்.முடிந்தவரை  அந்தப்பிள்ளைகள் தொடர்ந்து  படிக்க உதவனுமுன்னு பேசிக்குவோம்.

மூணுநாள்  லீவுக்குப்பின்   இன்னைக்கு  பள்ளிக்குப் போனோம். ஆனந்தும் அரவிந்தும்  மொட்டைத்தலையோட  சத்துணவு போடுற நேரம்   வந்தாங்க .“என்னடா  ஆனந்த்  ரெண்டுபேரும் மொட்டை போட்டிருக்கீங்க “

“எங்கப்பா  ஊருணியில தவறி விழுந்து  செத்துட்டாரு மிஸ் “ உலர்ந்த உதடில் வறண்டு  கம்மிய குரலில்  சொன்னான். நான் பேச்சிழந்தேன். சேலையால்  முகத்தை  துடைச்சுகிட்டேன்.

கொரோனா பரவலைத் தடுக்க , பொதுமுடக்கம்; மறு உத்தரவு வரும்வரை கல்விநிலையங்கள் மூடப்படுமுன்னு செய்தியில  சொல்றாங்க. அந்த ரெண்டுபசங்க கதி என்னாகுமோ…

 ஏப்ரல் ,2021- புதிய ஆசிரியன் மாத இதழ்              

Series Navigationஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி இந்தியாவில் 44,444 ஆம் காற்றாடி சுழற்தட்டைத் [Wind Turbine] தயாரித்துள்ளதுதுணை