பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை

This entry is part 3 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

bharathi krishna kumar

 

(09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்)

 

கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதிய வித்யா பவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்டு தமிழின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான பாரதிகிருஷ்ணகுமார் உரையாற்றினார்.

 

அரங்கம் நிரம்பியிருந்தது. நிரம்பியிருப்பது முக்கியமல்ல. இருந்தவர்கள் அனைவரும் செவிகளைத்தவிர எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர் என்பது தான் சிறப்பு. திறந்து வைத்த செவிகளோடும் தீவிரமான ஈடுபாட்டோடும் பெற்றுக் கொள்ளும் பேரவாவோடும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எதிரில் இருக்க, திருவிழாக் கூட்டத்தையே, பேசத்தொடங்கும் கணத்தில் கட்டுக்குள் கொண்டு வரக் கற்றிருக்கும் பாரதிகிருஷ்ணகுமார் போன்றோர்க்குச் சொல்லவும் தேவையில்லை.வேறு சில இடங்களில், கேட்போரைத் தன்வசம் கொண்டுவருவதற்காய்ச் செய்ய வேண்டிய பிரயத்தனங்களின் தேவையின்மை மேலும் அவருக்கு உற்சாகம் ஊட்டியிருக்குமென நம்புகிறேன்.தெளிந்த நீரோடையென, சிறு சிறு சுளிவுகளுடன் கண நேர நுரைமுட்டைகள் தோன்றித்தோன்றி மறைய சிலுசிலுவென பாய்ந்தது உரை.

Tho.mu.si.ragunathan

எழுதுவதற்கும் பேசுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.எழுதுவதற்கு அவகாசம் இருக்கிறது.அவசியமான சூழல்களை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.இல்லையெனில் எழுதாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வரலாம். நாம் படும் பாடுகளை வாசிப்பவர் அறியச் சாத்தியமில்லை. மேடைப்பேச்சு அவ்விதமன்று.நிறுத்தவோ பிறகு பார்த்துக் கொள்ளலாமென நினைக்கவோ முடியாது.

அடித்து எழுதமுடியாது.ஆனால், எழுத்துக்கு நிகராக கருத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய காரியம் மட்டும் நிகழவேண்டும்.அப்படி, சுவையாகவும் பயனாகவும் இருக்கும் உரையே மிகச் சிறந்ததாக அமையமுடியும்.அப்படியொரு உரை அன்றைக்கு அமைந்தது.

 

நான் இங்கு அவர் பேச்சின் கருத்துகளை இயன்றவரை அவரின் சொற்களைக் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். ஏனெனில், எழுதவேண்டுமென்பதற்காக குறிப்புகளோ ஒலிப்பதிவோ செய்யவில்லை. நினைவில் இருந்தே எழுதுகிறேன்.

 

”இன்றைய வாசிப்புச் சூழலில், முதல் வாசிப்பே அருகிப்போயிருப்பதை அறிய முடிகிறது.முன்பெல்லாம் 2500 நூல்கள் அச்சடித்தது போலில்லைஇப்போதிய சூழல். தொழில் நுட்பத்தின் உதவியால், வெறும் 25 நூல்களை மட்டும் தயாரிக்கிற நிலையிலிருக்கிறோம்.இந்தச் சூழலில் ஒரு படைப்பாளியின் படைப்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் அது குறித்து உரையாடுவதும் மிகவும் முக்கியமானது”,என்று குறிப்பிட்டார்.

”மறு வாசிப்பு என்பது ஒரு படைப்பை மறுபடியும் வாசிப்பது மட்டுமன்று.அவ்விதமாயின், மறுவாசிப்பு என்பது, படைப்பு தன்னளவில் மாறாது இருந்தபடியே, முதல் வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் இடையிலான காலத்தில் அவனுக்குக் கிட்டியிருக்கும் அறிவின் தெளிவு அல்லது அறிவின் போதாமை இவற்றின் வாயிலாக புதிய பரிமாணங்களைக் கண்டடைவது”,என்றார்.

தொ.மு.சி யின் அணுகுமுறை அவரை மிகுந்த கோபக்காரராக அடையாளம் காட்டினாலும், அவருக்குள் இருந்த ஈரமான- ஈரமனப் பதிவுகளைச் சுட்டி அவரின் மறுபக்கத்தின் தரிசனத்தினைக் காட்டினார்.

தொ.மு.சி எழுதிய நாவல்கள்,கவிதை நூல்கள், சிறுகதைத்தொகுப்புகள், விமர்சனம் மற்றும் ஒப்பிலக்கிய நூல்கள், மொழி பெயர்ப்புகள் ஆகியவை குறித்த மெல்லிய அறிமுகம் கொடுத்தார்.

தொ மு சியின் ஒப்பிலக்கிய நூல்களான ,’பாரதியும் ஷெல்லியும்,’கங்கையும் காவிரியும்’, போன்றவற்றின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய பி.கே , ’பஞ்சும் பசியும்’, நாவலை நெசவாளர் வாழ்வின் இன்னல்களையும் முக்கியத்துவத்தையும் பேசிய முதல் தமிழ் புதினமாகக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

மறுவாசிப்புக்காக, அவர் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’, நாவல் மொழிபெயர்ப்பையும் ’பாரதி: காலமும் கருத்தும்’, நூலினையும் எடுத்துக்கொண்டார்.

’தாய்’, நாவல் பலராலும் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் உள்ள சிறப்பை அடையாளப்படுதினார். தொ.மு.சி தமிழாக்கம் செய்யும் போது, தான் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் அதில் வெளிப்படுவதைச் சுட்டிகாட்டி நம் பண்பாடு, கலாச்சாரத்திற்கேற்ப சில சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருப்பதன் நுட்பத்தைக் குறிப்பிட்டார் பாரதிகிருஷ்ணகுமார்.

அது தான் மொழிபெயர்ப்பு என்பது மொழியாக்கமாக மாறும் தருணமாகிறது.

’பாரதி: காலமும் கருத்தும்’, நூலின் தனித்துவம் பற்றியும் பாரதி குறித்து தொ.மு.சி வெளிப்படுத்தியிருக்கும் புதிய பார்வைகள் மீதும் விளக்கமான தன்னின் சுயமான பார்வையையும் சேர்த்து,சுவையான கருத்துகளை முன்வைத்தார் பி.கே.

குறிப்பாக, பாரதிக்கு தேசப்பற்று உருவானதற்கான அடிப்படைக் காரணம், காலம்,சூழல் மற்றும் பாரதி நிவேதிதாவைச் சந்தித்ததன் காலம் போன்றவற்றை தொ.மு.சி நிறுவியிருக்கும் பாங்கு மிக முக்கியமானது என கவனப்படுத்தினார். காரணம், பிற ஆய்வுகளைப் போல் புறச்சான்றுகளைக் கொள்ளாமல் பாரதியிடமிருந்தே எடுத்த அகச்சான்றுகள் வாயிலாக தொ.மு.சி ரகுநாதன் முடிவுகொள்வதன் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

தொ.மு.சி குறித்த பறந்த வாசிப்பனுபவத்தின் சாரமாக அமைந்திருந்த பாரதிகிருஷ்ணகுமாரின் பேச்சு, தொ.மு.சி யைப் படித்தவர்களை மறுவாசிப்புக்கும் இதுகாறும் வாசிக்காதவர்களை முதல் வாசிப்புக்கும் தூண்டுவதாக இருந்தது. நல்ல உரையின் நோக்கம் அதுவாகத்தானே இருக்க முடியும். பல பொழிவுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் பாரதிகிருஷ்ணகுமாருக்கு இந்தப் பொழிவுக்கான என் பாராட்டுகள்;பயன் பெற்றேன்.

நிகழ்வினை ஏற்பாடு செய்த இலக்கிய வீதி இனியவனுக்கு என் அன்பும் மரியாதையும் நன்றியும்.

 

Series Navigationதொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்ஹாங்காங் தமிழ் மலர்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *